Wednesday, November 17, 2004

தினம் ஒரு தமிழ்ச் சொல்

பதினோறாம் வகுப்பில் அப்பா ராமமூர்த்தி என்ற அவரின் நண்பரிடம் என்னை டியூஷனுக்கு அனுப்பினார். அந்தக் காலகட்டம் நான் கண்டதையும் படித்துக் கொண்டிருந்த காலகட்டம். சாண்டில்யன், ஜெகசிற்பியன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா என்று வரலாற்று நாவல், துப்பறியும் கதை என்று எதையும் விடமாட்டேன். அப்போதே ஆதவன், வண்ணநிலவன் ஆகியோரையும் படித்திருந்தேன். நல்ல எழுத்தாளர்களைப் படிக்கும்போது ஒன்றும் சொல்லாத அப்பா, மற்றவற்றைப் படிக்கும்போது "இந்தக் குப்பையில் எல்லாம் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்" என்பார். ஆனால், கைக்குக் கிடைப்பதை சந்தோஷமாய் படிக்கிற பருவம் அது. "சும்மா இதையெல்லாம் படித்து நேரத்தை வீணடிப்பதற்கு தினமும் பேராசிரியர் இராமமூர்த்தியைப் போய் ஒருமணி நேரம் பார்த்துவிட்டு வா. ஆங்கில டியூஷன் மாதிரியும் இருக்கும். அவரிடம் பொது அறிவு, உலக ஞானம் ஆகிவ்வறறைப் பற்றியெல்லாம் அறிந்து கொண்ட மாதிரியும் இருக்கும். அவர் சரித்திரப் பேராசிரியர். எனவே, சரித்திரக் கதைகளில் இல்லாத நிஜமான சரித்திரமும் அறிந்தவர்" என்றார் அப்பா. "சரி" என்றேன்.

இங்கே புரொபஸர் ராமமூர்த்தி பற்றிச் சற்றுக் குறிப்பிட வேண்டும். ஆம்பூரில் உள்ள ஒரு சிறுபான்மை இனத்தவர் நடத்துகிற கல்லூரியில் அப்போது பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார் ராமமூர்த்தி. தீவிர இடதுசாரி. ஒரு கட்சியைச் சார்ந்தவராகவும் இருந்தார் என்ற நினைவு. இன்றைக்கு என்னுடைய உலக அறிவு, தர்க்கத் திறன் ஆகியன ஓரளவு வளர்ந்திருக்கின்றன என்றால் அது இவரால்தான். இவருடன் விவாதித்து விவாதித்து, சண்டை போட்டு சண்டை போட்டே நான் வளர்ந்தேன். ஒருமணி நேரம் என்று ஆரம்பிக்கிற டியூஷன் சுவாரஸ்யமான பேச்சுகளில் இரண்டு மூன்று மணிநேரம் ஓடும். இப்படி இருவருடங்கள் நான் மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடிக்கிறவரை சென்றன.

சர்ச்சில் எழுதிய கட்டுரையைப் பற்றிய பாடம் ஆரம்பித்தால், காந்தியை அவர் அரை நிர்வாணப் பக்கிரி என்று சொன்னதில் இருந்து ஆரம்பித்து, ஒரு முழுமையான சித்திரம் தந்துவிடுவார். நாங்கள் மொத்தம் ஒரு ஏழெட்டு மாணவர்கள் அவரிடம் சென்றோம். எல்லாம் என்னைப் போல, அவர் நண்பர்களின் பிள்ளைகள்தான். ஆங்கிலம் மட்டும் நான் சொல்லித் தருவதில்லை என்று அடிக்கடி சொல்வார். அது மிகவும் நிஜம். அதே மாதிரி, ஒவ்வொரு மாணவனின் ஆங்கிலத் திறமைக்கும் ஏற்ப ஒவ்வொரு மாதிரியான கட்டுரைகள் டிக்டேட் செய்வார். மேல்நிலைக் கல்வி ஆங்கிலப் பாடத்தில் Essay எழுதுகிற ஒரு கேள்வி அப்போது இருந்தது. அதற்காக இது. நன்றாகப் படிக்கிற மாணவர்களை மினர்வா என்கிற ஆங்கில நோட்ஸை வாங்கச் சொல்வார். பின் அதிலிருக்கிற கட்டுரைகளையே இன்னும் செம்மைப்படுத்தித் தருவார். சுமாராகப் படிக்கிற மாணவர்களுக்கு எளிய வாக்கியங்களில், வாக்கியத்துக்கு ஐந்து ஆறு வார்த்தைகளுக்கு மேல் இல்லாமல் அவரே Essay எழுதித் தருவார். ஜான் கீட்ஸ் சொன்ன "A thing of beauty is a joy forever" என்ற கருத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஷெல்லியையும், கீட்ஸின் Endymionஐயும் தொடுவார். ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கிற பேச்சு முற்றிலும் தொடர்பற்ற இன்னொரு புள்ளியில் சென்று முடியும். இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஓர் உலகம் அளவுக்கு விஷயம் இருக்கும்.

ஆங்கிலம் கற்றுக் கொண்ட அதே அளவுக்கு அவரிடம் அரசியல், பொது அறிவு, பொருளாதாரம், வரலாறு என்று பல விஷயங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம். நாட்கள் ஆக ஆக அவரின் அபிமான மாணவர்களுள் ஒருவனாக ஆகிவிட்டேன். இரண்டு மூன்று நாட்கள் டியூஷன் போகவில்லை என்றால், இருவரும் ஒருவரையருவர் மிஸ் பண்ணுகிற நிலை. அவர் கருத்தை எவ்வளவு எதிர்த்துப் பேசினாலும் கோபப்பட மாட்டார். அடுத்த நாள் போகும்போது கையில் அன்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியையோ அல்லது அவர் அலமாரியில் தேடி எடுத்த புத்தகம் ஒன்றையோ வைத்துக் கொண்டு, "இதற்கு என்ன சொல்கிறாய்" என்று மீண்டும் ஆரம்பிப்பார். என் வெற்றிகளில் எல்லாம் அவருக்கு ஒரு பெரும்பங்கு இருப்பதை மானசீகமாக நான் உணர்ந்து வருகிறேன். எனக்குக் கிடைத்த ஆசிரியர்கள் பலர் அற்புதமானவர்கள். அந்த வகையில் நான் பாக்கியவான்.

இராமமூர்த்தியைப் பற்றித் தனியாகவே ஒரு முழுமையான பதிவாக எழுத வேண்டும். பின்னர் எழுதப் பார்க்கிறேன்.

அவரிடம் டியூஷன் போன எல்லாரும், வீட்டுப்பாடமாக தினமும் ஆங்கிலத்தில் பத்திலிருந்து பதினைந்து வாக்கியங்கள் எழுதிச் செல்ல வேண்டும். எழுதுகிற விஷயம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். காலையில் எழுந்தேன். இன்றைக்குத் திங்கட் கிழமை. பல் துலக்கினேன் என்று கூட இருக்கலாம். ஒவ்வொருவரின் நோட்டையும் பொறுமையாகப் படித்துத் திருத்தங்கள் செய்வார். வேறு பொருத்தமான வினைச்சொற்கள் இருக்கின்றன கண்டுபிடி என்பார். கண்டுபிடிக்க முடியாவிட்டால் சொல்லித் தருவார். எங்களில் பெரும்பாலோர் தமிழ் மீடியத்தில் அப்போது பயின்றவர்கள் என்பதால் ஆங்கிலம் ஒரு சவாலாகவே இருந்தது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சமயம். அதைப் பற்றி அன்றைக்கு எழுதிப் போன நான் "Indira Gandhi was killed" என்று எழுதியிருந்தேன். kill என்ற வார்த்தைக்கு பதில் வேறு பொருத்தமான வார்த்தை இதற்கு இருக்கிறது என்றார் அவர். நான் அவர் முகத்தைப் பார்த்தேன். பக்கத்தில் இருந்த ஆங்கில செய்தித்தாளை எடுத்துக் காட்டினார். "Indira Assasinated" என்று கொட்டை எழுத்துகளில் தலைப்புச் செய்தி இருந்தது.

அப்போதெல்லாம் அவர் மாணவர்களான எங்களுக்குச் சொன்ன விஷயம் - ஆங்கிலத்தில் நாங்கள் ஏற்படுத்துகிற பிழைகள் - தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் எழுதுவதால் வருவன என்பது. பழகப் பழக, கற்க கற்க இக்குறை போய்விடும் என்று அவர் சொல்வார். இது உண்மை என்பதை நடைமுறையில் கண்டறிந்திருக்கிறேன்.

தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆங்கிலம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகி விட்டது. திண்ணையிலும் வலைப்பதிவிலும் எழுத ஆரம்பிப்பதற்கு முன் தமிழில் வாக்கியங்கள் கூட சரியாக வந்து விழாமல் தமிழுடன் தொடர்பு விட்டுப் போயிருந்த நிலை. வீட்டில் தமிழே பேசுகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் யோசித்துத் தமிழில் பேசுகிறேன் என்று நினைக்கிறேன். சரளமாகப் புழங்கிய பல தமிழ் வார்த்தைகள் மறந்துவிட்டன. தேவையான நேரத்தில் சட்டென்று நினைவுக்கு வருவதில்லை. தமிழில் என் Vocabulary திடீரென்று குறைந்துபோனது மாதிரியான குறை. பேசுகிற நேரங்களில் தமிழ் வார்த்தைகள் வராத சமயங்களில் ஆங்கில வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொள்வது சுலபமாக இருக்கிறது. ஆனால், எழுதும்போது அப்படிச் செய்யத் தயக்கமாக இருக்கிறது. மொழியின் மீது எனக்குக் காதல் உண்டு. ஆனால், அளவற்ற பற்று எதன் மீதும் இல்லை. எனவே, இதைத் தமிழ்ப்பற்று என்று சொல்ல முடியாது. நன்கு அறிந்து வைத்திருந்ததாய் நினைத்திருந்த ஒன்றில் தொடர்பு விட்டுப் போய், எண்ணங்களைத் தமிழில் சொல்வதற்குக் கூட வார்த்தைகள் தேட வேண்டியிருக்கிறதே என்ற வருத்தம். முக்கியமாய் கதை, கவிதை என்று எதாவது எழுதும்போது வார்த்தைகளுக்கு மிகவும் அலைய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்திருந்தால் ஒரு கணத்தில் வந்து விழுந்திருக்கக் கூடிய வார்த்தைகளுக்குக் கூடத் தவம் இருக்க வேண்டியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. இணையத்தில் எழுதுகிற பல நண்பர்களின் தமிழ் vocabulary அற்புதமாக இருக்கிறது. உதாரணமாக, நண்பர் பிரசன்னாவின் தமிழ் vocabulary அவர் கவிதைகளுக்கு அடிப்படையான பலம்.

என் தமிழை எப்படிச் சரி செய்வது என்று யோசிக்கிறேன். பேராசிரியர் இராமமூர்த்தி இதற்குப் பின்வரும் தீர்வுகளைச் சொல்லியிருப்பார்.

1. தினமும் ஒரு பக்கமாவது தமிழில் எழுதுவது. வலைப்பதிவு இருப்பதால் தினமும் முடியாவிட்டாலும் வாரம் சிலமுறையாவது தமிழில் எழுத முடிகிறது. இதை நிறுத்தாமல் தொடர வேண்டும்.

2. நிறைய தமிழில் படிப்பது உதவும். ஆனால், படிக்கிற போது கவனிக்கிற பல நல்ல வார்த்தைகள் பின்னர் மறந்து போகின்றன. இவற்றையெல்லாம் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்கிற அளவுக்கு நான் சுறுசுறுப்பானவனும் இல்லை. பின் தொடரும் நிழலின் குரலில் ஜெயமோகன் பயன்படுத்திய உறவுச்சம் என்பது போன்ற முற்றிலும் புதிதான வார்த்தைகள் சில மட்டுமே நினைவில் நிற்கின்றன. ஆனால், தொடர்ந்து வாசிப்பது உதவும், இந்த நிலையை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.

3. தினமும் ஒருமுறை சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியைத் திறந்து பார்ப்பது. எந்தப் பக்கம் என்கிற தீர்மானம் இல்லாமல் கைக்கு வருகிற பக்கத்தைத் திறந்து, அதிலிருந்து ஒரு புதிய தமிழ் வார்த்தையை எடுத்துக் கொள்வது. அந்த வார்த்தை அதற்கு முன் தெரிந்த வார்த்தையாக இருக்கக் கூடும். பாதிப்பில்லை. நல்ல வார்த்தை என்றால் வாங்கி மனத்தில் போட்டுக் கொள்ள வேண்டியது என்று நினைத்திருக்கிறேன். இதிலும் பிரச்னை இருக்கிறது. அப்படி அகராதியில் இருந்து எடுக்கிற வார்த்தை, வழக்கொழிந்த சொல்லாகவோ, மாண்டுவிட்ட சொல்லாகவோ, புது அர்த்தத்தில் புழங்குகிற சொல்லாகவோ, புலவர்கள் நூல்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் சொல்லாகவோ இருக்கிற வாய்ப்பிருக்கிறது. அப்படி இருந்தால் அன்றைக்கு எனக்கு துரதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொண்டு, அந்த வார்த்தையைப் பற்றியும் அறிந்து வைத்துக் கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. முடிந்தால் அந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்திப் பார்ப்பதும் உதவும். ஆங்கிலம் கற்றுக் கொண்ட நாட்களிலே பேராசிரியர் இராமமூர்த்தி தினமும் ஆங்கில அகராதியிலிருந்து ஐந்து புதிய சொற்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார். அதை ஒழுங்காகச் செய்த நினைவில்லை. ஆனால், தினம் ஒரு தமிழ்ச் சொல் என்பது சுலபமானதாகவும், நினைவில் நிற்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

என் குறைகளை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இப்படி அடிக்கடி யோசிப்பது வழக்கம். ஆனால், எந்த முடிவையும் நான் எவ்வளவு தூரம் செயல்படுத்தியிருக்கிறேன் என்று சரிபார்க்க முடிவதில்லை. வேலையோ, வேறு ஏதோ ஒன்று இடையிலோ, கொஞ்ச நாள் ஆனபின் குறை போய்விட்டது என்ற நம்பிக்கையோ வந்து அப்படியே விட்டுவிடுவேன். இதை எவ்வளவு நாள்கள் செய்யப் போகிறேன் என்று பார்ப்போம்.

அந்த நாளுக்கான வார்த்தையை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது பிறருக்கு உதவலாம். அதைச் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். வார்த்தையோடு பொருளும் கொடுத்தால் படிப்பவர்க்குச் சுவாரஸ்யம் போய்விடும். அதனால் வார்த்தையை மட்டும் சொல்லி, விருப்பமுள்ளவர்கள் இணைய அகராதியில் பொருள் தேடிக் கொள்ளுங்கள் என்று சொல்லலாமா என்றும் ஒரு யோசனை.

பரீட்சார்த்தமாக முயன்று பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை. தினமும் வலைப்பதிவு செய்ய முடியாத நாள்களில், அடுத்த முறை வலைப்பதிவு செய்யும்போது, விட்டுப் போன நாட்களுக்கான சொற்களையும் தருகிறேன். இப்படி வார்த்தைகளைப் பற்றிச் சொல்லும்போது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி, வார்த்தைகளின் மூல மொழி, வேர்ச்சொல் முதலிய விவரங்களை முடிந்த இடங்களில் சொல்கிறது. ஒரு வார்த்தை நுகர்வோனாக அவை எனக்கு இப்போதைக்குத் தேவைப்படா என்பதால் அவற்றைக் குறிப்பிடப் போவதில்லை. கீழே வார்த்தைக்கான பொருளும் உதாரண வாக்கியமும் கொடுத்துள்ளேன். இது அவசியமா, வார்த்தை மட்டுமே போதுமா என்பதைச் சொல்லுங்கள். அதேபோல, என் உதாரணமோ, பொருளோ தவறென்றால் அதையும் தயவுசெய்து சுட்டிக் காட்டுங்கள். இதைப் பொதுவில் செய்வதற்கான ஒரே காரணம் பிறருக்கும் உபயோகமாக இருக்கக் கூடும் என்பதாலேயே. இத்ககைய முயற்சிகளால் உபயோகம் இல்லை என்றால் அதையும் தயவுசெய்து சொல்லுங்கள். அப்போது வார்த்தைகளைப் பொதுவில் இடுவதை நான் நிறுத்தி விடுகிறேன். இந்த முயற்சிக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்து, இதை வலைப்பதிவில் தொடர்வதா இல்லையா என்று பின்னர் முடிவெடுக்கிறேன்.

இன்றைய வார்த்தை: இக்குக் கொட்டுதல். இதன் பொருள்: ஒலி (சத்த) குறிப்பினால் ஒன்றை அறிவித்தல் அல்லது கவனம் கவருதல். உதாரணம்: தன் நண்பன் குமாரை, குமார் பெற்றோருக்குக் கேட்காதவண்ணம், இக்குக்கொட்டி சரவணன் அழைத்தான்.

2 comments:

பரி (Pari) said...

நல்ல வேலை. தொடருங்கள்

பரி (Pari) said...

முதல்ல vocabulary-க்கு தமிழ் வார்த்தை போடுங்க :-)
'சொல்வளம்'-னு OTL சொல்லுது.

apply 'பண்ணி'ப் பாத்தாங்களாம். இந்த மாதிரி 'பண்ணி'த் தமிழ் பேசறவங்கள வச்சிக்கிட்டு....

என்னமோ போங்க, யாரும் சரியா பயன்படுத்த(apply) மாட்றாங்க.