Thursday, October 28, 2004

கங்கவரம் - பி.ச. குப்புசாமி

[1943ல் பிறந்த பி.ச.குப்புசாமி அறுபதுகளில் நிறைய எழுதியவர். அப்போது சந்திரமௌலி, குயிலி முதலிய புனைப்பெயர்களிலும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் அறுபதுகளில்(?) மாவட்டவாரியாக சிறப்பிதழ்கள் வெளியிட்டு வந்தது. வையவனுடன் இணைந்து அந்தக் காலத்தில் வடாற்காடு மாவட்ட விகடன் சிறப்பிதழைத் தயாரித்திருக்கிறார். இவர் கதைகளை நட்சத்திரக் கதைகளாக தினமணி கதிர் வெளியிட்டது. இவர் 1960களில் எழுதி வார இதழ் ஒன்றில் வெளியான கதை கங்கவரம். (எந்த இதழில் எப்போது வெளியானது என்கிற விவரங்களை இனிமேல்தான் தேட வேண்டும்.) இருபதாம் நூற்றாண்டின் நூறு சிறந்த சிறுகதைகளைப் பல தொகுதிகளாகத் தொகுத்து எழுத்தாளர் விட்டல்ராவ் கொடுக்க, கலைஞன் பதிப்பகம் "இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்" என்ற வரிசையை வெளியிட்டது. (விட்டல்ராவைப் பற்றி வெங்கடேஷ் அவ்வபோது எழுதியிருக்கிறார். அவற்றுக்கான இணைப்புகளைத் தேடித் தர இயலவில்லை. மன்னிக்கவும்.) விட்டல்ராவின் இந்த நூற்றாண்டுச் சிறுகதைகளின் தொகுப்பொன்றில் - நூறு கதைகளுள் ஒன்றாக - இடம் பெற்றது கங்கவரம்.

பி.ச.குப்புசாமி சங்க இலக்கியத்திலும், பக்தி இலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர். டாக்டர் மு.வ.வுடன் சேர்ந்து தமிழ் பயின்ற தமிழ் வித்வானான தன் பெரியாப்பாவால் சிறுவயது முதலே பண்டைத் தமிழ் இலக்கியங்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொண்டவர். மரபுக் கவிஞர். "எங்கள் வடாற்காட்டில் வானாதி பூதங்கள் வரையாது பொழிவதில்லை" என்று தொடங்குகிற மரபுக்கவிதை விகடன் வடாற்காடு மாவட்ட மலரில் பிரசுரமானது. நீதிக் கட்சியிலும் திராவிட இயக்கங்களிலும் தோய்ந்த குடும்பத்திலிருந்து எழுந்த முதலாவது தேசிய, இடதுசாரிக் குரல் இவருடையது. ஏப்ரல் 1974 கண்ணதாசன் மாத இதழில் வெளியான இவரின் "ஜெயகாந்தன் - என் குறிப்புகள்" ஜெயகாந்தனை வெகுஅருகில் இருந்து அவதானித்த ஒரு நண்பரின் தேர்ந்த டயரிக் குறிப்புகளாகும். ஜெயகாந்தனையும் அவர் எழுத்துகளையும் நன்கறிந்த, சரியாகப் புரிந்து கொண்ட நான்கு நண்பர்களுல் ஒருவராக இவரை, "ஜெயகாந்தன் ஒரு பார்வை" தொகுப்பின் ஆசிரியர் கே.எஸ்.சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். எழுத்தின் மீது இருக்கிற மதிப்பினால் 1970களுக்குப் பிறகு எழுதுவதைக் குறைத்துக் கொண்டார். 1990-களில் வாரம் ஒரு பிரபலம் ஆசிரியராக இருந்து குமுதம் வார இதழைத் தயாரித்தார்கள். ஜெயகாந்தன் தயாரித்த குமுதம் வார இதழில், ஜெயகாந்தன் கேட்டு வாங்கி பிரசுரித்த இவரின் சிறுகதை "விருது" ஒரு நல்லாசிரியரைப் பற்றியது.

ஓர் ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியராக - தமிழ்நாட்டு மூலைகளில் முடங்கிக் கிடந்தாலும் அடையாளமும் சுவாசமும் இழந்துவிடாத கிராமங்களிலும் மலையடிவாரங்களிலும் - 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். பாரதி சொன்ன புண்ணியத்திலும் புண்ணியமென்ற ஆசிரியப் பணியை அதே உற்சாகத்துடனும் அர்பணிப்புணர்வுடனும் கடைசிவரை செய்தவர். தன் மகனின் திருமணத்தைக் கூட முன்வரிசைகளில் உட்கார்ந்திருந்த தன் மாணவக் குழந்தைகளின் நடுவில் சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தவர். இடதுசாரி ஆசிரியர் இயக்கங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். ஆசிரியர்கள் போராட்டத்தில் சிறைகள் சென்றவர். ஒவ்வொரு முறையும் சிறையில் பலநாட்கள் இருந்தவர். சிறை வாழ்க்கையைக் கூட எவ்வளவு இன்பமாய் அனுபவிக்க முடியுமோ அப்படி அனுபவித்து வாழ்ந்தவர். வாழ்க்கை கொணர்கிற வாய்ப்புகளையும் தருணங்களையும் அவை எப்படிப்பட்டதாயினும் ரசிக்கவும் அவற்றில் திளைத்து மகிழவும் முனைபவர் இவர் என்பதற்கு இது உதாரணம். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராடுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொண்டபோது, அதுபற்றிய ஆக்கபூர்வமான விமர்சனத்தையும் முன்வைக்கத் தயங்காதவர்.

இவர் தேர்ந்த இலக்கிய ரசிகரும், புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரும் ஆவார். அவருக்கும் எனக்குமான உறவை நான் பொதுவில் சொல்லிக் கொண்டதில்லை. அவர் எழுத்துகளை விமர்சிக்க விரும்புபவர்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதாலும், அவர் ஒளியில் நான் பிரகாசிக்கிற அபிப்பிராயம் ஏற்படுத்தக் கூடாது என்பதாலும். என் வாழ்க்கையில் நான் அதிகம் இணங்கிப்போகிற மற்றும் அதிகம் முரண்டு பிடிக்கிற - இணங்கினாலும் முரண்டினாலும் நெருக்கம் தவறவிடாத - என் நண்பர்களுள் ஒருவர்.

இச்சிறுகதையைப் பல பதிவுகளாகப் பிரித்துப் போடுவது வாசிப்பு அனுபவத்தை பாதிக்கக்கூடும் என்பதால் முழுவதையும் இந்தப் பதிவிலேயே தருகிறேன். இனி கதைக்குள்...]

அவன் பெயர் சாரங்கன்.

படிப்பை முடித்துவிட்டு, முதன்முதலாக உத்தியோகத்தில் சேர்ந்து அந்த ஊருக்கு வருவதற்கு முன், அவனுக்குக் கங்கவரத்தைப் பற்றி எதுவும் தெரியாது. வீட்டையும் பெற்றோரையும் விட்டுவிட்டு ஓர் அயலூரில் வந்து வசிக்க வேண்டியிருக்கிற முதற்சந்தர்ப்பம் அவனுக்கு அதுதான். அந்த மாறுபாடான உணர்ச்சியுடனும், 'வாழ்க்கையை மேற்கொள்கிறோம், அதை எதிரிடுகிறோம்' என்கிற குறுகுறுப்புடனும் அவன் கங்கவரத்துக்கு வந்து சேர்ந்தான்.

கங்கவரம் ஒன்றும் பெரிய ஊர் அல்ல. ஆனால், அங்கு சற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் ஒன்று இருந்தது. வருஷந்தோறும் அதில் நடக்கும் விழாக்களுக்கு அக்கம் பக்கங்களில் இருந்து நிறைய ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். எனவே, அது ஒரு கிராமம் என்கிற நிலையிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொண்டு, தபாலாபீஸ், ஆஸ்பத்திரி மற்றும் சில அரசாங்கக் காரியாலங்களோடு கூடிய ஓர் சுமாரான சிற்றூராக விளங்கியது.

ஊரைச் சுற்றிலும் கழனிகள். சற்று தூரத்தில், எங்கோ புறப்பட்டு எங்கோ போய் முடிகிற ஓர் ஆறு. ஜாமம் தவறாது முழங்குகிற மலைக்கோயிலின் மணியோசை. கால மாற்றங்கள் சீக்கிரம் வந்து கலந்து விடாததோர் மூலைத் தனிமை. இவற்றால், கங்கவரம் வாழ்க்கையின் வேகத்தையன்றி அதன் ஆழத்தைக் காட்டுவதாய் அமைந்திருந்தது.

அதிலும் அதன் அக்ரஹாரம்...

அமைதி என்பதை அங்குதான் பார்க்க வேண்டும். இரண்டே தெருக்கள்தான்; வீடுகளும் எண்ணிக் கச்சிதமாக இருந்தன; புழக்கடைகளில் தென்னை, வாதா மரங்களின் நிழல் கவிந்திருக்கும். மத்தியான நேரத்தில்கூட, அந்த நிழலில், ஆத்ம சுகத்தின் அனுபவம் போன்று பட்சிகள் கூவிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் வழிவழி வந்த மானியங்களும், அல்லது புதிய பரம்பரையினர் தலையெடுத்துச் சேர்த்த சொத்துக்களும் உண்டு. அவ்விதமின்றி, கற்பூரம் போலக் காலக் காற்றில் இருந்ததே தெரியாமல் போன வீடுகளும் சில உண்டு.

இரண்டு தெருக்களிலும் பெரிய தெரு தென்னண்டைத் தெருதான். அங்கு சுமார் நாற்பது வீடுகள் இருக்கும். அந்தத் தெருவின் மேல்முனையிலுள்ள ஒரு வீட்டின் அறையில்தான் சாரங்கனும், அவனோடு அவன் காரியாலயத்தில் வேலை பார்க்கும் இன்னொரு நண்பனுமாகக் குடி வந்தார்கள்.

வெகு சீக்கிரமே சாரங்கனுக்கு அந்த வாசம் பிடித்துப்போய் விட்டது. ஆற்று நீரில் ஸ்நானம், கழனிகளிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று, உற்சவங்களின்போது அங்கு வருகிற புதிய புதிய மனித முகங்கள், அவற்றில் தென்படுகிற மனித வாழ்க்கையின் விதவிதமான அழகுகள் - இவ்வாறாகக் கங்கவரத்தை அனுபவித்துக் கொண்டு வந்தான்.

கொஞ்ச நாட்கள் கழிந்தன.

கங்கவரத்து அக்ரஹாரத்தில் இருள் சூழ்ந்து, வீடுகளிலெல்லாம் விளக்குகள் எரியத் தொடங்கி விட்டன. நாற்புறங்களிலும் வானத்தின் எல்லைகள் உலகின் மீது கவிய வருவன போன்றும், வாழ்வின் சோகத்தால் இறுகியவை போன்றும் தோற்றங் கொண்டன. எதையோ அலுத்துக் கொள்வதற்காகவோ, இன்ப மிகுதியால் கலகலவெனச் சிரிப்பதாகவோ அவ்வப்பொழுது சில மனிதக் குரல்கள் உணர்ச்சியின் ரஸம் மிகுந்து ஒலிப்பதைத் தவிர மற்றபடி எங்கும் மௌனமே குடி கொண்டுவிட்டது.

வழக்கமாக அந்த நேரத்தில்தான் சாரங்கன் சிறிது தொலைவிலுள்ள ஆற்றங்கரையில் உலாவி விட்டு வந்து தென்னண்டைத் தெருவில் நுழைவான். அதுவரை எதிரே ஆள் தெரியாத சிந்தனையில் கவிழ்ந்து வருகின்ற அவன் முகமும் அப்பொழுதுதான் நிமிரும். வீதியின் இரு மருங்கிலும் ஜன்னல்களிலும், அன்றைய வாழ்க்கை அவர்களுக்குத் தந்த இன்பத்தின் பிரதிபலிப்பு போன்ற சாயல் கொண்ட மக்களின் முகங்களையும் காட்சிகளையும் அவன் காண்பான். அதோடு அந்த வீடுகள் தங்கள் வெற்றியின் சின்னமாக வெளியே அனுப்புகிற மின்சார வெளிச்சத்தையும், இதுவரை இருட்டில் பழகிய தன் கண்கள் கூசக் கடப்பான்.

அந்த வீடுகளெல்லாம் புதிய முயற்சிகளினால் ஓங்கி எழுந்துள்ள, ஓரளவு செல்வத்தின் பசையும் அதனால் களிப்பின் துள்ளலும் நிறைந்து விளங்குகிற வீடுகள்.

ஆயினும் அவன் மனம் அவற்றில் அதிகமாகச் சஞ்சரிப்பதில்லை. அவற்றில் எந்த வீட்டையும் பொதுவாயன்றி வேறு எவ்வித விசேஷ உணர்ச்சியுடனும் அவன் நோக்குவதில்லை. ஆனால், பதினைந்து வீடுகள் தாண்டி, அதோ, அந்த வீடு வரும்பொழுதுதான் அவனது முழுக்கவனமும் அங்கு பறிபோய் விடும்.

அந்த வீடு, அந்தத் தெருவிலிருக்கும் மற்ற எல்லா வீடுகளிலிருந்தும் வித்தியாசப்பட்டு, விதியெனும் நம்பிக்கையின் சமாதியின் மீது இயங்குவதைப் போலத் தோற்றமளித்தது. அதன் இரண்டு ஜன்னல்களும் அங்கு மனங்கள் மகிழ்ச்சியற்றுப் போனதைப் புலப்படுத்தின. அவ்வீட்டினுள் நுழைந்து விட்ட இருளே அதன் வாசலிலும் தேங்கி நின்றது. அதை அணுகுகிற போதெல்லாம், அவன் தன் நடையை மிகவும் மெதுவாக்கிக் கொண்டு, முகத்தைத் திருப்பி, அந்த வீட்டு வாழ்வின் பிரதான சோகமாகிய ஓர் உருவத்தைத் தனது கண்களால் தேடுவான்.

அதுதான் காமு!

அவள் ராகவைய்யங்காரின் மகள். அவனுடைய அன்றாட அனுதாபம். அந்த வீட்டின் சபிக்கப்பட்ட அழகு.

பெரும்பாலும் அந்நேரங்களில், அவள் முன்கூடத்தில் உட்கார்ந்திருப்பாள். வீதியிலிருந்து பார்த்தாலே அது அவனுக்கு நன்கு தெரியும். பார்த்த சில விநாடிகளுக்கெல்லாம் அவளையும் அவ்வீட்டையும் அவன் கடந்து விடுவான். ஆனால் அதற்குள்ளாகவே அவள் முகத்தின் உணர்ச்சி பாவங்கள் தங்களுக்குரிய முழுவேகத்தோடு வந்து தாக்கி, அவன் மனத்தில் பதிந்து விடும். அதிலும் அந்தக் கண்கள்... அவற்றைப் பார்த்த பிறகு அவனது சிந்தனையின் கிளர்ச்சி வெகுநேரம்வரை ஓய்வதில்லை.

உயிரின் நிராசையை அவன் அந்தக் கண்களில் பார்த்தான். தன் வாழ்க்கையின் விதியையே அறிந்து கொண்டுவிட்டு, 'சரி, இனி இதையன்றி வேறில்லை' என்கிற நிலையில் உலக இயக்கங்களில் ஒப்புக்குப் பங்கு கொள்கிற ஒரு பாவனையை அவளது பார்வையில் கண்டான்.

அவை அவனை வெகுவாகப் பாதிக்கும்.

அதற்குப் பிறகு, தெருக்கோடியிலிருக்கும் தனது அறைக்கு அவன் சென்று சேரும்வரை, வாழ்வின் இயல்புகளோடு திமிறி முரண்டு கொள்வதும், அது ஏன் அவ்வாறு என்று தவிப்பதும், இரண்டுமின்றி இதை எவ்விதத்திலும் தீர்க்க முடியாதோ என்கிற தனியானதோர் ஊமைச் சோகமான போக்குகளில் அவன் மனம் சென்று மீளும். அவனது அறை நண்பன் அவனை எதிர்ப்பட்டு அவனோடு ஏதாவது விவகாரங்களைப் பேசிக் கல்லெறிந்த பிறகுதான், அவன் தன்னிலை கலைந்து வேறு காரியங்களில் ஈடுபடுவான்.

அவளை முதன்முதலில் பார்த்த ஆரம்ப நாட்களில் அவனுக்கு இவ்விதமெல்லாம் ஏற்படவில்லை. சாதாரணமாகப் பெண்ணின் அழகு அவனை எவ்விதம் தாக்குமோ, அப்படித்தான் அவனுக்கும் இருந்தது. அதிலும் இளைஞனென்றாலும் அவன் இருபது வயதுக்கும் குறைந்தவன் ஆதலால், அவள் அழகின் இன்பத் தோற்றங்களையே தனது வியப்பு மாறாத கண்களால் கண்டு கொண்டு வந்தான்.

அப்படியிருக்கையில் போகப் போக அவள் அழகு மங்கிப்போய், அவள் வாழ்க்கையின் அர்த்தமே அவனுக்கு ஓங்கித் தெரிந்தது, அவன் சற்று வித்தியாசமானதோர் இளைஞனாக இருந்ததால்தானோ என்னவோ?

உண்மை அதுதான். அவனுக்கு வயது பத்தொன்பது இருக்கும். கற்பனாவஸ்தை நிறைந்த பருவமொன்றின் சரியான மாதிரியாய் இருந்தான். அதில் அவனது இயல்பின் கவிதையும் சற்றுக் கலந்திருந்தது. உணர்ச்சிகளில் இளகுவதற்கு இது போதும். ஆனால் அதோடு அவன், சுக துக்கங்கள் என்கிற உலக அனுபவங்களின் உரமேறி மரத்துப் போகாதவனாய், வாழ்க்கையையும் அதன் ஒவ்வோர் அம்சத்தையும் மிகவும் அபூர்வமானதாய்க் கருதிக் கரைந்து போகிறவனாய் வேறு இருந்தான்.

காமுவையும் அவ்வாறே கருதினான்.

காமுவுக்கு வயது இருபத்தைந்து - ஏன் இருபத்தாறோ, இருபத்தேழோகூட இருக்கும். பூரிப்போடு இருந்தால் அது யௌவனம் இன்னும் ஆட்சி செய்கிற பருவம்தான். ஆனால் இவளோ, தன் கவலைகளால் சாம்பியது போல் தோன்றினாள். பூத்து வாடிய காம்போடு தலை சாய்த்ததோர் கனவு மலர் போல இருந்தாள். தன் வாழ்க்கையின் விதியை அங்கீகரித்து, பெண் மனத்தின் சஞ்சலங்களை அடக்கிக் கொண்டது போன்ற விழிகள். வார்த்தைகள் உறைந்தது போன்ற உதடுகள். மத்தியான நேரத்தில் வெறுந்தரையில், புறங்கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கி எழுந்தாளானால் முகமெல்லாம் சிவந்து குழம்பிப் போகுமளவுக்கு உடல் நிறம். ஆசைகளால் விம்மி, பின் அவை அழிந்ததனால் சோர்ந்தது போன்ற அவயங்கள்.

முதன்முதலில் அவளை ஆற்று நீரில் ஈரப்புடவையோடு பார்த்தபொழுது 'வெட வெட'வென்று நீண்டு மெலிந்த அவள் சிவந்த உடலில் ஒருவிதமான காட்சியின் வேகம் கமழ்ந்ததையும் அவன் உணர்ந்தான்.

ஆனால் நாளடைவில், அவள் அழகின் அந்தச் சிறு போதையுங்கூட அவன் பார்வைக்கு அற்றுப்போயிற்று. அவளது வேறு தன்மைகளை எல்லாம் அவன் சரிவர உணரத் தலைப்பட்டான்.

அவன் குடியிருந்த தெருவிலேயே காமுவின் வீடும் இருந்தது, ஒருநாளைக்கு அவன் அவளைப் பலமுறையும் பாக்கச் சந்தர்ப்பமளித்தது...

தன் வீட்டுத் திண்ணையில் தூணோரம் அமர்ந்து, எதிர்வரிசை வீடுகளில் யாரையாவது, எந்தக் காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பாள். கூடத்தில் உட்கார்ந்து, ஆலிலைகளையோ, கிழிந்துபோன பழைய துணிகளையோ தைத்துக் கொண்டிருப்பாள். அல்லது பேசாமல் எதிர்வீட்டுக் கூரையையோ, அதைக் கவிந்திருக்கும் வானத்தையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். பொழுது சாய்ந்து இருட்டிய பிறகு, அதே கூடத்தில் அவளைச் சுற்றி அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் மூன்று நான்குபேர் இருப்பார்கள். எல்லோருக்கும் மத்தியில் ஒரு லாந்தர் விளக்கு இருக்கும். அவர்களுக்கு அவள் பாடம் சொல்லிக் கொண்டிருப்பாள். சில்லென்று ஜலம் தெளித்தது போன்ற குரல். சற்றுக் குனிந்தாளானால், நெருங்கி வந்த அவள் முகத்தில் விளக்கின் ஒளி பட்டு கன்னங்கள் செவ்வொளி கொள்ளும்.

அப்பொழுதெல்லாம் சாரங்கன் அவளைப் பார்த்தான். காமுவும் அவன் தன்னைப் பார்ப்பதைப் பலமுறை பார்த்தாள். அவனையும் பிற ஆடவர்களையும் காணும்போது, சில பெண்களின் பொய்க்கூச்சம்போல் அவள் தன் குணங்களைக் கொச்சைப்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களை நேர்கொண்டு பார்த்தாள். ஆனால், ஒரு நிலையிலிருந்து பிறழாததுபோல் அவள் கண்களில் சலனமிருக்காது. யாராவது தன்னை அதிகம் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் மௌனமாகவும் மெதுவாகவும் தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொள்வாள். அவ்வளவுதான்.

அவளுடைய அந்தக் கௌரவம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இடையில், அவளைப்பற்றிய பிற விவரங்களையும் அவன் அறிந்தான்.

காமுவின் தந்தை ராகவைய்யங்காருக்கு ஒரு பௌராணிகர் போலவும், பண்டிகை நாட்களில் அந்தந்த ஊர்களுக்கு சென்று பஜனை, கதாகாலட்சேபம் முதலியவற்றில் கலந்து கொள்கிற ஒரு பாகவதர் போலவும் ஏதோ தொழிலென்று அறிந்தான். ஆனால், அதில் பிரமாதமாக ஏதும் இல்லாவிட்டாலும் சுமாராகக் கூட வருவாய் இல்லை என்று தெரிய வந்தது. அவரது முதுமையும், அத்தொழிலுக்கொவ்வாததோர் மெலிந்த சுபாவமும் அதற்குக் காரணமாயிருக்கலாம். அவரைப் பார்க்கும்பொழுது தன்னுடைய இத்தனை வருட வாழ்க்கையில் அவர் ஆடிக் கலகலத்துப்போன அந்த வீட்டைக் காப்பாற்றி வைத்திருப்பதே ஒரு பெரிய காரியம் என எண்ணத் தோன்றிற்று. மனிதர் அவ்வளவு பலவீனமாயிருந்தார்.

இப்படிப்பட்டவர், தான், தன் மனைவி, மகள் காமு, ஒரு பையன் ஆகிய நால்வரின் அன்றாட வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டு வருவதே பாராட்ட வேண்டியதாயிருக்கும்பொழுது, காமுவை இங்ஙனம் கனவுகளின் சருகாய், அவளையே அவளுக்கு வதையாய் இன்னும் அந்த வீட்டில் வைத்திருப்பது குறித்து யாரும் அவரைக் குறை சொல்ல முடியாது.

காமுவுக்கேகூட அவர்மேல் அந்த ஆதங்கம் இல்லை போலிருந்தது. தன் தகப்பனாரோடும் குடும்பத்தாரோடும் அவள் பழகுகிற பல காட்சிகளைச் சாரங்கன் பார்த்திருக்கிறான். அவள் தன் உறவுகளின் மீது கொண்டுள்ள உருக்கமான அன்பு அவற்றில் வெளிப்படும்.

ஒரு சமயம் ஜன்னலண்டை உட்கார்ந்து, தன் தகப்பனார் சொல்லச் சொல்ல அவள் ஏதோ கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ராகவைய்யங்கார் "எழுதிட்டியாமா?" என்று கேட்டதும், அதற்குக் காமு, "ஊம்" கொட்டி விட்டு, "என்னமோப்பா, நீங்க அவாளையெல்லாம் மதிக்கிறது எனக்குப் பிடிக்கல்லே" என்று சொன்னதும் சாரங்கன் செவிகளில் விழுந்தன. இவை ஒரு சம்பாஷணையின் சாதாரணத் துணுக்குகள்தான். ஆயினும், பனித்துளியில் பெரிய பெரிய தோற்றங்கள் பிரதிபலிப்பதுபோல, வாழ்க்கையின் பல ஆழ்ந்த விஷயங்கள் இவ்வித சின்னஞ்சிறு கோணங்களில்தான் வெளிப்படுகின்றன. அன்று காமுவின் குரலில், அவள் தன் தகப்பனாரின் மீது கொண்டிருக்கிற மரியாதையும், அவரிலும் தாழ்ந்த ஓர் உலகத்திலிருந்து அவள் அவரது கௌரவத்தைக் காப்பாற்ற விரும்புவது போன்ற ஒரு முயற்சியும் தென்பட்டன. தன் வாழ்க்கை இவ்வாறு தடைபட்டு நிற்பது குறித்து, அவளுக்குத் தன் தகப்பனாரின்மீது வருத்தமிருக்கும் என்று அன்றிலிருந்து அவனால் நம்ப முடியவில்லை.

இன்னொரு சம்பவமும் இதேபோல யதேச்சையாக நடந்ததுதான். அவளது தம்பி ஐந்தாவதோ என்னவோ படிப்பவன். ஒரு நாள் இவள் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவன் வந்து அவள் கால்மாட்டில் வீட்டு வாசற்படிகளில் உட்கார்ந்தான். அவன் முகம் சற்றுப் பரிதாபகரமாக இருந்தது. அவன் முகத்தைத் தன் மடிமேல் சாய்த்து, காதோரத்துக் கிராப்பை விரல்களால் கோதிவிட்ட வண்ணம் கிட்டக் குனிந்து, "பழையது இருக்கு. நல்ல மோராட்டம் கரைச்சுத் தரேன். சாப்பிடறியா?" என்று கேட்டாள். அதைப் பார்த்தபொழுது சாரங்கன் மனமிளகிப் போனான். அவனுக்கு உணர்ச்சிக் கண்ணீர் ததும்பியது. அன்று காமுவின் குரலும் பரிவும், துன்பங்களின்போது மனித இதயம் அடைய வேண்டிய பேரன்பின் உருவமாக அவனுக்குத் தோன்றின.

எனவே, அந்தக் கங்கவரத்து அக்ரஹாரத்திலேயே இவ்வளவு வயதாகியும் இன்னும் திருமணமாகாமலிருக்கிறவள் காமு ஒருத்திதான் என்கிற விஷயத்தை அவனால் சகிக்க முடியவில்லை. அழகின் பூர்ணம் அவ்வாறு கூடி வந்தவளும் பேதலிப்பற்ற அறிவின் அம்சங்களை வாய்த்தவளுமான அத்தகைய ஒரு பெண் எவ்வாறு ஒருவராலும் அங்கீகரிக்கப்படாமல் போனாள் என்று அவன் ஆச்சரியப்பட்டான். இந்த இடத்தில் அவன் சமூகத்தில் வாழ்க்கை முறைகள் அமைந்திருக்கும் முரண்பாடுகளைப் பற்றிய அறிவுத் தெளிவின் அமைதியோடின்றி, தனது கனவுப் போக்கான இளமனதில் உந்தியெழும் சொந்த உணர்வுகளின் வேகத்தோடு காமுவின் சோகத்தை நோக்கினான். அதனால் அவள் அவனுக்கு ஓர் பெரிய சமூகக் கொடுமையாகத் தோன்றினாள்.

ஒவ்வொரு முறை அவளைப் பார்க்கும் பொழுதும் அவனுக்கு இந்த உணர்வு வலுத்து, நாளடைவில் அவளைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அவன் மனத்தில் "ப்சப்" என்று ஓர் ஆழ்ந்த பரிதாப உணர்ச்சி உண்டாகத் தோன்றியது.

அது, அவள் என்றைக்கும் தன்னை நல்லபடி அலங்காரம் செய்து கொள்வதில்லை, அவளை யத்த நாலு பெண்கள் சிரித்துப் பேசிச் சந்தோஷமாயிருக்கும் கும்பலில் கலந்து கொள்வதில்லை. பொதுவாக விவாகமாகாத இளம்பெண்கள் கண்களில் ஒரு கனவின் ஆவலோடு காண்பதாகிய எந்தக் காட்சியிலும் அவ்வளவாக லயிப்பதில்லை என்கிற சிறு விஷயங்களை யெல்லாம் கவனித்து அதனாலெல்லாம் மேன்மேலும் வளர்ந்தது.

இவற்றை யெல்லாம், மனம் தாங்காத சில வேளைகளில், தன் அறை நண்பன் சிதம்பரத்திடம் மிகவும் வருத்தப்பட்டுத் தெரிவித்துக் கொள்வான்.

தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணைக் குறித்த இவனது அதிகப்படியான அக்கறையைச் சிதம்பரம் ஆரம்பத்தில் வேறுவிதமாகத்தான் நினைத்தான். ஆனால் இருவரும் நெருங்கிப் பழகி அவர்களுக்கிடையே திரைகள் அகன்ற பிறகு, சாரங்கனின் தவிப்புக்கு அவனால் போதிய நியாயத்தை உணர முடியாவிட்டாலும், காமுவைப் பற்றிய அவனது மனோபாவங்களில் இரகசியமாகவேனும் ஏதும் சந்தேகங் கொள்ளாதவனானான்.

பல சமயங்களில் இருவரும் பேசிக் கொள்வதுண்டு.

"உண்மைதான். அதைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாய்த்தான் இருக்கிறது!" என்று சிதம்பரம் ஒப்புக் கொள்வான். எனினும், அடுத்தாற்போல, "ஆனால், உலகத்தில் இதைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இல்லையா?" என்பான்.

சாரங்கன், அதை மறுத்ததோ உணராமல் இருந்ததோ கிடையாது.

ஆனால், பிரச்னை பொது என்பதால், அப்பிரச்னையின் சாட்சிபோல் பிரத்தியட்சமாக நிற்கும் ஒரு தனிப் பாரத்தின் மீது சார்ந்து செல்கிறவன் உணர்ச்சிகளை அவனால் விலக்கிக் கொள்ள முடியவில்லை.

"அது சரி சிதம்பரம்! ஆனால், இது சாதாரணம் என்று சும்மா இருக்க முடியவில்லையே! நேற்றுக்கூட பார்! மாடத்தில் அகல்விளக்கை வைத்துவிட்டுத் திரியைத் தூண்டிக் கொண்டிருந்தது. முகம் எப்படி யிருந்தது தெரியுமா? அதுவும் ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்கு போலவே இருந்தது! அதற்கு மட்டும் மணவாழ்க்கை என்று ஒன்று நேராவிட்டால்... பாவம், அது ரொம்பக் கொடுமை!" என்றான்.

"ஏன் நேராமல்? இப்பொழுது இல்லாவிட்டாலும் இன்னும் ஐந்து வருடம் கழித்தாவது எவனாவது வருவான்!"

சாரங்கனுக்கு இதைத்தான் சகிக்க முடியவில்லை. இவ்வளவு அருமையான பெண் - இப்பொழுதே அதிக காலமாகி விட்டது - இன்னும் ஐந்து வருடம் கழித்து - அதுவும் எவனாவது...

வாழ்க்கையில் அருமைகளெல்லாம், எவ்வளவு அற்பமாகி விடுகின்றன!

அவன் இலட்சியங்களும் கனவுகளுமே வாழ்க்கையென்று கருதியவன். ஏடுகளால் மட்டுமே உலகத்தைப் பார்த்தவன். அவனுக்கு அவன் உணர்ச்சிகளே உலகம்.

ஆகையால், காமுவும், காமுவின் வாழ்வும் அவனை இயல்புக்கு மீறித் தொட்டன.

அந்தத் தெருவிலிருக்கும் வீடுகளின் ஆசாபாசங்களை அவன் போகிற போக்கில் காதிலே கேட்க நேரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், அவ்வீடுகளின் திண்ணைகளிலே பூத்துச் சிரிக்கின்ற புகழ் வெளிச்சத்தில் பெண்களின் உற்சாகம் போட்டியிடும். புக்ககம் போகிறவர்களும் பிறந்தகம் வருகிறவர்களுமாக அவ்வப்பொழுது பெண்கள் அவ்வீடுகளின் காட்சிகளை இன்பமும் சோகமுமாகச் செய்வார்கள்.

அந்நேரங்களில் எல்லாம் சாரங்கனின் நினைவுகள் கடைசியில் காமுவிடம் சென்று முடிந்தன.

கடைசியில் ஒருநாள் அவன் கங்கவரத்தை விட்டுப் பிரிய வேண்டியவனானான். உத்தியோகம் வெகுதூரத்தில் வேறோர் ஊருக்கு மாறிவிட்டது.

புறப்பட்டுப் போகுமுன்பு கங்கவரத்தின் பல அம்சங்கள் அவன் கவனத்துக்கு வந்து அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.

காமு கூடத்தான்.

அவள் இன்னும் அவ்வாறே இருந்தாள். வீட்டுத் திண்ணையிலும் கூடத்திலும் இவனுக்குக் காட்சிப் பொருளாக இருந்தாள். தினந்தினமும், ஒரேமாதிரி, தேங்கிய வாழ்க்கையன்றின் சின்னம்போல் இருந்தாள்.

அது அவனுக்கு ரொம்ப அநியாயமாகப் பட்டது. அறிமுகம் முதல் கடைசிவரை தான் அவளை அதே மாதிரி பார்க்குமாறு இருக்க நேர்ந்ததே என்று பச்சாதாபங் கொண்டான். அவளைப் பற்றிய தனது உணர்ச்சிகளும் நினைவுகளும், அவளுக்கு உதவும் பொருட்டோ அலல்து அவளுக்குச் சிறிதேனும் ஆறுதல் தரும் பொருட்டோ , அதுவுமின்றி அவள் அருமையை அவளுக்கு உணர்த்தும் பொருட்டோ கடைசி வரையில் அவளுக்குத் தெரியாமலே போய்விட்டதே என்றும் ஒரு தனிவித வருத்தமடைந்தான்.

அவ்வருத்தம், 'நாம் பிரிகிறோம். இனி கங்கவரத்துக்கும் நமக்கும் சம்பந்தமில்லை' என்கிற நிலை வந்த பிறகு, அவனுள் மிகவும் தீர்மானமாக எழுந்து பாதித்தது. ஏன் இந்த உணர்ச்சி என்றும், இதை எவ்வளவு தூரம் பொருட்படுத்துவது என்றும் அவன் முன்பின் யோசிக்கவில்லை.

எனவே ஒரு மனோவேகத்தில் தான் கங்கவரத்திலிருந்து புறப்படுவதற்கு முந்தின நாள் சாயங்காலம் அந்தக் காரியத்தைச் செய்தான்.

கோயில் நந்தவனத்தின் வடமேற்கு மூலையில், அம்மன் சந்நிதியில் அது நடந்தது.

சாரங்கன் போன பொழுது, உள்ளே அகல் விளக்கிற்குத் திரி போட்டுவிட்டு வெளியே வந்தாள் காமு. அவளுக்கு அவனைப் பார்த்ததும் சாதாரணமாயிருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு அவளை அங்கு தனியாய்ச் சந்தித்தது ஆச்சரியமாயிருந்ததோடல்லாமல், ஏதோ முக்கிய சம்பவம் போலவும் உடம்பு படபடத்துக் கொண்டது.

கழுத்தில் கருகமணியும், கைகளில் கருவளையுமாக, பார்த்தவுடனே மதிக்கத் தோன்றுகிற எளிய முகபாவத்துடன், வாழ்க்கை விலங்கிட்ட தேவமகள் போல் நின்று, மூடிய கண்ணும் முன் நெற்றியில் குங்குமமுமாய் நமஸ்கரித்துக் கொண்டிருக்கும் அவள் முகத்தையே சற்று நேரம் பார்த்தான்.

அப்படிப் பார்க்கிற ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஒன்றின் தன்மையையும் மனம் ஓர் ஆவேச நிலையில் அதிகமாய் உணரும்படி நேர்கிற அபூர்வக் கணத்தில், திடீரென்று, இருதயத்துள் தொட்டால் தாங்காத ஓர் இடத்தை அவள் முகம் வந்து தொட்டு விட்டது போல், ஒரு பேருருக்கத்தில் அவன் நெகிழ்ந்து போனான்...

வாழ்வின் ரஸம் ஊறித் ததும்ப வேண்டிய இந்த முகம்... ஆசைகளால் நிறம் பெற வேண்டிய இந்த அதரங்கள்... காதலால் ஒளி கொள்ள வேண்டிய இந்தக் கண்கள்... கணவனும் குழந்தைகளும் என்கிற குதூகலமான நந்தவனத்தில் துள்ளிக் குதிக்க வேண்டிய இந்த உயிர்...

'...த்சௌ, என்ன பரிதாபம்!'

இங்ஙனம் எண்ணி வருகிற இதே வேகத்தில், அவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.

"உங்களைப் பார்க்க ரொம்ப வருத்தமாயிருக்கு! உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணமாகனும்!"

சொல்லி முடிகிற வரையிலும் அவன் அவள் முகத்தைப் பார்த்தான். பிறகு துணிவிழந்தான். தலை கவிழ்ந்தான். உணர்வானதோர் சக்தியின் இயக்கம் தணிந்தவனாய், எல்லோரையும்போல் சாமான்யவனானான். எனவே அங்கே நிற்கவும் இயலாதவனாய் அவசர அவசரமாய், கட்டிய வேட்டி கால்களில் தடுக்க வெளியே வந்தான்.

வெளியே நன்றாக இருட்டியிருந்தது. எல்லாம் உலக இயல்பு என்றும், அதை மனித மனத்தின் மிகையான உணர்ச்சிகள் மறித்து நிற்பது எத்தகைய சிறுமுயற்சி என்பதற்கு உதாரணம்தான் அவன் அப்பொழுது செய்த காரியம் என்றும், ஒரு பூஞ்சைத் தத்துவத்தை அவன் 'வெலவெலத்த' மனத்தில் பார்க்கப் பார்க்க உணர்த்துவதாய் ஆகாயம் விரிந்து பரந்து காட்சியளித்தது. நட்சத்திரங்கள் லேசாய் ஒளி வீசின. காற்று ஆறுதலாய் வந்தது. ஆயினும், ஒரு நிலைப்படாமல் அவன் சிந்தனை வெருண்டு திரிந்தது.

கங்கவரம் இவ்வாறாக அவ்விளைஞனின் வாழ்வில் பங்கு கொண்டது. தன் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களைக் கடந்துவிட்ட பிறகும், மனித அனுபவங்களென்னும் மாபெரும் அலைகளெல்லாம் அவன் அறிவை மோதி முடிந்த பிறகும், காமு அவனுக்கு மறக்கவில்லை. ஆரம்பம் முதல் அன்றைய நிகழ்ச்சியின் உறுத்தல் வரை, அவளுடைய சித்திரம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது.

அவ்வப்பொழுது பல பெண்கள் அவளை அவனுக்கு ஞாபகப்படுத்தினர். அந்த மாதிரிப் பெண்கள் உலகில் இன்னும் எத்தனை பேரோ என்று அவன் வருத்தப்பட்டான்.

அவர்கள் நிராசை தெரிந்த கண்களோடிருந்தனர். கோயிலில் கற்பூரத் தட்டின்மேல் சிலைபோலக் குனிந்தனர். இரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில் கன்னத்தில் கையையூன்றி அமர்ந்து 'ஹோவென்ற' ஜன சந்தடியின் நடுவே தனித்த சிந்தையோடு வானத்தை வெறித்தனர். அவசரமாய்ப் போகும்போது அரை நொடி எதிர்ப்பட்டு அப்புறம் மறைந்தனர்.

அப்பொழுதெல்லாம் அவன் காமுவைக் கவனங் கொண்டான். அவளுக்கு விவாகமாயிற்றா இல்லையா என்கிற விடை தெரியாக் கேள்வி அவனுக்கு விடுபடவே இல்லை. அதோடு கூட, அன்றைக்குக் கோயிலில் நடந்ததைப் பற்றிய எண்ணங்கள் வேறு!

'அது அவள் காதில் விழுந்ததா? என்ன நினைத்திருப்பாள்? அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவள் முகபாவம் எப்படியாயிற்று? அவை அவளுக்கு ஆறுதலாயிருந்திருக்குமோ? அல்லது முகத்திலடித்ததுபோல் அவமானமாய்ப் பட்டிருக்குமோ? நாம் அங்கேயே இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஏதாவது பேசியிருப்பாளோ? அல்லது ஆத்திரப்பட்டிருப்பாளோ? நம்மை எவ்வாறு உணர்ந்திருப்பாள்? முதலில், நாம் அவ்வாறு செய்தது சரியா? அதனால் என்ன பிரயோசனம்? முன்பின் தெரியாத அந்தக் கங்கவரத்தில், அப்பெண்ணுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?'

இவ்வாறாய் அவ்விளைஞன் தெளிவற்ற எண்ணங்களோடும் தீராத நினைவுகளோடும் வெகுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தான்.

அப்புறம் கங்கவரம் ஒரு கனவு போலாயிற்று.

(முற்றும்)

No comments: