தமிழில் விமர்சனத் துறை வளரவே இல்லை என்றே சொல்லலாம். இங்கே இருக்கிற விமர்சகர்கள் பொருள் குற்றம், சொற் குற்றம், இலக்கணக் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிப்பவர்களாகவே காலம்காலமாக இருந்து வருகிறார்கள். இடையில் க.நா.சு, கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.ரகுநாதன் என்று பலர் விமர்சனத்தை ஒரு கலையாக வளர்க்க முயன்றார்கள். ஆனாலும், அவர்களும் கூட தங்களின் சுய விருப்பு வெறுப்பு சார்ந்து படைப்புகளை விமர்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்கு பொருத்தமாக அவர்களின் மதிப்பீடுகள் அவ்வப்போது இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. தமிழ் இலக்கண நூலான நன்னூலும் கூட பத்துக் குற்றம் என்று குற்றங்களைப் பட்டியலிடுகிறது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவரின் பரம்பரை என்று தமிழர்கள் இலக்கிய உலகில் குற்றம் கண்டுபிடித்துப் புஜம் தட்டிக் கொள்கிறார்கள். புகழ் பெற்றவர் எழுதியதில் குற்றம் கண்டுபிடிப்பது, பிடிக்காதவர் எழுதியதில் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அறிவைக் காட்டுவதற்கு விமர்சிக்கிற படைப்பைப் பலியாக்கிக் குற்றம் சொல்வது, தாம் நம்புகிற சித்தாந்தத்துக்குப் பொருந்தாததைத் தூக்கி எறிய விமர்சனம் செய்வது என்று தமிழில் விமர்சனத் துறை வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது.
படைப்புகளைப் பாராட்டுபவர்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களும் இத்தகைய குறுகிய மனப்பான்மைகளுக்கு உள்ளானவர்களாகவே இருக்கிறார்கள். குழு அமைத்துக் கொண்டும், நண்பர் குழாமுக்குள்ளும் ஒருவரை ஒருவர் லஜ்ஜையின்றியும் நார்ஸிஸ மனப்பாங்குடனும் பாராட்டிக் கொள்கிற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தமக்கென ஒரு சிறிய வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வாசகர்களின் பாராட்டில் பரமனைக் காண்பவர்கள். வாசகர்களின் பாராட்டைப் பெறுவதும், வாசகர்களை வெல்வதும் எழுத்தாளனின் வேலை அல்ல. எழுத்தாளனின் வெற்றி வாசகர்களை மட்டுமல்ல தன்னையேயும் கடந்து செல்வதில் இருக்கிறது என்று எழுதிய ஜெயகாந்தனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. அந்தத் தெளிவு இருந்ததால்தான் வாசகர்கள் என்ன சொல்வார்கள் என்கிற சுயக்கட்டுப்பாட்டு உணர்வுகள் இன்றித் தான் நம்பியதையும் விரும்பியதையும் ஜெயகாந்தன் போன்றவர்களால் எழுத முடிந்தது. ரசிகர்களின் விசிலுக்கும் கைதட்டலுக்கும் ஏற்றவாறு குனிந்தும் நெளிந்தும் வளைத்தும் குலுக்கியும் ஆடுகிற ரிகார்டு டான்ஸ்காரிகள் போல் வித்தை காட்டுபவர்களாக இன்றைக்குத் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் மாறி விட்டார்கள். வாசகர்களின் கரகோஷத்தின் வலிமைக்கேற்ப எழுத்தாளரின் எழுத்து மதிப்பிடப்படுகிறது. வெகுஜனக் கதைகள் எழுதுகிற எழுத்தாளர்களின் பின்னால் எத்தனை நீண்ட வரிசையும் கைதட்டி மகிழ்கிற குழாமும் இருக்கிறது என்பதை இன்று பத்திரிகையுலகில் மட்டுமில்லாமல் இணையத்திலும் ஒருவர் அறிந்து கொள்ள இயலும். லௌகீக வாழ்வின் வெற்றிகள், புகழால் கிடைக்கிற வெற்றிகள், இவற்றையெல்லாம் தாண்டியது எழுத்தின் வெற்றி என்பதை அறியாதவர்கள் இவர்கள்.
ஆனாலும், இத்தகைய எழுத்தாளர்கள் மிகவும் ஜாக்கிரதையானவர்கள். நான் உன்னை விமர்சிக்க மாட்டேன், நீ என்னை விமர்சிக்க வேண்டாம். நீ என்னைப் பாராட்டினால் நான் உன்னைப் பாராட்டுவேன் என்பது மாதிரியான எழுதாத ஒப்பந்தம் வைத்துக் கொண்டு, வாய்ப்பு கிடைக்கும்போது அதை நடுநிலை என்கிற போர்வையில் வெளிப்படுத்தி விடுவார்கள். தங்கள் வட்டத்தை விட்டு வெளியே போயோ, மாற்றாரின் இடத்திலோ பொது இடத்திலோ எழுதத் துணிய மாட்டார்கள். விவாதங்களில் இறங்க மாட்டார்கள். அப்படி இறங்குகிற ஒரு சிலரும் தம்முடைய சீட கோடிகளின் Z பிரிவு பாதுகாப்புடனேயே இறங்குவார்கள். எப்போதும் பரபரப்புடனும், செய்திகளில் தம் பெயர் அடிபடுமாறு பார்த்துக் கொண்டும், அமைதியற்றும், பிறர் பாராட்டும்வண்ணம் முயற்சியெடுத்து நடந்துகொண்டும் இருக்கிற இத்தகைய எழுத்தாளர்கள், தங்கள் மீதும் தங்களின் எழுத்துகள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள். ஒரு மாதத்துக்கு யாரும் இவர்களைப் பாராட்டாவிட்டால், இவர்கள் எழுதுவதை விட்டுவிட்டு தேசாந்திரம் போய்விடக் கூடும்.
இன்னும் சிலர் வேறுவகையானவர்கள். ஜெயமோகன் வார்த்தைகளைப் பயன்படுத்திச் சொன்னால் இவர்கள் தகவல் சேகரிப்பவர்கள், செய்தி வாசிப்பவர்கள். சுருக்கமாக, புத்தகப் புழுக்கள். இவர்கள் அறிந்திராத விஷயமே இல்லையோ என்று மூக்கில் விரல் வைக்க வைப்பவர்கள். ஆனால், படைப்பூக்கம், ரசனை என்பது குறித்த அடிப்படைப் பிரக்ஞைகூட இல்லாதவர்கள். எதைப் பற்றி பேசினாலும் அதில் தங்களின் அறிவையும் வீச்சையும் காட்டிக் கொள்வதில் முனைகிற இவர்களால் பிறர் எழுதுகிற எதையுமே ரசிக்கவோ அனுபவிக்கவோ இயலும் என்று தோன்றவில்லை. ஏனெனில், எல்லாப் படைப்புகளையும் விடவும் தம் அறிவும் திறனும் உயர்ந்தது என்று நம்புகிறவர்கள் இவர்கள்.
இவற்றை அறிந்திருந்தும் அலட்டிக் கொள்ளாமல், மற்றவர்கள் படிக்கிறார்களா இல்லையா, வாசகக் கூட்டம் கைதட்டுகிறதா இல்லையா, விமர்சனம் வருகிறதா இல்லையா என்கிற கவலைப்படாமல், தவம் மாதிரி எழுதிக் கொண்டு மட்டுமே இருக்கிற எழுத்தாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அவர்கள் பெரும்பாலும் வெளித்தெரியா விட்டாலும், அவர்களின் எழுத்துகள் காலம் காலமாக நிலைத்து நிற்கக் கூடியவை. தம் எழுத்தின் வலிமை உணர்ந்த ஞானச்செருக்கு பெற்ற இத்தகைய எழுத்தாளர்களை வாழ்க்கை பல நேரங்களில் புரட்டிப் போட்டு விடுகிறது. புரட்டிப் போடுகிற வாழ்க்கைக்குப் பயந்து போகிற சில நல்ல எழுத்தாளர்கள் சமரசங்கள் செய்து கொள்ளவும் தயங்குவதில்லை. மகள் கல்விக்காக சமீபத்தில் சமரசம் செய்து கொண்ட ஒரு கவிஞரைக் குறித்துப் படிக்கும்போது வருத்தம் உண்டாகியது. ஆனாலும், இவர்களின் லௌகீக சமரசங்களை மீறி எழுந்து நிற்கிற வலிமை கொண்டது இவர்கள் எழுத்து.
தமிழில் விமர்சனம் என்று ஆரம்பித்த உடனேயே மேற்கண்ட நிதர்சனங்கள்தான் கடை விரிக்கின்றன. விமர்சனம் வாசகனுக்கு உதவக் கூடியதாக இருக்கலாம். எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு அதன்மீது நம்பிக்கையில்லை என்கிறார் ஜெயகாந்தன். விமர்சனங்களிலேயே மொத்தமாக நம்பிக்கை இல்லை என்கிறார் சா.கந்தசாமி. இப்போது வருகிற விமர்சனங்கள் வாசகனைப் படைப்பை ரசிக்க இயலாமல் படைப்பின் மீது காய்தல் உவத்தலையே வளர்க்கின்றன என்பதால், விமர்சனங்களால் வாசகனுக்குக் கூட எவ்வளவு நன்மை என்கிற கேள்வி எழுகிறது.
ஒரு நல்ல விமர்சகர் முதலில் நல்ல வாசகராக இருக்க வேண்டும். நல்ல வாசகர்கள் ஒரு படைப்பு தன்னுள் ஏற்படுத்துகிற மாற்றங்களை அந்தரங்கமாக உணர்பவர்கள். ஒரு படைப்புச் சிறந்தது என்பதை அதன் குறைகளிலும் தொக்கி நிற்கிற வாழ்வின் அனுபவத்தையும் செய்தியையும் கொண்டு அறிபவர்கள். சிறந்த படைப்புகளுக்கு அதன் குறைகளே ஆபரணங்கள் என்று உணர்ந்து மகிழ்பவர்கள். சிறப்பற்ற படைப்புகளுக்கு அதன் நிறைகளும் குறைகளே என்றும் தெளிந்தவர்கள். எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நான் சந்தித்த வாசகர்களிலே மிகச் சிறந்தவர். அவர் வெறும் வாசகர் மட்டுமல்ல. அறிவுஜீவியும் விஷயங்களில் நுனியளவு செல்கிற புலமையும் பெற்றவர். ஆயினும், ஒரு படைப்பைப் பற்றிப் பேசுகிற போது, ஒரு குழந்தையின் குதூகலத்துடன் படைப்பில் விமர்சகரும் சராசரி வாசகரும் காணத் தவறுகிற நுண்ணிய பகுதிகளையும் உணர்வுகளையும் ஒரு சாதாரண வாசகராக விளக்கக் கூடியவர். படைப்புகளைப் பற்றி அவரைப் பேச விட்டுவிட்டு, கேட்டுக் கொண்டிருக்கிற ஆனந்தத்துக்கு ஈடு இல்லை. எழுதிய எழுத்தாளரைவிடவும் சிறப்பாகவும் நுட்பமாகவும் எழுத்தாளரின் படைப்பை அனுபவித்து ரசிக்கக் கூடியவர் என்கிற பாராட்டு பெற்றவர். எந்த விமர்சகரும் இதைச் செய்துவிட இயலாது. நல்ல வாசகராக இருப்பதால் மட்டுமே நண்பருக்கு இது சாத்தியமாகிறது என்று நினைத்துக் கொள்வேன்.
தமிழில் விமர்சகர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறைந்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. ஒரு நல்ல படைப்பை எந்த விமர்சனமும் கெடுத்துவிட முடியாது. ஒரு தரமற்ற படைப்பை எந்த விமர்சனமும் தூக்கி நிறுத்திவிட முடியாது. நல்ல எழுத்து தன்னைத் தானே எழுதிக் கொள்ளும் என்று சொல்வதுபோல, நல்ல படைப்பு அதன் தரத்துக்கேற்ற வாசகர்களைத் தானே தேடிக் கொள்ளும். நமக்கு இன்று தேவை படைப்பு தன்னுள் ஏற்படுத்துகிற எண்ணங்களையும் சலனங்களையும் பகிர்ந்து கொள்கிற வாசக அனுபவங்களே அல்லாமல், விமர்சனம் என்கிற பெயரில் வருகிற சுய விருப்பு வெறுப்புகளும் குற்றச்சாட்டுகளும் இல்லை. எந்த ரசனையும் ஒருவரின் அறிவு, தேர்வு, முதிர்ச்சி, அனுபவம் மற்றும் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சார்புடையதாக இருக்கக் கூடும் என்பது போல, எந்த விமர்சனமும் சார்புடையது என்பதிலே சந்தேகமில்லை. ஒரு நல்ல விமர்சனம் வாசக அனுபவத்தைச் சிறப்பாகச் சொல்வதாகவே இருக்கும். விமர்சனங்கள் இலக்கிய அறிவை வளர்த்துக் கொள்ள உதவக் கூடும். அனுபவித்தலின் ஆழத்தை முழுமையாகச் சொல்லிவிட இயலாது. நடுநிலையான விமர்சனம் என்று நம் காதில் பூ சுற்றுபவர்களிடையே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நல்லோர் பிறர்குற்றம் நாடார், நலந்தெரிந்து
கல்லோர் பிறர்குற்றம் காண்பரோ? அல்லாத
என்போல்வார் என்னை இகழ்வாரோ? என்கவிக்குப்
பின்பரோ காண்பார் பிழை
- என்னும் ஔவையாரின் பாடலுடன் விமர்சனம் குறித்த என் எண்ணங்களை நிறைவு செய்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment