(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)
தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்சி...
வடமொழிவாதம்:
பிறமொழிகளின் சார்பு பற்றித் தோன்றியுள்ள வாதங்களில் முதலாவதாகக் குறிப்பிடத்தக்கது இவ்வாதம். தமிழர்கள் இருபிரிவாக உள்ளார்கள். ஒரு பிரிவு, வடமொழிச் சொற்களை அறவே ஒழிக்க வேண்டும் அல்லது மிகச் சுருங்கிய அளவில் வேறுவழி இல்லாதபோது பயன்படுத்த வேண்டும் என்கிறது. அடுத்த பிரிவு, வடமொழிச் சொற்களைப் புழங்குவதில் எந்தக் கட்டுப்பாடும் கூடாது என்கிறது. இரு பிரிவுகளும் தத்தம் சார்பாகக் கூறுவதை வடமொழிவாதம் எனலாம்.
இவ்வாதம் இரண்டு காரணங்களால் தோன்றியுள்ளது: 1. வகுப்புத் துவேஷம், 2. அரசியல்கட்சித் துவேஷம்.
ஆனால், துவேஷங்களை ஒதுக்கி, தமிழின் நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாதத்தை ஆராய வேண்டும். வடமொழியை முற்றிலும் அழிக்க முடியாது. அது தேவையும் இல்லை. வேண்டுமளவு, தேவையறிந்து தமிழில் ஏற்கனவேயுள்ள வடமொழிச் சொற்களைப் புழங்குதல் வேண்டும். வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதன்று. அந்தணர்களும் அப்படிக் கருதக்கூடாது. மற்றவர்களும் அப்படிக் கருதக் கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது வடமொழி. வைதிகர்கள் மட்டுமின்றிப் பிறரும் அம்மொழியை வளர்த்துள்ளனர். ஐரோப்பாவில் லத்தீனைப் போல வடமொழியை நாம் கொள்ள வேண்டும். சமயமுழு முதல் நூலான வேதங்கள் வடமொழியில் உள்ளன. ஆங்கிலம் லத்தீனைப் பயன்படுத்திக் கொண்டதுபோல நாம் வடமொழியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த இரண்டு பிரிவுகளைத் தவிர மூன்றாவது பிரிவும் உண்டு. அது, தமிழர்களாகப் பிறந்தும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டும் தமிழை இகழ்ந்து வடமொழி மட்டுமே கற்பது. இவர்களால் வடமொழிக்கும் பயனில்லை. அதற்கும் இவர்கள் கேடே விளைவிக்கிறார்கள். சில இடங்களில் வடமொழிக்குச் சிறப்பு கொடுத்து வடமொழியின் கீழ் தமிழ்போன்ற தாய்மொழிகள் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இது நாட்டுக்கும் மொழிக்கும் பல தீங்குகளை விளைவிக்கக் கூடியது. தமிழ்மொழி இப்படிப்பட்டதை எதிர்த்து தனக்குரிய கௌரவத்தைப் போற்றிக் கொள்ளுதல் முக்கியமானது.
ஆங்கில வாதம்:
புராதன சரித்திரத்தின் விளைவு வடமொழிவாதம். நவீன சரித்திரத்தின் விளைவு ஆங்கிலவாதம். இவ்வாதம், தாய்மொழியைப் பேணாமல், ஆங்கிலத்தில் பயின்று அதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறவேண்டும் என்கிறது. ஆங்கில மோகம் ஒரு சாராரிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், ஆங்கிலம் அறிந்தவர்கள் அனைவரும் இப்படியில்லை. பெரும்பாலோர் தாய்மொழியின் வளர்ச்சி அதன்மூலம் கல்வி கற்பதிலேயே நிகழும் என்று நம்புகிறவர்கள். ஆனால், அரசாங்கம் இவ்விஷயத்தில் உதாசீனமாக இருக்கக் கூடும். தாய்மொழியில் கற்பதில் தடைகள் இருக்கக் கூடும். இவ்வாதத்தை எதிர்க்க தமிழ் தற்கால அறிவியல் அறிவு அனைத்தையும் உட்கொள்ள வேண்டும். பழமையும் புதுமையும் தாங்கி வலிமையுற வேண்டும்.
ஹிந்தி வாதம்:
ஆங்கிலத்தை எதிர்ப்பதற்கு தேசாபிமானிகள் எழுப்பிய புதிய வாதம் ஹிந்திவாதம். அந்நிய தேச மொழியான ஆங்கிலத்தைவிட, இந்தியா முழுமைக்கும் பொதுவான மொழியாகப் பெரும்பாலோர் புழங்குகிற ஹிந்திக்குத் தகுதியும் உரிமையும் உள்ளதென்று இவர்கள் கூறுகிறார்கள். தமிழுக்கு இதனால் கெடுதி சிறிதும் வருமென்று தோன்றவில்லை. உண்மையிலேயே கெடுதி விளைவிக்குமானால், இவ்வாதத்தைத் தமிழ் எதிர்க்க வேண்டும். ஹிந்தியினாலும் தமிழ் உரம் மிகுந்து வளரும் என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அனுபவத்தைப் பெருக்கிக் கொண்டால், அவ்வனுபவம் மூலமாகத் தமிழும் சிறப்பெய்தும். கல்வித் திட்டம் சீரமைக்கப்படும்போது இவ்வாதம் தக்கவர்களால் நன்கு ஆராயப்படலாம்.
சமயவாதம்:
சமயங்களும் புராணங்களும் பொய்கள் நிரம்பின, மக்களுக்குக் கேடு விளைவிப்பன. ஆகையால் இவற்றை ஒழிப்பது அவசியமென்று இவ்வாதிகள் கூறுவர். முதலாவதாகத் தமிழில் உள்ள இதிகாசங்களை ஒழிக்க வேண்டும் என்று இவர்கள் முயற்சி செய்கிறார்கள். சமயம் பற்றிய வாதத்தை இப்போது ஒதுக்கி வைத்துவிட்டு, முதலில் புராணம் முதலிய இலக்கியங்களை நோக்குவோம். இலக்கியங்கள் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையைப் பொறுத்தன. அவற்றை ஒழிப்பதால் மொழிபற்றிய சரித்திரமும் மக்களின் சரித்திரமும் காணாமல் போய்விடும். இலக்கியங்களில் பழங்கதைகள், பழமைவாத கருத்துகள் இருந்தால் அவற்றை ஒதுக்கிவிடக் கூடாது. கிரேக்க கதைகள் இருக்கின்றன. அவை கிரேக்க மொழியில் மட்டுமின்றி ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்துள்ளன. இக்கதைகளின் பொருட்டு அவ்விலக்கியங்களை ஐரோப்பியர்கள் ஒதுக்கிவிடவில்லை. மூன்றாவதாக, இக்கதைகள் நம் கவிதைச் செல்வத்தை வளப்படுத்தி, அதன் நயத்தை வளர்த்துள்ளன. பெரும்பாலோர் காவிய நயம் கருதியே இராமாயணம் போன்றவற்றைக் கற்கின்றனர். இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிற கட்சியோடு போராடுவது தமிழ் மக்களின் கடமையாகும்.
முடிவுரை:
தமிழின் மறுமலர்ச்சிக்குத் தடையாக இருப்பன சிலவற்றைப் பார்த்தோம். மொழியின் சிறப்பு அதனைப் பயில்வோர் சிறப்பு. எனவே, தமிழுக்கும் தமிழைத் தாய்மொழியாகப் பயில்வோருக்குமுள்ள நெருங்கிய தொடர்பை உணர வேண்டும். தமிழின் குறைகள் நம் குறைகள். அதன் சிறப்பு நம் சிறப்பு. நம் தாய்மொழி மாறாத இளமையோடும் குறையாத வலிமையோடும் என்றும் நிலவுவதற்கு நாம் உழைக்க இறைவன் அருள் புரிக.
(இத்துடன் தமிழின் மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான கட்டுரை நிறைவுறுகிறது.)
விடுதலை வேண்டும்!
இந்தத் தலைப்பிலான கட்டுரை - தமிழுக்கு விடுதலை வேண்டும் என்கிற கூக்குரலும் உழைப்பும் மிகவும் அவசியமாகும் என்கிறது. சிலர் இந்த அவசியத்தை உணர்ந்துள்ளார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கையாள்கிற முறைகள் சரியில்லை. இலக்கண விதிகளிலிருந்து தமிழ் விடுதலை பெற்றால் போதுமென்று நினைக்கிறார்கள். இலக்கணம் கற்றவர்கள் கடினமானத் தமிழ் எழுதுகிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், கடுமையான தமிழ் வேறு. வழக்கொழிந்த தமிழ் வேறு. இந்த இடத்தில் பேராசிரியர் கடுமையான தமிழுக்கும் வழக்கொழிந்த தமிழுக்கும் உதாரணங்கள் தருகிறார். வழக்கொழிந்த தமிழில் புழங்குவது தமிழைச் சிறையிலிடுவதாகும். இதிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும். இதைப் போலவே, சொற்களின் உண்மை வடிவம் தெரியாமல் மனம் தோன்றியபடி எழுதுவதும் தவறாகும். உதாரணம், ஒற்றுழையாமை என்ற சொல். இது போலி இலக்கணம். இதிலிருந்தும் தமிழுக்கு விடுதலை வேண்டும்.
இன்னும் சிலர், தமிழுக்கு அலங்காரம் செய்கிறோம் என்று நினைத்து எதுகை மோனைகளை மிகவும் பயன்படுத்தி, தமிழன்னையை சேற்றில் அழுந்தக் கிடத்தி விடுகிறார்கள். உதாரணம் - சீற்றத்தினால் ஊற்றமுற்றுக் கூற்றமுட்க ஏற்றெழுந்து ஆர்ப்பரித்தான். அருவருக்கத்தக்க இப்படுகுழிச் சேற்றிலிருந்து தமிழ் விடுதலை பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் எந்தக் கிளர்ச்சி தோன்றினாலும் அது தமிழ் மொழியில் வந்து பாய்ந்துவிடுகிறது. ஓர் இயக்கத்தால் வடமொழி வெறுப்பும் வளரத் தொடங்கியுள்ளது. வடமொழி அந்தணர்களுக்கு மட்டும் உரியதல்ல. அந்தணரல்லாதவர்களும் பௌத்த ஜைன சமயத்தவரும் அம்மொழியை வளர்த்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குப் போலவே அந்தணர்களுக்கும் தமிழ் தாய்மொழியாக இருந்தபோதிலும் அவர்களுக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் வாதிடப்படுகிறது. அந்தணர்களுள் ஒருசிலர் அதற்கு இடம் கொடுக்கவும் செய்கிறார்கள். தமிழ் தங்கள் தாய்மொழியல்ல என்பதுபோல் ஒதுங்கி விடுகிறார்கள். தங்களை ஆரியரென்றும் மற்றவரைத் திராவிடரென்றும் சொல்கிறார்கள். ஆரிய திராவிட வாதம் அர்த்தமற்றது. தனிப்பட்ட தூய ஆரியரும் தனிப்பட்ட தூய திராவிடரும் இல்லை என்பது வரலாற்று உண்மை.
இவையல்லாமல் தூய தமிழ்வாதம், புராண இதிகாச இலக்கிய எதிர்ப்பு வாதம் என்கிற வாதங்களும் தலைதூக்கியுள்ளன. இப்படிப்பட்ட எல்லா வகுப்புவாதக் கொள்கைகளிலிருந்தும் தமிழ் விடுதலை பெற வேண்டும். அதற்கு வள்ளுவர், இளங்கோ, கம்பன், இராமலிங்க சுவாமி, பாரதி, தேசிக விநாயகம் பிள்ளையின் நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். படித்து வந்தால் தமிழ் மொழிக்கு மாணவர்களே விடுதலை வாங்கித் தந்து விடுவார்கள்.
(இத்துடன் விடுதலை வேண்டும் என்கிற கட்டுரை நிறைவுறுகிறது.)
தமிழும் சுதந்திரமும்
திராவிட இயக்கத்தால் தமிழ் நாட்டிலும் சமீப காலமாகத் தமிழ் இணையத்திலும் கட்டமைக்கப்படுகிற பிம்பம் - தமிழுக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை. சமயமும் மதமும் பிறர் நம்மீது திணித்தவை என்கிற வாதம். இவ்வாதத்தை முன்வைப்பவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்கிறார்களே அல்லாமல், தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கிற வரலாற்று அல்லது சமூகவியல் சான்றுகளை முன்வைப்பதில்லை. கிரேக்க மற்றும் ரோம நாகரிகத்திலிருந்து எல்லா நாகரிகங்களிலும் மதமும் கடவுள் வழிபாடும் இருந்து வந்துள்ளன. இதைச் சொல்வதால் ஒருவர் மதவாதி ஆகிவிட மாட்டார். மதவாதத்தை எதிர்க்கிறவர்கள் கூட வரலாற்றை உள்ளது உள்ளபடிதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் மதத்தை அரசியலாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு உதவாத வெறுப்பை வளர்க்கிற ஸ்தாபனமாகவும், அதிகாரமாகவும் கட்டமைத்துக் கொண்டிருப்பதை முழுமூச்சுடன் எதிர்க்கிற அதே நேரத்தில், மதத்தை இவர்களிடமிருந்து மீட்பதுடன் மதம் குறித்த செழுமையான மற்றும் முன்னெடுத்துச் செல்லத்தக்க விஷயங்களைச் சொல்வதும் ஒருவரின் கடமையாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் இடதுசாரிகள் மதம் பற்றிப் பேசுவதே பிற்போக்கு என்கிற முற்போக்கு கொள்கையுடையவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இடதுசாரிகளே மதவாதத்துக்கு எதிரான அயராத போராட்டத்தையும் நடத்தி வருபவர்கள் என்பதும் உண்மை. புராதன தமிழ்ச் சமூகத்தில் சமயத்துக்கும் வேதத்துக்கும் இருந்த இடம் பற்றி தமிழும் சுதந்திரமும் என்ற கட்டுரையில் சான்றுகள் தருகிறார் பேராசிரியர்.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அன்பிற்குரிய சிவக்குமார்,
வையாபுரியாரின் பங்களிப்பு ஒரு சில ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் அவர் சொல்லியது எல்லாமே ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நமக்கு முன்னர் மிகப் பலர் வையாபுரியாரைப் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அதில் தமிழறிஞர் பலரும் உண்டு. அதை எல்லாம் படித்திருப்பிர்களா என்று தெரியாது. வையாபுரியாரின் ஒவ்வொரு பத்தாம் பசலிக் கருத்தையும் இப்பொழுது மீண்டும் எடுத்துத் திருப்பிப் போட்டு இன்னொரு சுற்று தேவையில்லாத வாக்கு வாதத்தை நீங்கள் எழுப்புவது ஏனென்று தெரியவில்லை. (ஆறுமுக நாவலருக்கும், இராமலிங்க வள்ளலாருக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களை இப்பொழுது படித்துவிட்டு மீண்டும் இன்னொரு சுற்று வரவிட்டால் எப்படி இருக்கும், அது போலத்தான் இது.)
இந்தப் புலனத்தில் நீங்கள் வைக்கும் பல கருத்துக்களையும் மறுத்து எழுத முடியும் தான். (ஓரையும் நாளும் எதைக் குறிக்கின்றன என்று அறிவீர்களா? ஓரை கிரேக்கத்தில் இருந்து வந்தது என்பதற்கோ, அது தமிழ் இல்லை என்பதற்கோ நீங்கள் அறிந்து ஒரு விளக்கம் சொல்லுங்களேன்? காப்பியம், நாடகம் என்பவை தமிழ் அல்ல என்பதற்கும் வையாபுரியாரின் சொல்லை வைத்துக் கொண்டு நொண்டி வழக்காடாமல் உங்கள் விளக்கம் சொல்லுங்களேன்.) ஆனாலும் மறுத்து எழுத முற்பட்டால் எனக்குச் சலித்துப் போகிறது. இது போன்ற உருப்படி இல்லாத வல்வழக்குகளில் கருத்தியல் காரணமாய் ஈடுபடும் நேரத்தில், பயன்தரும் படியாய், சில தமிழாக்கங்களில் ஈடுபடலாம், வரலாற்றில், பொருளியலில், அறிவியலில், நுட்பியலில் புதிதாய்த் தமிழில் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம் என்ற மனம் தெளிவுறுத்துகிறது. எனவே உங்களோடு வாக்குவாதத்தைத் தவிர்க்கிறேன்.
பொதுவாய், அரசியல் வல்வழக்காடிகளோடு மன்றாடிக் கொண்டு "நான் இந்நாள் வரை கற்புள்ளவள்" என்று மூதலித்துக் கொண்டே இருப்பதும், இந்தக் கலவைகளால் இன்னொரு மலையாளமோ, கன்னடமோ, தெலுங்கோ பிறப்பது தவிர வேறொன்றும் நடவாது என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டே இருப்பதும் மிகுந்த ஆற்றாமையைத்தான் கொடுக்கிறது.
உங்களுக்கு என்ன வேண்டும், மீண்டும் ஒரு மணிப்பவளமா, இல்லை தமிங்கிலமா, செய்துவிட்டுப் போங்களேன், இந்தத் தமிழ் செத்தொழிந்து போகட்டுமே? பத்தாண்டில் ஆவதை உங்கள் கட்டுரையால் எட்டாண்டில் செய்துவிடுவீர்களா? அப்படிச் செய்து, எல்லோரும் கடைத்தேறலாம், என்ன சொல்லுகிறீர்கள்? தமிங்கிலம் என்ற பொதுமொழி வளர்ந்தோங்கட்டும். வாட் டூ யூ சே? ஆர் யூ கேம் டு தட்? படிப்பதற்கு நன்றாய் இருக்குமே? இதை விடுத்துக் கழகங்களையும், தனித்தமிழ் ஆர்வலர்களையும் வெறுத்துத் தூற்றி எறிய வேண்டுவது எதற்கு? அதற்கு வையாபுரியாரைத் துணைக்கு அழைக்க வேண்டியதும் எதற்கு? எது அறிவியல் சார்ந்த கருத்து?
அன்புடன்,
இராம.கி.
அன்புள்ள இராம.கி.
வணக்கம். தங்கள் கருத்துகளுக்கு நன்றி.
ஒரு வாசக அனுபவமாகவே இந்நூலைக் குறித்து எழுதி வருகிறேன். வையாபுரிப் பிள்ளை சொன்னதில் தவறானவை இருக்கின்றன என்று நீங்கள் நம்பும்பட்சத்தில் அவற்றை நீங்கள் எழுதலாம். என்னைப் போன்றவர்களும் அறிந்து கொள்வோம். ஆனால், நான் படிக்கிற நூலைப் பற்றி நான் எழுதுவது குறித்து தங்களுக்கு ஏன் இவ்வளவு ஆதங்கமும் வருத்தமும் என்று எனக்குப் புரியவில்லை. பரவாயில்லை.
மற்றபடிக்கு ஒரே குட்டையில் ஊறிய மட்டையாக இல்லாமல் தமிழில் உரிய கவனம் பெறத் தகுதியான ஆனால் கவனம் மறுக்கப்பட்ட விஷயங்களை என்னால் இயன்றபோதெல்லாம் இயன்ற முறையில் அறிவதும் பகிர்ந்து கொள்வதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிற விஷயங்களே. வையாபுரிப் பிள்ளை சொன்னவை அனைத்தும் சரி என்று நானும் கொடிபிடிக்கவில்லை. அவர் என்ன சொன்னார் என்பதையே சொல்கிறேன். படித்துவிட்டுக் கொள்வதும் தள்ளுவதும் வாசகர் விருப்பம். ஆனால், இதைக்கூட செய்யக் கூடாது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. சரியோ தவறோ இப்படி ஒரு கோணமும் ஒரு வாதமும் இருக்கிறது என்பதை மற்றவர்கள் அறியக் கூட கூடாதா? எனினும், தமிழ் மீது உங்களுக்கு இருக்கிற பற்றே உங்களை இப்படி உணர்வுபூர்வமாய் எழுதவும் என்மீது கோபிக்கவும் வைக்கிறது என்கிற சந்தோஷத்திலும், உங்களைப் போன்ற பெரியவர்களும் நான் எழுதுவதைப் படிப்பது மட்டுமில்லாமல் கருத்தும் சொல்கிறீர்கள் என்றால் நான் எழுதுவது வீணாகப் போகவில்லை என்ற நம்பிக்கையிலும் தொடர்ந்து செயல்படுகிற ஊக்கம் கிடைக்கிறது. அதற்காக நன்றிகள்.
(தகவலுக்காக: என்னுடைய ஆசை இப்படிப்பட்ட நூல்களை மின்னச்சு செய்து இணையத்தில் அனைவர் பார்வைக்கும் வைக்க வேண்டும் என்பது. அதற்கான நேரமும் வசதியும் எனக்கு இல்லாததால், கட்டுரைகளின் சாரத்தை என் மொழியில் தருகிறேன்.)
தமிழ் வரலாறு, மொழியியல் துறைகளில் நான் வல்லுநன் இல்லை. ஆர்வம் மிகுந்த மாணவன் மட்டுமே. அதனாலேயே இத்தகு நூல்களைப் படிக்கும்போது பகிர்ந்து கொள்வதின் நோக்கம், உங்களைப் போன்ற மெத்தப் படித்தவர்கள் மேலும் வாசிப்பிக்கான நூல்களைப் பரிந்துரைக்கவும் அல்லது மாற்றுக் கருத்துகள் இருந்தால் சொல்லவும் கூடும் என்ற நம்பிககையில்தான். ஆனால், தனக்கு உவப்பில்லாத கருத்துகளைச் சொல்லக் கூடாது என்பவர்களின் அணியில் நான் மதிக்கிற தாங்களும் சேர்ந்துவிட்டீர்களோ என்ற எண்ணத்தைத் தங்கள் கருத்துகள் ஏற்படுத்துகின்றன. அது மட்டுமே வருத்தமளிக்கிறது.
அன்புடனும் வணக்கத்துடனும், பி.கே. சிவகுமார்
Dear Rama.Ki.
Please bear with my English.
You have mentioned that many has written against what Mr.Vaiyapuri Pillai wrote and proved he was wrong. Can you please give the names of those authors and their works please. I will try to read them.
If many are not aware of Ramalingar Vs Arumuga Navalar discussion (I think many common citizens are still not aware), I think it would not be bad idea to write about it and bring all the details about it to public domain. I think projects like Madurai Thittam does these kind of works only. Bringing old books/history into limelight today by preserving them electronically.
Also, just bcos a thing is very old, I dont agree that we should not discuss or revisit it. But, in this case, I still think, the situation is considerably same as then.
You have called Vaiyapuri Pillai's views as "paththam pasali". I will be very happy to know how you qualify that statement and happy listen to what do you say on that.
Like you, I also believe in today's Tamil situation its hard to bring up or conduct a healthy discussion. Any good intention of starting a debate or discussion, ends sooner or distracted widely or asked to stop. Whatever continues beyond these become polemics sooner or later and loses focus as discussion anymore. Still, I have hope and feel that we have to work through it and can really make good discussions happen.
But, I would respect if you dont like to reply for my above comments.
Thanks for your views. Please continue to say them. Just because I may not agree with your views all the times, I will not ask you to not air it or not to write it.
Thanks and regards, PK Sivakumar
அன்புள்ள பிகே சிவகுமார்,
இந்த நூலைப்பற்றி ஆர்வத்தைக் கொடுத்தது உங்கள் கட்டுரைகளும், இராம.கி. அவர்களின் மறுமொழியும். சமயம் வாய்க்கும்போது மேலும் அறிந்துகொள்ள ஆவல்.
நன்றி,
-காசி
Post a Comment