Thursday, May 19, 2005

ஓர் இந்தியப் பயணம்

இரண்டு வாரப் பயணமாக சமீபத்தில் இந்தியா சென்று திரும்பினேன். இதைப் பற்றி எதுவும் எழுதுவதாக திட்டம் இருக்கவில்லை. எதை எழுதுவது எதை விடுவது என்ற குழப்பம், எவ்வளவு எழுதினாலும் அனுபவத்தைச் சரியாகச் சொல்ல முடியுமா, எழுதக்கூடாத விஷயங்கள் எதையும் தவறி எழுதிவிட்டால் என்னாவது, இப்படி ஒன்று எழுதித்தான் ஆக வேண்டுமா, செல்வதைப் பொதுவில் சொல்லவில்லை, சென்று வந்ததைச் சொல்ல வேண்டுமா ஆகிய கேள்விகள் காரணம். சென்றதோ தனிப்பட்ட பயணம். அதில் என்னுடைய தொழில் சார்ந்த வேலைகளும் கலந்து கொண்டன. எனவே, எழுதுவதென்று முடிவெடுத்தால், சுய புராணங்களும், தொழில் சார்ந்த விஷயங்களும் கலந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம். ஆனாலும், சந்தித்த நண்பர்களில் இணைய நண்பர்களும் மரத்தடி நண்பர்களும் இருப்பதால், சுருக்கமாகவேனும் சொல்லிவிட வேண்டுமென்று இந்த மடல்.

ஏர் இந்தியா வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டது. கிளம்பும்போதே இரண்டு மணிக்கும் மேற்பட்ட தாமதம். விளைவாக மும்பையிலிருந்து சென்னைக்கான விமானத்தைத் தவற விட்டுவிட்டேன். மும்பையில் 8 மணி நேரக் காத்திருப்பு. ஏர் இந்தியாவின் சிப்பந்திகள் இதுபற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஓட்டல் தரமாட்டீர்களா என்று கேட்ட சக பயணியை, லக்கேஜை வெளியெடுத்து, குடியுரிமை மற்றும் சுங்கச் சோதனைகளை (Immigration and Customs) மும்பையிலேயே முடித்துவிட்டு வந்தால் ஓட்டல் தருகிறோம் என்றார்கள். அதைக் கேட்ட நண்பரும் நானும் விமான நிலையத்தினுள்ளேயே 8 மணி நேரங்களைக் கழிப்பது என்று முடிவு செய்துவிட்டோம். ஒரு பயணி ஏர் இந்தியா சிப்பந்தியிடம் போய், இத்தகைய தாமதங்களால் அவருடைய இணைப்பு விமானம் மட்டும் தவறிவிட வில்லை, சென்னையிலிருந்து அவர் திருச்சிக்குப் போக வேண்டிய விமானமும் தவறுகிறது, அதனால் அவருடைய விடுமுறை திட்டமே தாறுமாறாகி விடுகிறது. இந்தியன் என்பதால் ஏர் இந்தியாவில் வந்ததாகவும், ஆனால் அதன் சேவை இப்படி இருப்பதால் இனி ஏர் இந்தியாவில் பயணம் செய்ய மாட்டார் என்று சீரியஸாகப் புகார் செய்தார். ஏர் இந்தியா சிப்பந்தியோ அவர் சொல்வதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாத மாதிரி தன் சகாவுடன் மராத்தியில் வேறு ஏதோ பேசிக் கொண்டே அதைக் கேட்டுக் கொண்டார்.

போகும்போது மட்டுமில்லை. திரும்பி வரும்போது இதைவிட மோசம். சென்னையில் செக்-இன் செய்யும்போதே, மும்பையிலிருந்து கிளம்ப வேண்டிய விமானம் தாமதமாகும் என்றும், மும்பையில் லக்கேஜை வெளியில் எடுத்துவிட்டு, மறுபடியும் செக்-இன் செய்ய வேண்டும் என்று சொல்லி சங்கடப்படுத்தினார்கள். காலை 7:20க்குக் கிளம்ப வேண்டிய விமானம் மாலை 5க்குத்தான் கிளம்பும் என்றார்கள். திரும்பி வரும்போது காலை 5:15க்கு மும்பையில் இறங்கி, லக்கேஜை வெளியெடுத்து, மறுபடியும் செக்-இன் செய்து முடிக்கும்போது காலை 9 மணி ஆகிவிட்டது. அவ்வளவு விரைவாக மறுபடியும் செக்-இன் செய்கிற கவுண்ட்டரின் சிப்பந்திகள் காரியமாற்றினார்கள். நல்லவேளையாகத் திரும்பி வரும்போது ஓட்டல் கொடுத்தார்கள்.

நானும்கூட இனிமேல் ஏர் இந்தியாவில் பயணம் செய்வதில்லை என்று முடிவெடுத்தேன். இதுதான் முதன்முறையாக ஏர் இந்தியாவில் செல்வதும். உடன் வந்த நண்பர் சென்ற வருடம் மட்டும் நான்கு முறை ஏர் இந்தியா மூலம் இந்தியா சென்று வந்தவர். அவர் பயணம் நான்கு முறையும் சௌகரியமாக இருந்ததாம். நம்ம அதிர்ஷ்டம் இப்படி. ஏர் இந்தியாவுக்கு உபரி விமானங்கள் போதுமான அளவு இல்லாததால் இப்பிரச்னை. இப்போது புதிதாக ஏர் இந்தியா விமானங்கள் வாங்கப் போகிறது என்று படித்தேன் (போயிங்கிடமிருந்து). அவை வந்தவுடன் இப்பிரச்னை தீருமா என்று தெரியவில்லை.

ஆனால், எவ்வளவு விமானங்கள் வந்தாலும் நுகர்வோர் சேவையில் தங்கள் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தாதவரை ஏர் இந்தியாவுக்கு உய்வில்லை. அடுத்தமுறை ஏர் இந்தியாவில் பயணம் செய்யக் கூடாது என்று நினைக்கிற பலரும், மறுபடியும் டிக்கெட் வாங்கும்போது, குறைந்த விலையென்பதால், சகித்துக் கொண்டு ஏர் இந்தியாவையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தச் சபலத்துக்கு நானும் ஆட்பட்டுவிடக் கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

ஞாயிறு காலையிலிருந்து வெள்ளி மாலை வரையென்று ஏறக்குறைய ஐந்து நாட்கள் சென்னையில் இருந்தேன். பிரசன்னாவை முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். நேரில் பார்க்காமல் பழகாமல், இணையவழி நட்பினால் மட்டுமே நெருங்கிய நண்பராகவும், நான் செய்கிற தொழிலின் இந்தியப் பிரிவுக்கு முதன்மை அலுவலராகவும் ஆகிற அளவுக்கு அவரை ஆக்கியது மரத்தடி நட்பும் இணைய நட்பும் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அவர் எழுதுகிற கவிதைகளில் தெரிகிற அதே முதிர்ச்சியுடன் ஆளும் இருக்கிறார். மாமே என்று அவரை ஆசாத் அழைப்பது கலாய்ப்பதற்காக இல்லை, மரியாதையுடன்தான் என்று நினைக்கத் தோன்றுகிற தோற்றம். :-) பிரசன்னாவுடனேயே இந்த ஐந்து நாட்களும் தங்க வேண்டியிருந்தது. அவரின் அன்பான உபசரிப்புக்கும் விருந்தோம்பலுக்கும் நன்றிகள் சொல்ல வேண்டும். ஒரு டீ-டோட்டலரான அவர் தன் வீட்டைப் புனிதமாக வைத்திருந்தார். அதையெல்லாம் அந்த ஐந்து நாட்களில் மாற்றி அவரைக் கலங்கடித்து விட்டோமென்று நினைக்கிறேன். பொறுத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.

நிறைய நண்பர்களைச் சந்தித்தேன். பலர் இணையம் வழி நண்பர்கள், பலர் இலக்கியம் மற்றும் நண்பர்களின் வழி நண்பர்கள். ஆனால், அதிகமாக யாருடனும் இலக்கியம் பேசவில்லை. நண்பர்களுடன் என்ன பேசினேன் என்று எதையும் விவரமாக எழுதவும் போவதில்லை. சென்னை சென்ற அடுத்த நாள் மாலை (திங்கள் மாலை) இணைய நண்பர்கள் பலரை ஓரே நேரத்தில் ஒரு இடத்தில் சந்திக்க முடிந்தது. நண்பர்கள் இரா. முருகன், பத்ரி, சுரேஷ் கண்ணன், இகாரஸ் பிரகாஷ், ரஜினி ராம்கி, காரைக்குடி கவிஞர் ராஜ்குமார், பிரசன்னா என்று பலர் அதில் கலந்து கொண்டனர் (ஏதேனும் பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.)

அப்புறம் தனிப்பட்ட நட்பு, இலக்கிய நட்பு, எனி இந்தியன்.காம் தொழில் ரீதியான நட்பு என்ற காரணங்களின் அடிப்படையில் பலரை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முறை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஜெயகாந்தன் (இருமுறை நண்பர்களுடன் பின்னிரவுவரை அவருடன் நேரம் செலவழிக்க முடிந்தது. அவர் பேசுவதைக் கேட்க கேட்க, இவையெல்லாம் எழுதப்படாமலேயே போகின்றனவே என்ற ஏக்கம் கிளர்ந்து எழுகிறது.), டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், இயக்குநர் அம்ஷன் குமார் (ஒரு பார்ட்டியில் கொஞ்ச நேரமும் கிளம்புவதற்கு முன் ஒரு நாள் மாலை சில மணி நேரங்களும் இவருடன் பேச முடிந்தது. மாற்றுச் சினிமா பற்றி அவர் அதிகம் எழுதவும் பேசவும் வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தேன்.) , எழுத்தாளர் சா. கந்தசாமி (அவரின் சுபமங்களா பேட்டி பற்றியும் சாயாவனம் பற்றியும் கலந்து கொண்ட பார்ட்டியில் கிடைத்த கொஞ்ச நேரத்தில் பேச முடிந்தது), கவிஞர் பரிணாமன் (நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது இவர் பாடல்களை இவரே அற்புதமாகப் பாடிக் கேட்டிருக்கிறேன். "பத்துத் தலை ராவணனை ஒத்தத் தலை ராமன் வென்றான் மொத்தத்திலே வீரம் வேணும் சுடலைமாடா, அந்த வித்தையைக் கத்துக்காம சத்தியத்தை ஒத்துக்காம சும்மா கத்தினா போனதெல்லாம் கிடைக்குமாடா", "பாரதி பிடித்த தேர்வடமும் நடுவீதி கிடக்கிறது, அதைப் பற்றியிழுப்பதற்கு ஊர் கூடித் தவிக்கிறது. நம்பிக்கை வைத்து நெம்புகோலெடுத்து நடப்போம் வாருங்கள். நாம் நடந்தால் தேர் நடக்கும் அன்றேல் நடுத்தெருவில் கிடக்கும்.", "எட்டையபுரத்தானுக்கு இணையான புலவனை எங்காச்சும் பாத்தியா மாடத்தி" என்று இன்னமும் மனதில் ரீங்காரமிடும் அவர் குரலையும் பாடல்களையும் அவருடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சியளித்தது) , மனுஷ்ய புத்திரன், காலச்சுவடு அரவிந்தன், சுதாங்கன், எஸ்.ராமகிருஷ்ணன், பி.ஏ.கிருஷ்ணன், வெளி ரங்கராஜன், பா.ராகவன் (கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் சந்தித்தேன்), முத்துராமன் (இவரையும் கிழக்கு அலுவலகத்தில் சந்தித்தேன். அறிமுகத்துக்கு அப்புறம் பேச இயலாமல் போய்விட்டது.), கவிதா சொக்கலிங்கம், ஸ்ரீசெண்பகா சண்முகம், சீனி.விசுவநாதன், சிபிச்செல்வன், பவித்ரா ஸ்ரீனிவாசன், தமிழ் இந்தியா டுடே காப்பி எடிட்டர் சதாசிவம் (சந்தித்த பின்தான் தெரிந்தது, இவரும் நானும் ஒரே பல்கலைக் கழகத்தில் படித்து, ஒரே மாணவர் விடுதியில் தங்கி, ஒருவரையொருவர் முன்னமே அறிந்திருக்கிறோம் என்று), சிற்பி பாலசுப்பிரமணியம், சுகதேவ், சந்தியா சௌந்திரபாண்டியன், குறும்பட இயக்குநரும் எழுத்தாளருமான புகழேந்தி, மரத்தடி ப்ரியாவின் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்ட பலரைச் (பல பெயர்கள் நிச்சயம் விடுபட்டுப் போயிருக்கும். மன்னிக்க வேண்டுகிறேன்.) சந்திக்கிற பெருவாய்ப்பு அமையப் பெற்றேன். மேற்கண்ட எல்லாருடனும் எனக்கு ஏற்கனவே நட்பு உண்டென்றும், இவர்களுடன் நான் இலக்கியம் பேசினேன் என்றும் பொய் சொல்லப் போவதில்லை. சிலருடன் இலக்கியம், சிலருடன் தனிப்பட்ட உரையாடல்கள், சிலருடன் தொழில் நிமித்தம். ஆனாலும், இவர்களையெல்லாம் என் குறுகிய கால பயணத்தில் சந்திக்கிற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு அவர்களுக்கு நான் உளமார நன்றி கூறுகிறேன். இவர்கள் இல்லாமல், இன்னும் பல நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாட முடிந்தது. நேரில் சந்திக்காத குறையை அது ஓரளவுக்கு நிவர்த்தி செய்தது எனலாம்.

கிருபா சங்கரையும் தேசிகனையும் இன்னும் சில நண்பர்களையும் சந்திக்க இயலாமல் போனது வருத்தமே. இரா. முருகன் மிகவும் மென்மையாகவும் அன்போடும் பேசுகிறார். இன்னும் கொஞ்சம் கேட்கலாம் என்று ஆசைப்பட வைக்கிற தொனியும் ஆகிருதியும் அவரிடமிருக்கிறது. அவர் விருப்பப்படி சில நிமிடங்களாவது அவர் இல்லத்துக்குப் போக முடியாமல் நேரம் என்னை நெருக்கியதற்கு அவர் என்னை மன்னிக்க வேண்டும். இகாரஸ் பிரகாஷோடு பின்னிரவு வரைப் பேச முடிந்தது. அதன்பிறகு அவரைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பின்னிரவுப் பேச்சிலேயே அலுத்துப் போய்விட்டேனா என்று அவரைக் கேட்க வேண்டும். :-)

ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டு விழாவில் மறுபடியும் ரஜினி ராம்கி, சுரேஷ் கண்ணன், ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்து மகிழ்கிற வாய்ப்பு கிடைத்தது. ரஜினி ராம்கி இளமையின் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் வளைய வருகிறார். சுனாமி நிவாரண உதவிகளாக அவரும் அவர் நண்பர்களும் செய்த இமாலய சாதனையை நேரில் பாராட்டுகிற வாய்ப்பு கிடைத்தது. எது சொன்னாலும் புன்னகைக்கிறார். பிரசன்னா போன்ற நண்பர்கள் ரஜினியை வைத்து அவரை நட்பு ரீதியில் "ஓட்டினாலும்" பதிலுக்கு மனம் சுருங்காமல் சிரிக்கிறார். சுரேஷ் கண்ணனும் ராஜ்குமாரும் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் பரந்துபட்ட விஷய ஞானம் உள்ளவர்களாகவும் தெளிவான சிந்தனைகள் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள். சுரேஷிடமும் ராஜ்குமாரிடமும் இன்னும் பேச வேண்டியது ஏதோ இருக்கிறது என்ற பிரமை அவர்களிடம் எவ்வளவு பேசினாலும் தோன்றுகிறது. சுரேஷைச் சந்திக்கும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எல்லாம் கையில் மினரல் வாட்டர் பாட்டலுடன் அலட்டுகிறார்கள் என்று ஒருமுறை எழுதியிருந்தார். அவரைப் பார்க்கும்போது கூட நான் மினரல் வாட்டர்தான் குடிக்க வேண்டியிருந்தது. இல்லையென்றால், இரண்டு வாரம் உடல்நலம் கெடாமல் திட்டமிட்டபடி பயணத்தை முடிப்பது கடினம். என்னிடம் அலட்டல் எதையும் சுரேஷ் கண்டிருந்தால் அது வெளிநாட்டு அலட்டல் இல்லையென்றும், அக்மார்க் இந்திய அலட்டல் என்று மட்டும் அவருக்குத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன். :-)

பாரதி ஆய்வுகளில் தன் வாழ்நாளைச் செலவழித்து வரும் சீனி.விசுவநாதன் அவர்களையும் முதன்முறையாக நேரில் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இது என்னுடைய பாக்கியமென்றே நான் கருதுகிறேன். அவரின் சீரிய பணியையும் அவர் வாழ்ந்து வருகிற எளிய வாழ்க்கையையும் பார்க்கும்போது வார்த்தைகள் வரவில்லை.

பெங்களூர் மற்றும் கோவை சென்று வர வேண்டும் என்கிற என் ஆசை சென்னையிலேயே ஐந்து நாட்கள் கழித்துவிட்டதால் நிறைவேறவில்லை. அடுத்த முறை பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்!

அடுத்த முறை இந்தியா வரும்போது - ஒரு நாள் முழுமையும் ஒதுக்கி இணைய இலக்கிய நண்பர்களுடன் செலவழிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் பயணம் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காக நண்பர்களுக்கு நன்றிகள் சொல்லிக் கொள்கிறேன். சென்னையைவிட என் சொந்த ஊருக்கு பெங்களூர் சமீபம். அதனால் பெங்களூரில் இறங்கி ஊருக்குப் போனால் என்ன என்று ஒவ்வொருமுறையும் தோன்றும். சென்னையில் இம்முறை சந்தித்த நண்பர்களைப் பார்க்கும்போது, அடுத்தமுறையும் சென்னைக்கே டிக்கெட் எடுப்பேன் என்று உறுதியாகச் சொல்ல முடிகிறது. அந்த அளவுக்கு இணைய நண்பர்களிடம் பரஸ்பரம் மரியாதையுடனும், நெருங்கியும், மனம் விட்டும், புரிதலுடனும் பேசவும் விவாதிக்கவும் முடிந்தது. அதற்காக அவர்களுக்கு என் நன்றிகள்.

பின்குறிப்பு: சுயபுராணம் போன்ற தொனி எங்கும் தென்பட்டால் பொறுத்துக் கொள்ளவும்.

2 comments:

லதா said...

ungaL oor gudiyaaththam arugilaa ?

PKS said...

Yes. Kudiyaththam ennoda amma vazhi paati vooru thaan. My native is Tirupattur (North Arcot District). If you have more questions please give me your email and I will reply. Somehow feel uneasy to share personal info in public now a days. Thanks, PK Sivakumar