Wednesday, September 29, 2004

மீள்பார்வை

படைப்புகளும் வரலாறும் காலந்தோறும் மீள்பார்வை செய்யப்பட்டு வருவது இயற்கை. இத்தகைய மீள்பார்வையானது அரசியல் மற்றும் அவரவர் பின்பற்றுகிற கொள்கைகளுக்கேற்ப வண்ண வண்ண உடைகளையும் அணிந்து கொள்ளும். மீள்பார்வை என்ற பெயரில் தன் கருத்துகளுக்கேற்ப படைப்பையும் வரலாற்றையும் திரித்துப் பொருள் கொள்வது தமிழில் நிறையவே நடந்துள்ளது. ஓர் உதாரணமாக, கம்பரசத்தைக் குறிப்பிடலாம். அதனாலேயே மீள்பார்வை என்றால் கொஞ்சம் அலர்ஜிக்குள்ளாகி, சந்தேகப் பார்வையுடன் பார்ப்பது பலரின் சுபாவமாக இருக்கலாம். எழுதுபவரின் சமூகப் பொருளாதார அரசியல் கோட்பாடுகளை அதிகம் திணிக்காமல், ஆனால் சமூகம் முன்னேறியுள்ள பாதையின் அடிப்படையிலும் சமூகத்தில் வெளிப்படும் உணர்வுகளின் அடிப்படையிலும், படைப்பு எழுதப்பட்ட காலத்தின் விழுமியங்களைக் கணக்கில் கொள்கிற அடிப்படையிலும் செய்யப்படும் மீள்பார்வைகள் அவசியம் படிக்கப்பட வேண்டியன. அத்தகைய மீள்பார்வைகள் ஒருவருக்கு முழுவதும் ஏற்புடையதாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அவை கோடுகாட்டுகிற அல்லது இன்றைய சூழலில் எடுத்துச் சொல்கிற புதிய பொருள்கள் பழைய விஷயத்தைப் புதிய பார்வையில் பார்க்க உதவலாம்.

அப்படி - "அதிகம்" திரிந்து போகாமல், கருத்துகளின் அல்லது பிரசாரத்தின் நெடி "அதிகம்" அடிக்காமல், மணிமேகலையைப் பற்றி இன்றைய பெண்ணியப் பார்வையில் மாலதி மைத்ரி எழுதியுள்ள கட்டுரை ஒன்று "சிறையில் அடைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பெண்" என்ற தலைப்பில் செப்டம்பர் 2004 தீராநதியில் வெளியாகியுள்ளது. அதைப் படிக்குமாறு நண்பர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இந்தக் கட்டுரை ஹிந்து மதத்தில் பெண் விடுதலை குறித்துக் கூறுகிற கருத்துகள் விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால், அதற்காக இந்தக் கட்டுரை படிக்கப்படக் கூடாது என்பது சரியாகாது.

பெண்ணியம் பேசுகிற பலருக்கும் பெண்ணியத்தின் வரையறை தெரிவதில்லை அல்லது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இணையத்தில் கூட பெண்ணியம் என்றால் ஆண்களைக் குறை சொல்வது மட்டுமே என்கிற மாதிரியான புரிதல் பரவலாகக் காணப்படுகிறது. பெண்ணியம் என்பது தன் விடுதலைக்குத் தடையாக இருக்கிற எதையும் எதிர்ப்பது. அதனால்தான், அமெரிக்காவில் பெண்ணியவாதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதைக்கூட எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிகள் கருணையும் அன்பும் பெருகுபவர்களாக இருப்பதால் :-) , ஆண்களையும் ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதை எதிர்க்கிற அளவுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. தமிழின் மரபு இது என்று யாரும் இதற்கு கிளிசே வாக பதில் சொல்லக் கூடும். ஆனால், எதையோ ஒன்றை எதிர்த்துக் கொண்டு இருப்பதன் மூலம் தமிழ்நாட்டுப் பெண்ணியவாதிகள் தங்கள் இருப்பை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே. அவர்களும் அவர்களின் பார்வையும் விரிவடையும்போது அவர்கள் வேண்டுகிற விடுதலையின் பரப்பும் விரிவடையும்.

மாலதி மைத்ரியின் இந்தக் கட்டுரை அந்தக் கால சமூக அமைப்பு, மதம் ஆகியவற்றினால் பெண்ணியம் எப்படி தளைக்கப்பட்டிருந்தது என்று சொல்வதால் ஆண்களைத் தாண்டிப் பேசுகிறது. சமூகமும் மதமும் அக்காலத்தில் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன என்பது உண்மையென்றாலும், ஆண்களை மட்டுமே நேரடியாகக் குற்றம் சாட்டுகிற தொனியில் இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தால் அது வெற்றியடைந்திருக்காது என்று நம்புகிறேன்.

இக்கட்டுரை முன்வைக்கிற கருத்தாக்கங்கள் சிலவற்றைக் குறித்து எனக்குக் கேள்விகளும் இருக்கின்றன என்பதையும் சொல்லி வைக்கிறேன். ஆனால், இந்த நேரத்தில் என்னின் அக்கேள்விகள் முக்கியமல்ல. பெண்ணியவாதிகள் நம் பண்டைய இலக்கியங்களின் மீது செய்கிற இத்தகைய மீள்பார்வைகள் முக்கியமானவை - நாம் முழுதும் உடன்பட முடியாமல் போனாலும். இத்தகைய முயற்சிகள் பெண்ணியம் குறித்த விவாதம் வளரவும், பெண்ணியத்தின் போக்கை வரையறுக்கவும் உதவும்.

மாலதி மைத்ரியின் அக்கட்டுரையின் சுட்டி:

http://www.kumudam.com/theeranadhi/010904/pg1.php

No comments: