Tuesday, February 01, 2005

இந்த வார சினிமா

நான் பார்க்க எடுக்கிற திரைப்படங்களுக்கு மெனக்கெடுவதில்லை. எங்கள் ஊர் நூலகத்துக்குச் சென்று அங்கே இருக்கிற கேசட்டுகள் அல்லது டிவிடிக்கள் ஆகியவற்றின் பின்னட்டையைப் படித்துவிட்டுப் பிடித்திருந்தால் அல்லது நன்றாக இருக்கும் என்று தோன்றினால் எடுத்து வந்து விடுவேன். கேசட்டுகள் டிவிடிக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அடுக்குகளில் கூட நிறைய நேரம் தேடுகிற அவசியம் இருக்காது. நிறைய திரைப்படங்களை நான் பார்த்ததில்லை என்பதால் கையில் கிடைத்தது சுமாராக இருந்தாலும் எடுத்து வந்து விடுவேன். பல நேரங்களில் இணையத்தில் படித்தப் படங்களின் பெயர்கள், நண்பர்கள் சிலாகித்தப் படங்களின் பெயர்கள் ஆகியன தேடாமலேயே பார்வைக்குத் தென்படும். அந்த அதிர்ஷ்டத்துக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் அவற்றை உடனடியாக எடுத்து விடுவேன். பல புதிய படங்கள் டிவிடியில் நூலகத்துக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இங்கே மக்கள் காத்திருப்போர் வரிசையில் இருந்து, முன்பதிவு செய்து வைத்திருந்து அவற்றை எடுத்துப்போய்ப் பார்க்கிறார்கள். நான் அவ்வப்போது புத்தகங்களுக்கு முன்பதிவு செய்து வைத்துப் பெறுவதுண்டு. திரைப்படங்களைப் பொருத்தவரை, முன்பதிவு செய்ய வேண்டியிராமல் கிடைப்பவற்றிலேயே நிறைய பார்க்கவேண்டியிருக்கிறது என்ற திருப்தியில் இருந்துவிடுகிறேன். எனவே, நான் பார்க்கிற படங்கள் பொதுவாகப் புதிய படங்கள் அல்ல. வந்து ஓரிரு வருடங்களிலிருந்து பல வருடங்கள்வரை ஆன படங்கள்.

"ஜாக்கி சான் குத்து உடம்புக்கு சத்து" (நம்ம ஊர்ல எம்.ஜி.ஆர். குத்து உடம்புக்கு சத்து என்று சொல்லிக் கொண்டிருந்தது இப்போது ஜாக்கி சானாக globalize ஆகிவிட்டது!) என்கிற மாதிரி சுவாரஸ்யமும் சாமர்த்தியமும் நிறைந்த சண்டைக் காட்சிகளுடைய படமென்றால் உடனடியாக எடுத்து விடுவேன். எனவே, Actions and Thriller இருக்கிறதா என்று பார்ப்பேன். அதற்கப்புறம் ஒரு டிராமா, அல்லது ஒரு நகைச்சுவை அல்லது ஒரு பிறமொழிப் படம் இருக்கிறதா என்று தேடுவதுண்டு. எங்கள் ஊர் (எங்கள் county சார்ந்த அனைத்து நூலகங்களிலும்) நூலகத்தில் ஓர் உறுப்பினருக்கு ஒரு வாரத்துக்கு மூன்று டிவிடிக்கள், ஏழு கேசட்டுகள் இலவசமாகத் தருகிறார்கள். மகராசர்கள் நன்றாக இருக்கட்டும். இதற்கு முன் இருந்த ஊரின் நூலகத்தில், ஒரு நாளுக்குள் திரும்பித் தந்துவிட வேண்டும், ஒரு டிவிடி அல்லது கேசட்டுக்கு நாள் வாடகை ஒரு டாலர் என்ற வீதத்தில் இருக்கும். இங்கே அப்படியில்லை. ஆனால், வாரம் ஒரு படம் பார்ப்பதற்குக் கூட நேரம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வாரம் மூன்று படங்கள் பார்க்க வேண்டும் என்ற திட்டமும் ஆசையும் எனக்கு.

சமீபகாலமாகத்தான் திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் தரும் http://www.imdb.com தளத்தைப் பற்றித் தெரியும். அதனால், எடுத்து வந்தபிறகு அந்தத் திரைப்படம் எப்படிப்பட்டது என்பதைப் படம் பார்த்த பிறகோ அல்லது முன்னாலோ அந்த இணைய தளத்தில் வாசிப்பது வழக்கம். படம் பார்ப்பதற்கு முன் விமர்சனங்கள், படத்தைப் பற்றிய கருத்துகள் ஆகியவற்றைப் படிப்பது எனக்கு வழக்கமல்ல. அதனால், பெரிதும் படம் பார்த்த பின்னரே, இந்தத் தளத்தில் அப்படத்தைப்பற்றித் தேடுவது வழக்கம். நான் ரசித்த விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்று பார்க்கிற ஆர்வம். படத்தைப் பற்றிய என்னுடைய மதிப்பீடும், பிறரின் மதிப்பீடும் எப்படி ஒத்துப் போகின்றன அல்லது வேறுபடுகின்றன என்று பார்க்கிற ஆர்வமும்.

இந்தப் படம் பார்க்கிற ஆர்வம்கூட, டிவிடிக்கள்/கேசட்டுகள் இலவசமாகக் கிடைக்கின்றன என்பதால் வந்தது எனலாம். என்ன இலவசம்? வருடாவருடம் இருக்கிற நகரத்துக்குக் கட்டுகிற சொத்துவரி, மற்றும் அரசாங்கத்துக்குக் கொடுக்கிற வருமான வரி என்றெல்லாம் சிந்தித்தால் எதுவும் இலவசம் இல்லைதான். ஆனால், இதற்காகத் தனியாகப் பணம் செலவழிப்பதில்லை என்பதால் என்னைப் பொருத்தவரை இதை என் நூலகம் வழங்குகிற இலவச சேவையாகவே பார்க்கிறேன். அப்புறம் இன்னொரு காரணம், என் குழந்தைகள், மனைவி ஆகியோர் தொடர்ந்து இந்த வசதியைப் பயன்படுத்தி அவர்கள் வயது, ஆர்வத்துக்கேற்ற படங்களாக எடுத்துப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். என் மனைவி சில மாதங்களாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் Steven Speilburgh படங்களாக எடுத்து வந்து பார்த்து வருகிறார். எனவே, நானும் நம்மாலான படங்களைப் பார்ப்பது என்று முடிவாயிற்று.

புத்தகங்களைப் படிப்பதிலும் திரைப்படங்களைப் பார்ப்பதிலும் எனக்கு ஒரு பக்க விளைவு உண்டாகும். அவை எனக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தினால் அவற்றைப் பற்றி ஓரிரு வரியாவது தட்டையாகவோ மொட்டையாகவோ என்றால்கூட கூட பரவாயில்லை, எழுத வேண்டும் என்று தோன்றுகிற பக்க விளைவு அது. எனவே, வலைப்பதிவு என்று போட்டு வைத்திருக்கிற இடத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுத முயல்கிறேன். இவை புதிய படங்களைப்பற்றி அல்ல என்ற எச்சரிக்கையை மட்டும் வெகுதீவிர சினிமா ரசிகர்களுக்கும், சினிமா பற்றிய அறிவில் என்னைவிட மேம்பட்டவர்களுக்கும் மீண்டும் சொல்லி வைக்கிறேன். எல்லாருக்கும் சுலபத்தில் பார்க்கக் கிடைக்கக் கூடிய படங்களைப் பற்றி எழுதும்போது கதையைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. படம் பார்க்காமல் இருந்து, அதைப் பார்க்க விரும்புபவர்களுக்கு கதையை முன்கூட்டியே சொல்வது இடைஞ்சலாக இருக்கும் என்பது என் அபிப்ராயம். ஆதலால், கூடியமட்டும் கதைக்குள் போகாமல் கருத்துகளை எழுத முயல்கிறேன்.

எனக்கு எப்போதும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் Harrison Ford. அவர் நடித்த The Devil's own என்கிற படம் வெளிவந்ததும் தியேட்டரில் அதைப் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்னரே அவரின் ஓரிரு படங்கள் பார்த்ததால் அவர் நடிப்பு பிடித்துப் போயிருந்தது. ஆனால், அந்தப் படம் மிகவும் சுமார்தான். ஆனால், அந்தப் படத்தில்தான் Brad Pitt-ஐ முதலில் பார்த்தேன். அது நான் அமெரிக்கா வந்திருந்த புதுசு. கூட படம் பார்க்க வந்திருந்த கல்லூரி வகுப்புத் தோழர் Brad Pitt-க்காக அந்தப் படத்தைப் பார்க்க வந்திருந்தார். யாருப்பா இந்த Brad Pitt என்றேன். நிறைய பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கிற, கனவுகளில் வருகிற smart looking boy என்று அறிந்து கொண்டேன். ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததும், Brad Pitt மீது ஒன்றும் அந்த அளவுக்கு மரியாதையோ பிடிப்போ வந்துவிடவில்லை. பின்னர், Seven years in Tibet பார்த்தேன். Brad Pitt எனக்கும் பிடித்தமான நடிகர்களுள் ஒருவராகிப் போனார். எனவே, போனவாரம் இந்தப் படத்தைக் கையில் எடுத்ததும், Brad Pitt நடித்திருப்பதாக அறிந்ததால் எடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். கதையும் Montana-வின் ஆறுகளும் மலைகளும் சூழ்ந்த சூழலில் நடக்கிறது என்பது இன்னொரு உப காரணம். படத்தை எடுத்து வந்த பின்னரே, அதன் இயக்குநர் Robert Redford பற்றியும் அவர் முயற்சியில் நடைபெறுகிற Sundance Film Festival பற்றியுமெல்லாம் நண்பர் அருண் வைத்யநாதன் விவரமாகச் சொன்னார். 1992ல் வந்த A river runs through it என்ற இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. எடுத்து வந்த மூன்று படங்களுள் இதைக் கடைசியாகப் பார்த்தேன். ஆனாலும், இதுதான் மிகவும் பிடித்தது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Montana-வில் (அமெரிக்காவின் ஒரு மாநிலம்) இருந்த அமெரிக்கர்கள் வாழ்க்கை முறை, அங்கிருக்கிற செவ்விந்தியர்கள் வெள்ளையர்களால் நடத்தப்பட்ட முறை (சில காட்சிகளே வருகின்றன. ஆனால், அழுத்தமாக வரலாற்றைச் சொல்கின்றன), குடும்பம் என்ற அமைப்புக்கு இருந்த மரியாதை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வெளித் தெரியாமல் ஓடுகிற அந்நியோன்யம், பாசம், Montana-வின் ஆறுகள், மலைகள், fly fishing, அதை எப்படிக் கலையாகப் பயில முடியும் என்று இந்தப் படம் எனக்கு நிறைவான அனுபவத்தைத் தந்தது. அலுப்பும் ஆயாசமும் தெரியாத கச்சிதமான கவிதையில் ஒரு குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்ன மாதிரி இருந்தது.

Class 3 and Class 4 அளவு கடினத் தன்மை கொண்ட Whitewater raftingக்கு இங்கே நான் நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். மிகவும் பயமூட்டக் கூடியதாகவும், திரில்லாகவும் அது இருந்தது. நண்பர் ஒருவர் ஆற்றிலேயே விழுந்துவிட்டார். எங்கள் உதவியுடன் மீட்கப்பட்டார். இந்தப் படத்தில் Brad Pitt-ம், அவர் நண்பரும் rafting போகிற மாதிரி ஒரு காட்சி வருகிறது. கண்டிப்பாக திரைப்பட உத்திகள் பயன்படுத்தியோ டூப் போட்டோதான் அதை எடுத்திருப்பார்கள். ஆனால், அந்த ஆற்றின் ஓட்டமும், சுழற்சியும், பாறைகளில் மோதி மேலிருந்து கீழ்விழும் வேகமும் அட அட என்ன ஓர் ஆபத்தான அழகு. (Whitewater Rafting-ன் கடினத்தன்மையை அளப்பதுபற்றிப் பின்வரும் சுட்டியில் காணலாம். அவசரமாக இணைத்திருக்கிற சுட்டி இது. இதைவிட மேலான விவரங்கள் இணையத்தில் தேடினால் கிடைக்கும். http://www.westernriver.com/riverscale/

Brad Pitt-ன் நடிப்பைவிட கதை சொல்லியான Norman Maclean ஆக வரும் Craig Sheffer-ன் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அவர் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவராக வருவதுதான் அதற்குக் காரணமா என்று தெரியவில்லை. ஒரு காட்சி: Brad Pitt-ன் தந்தையாக நடிக்கிற Tom Skerritt தன் மூத்த மகனான Norman இடம் இளைய மகனான Paul Maclean (Brad Pitt) பற்றிச் சொல்கிறார். "இவன் இப்போது Maclean என்ற பெயரில் l என்கிற எழுத்தை பெரிய எழுத்தில் (Capital L) எழுதுகிறான். படிக்கிற யாரும் என்னைப் பற்றி ஒரு தாழ்ந்த பிரிவைச் சார்ந்த ஸ்காட் நாட்டவன் என்று நினைக்கப் போகிறார்கள்." கதை நடக்கிற ஆண்டுகள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. மொழிபெயர்ப்பு என்னுடையது. சரியில்லையெனில் மன்னிக்கவும். அதே தந்தை (ஒரு சர்ச்சில் மினிஸ்டராக இருப்பவர்), இறப்பதற்கு முன் தேவாலயத்தில் கடைசியாக அருட்பேருரை ஆற்றுகிறார். ஒரு தத்துவ உபதேசம் போல அது இருக்கிறதென்றாலும், அதில் கவிதையும் நிஜமும் இருக்கிறது. அதில் இளையமகன்மீது அவர்க்கிருக்கும் பாசம் வெளிப்படுவதைக் காணமுடிகிறது.

இந்தப் படத்தை இன்னொருமுறையும் சந்தோஷமாகப் பார்ப்பது எனக்கு உவப்பான காரியமாக இருக்கும். இன்னும் புதிய அர்த்தங்கள் அப்போது கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.

பின்வரும் இரண்டு படங்களையும் குழந்தைகளுடன் பார்க்காமல் இருப்பது நல்லது. அந்தரங்க உறவு தொடர்பான இயல்பான காட்சிகள் அதிகம் என்பதால். இவற்றைப் பற்றி ஊக்கமும் நேரமும் இருக்கிற இன்னொரு நாளில் எழுத முயல்கிறேன். எழுத முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
All things fair (A Swedish film)
Young Adam

3 comments:

PKS said...

Solla Maranthavai.

1. Brad Pitt and his friend used a boat in the movie for rafting and it was not a raft but a wooden boat.

2. Tom Skerritt (the father) was also interesed in literature and writing. The scenes where the father and elder son say (share) few lines of poetry are very good.

3. When Norman was young kid, the father asks him to write about something. The writes. He corrects and says, "half to go". So, the kid goes back to writing. Even next time the father says "half to go". Finally he wrote it to his dad's expectation. Now the dad, says, "Its good. Now, throw it away." This is one of my favorite scenes.

THanks and regards, PK SIvakumar

Narain Rajagopalan said...

நீங்கள் குறிப்பிட்டப் படம் சென்னையில் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் எடுத்துப் பார்க்கிறேன். போர்களின் கோரமுகங்களைப் பற்றியப் படங்க்ளை என் பதிவில் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால், உங்கள் நூலகத்தில் எடுத்துப் பாருங்கள்.அருமையான படங்கள்.

பகுதி 1 | பகுதி 2இது உங்களின் பார்வைக்காகவே.

PKS said...

Narain, Thanks. I have already read your posts about these movies on war. I will try to get the movies and watch them if possible. Regards, PK Sivakumar