நண்பர் இராம.கி அவருடைய வலைப்பதிவில் "எங்கள் யாருக்கும் வெட்கமில்லை" என்று எழுதியிருந்தார். அரசியல்வாதிகள்தான் அப்படியென்றால் வலைப்பதிவாளர்கள் அதையும் மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது. பிணம் தின்னும் அரசியலுக்கு இங்கேயும் குறைச்சலில்லை.
வலைப்பதிவாளர்கள் தங்கள் நம்பிக்கை, சிந்தனை, அறிவுத்திறன் சார்ந்து கடல் கொந்தளிப்புக் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சில அபத்தமாகவும், மூடநம்பிக்கையாகவுமே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். யாருடையதை யார் அபத்தம் என்று சொல்வது? யார் நம்பிக்கையை யார் மூடநம்பிக்கை என்று சொல்வது? யாருடைய மனிதாபிமானத்தையும் காருண்யத்தையும் யார் அளப்பது? கடவுளின் செயலென்றும் விதியின் செயலென்றும் நம்புபவர்களின் எண்ணம் தவறென்றால், அதைக் கண்டுபிடித்துச் சொல்ல வந்திருப்பவர்கள் நவீனக் கடவுள்களா? புண்ணாக்கு. இப்படி வெட்டியாக வம்பு பேசிக்கொண்டிருப்பதற்குப் பதில் மூடநம்பிக்கையோ, அபத்தமோ சுனாமி பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறவர்கள் மேல் என்று எனக்குத் தோன்றுகிறது.
சிலப்பதிகாரத்தின் நோக்கத்தில் ஒன்றே, "ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்" என்று சொல்வதுதான். அதற்காகச் சிலப்பதிகாரத்தைத் தூக்கி வீசிவிட முடியுமா என்ன? பக்தி இலக்கியங்களில் நாயினுக்கும் அடியேனாகத் தன்னை உருவகத்துப் பாடியுள்ளனர். அவற்றைத் தூக்கி எறிந்துவிட முடியுமா? குன்றக்குடி அடிகளார் கொடுத்த பூரண கும்ப மரியாதையை அச்சடங்கில் நம்பிக்கையில்லை என்றபோதிலும் பெரியார் மறுக்காமல் ஏற்றுக் கொண்டார். பெரியாரின் பெயரைச் சொல்பவர்கள் என்று சொல்லிக் கொள்கிற சிலர் பிராமணர்களையும் மற்றும் அவர்களின் கொள்கைகளுக்கு எதிரானவர்களையும் தாக்குவதற்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்று காத்துக் கொண்டிருப்பதுபோல தெரிகிறது. சுனாமிக்கு நன்றி சொல்லி எழுதுவதைவிட மோசமானது சுனாமியைப் பயன்படுத்தி இப்படி அரசியல் செய்வது. கலிங்கப் போருக்குப் பின் அசோகர் மனம் மாறியதைப் பற்றியும், துயரச் சம்பவங்களுக்குப் பின் அமெரிக்காவில் நடைபெறும் பிரார்த்தனைகள், candle light vigil ஆகியன பற்றியும் வலைப்பதிவுகளின் கமெண்ட்டுகளில் நண்பர்கள் ஏற்கனவே எழுதிவிட்டனர். அவரவருக்கு இருக்கிற நம்பிக்கையை வைத்து அவரவர் தத்தம் துயரத்தையும் எண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றனர். பெரியாரில் நம்பிக்கையிருப்பவர்கள் மூடநம்பிக்கையால் இது நிகழ்ந்தது என்று சொல்லிவிட்டுப் போகலாமே. யார் தடுத்தது?
எனவே, இந்தப் பிணம் தின்னும் அரசியலை நான் கண்டிக்கிறேன். இந்தியா வெளிநாட்டு உதவி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது. அதுபற்றி எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. நம் பிரச்னைகளை நாம் தீர்த்துக் கொள்கிற தன்னிறைவின் ஓர் அம்சமாக இதைப் பார்க்கலாம். மேலும் இந்தியாவைவிட மோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கை போன்ற நாடுகளுக்கு இதனால் அதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். TRO போன்ற அமைப்புகள் பற்றி நண்பர் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றவர்கள் நல்லவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இம்மாதிரி விஷயங்களில் ஸ்ரீகாந்த் மீனாட்சி போன்றோரின் அபிப்பிராயங்களை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே, TRO மூலம் முடிந்தவரை இலங்கைக்கு உதவுவது பற்றி யோசிக்கலாம். பொதுவாகவே பிற மக்களிடையே இலங்கைத் தமிழர் சார்ந்த விஷயங்களுக்குப் பணம் தருவதிலும், பணம் வசூலிப்பதிலும் பல பிரச்னைகள் இருக்கின்றன. அப்பிரச்னைகள் பல நேரங்களில் என்னைப் போன்றவர்களுக்கு நியாயமானவையாகத் தோன்றும். அப்பிரச்னைகளுள் நான் இப்போது போகப் போவதில்லை. ஆனால், இந்த மாதிரித் துயரமான நேரங்களில் TRO போன்ற அமைப்புகள் மூலம் உதவி செய்ய வேண்டியதன் கட்டாயத்தை அனைவருக்கும் நாம் வலியுறுத்தலாம்.
இவ்வளவு விஷயங்கள் செய்ய இருக்கும்போது - வெறுமே சண்டை போட்டு தன் ஈகோவின் அரிப்பைத் தீர்த்துக் கொள்வதில் என்ன சந்தோஷம் இருக்க முடியும். எனவே, வேலை இருக்கிறது. அதைப் பார்க்கப் போவோம் வாருங்கள்.
போர்வைகள் வாங்கித் தந்த முடிவெடுத்தபின் இன்னும் சிலரும் பணம் தர முன்வந்துள்ளனர். வலைப்பதிவு நண்பர்கள் சம்மதம் தந்தால், அவர்கள் அப்பணத்தை TRO மூலம் இலங்கைத் தமிழர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் இதைச் சொல்ல உத்தேசித்திருக்கிறேன். அல்லது வடஅமெரிக்காவில் இருக்கிற இலங்கைத் தமிழர்கள் யாரும் இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டால், என்னை அணுகுபவர்களை அவரிடம் அனுப்பி வைக்கிறேன்.
இந்தப் பதிவை மனம் வெறுத்துப்போய் நான் பொதுவாகவே எழுதியுள்ளேன். எனவே, தன்னைக் குறிப்பதாக யாரும் வருந்தினால், மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்த விவாதங்களில் ஈடுபட எனக்கு நேரமும், ஆர்வமும், மனமும் இல்லை. கோபப்படுபவர்கள் சுனாமியை வைத்து வலைப்பதிவாளர்களிடையே வெறுப்பை வளர்க்காமல், இதை எழுதியதற்காக, என்னைத் திட்டிக் கோபத்தை ஆற்றிக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ஹலோ சிவக்குமார், எனக்கு உங்களிடம் இப்போது விவாதிக்க எந்த ஆசையும் இல்லை. சில விஷயங்களை பார்த்து உங்களுக்கு மனம் வெறுத்து போய் எழுதியிருப்பதாக எப்படி சொல்லியிருக்கிறீர்களோ, அது போலத்தான் மற்றவர்களுக்கும். சிலவற்றை பார்க்குபோது கோபம் வருகிறது, காட்டுகிறார்கள். என்னை குறிப்பிட்டீர்களா என்று தெரியாது. கவலையும் இல்லை. ஆனால் அது போல ஒரு கோபம்தான் நான் எழுதியது. ஒப்புகொள்கிறேன். இப்போது இதை பேசுவது அபத்தம் என்பதை. உங்களை திட்டுவது போல் தோன்றலாம். ஆனால் பிணம் தின்னி அரசியல் என்று சொல்லி, ரொம்ப கவனமாய் தேர்ந்தெடுத்து நீங்கள் எழுதியிருப்பது உண்மையிலேயே வாந்தி வரவழைக்கிறது.
எல்லோருக்கும் அக்கரை இருக்கிறது. அதை பல வழிகளில் காட்டிவருகிறார்கள். இடையில் பொறுக்கமுடியாத சில விஷயங்கள்தான் எழுதபட்டுள்ளது.
பார்க்க:
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10517
மூக்கன், இராமு எந்த தொனியில் எழுதியிருக்கிறாரோ, அதே போன்ற தொனியில்தான் சில கருத்துக்கள், இப்போது எல்லோருமே ஒப்புகொள்ளும் விஷயம் போல், மென்மையாய் கண்டித்து எழுதபட்டது. அவை நீக்கபட்ட கோபத்திலேயே சிலர் கோபமாய் கத்திவிட்டனர்.
சிலப்பதிகாரம் ஒரு காப்பியம் அதற்காக அதில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்கிறோம் அல்லது விமர்சனமே இல்லை என்று பொருளில்லை.ஊடகங்கள் மூலம் இச்சந்தர்ப்பத்தில் பாபிகள்,
பாபம், மற்றும் மத ரீதியாகவும், இனப் பெருமை பாராட்டும் வகையிலும், நாங்கள் அன்றே சொன்னோம்
தருமம் தவறினால் இப்படித்தான் ஆகும், என்று ஒரு இயற்கை உற்பாதத்தினை குறித்து விளக்கமளிப்பது எப்படி சரியானதாகும்.கிறிஸ்துவ அடிப்படைவாதிகள் உட்பட பலர் கூறிய கருத்துக்களை நான் விமர்சித்து எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரம் எப்போது எழுதப்பட்டது, கண்ணகி எரித்த உடனேயா.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் விமர்சிப்பவர்கள் விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விமர்சிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்
ரவி, இந்த சிவகுமாரின் முந்தய பல எழுத்துக்கள் எனக்கு அருவருப்பை அளித்தாலும், இப்போது இவர் எழுதியுள்ளது போல் குமட்டலை தந்த பதிவு வேறு எதுவும் இல்லை. எழுதியவற்றை எப்படி திரிப்பது, உள்நோக்கம் மற்றவற்றை கற்பிப்பது, பின்னால் வரக்கூடிய எதிர்வ்னையை எப்படி சமாளிப்பது என்று இது போல் வேறு யாரும் எழுதுவார்கள் என்று தோன்றவில்லை.என்னால் மிக எளிதாக தர்க்கரீதியில் இவர் எழுதியதை உடைத்து,உள்ளிருக்கும் அழுகலை வெளிகாட்டமுடியும். இப்போது அதை செய்ய மறுக்கிறேன். அதை இப்போது செய்வது போன்ற அபத்தமும், அல்பத்தனமும் இருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.
ஆதலால் இதை தொடரவேண்டம் என்று உங்களிடமும் கேட்கிறேன். உங்கள் விருப்பம்!
அன்புள்ள ரோசாவசந்த்,
சிவக்குமாரின் கட்டுரைகளை படித்தும், நேரில் பழகியும் வருபவர்களில் நானும் ஒருவன். இப்படி பொத்தாம் பொதுவாக அவரது கட்டுரைகள்அருவருப்பு தருகிறது, குமட்டல் வருகிறது என்றெல்லாம் சொல்லி, 'இவர் எழுதியதை உடைத்து அழுகலை வெளிக்காட்ட முடியும்' என்று மறைமுக வசனமெல்லாம் உதிர்க்காமல்...எவை இப்படியெல்லாம் உங்களை எழுதத்தூண்டிற்று என்பதை சாவகாசமாக ஆதாரங்களோடு விளக்கினால் கொஞ்சம் உங்களின் குற்றச்சாட்டுக்களைப் புரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். இப்படி போகிற போக்கில், அள்ளித் தெளித்து பெரிய பெரிய கண்டனங்களை வீசிவிட்டு செல்வது நன்றாக இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். இதுவரை சிவக்குமார் எழுதிய கட்டுரைகள் நியாயமாகவும், கண்ணியமான முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனது எண்ணம், எனது புரிதல்.
- அன்புடன் அருண்
I have not removed any comments. Authors of the comments can remove their own comments if they want to. - PK Sivakumar
Post a Comment