Wednesday, November 10, 2004

நாய்

(பரணிலிருந்து இன்னொன்று. மறுவாசிப்பில் முடிவைச் செப்பனிட்டு இடுகிறேன். இது ஓர் அங்கத முயற்சி. இதன் கருத்தாக்கம் விவாதத்துக்குரிய ஒன்று என்று நானும் உணர்ந்தே இருக்கிறேன்.

இன்றைக்கு என்ன ஆயிற்று எனக்கு? கடந்த 18 மணி நேரத்தில் என்னுடைய ஐந்தாவது பதிவு இது. அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளன்று ஒரே நாளில் பல பதிவுகள் போட்டிருந்த போதும், அவை அனைத்தும் செய்தியைப் பகிர்கிற தன்மையுடையதாகவும் சுட்டிகளாகவும் இருந்தன. ஆனால், இன்றைக்கு முழுமையும் அப்படியில்லை. பல நாள்கள் என் படுகை மணல் காய்ந்து கிடந்திருக்கிறது. இன்றைக்கு நுரை தள்ளி அலை புரண்டோடுகிற உற்சாகம். [காசி, ஒரே நாளில் நிறைய பதிவு போட்டவருக்குப் ஊக்கப் பரிசு ஏதும் இல்லையா? :-) Kidding.]

அதிகபட்சமாய் என் வலைப்பதிவை ஒரு நாளைக்கு 150 பேர் படிக்கக் கூடும். ஆனாலும், இங்கே எழுதுவதில் உற்சாகம் இருக்கிறது. Though few, fit people read my postings என்ற திருப்தி எனக்கு எப்போதும் உண்டு. எழுத்தை வாழ்க்கையாகக் கொள்ளாத அதிர்ஷ்டத்தால், வரும்போது தேக்கி வைக்காமல் கொட்டி விடவும், வராதபோது, மெனக்கெட்டு குறைப் பிரசவம் செய்யாமல், பூரண திருப்தியுடன் வலை மேய்ந்து கொண்டிருக்கவும் முடிகிறது. )

எல்லா மரபுகளையும் மறுதலித்துவிட்டுப்
புதிய வழி தேடியவர் அவர் என்றார் நண்பர்
எல்லா மரபுகளையும் மறுதலிப்பதை மட்டுமே
புதிய வழியாகக் காட்டியவர் அவர் என்றேன் நான்
எல்லா மரபுகளையும் மறுதலிக்கும்போது
புதிய வழி தன்னால் புலனாகும் என்றார் நண்பர்
எல்லாக் கண்களையும் மூடிக் கொண்டு தேடும்போது
எல்லாம் புதிதாய்த் தெரியும் என்றேன் நான்.
நண்பர் கருத்தை நானும்
என் கருத்தை நண்பரும்
மறுதலிப்பதன் மூலம்
புதியவழி தெரியலாமென்று
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்
சத்தம்போட்டு பேசிக் கொண்டிருக்கிற எங்களை
வினோதமாகப் பார்த்துக் கொண்டு
வாலைச் சுருட்டி அடிவயிற்றுக்கிடையில்
மடக்கிக் கொள்கிற பயமின்றி
தெரிந்த வழிகளில் சஞ்சாரிப்பதில்
தெரியாத பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளாமல்
வீடுபோய்ச் சேரமுடியுமென்று
அறிந்து வைத்திருக்கிற மிதர்ப்பிலும்
பழகிய வழியின் பிரச்னைகளுக்குத்
தீர்வுகள் வைத்திருக்கிற தெம்பிலும்
ஓடிக் கொண்டிருந்தது அந்த நாய்.

No comments: