Saturday, April 17, 2004

காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 4ஆம் தொகுதி

பாரதி தம்முடைய நூல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி வரிசைக்கிரமமாய் வெளிக்கொணர விரும்பினார். அதன் பொருட்டு நிதி சேகரிப்புக்காக அவர் 28 ஜீன் 1920ல் எழுதிய ஆங்கிலச் சுற்றறிக்கை இன்று வரலாற்று ஆவணம். குறைந்தபட்சம் நூறு ரூபாயையாவது எதிர்பார்த்து பாரதி அன்று எழுதியக் கடிதத்துக்கு சரியான பதிலில்லாமல்போனது பாரதி போன்ற ஒரு கவிஞனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்று அறிய நேரும்போது இன்றும் உண்டாகிற வருத்தத்துக்கு அளவில்லை. தன் படைப்புகள் மீதிருந்த நம்பிக்கையினாலும் அவை நிச்சயம் விற்று விடும் என்கிற ஆர்வத்திலும் 40 தனிப்புத்தகங்களாக அவற்றை வெளியிடவும், ஒவ்வொரு புத்தகத்திலும் முதல் பதிப்பாக 10,000 பிரதிகள் அடிக்கவும் பாரதி திட்டமிட்டிருந்தது அவன் பெருங்கனவைக் காட்டுகிறது. கிடைக்கும் நிதியைக் கடனாகக் கொண்டு ஸ்டாம்பு ஒட்டிப் புரோ-நோட்டு எழுதித் தரவும், மாதம் 2 சதவீதம் வட்டி தரவும் பாரதி முன்வந்திருந்தது கவிஞனின் தன்மானத்தையும் ஜனநாயகத் தன்மையையும் காட்டுகிறது. பாரதி போன்ற கவிஞனைத் தமிழ் கூறும் நல்லுலகம் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் எதிர்பார்த்தபடி கொண்டாடி இருந்தால்தான் அது ஆச்சரியப்படத்தக்க விஷயமாக இருந்திருக்குமோ என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது.

ஆனாலும், பாரதிக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழிலும், வரலாற்றிலும் பாரதியின் இடத்தைப் பெற்றுத் தரவும் நிலை நிறுத்தவும் அயராது உழைத்திருக்கிற கணக்கற்ற பாரதிப் பித்தர்களுக்குக் காலம் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களின் வரிசை நீண்டு நெடிந்தது. வாழையடி வாழையாய் வளர்வது. பாரதிக்குப் பின் வந்த அனைவருமே பாரதியின் வாரிசுகள்தான் என்று ஜெயகாந்தன் சரியாகத்தான் சொன்னார். வ.ரா, ரா.அ. பத்மநாபன், ஜீவா, இளசை மணியன், பாரதிதாசன், ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், சீனி விசுவநாதன், பெ.சு.மணி என்று பலப்பலர் அவர்களுள் அடங்குவர். பாரதியை முன்னெடுத்துச் சென்றதிலும், தமிழில் அவனிடத்தை மீட்டுத் தந்ததிலும் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு சற்றும் குறைவானதும் அல்ல.

பாரதியைப் பற்றி இன்று தமிழில் கணக்கற்ற நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், பாரதி கனவு கண்ட விதமாக அவன் படைப்புகளை கால வரிசைப்படுத்தி வெளியிட்டவர்கள் யாருமில்லை என்ற பழி பாரதி தொண்டர் சீனி.விசுவநாதன் மூலம் கழிந்து வருகிறது. இதற்கு முன்னர் பாரதியைப் பற்றி ஏறக்குறைய 25 அரிய நூல்களை வெளியிட்டவர் சீனி.விசுவநாதன். தன் வாழ்க்கையையும் முயற்சிகளையும் பாரதிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டவர். கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளின் மூன்று தொகுதிகளை ஏற்கனவே சிறப்பாக வெளியிட்டவர். நான்காம் தொகுதி இப்போது வெளிவந்திருக்கிறது. தனிமனித முயற்சியாக இந்தப் பெரும் காரியத்தில் சீனி.விசுவநாதன் ஈடுபட்டுள்ளது, தொகுப்பில் காண நேரும் சில எழுத்துப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறது.

இத்தொகுப்பில் மொத்தம் 207 படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னே இருக்கிற பதிப்பாசிரியரின் குறிப்பு வாசகருக்கு மிகவும் முக்கியமானது. கட்டுரை தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும், அதிலே குறிப்பிடப்பட்டிருக்கும் மாந்தர் தம் குறிப்புகளையும், இன்ன பிற விவரங்களையும் பதிப்பாசிரியர் குறிப்பு அளிக்கிறது. சீனி.விசுவநாதனின் அரிய பங்களிப்பு இது.

பாரதியை நேசிக்கிற ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய அரிய பெட்டகம் பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளின் தொகுதிகள். இதன் பிற தொகுதிகளையும் விரைவில் சீனி.விசுவநாதன் கொண்டுவர அவருக்கு இறையருள் புரிய வேண்டுகிறேன்.

No comments: