Saturday, March 27, 2004

பிலிப் புரொபஷனலா?

பிலிப்பை எனக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்களாகத் தெரியும். எங்கள் அலுவலகத்தில் உள்ள கேப்டீரியாவில் செப் ஆகப் பணிபுரிகிறார்.

பொதுவாக நான் காலைச் சிற்றுண்டியையும், மதிய உணவையும் வீட்டிலிருந்து அலுவலகத்துக்குக் கொண்டு வந்து என் இருக்கையிலேயே சாப்பிட்டு விடுவதுண்டு. ஆனாலும், தினமும் காலையில் ஓட் மீல் சாப்பிட அலுப்பாக இருக்கும்போதும், எல்லா வகையான உணவுகளையும் சுவைத்துப் பார்க்கிற என் இயல்பான ஆர்வத்தாலும் வாரம் ஒருமுறையாவது அலுவலகத்துக் கேப்டீரியாவிலோ வெளியில் ரெஸ்டாரெண்டுகளிலோ சாப்பிடுவதுண்டு. ஓட் கஞ்சியில் மோர் (தாளித்த மோர் என்றால் இன்னும் சிலாக்கியம்) கலந்து ஒரு எலுமிச்சை உறுகாய்த் துண்டுடன் சாப்பிடுகிற சுவை காலைச் சிற்றுண்டிக்கு நன்றாகவே இருக்கும். நண்பர் ராஜாராம் ஓட் கஞ்சியுடன் ரசம் கலந்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் சொல்லித் தந்தார். போன வருடக் கோடையில் குடும்பம் இந்தியா சென்றிருந்தபோது, அநேகமாகத் தினமும் கேப்டீரியாவில் காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் சாப்பிட நேர்ந்தபோது பிலிப்பை நெருங்கி அறிந்து கொள்கிற வாய்ப்பு ஏற்பட்டது.

பிலிப் கரீபியன் தீவுகளைச் சார்ந்த ஜமாய்க்காவைச் சேர்ந்தவர். வெள்ளைக்காரர் அல்லர். ஐம்பது வயது நிச்சயம் இருக்கும். அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து இருபது வருடங்கள் ஆகின்றன. போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையின்போது சொந்தக்காரர்களைப் பார்க்க ஜமாய்க்கா போய்வந்தார். காலை ஆறு மணியிலிருந்து ஆறரைக்குள் எங்கள் அலுவலகத்துக் கேப்டீரியாவுக்கு வந்தார் என்றால், மாலை நான்கு மணிவரை இங்கே வேலை. அதற்கப்புறம் போய் ஒரு பாருடன் கூடிய ரெஸ்டாரெண்டில் இரவு பத்தரைவரை உத்தியோகமாம். சமையற்கலை குறித்த எந்த முறையான படிப்பும் இல்லாமல், அனுபவத்தின் மூலம் செப் ஆகியிருப்பவர் அவர். எவ்வளவு வேலையிருந்தாலும் ஒருமுறை கூட வாடிக்கையாளர்களிடம் அவர் முகம் சுருங்கியோ வெடுக்கென்று பேசியோ நான் பார்த்ததில்லை. உணவை கேட்பவர்க்கேற்ற மாதிரி சலிக்காமல் விஷேடமாக சமைத்துத் தருபவர். அடுத்த நாள் பார்க்கும்போது, நேற்றைய உணவு எப்படியிருந்தது என்றும் கேட்கத் தவற மாட்டார். இத்தனைக்கும் கேப்டீரியாவில் அவர் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர். எவ்வளவு வாடிக்கையாளர்களுக்குச் சமைத்துத் தந்தாலும், வாடிக்கையாளரே வரவில்லையென்றாலும் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளம் கிடைக்கும். அலுவலகக் கேப்டீரியா என்பதால் "டிப்" என்று எதுவும் யாரும் தருவதும் இல்லை.

எங்கள் அலுவலகத்துக் கேப்டீரியாவில் ஏற்கனவே சமைக்கப்பட வேண்டிய உணவுவகைகள் சமைக்கப்பட்டு அடுக்கப்பட்டு இருக்கும்., அவற்றின் பின்னே வாடிக்கையாளர் கேட்டபின் கிரிலில் (தவாவில்) சமைக்கப்பட வேண்டிய உணவுவகைகளுக்காக கிரில் இருக்கும். அப்புறம், சாண்ட்விச்களை வாடிக்கையாளர் கேட்டபடியும் செய்து தருவார்கள். வாடிக்கையாளர் கேட்டபின் சமைத்துத் தரவேண்டிய உணவுவகைகளை வாடிக்கையாளர் முன்னே சமைத்துத் தர ஒரு செப்பும், சாண்ட்விச் தயாரித்துத் தர இன்னொரு செப்பும் இருப்பார்கள். அதைப் பெற்றுக் கொண்டு காஷியரிடம் அதற்கான பணம் கொடுத்துவிட்டு, கேப்டீரியாவில் அமர்ந்தோ, இருக்கைக்குக் கொண்டுவந்தோ சாப்பிடுவது அவரவர் வசதி.

பிலிப் எனக்கு நண்பர் ஆகியது சுவாரஸ்யமான கதைதான். பொதுவாக நான் தினமும் கேப்டீரியாவில் சாப்பிடுவது இல்லையாதலால், முதல்முறை காலைச் சிற்றுண்டிக்காகப் போனபோது, இரண்டு ப்ரைய்டு எக்ஸ் (ஆப் பாயிலை இங்கே புல்ஸ் ஐ என்றும், புல் பாயிலை ப்ரைய்டு எக்ஸ் என்றும் சொல்கிறார்கள்) மற்றும் பேக்கன் வேண்டும் என்று சொன்னேன். "ஹவ் டு யூ வாண்ட் யுவர் எக்ஸ் டன் ஸார் - லைட், மீடியம் ஆர் வெல் டன்" என்று கேட்டார். "மீடியம்" என்றேன்.

அதற்கப்புறம் ஒருவாரம் கழித்து இன்னொருநாள் காலைச் சிற்றுண்டியைக் கேப்டீரியாவில் சாப்பிடச் சென்றேன். என் முறை வந்ததும், என்னைப் பார்த்தவர், "குட் மார்னிங் ஸார். யுவர் ரெகுலர்?" என்று கேட்டார். "குட்மார்னிங். யெஸ் ப்ளீஸ்" என்ற நான், "ப்ளீஸ் மேக் த எக்ஸ் மீடியம் டன்" என்றேன். "ஒருமுறை சொன்னால் போதும். நான் மறக்க மாட்டேன். போனமுறை நீங்கள் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது" என்று அவர் சொன்ன பதிலில் அவர்பால் கவரப்பட்டேன்.

அதற்கப்புறம் அவருக்குக் கிரிக்கெட்டில் இருக்கிற ஆர்வம் தெரிய வந்தது. என் மகன் இந்தியாவிலிருந்து வந்தபோது ஒரு கிரிக்கெட் மட்டையை வாங்கி வந்திருக்கிறார் என்று ஒருமுறை சொன்னேன். அதற்கப்புறம் பார்க்கும்போதெல்லாம், "உங்கள் மகன் எப்படிக் கிரிக்கெட் விளையாடுகிறார் இப்போது" என்று விசாரிப்பார். லாராவிலிருந்து சச்சின் வரை கிரிக்கெட் வீரர்களைப் பற்றிப் பார்க்கும்போதெல்லாம் நாங்கள் பேசிக் கொள்வோம். தற்போது நடந்து கொண்டிருக்கிற இந்தியா - பாகிஸ்தான் தொடர்வரை பேசியிருக்கிறோம்.

பிலிப்பின் சக செப் ஓர் இளைஞர். ஸ்பானிய மொழி பேசுபவர். எப்போது பார்த்தாலும், "ஹவ் ஆர் யூ செனோர்" என்பார். "ப்ரட்டி குட் செனோர். ஹவ் ஆர் யூ" என்று நான் பதில் சொல்வேன். அப்புறம் மிகவும் அந்நோன்யமாக எங்கே உங்களை நிறைய நாள்களாகக் காணவில்லை என்று பேசுவார். போன கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கழிக்க குழந்தைகள் ப்ளோரிடாவிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று மகிழ்வுடன் சொன்னார். நான் கொஞ்சம் கிறுக்குத்தனமாக, "உங்கள் குடும்பம் ப்ளோரிடாவில் இருக்கிறதா?" என்று பதிலுக்குக் கேட்டேன். அவர் பதிலுக்குச் சிரித்தபடி "இல்லை. நான் விவாகரத்தானவன். என் குழந்தைகள் என் முன்னாள் மனைவியுடன் ப்ளோரிடாவில் வளர்கிறார்கள். விடுமுறைகளின்போது என்னிடம் வருவார்கள்" என்று பதில் சொன்னார். குழந்தைகளை விடுமுறையின்போது எங்கெல்லாம் அழைத்துப் போகப் போகிறேன் என்றும் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இவரும் அனுபவத்தால் செப் ஆனவர் தானாம்.

பிலிப்பும் அவர் சகாவும் தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லாரிடமும் இப்படிப் புன்முறுவலுடனும் நட்புடனும் பேசுவதையும், வாடிக்கையாளர்களைக் கவனிப்பதையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

போனவாரம் ஒருநாள் காலைச் சிற்றுண்டிக்காக கேப்டீரியாக்குப் போனேன். பிலிப் உள்ளே இருந்தார். கையில் காப்பி கோப்பை. என்னைப் பார்த்ததும், கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, "குட் மார்னிங். யுவர் ரெகுலர்?" என்று வழக்கம்போல் கேட்டபடியே வந்தார். "குட் மார்னிங். கையில் இருப்பதைக் குடித்துவிட்டு வாருங்கள். எனக்கு அவசரமில்லை. நான் காத்திருக்கிறேன்" என்றேன் நான். "டோண்ட் வொர்ரி அபவுட் இட்" என்றவர், கோப்பையைத் தூரவைத்துவிட்டு, கையில் கிளவுஸை மாட்டிக் கொண்டு, முட்டைகளை உடைத்து தவாவில் ஊற்ற ஆரம்பித்துவிட்டார்.

என்னைக் கவனித்து அவர் அனுப்புவதற்கு பத்து நிமிடங்களாயிற்று. அவர் கோப்பை காப்பி நிச்சயம் ஆறிப் போயிருக்கும். என் சிற்றுண்டியை என்னிடம் கொடுத்து, "யேவ் எ நைஸ் டே ஸார்" என்று அவர் சொன்னபோது, அவரின் ஆறிப்போன காப்பி கோப்பையைப் பார்த்து எனக்குக் குற்றஉணர்வு உண்டானது.

வேலை நேரங்களில்கூட தொலைபேசியிலும் அரட்டையிலும் செலவிடுகிற பலரை நான் இந்தியாவில் பெரும்பாலுமும், அமெரிக்காவில் பரவலாகவும் பார்த்திருக்கிறேன். அப்படி வாடிக்கையாளரைக் காக்கவைத்துவிட்டு சொந்தக் காரியங்களில் ஆழ்ந்துவிடுபவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காலர் உத்தியோகம் பார்க்கிற நண்பர்களாக இருப்பதையும் கவனித்திருக்கிறேன். இவர்களெல்லாம் தங்களை புரொபஷனல் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்கள்.

பள்ளி இறுதிகூட தாண்டாமல் ஆனால் வாடிக்கையாளரின் தேவையை நினைவு கொண்டு, வாடிக்கையாளரை எதன் பொருட்டும் காக்க வைக்காத, பிலிப் போன்ற ப்ளூகாலர் உத்தியோகம் பார்ப்பவர்கள் புரொபஷனல் இல்லையா என்ற கேள்வி எனக்குள் எழுந்தபடி இருக்கிறது.

1 comment:

மாரியப்பன் .சி said...

கடைசியில்,சூப்பருன்னு மனசுக்குள்ளயே வியந்தேன்...!
மற்றும் பிலிப் எப்படியிருக்கிறார்?அவருக்கு அணிவகுப்பு மரியாதை செஞ்சுடீங்க...!