Thursday, June 02, 2005

திண்ணை.காம் கோபால் ராஜாராம் - ராஜ் தொலைகாட்சி நேர்காணல்

கோபால் ராஜாராம் தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு பரிச்சயமான பெயர் மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகால் மதிக்கப்படும் பெயரும்கூட. வானம்பாடி, கசடதபற போன்ற எழுபதுகளின் இலக்கிய இயக்கங்களுடன் இணைந்து இயங்கியவர். தாமரை, படிகள், சிகரம், கணையாழி உள்ளிட்ட பல சிற்றிதழ்களில் எழுதியவர். தமிழ்நாட்டில் வீதி நாடகக் குழுக்களைப் பிரபலப்படுத்தியதிலும் முன்னெடுத்துச் சென்றதிலும் பங்காற்றியவர். "கட்டுடைத்தல்" என்கிற விமர்சன முறையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர். அந்தக் "கட்டுடைத்தல்" இன்றைக்குத் தமிழ் எழுத்தில் அடைந்துள்ள விபரீதப் பரிமாணங்கள் குறித்த கவலையும் விமர்சனங்களும் கொண்டவர்.

பாதல் சர்க்காரின் நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அலுமினியப் பறவைகள் என்ற ஒரு கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கிறது. சுருக்கமாகவும் கூர்மையாகவும் விமர்சனப் பாங்குடனும் சொல்ல விரும்புவதை லகுவாகச் சொல்லி எழுதுவதில் தேர்ந்தவர். ஆழ்ந்த வாசகர். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சினூடே சரளமாகப் பெரியாரும் வருவார், தேவதச்சனும் வருவார், ஜெயகாந்தனும் வருவார், சுந்தர ராமசாமியும் வருவார், அமெரிக்க எழுத்தாளர்களும், லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களும் இன்னபிற பலரும் வருவார்கள். அரசியல், கலை, இலக்கியத்தில் அத்தகைய புலமை வாய்ந்தவர். இலக்கியத்தில் தனக்கென்றத் தனிப்பட்ட ஆணித்தரமான கருத்துகள் இருந்தபோதும், அரசியல் கட்சிகள்/கொள்கைகள் சார்ந்த பத்திரிகைகளில் எழுதி வந்தபோதும், கொள்கை என்கிற எந்த முக்காட்டையும் மாட்டிக் கொள்ளாதவர். சித்தாந்தங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல், எல்லாரையும் வாசிக்கிற நேசிக்கிற பக்குவம் பெற்றவர். அதனாலேயே, எல்லாக் கூடாரங்களிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு.

எழுத்தைப் போலவே நாடகங்களிலும் சினிமாவிலும் ஆர்வமும் புலமையும் மிக்கவர். அம்ஷன் குமார் இயக்கத்தில் வெளிவந்த, கி.ராஜநாராயணனின் "கிடை"யை அடிப்படையாகக் கொண்ட "ஒருத்தி" திரைப்படத்தின் தயாரிப்பாளர். நியூ ஜெர்ஸியில் இயங்கும் சிந்தனை வட்டம் மூலமாகக் தமிழ்நாடு - நேற்று இன்று நாளை (அறிஞர் பார்வை) ஆய்வு நூல் வெளிக்கொணர்தல், குறும்பட விழா நடத்துதல் ஆகியவற்றில்அரும்பங்கு செலுத்தியவர்.

திராவிட இயக்கத்தில் ஆர்வமுடையவராகத் தொடங்கி உலகளாவிய இலக்கிய அறிவும் நுண்ணிய பார்வையும் பெற்றவராகப் பரிணாம வளர்ச்சியடைந்தவர். பெரியார் மீது உயர்ந்த மரியாதை உடையவர். இருபது ஆண்டுகளாக கணிப்பொறித்துறையில் மென்பொருள் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தற்போது அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

ஆறு ஆண்டுகளாகத், தமிழின் முதல் இணைய இதழான திண்ணை.காம் என்கிற தமிழின் புகழ்பெற்ற இணைய பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஒரு பத்திரிகை எவ்வளவு ஜனநாயகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், பத்திரிகை ஆசிரியர் எவ்வளவு குறைவாக படைப்பாளியின் எழுத்தில் கை வைத்துத் திருத்தவோ நீக்கவோ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், இவர் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் திண்ணை.காமைச் சொல்லலாம். சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையப் புத்தகக் கடையான AnyIndian.com-ன் பங்குதாரராகவும் தலைமைச் செயல் இயக்குநராகவும் (CEO) இருந்து வருகிறார்.

இவருடைய நேர்காணல் ஒன்று ராஜ் தொலைகாட்சியில் ஜூன் 9, 2005 (வியாழன்) காலை இந்திய நேரம் 8 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சியின் பெயர் தினம் தினம் (மக்கள் மேடை). ஒருமணி நேரம் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கோபால் ராஜாராமை நேர்காணல் செய்கிறார் திருமதி. நிர்மலா பெரியசாமி.

இந்நிகழ்ச்சியில் ராஜாராம் தம்முடைய இலக்கிய அனுபவங்கள், திண்ணை.காம் அனுபவங்கள், AnyIndian.com ஆகியன பற்றியெல்லாம் பேசக்கூடும் என்பது என் ஊகம். இங்கிருந்தபடி ராஜ் தொலைகாட்சியைப் பார்க்கிற வாய்ப்பு எனக்கில்லை. எனவே, நிகழ்ச்சியைப் பார்க்கிற அன்பர்கள் அதுபற்றிப் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

7 comments:

Arun Vaidyanathan said...

Good news,
We can see Raj TV thru numtv.com!

Regards,Arun

மு. சுந்தரமூர்த்தி said...

சிவகுமார்,
ராஜாராம் பற்றிய குறிப்புகளுக்கு நன்றி.

//திராவிட இயக்கத்தில் ஆர்வமுடையவராகத் தொடங்கி உலகளாவிய இலக்கிய அறிவும் நுண்ணிய பார்வையும் பெற்றவராகப் பரிணாம வளர்ச்சியடைந்தவர். ஆனாலும், பெரியார் மீது உயர்ந்த மரியாதை உடையவர்.//

அதென்ன "ஆனாலும்"? உலகளாவிய இலக்கிய அறிவும், நுண்ணிய பார்வையும் பெற்றவர்களுக்கு பெரியார் மீது மரியாதை இருக்கக்கூடாதா? அல்லது பெரியாரை மதிப்பவர்களுக்கு உலகளாவிய இலக்கிய அறிவும், நுண்ணிய பார்வையும் இருக்க முடியாதா?

PKS said...

சுந்தரமூர்த்தி,

கண்டிப்பாக இருக்கலாம்.

நான் சொல்ல வந்தது, திராவிட இயக்கத்தில் ஆர்வமுடையவர்களாக இருந்து பின் அதிலிருந்து வெளிவந்தவர்கள் பெரியார் உட்பட எல்லாரையும் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். பெரியாரின் இரண்டாம் திருமணம் போன்ற அவரின் அந்தரங்க விஷயங்களையும்கூட பொதுமேடையில் பேசுகிற காரியங்கள் செய்கிறார்கள். இதற்கெல்லாம் என்னை உதாரணம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேட்டால் அண்ணாதுரையிலிருந்து ரவிக்குமார் வரை இதற்கு உதாரணம் சொல்ல முடியும். பெரியார் மீதும் அவர் கொள்கைகள் மீதும் எனக்கு எத்தகைய விமர்சனம் இருப்பினும் இப்படி அவரின் சொந்த வாழ்க்கையை வைத்து அவரை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இன்னொரு பக்கம், த.கோவேந்தன் போன்றவர்கள் திராவிட இயக்கத்தாலும் பெரியாராலும் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் "புதுநானூறு" என்று திராவிட இயக்கத்தையே பகடி செய்து எழுதியிருந்தாலும், பெரியார் மீது உயர்ந்த மரியாதையும் அபிப்ராயமும் உடையவர்கள். அப்படிப்பட்ட வரிசையில் வருபவராக ராஜாராமை நான் பார்க்கிறேன். அந்த அர்த்தத்தில் - திராவிட இயக்கத்தைவிட்டு வெளிவந்து வளர்ந்திருக்கிற போதினும் ராஜாராமுக்கு பெரியார் மீது உயர்ந்த மரியாதையும் அபிப்ராயமும் உண்டு என்பதைச் சொல்ல விரும்பினேன்.

ஒரு பதினைந்து நிமிட உணவு இடைவேளையின்போது, அடுத்த அலுவலகக் கூட்டம் ஆரம்பிக்குமுன் எழுதிய அறிமுகம் இது. நீங்கள் நினைப்பதுபோல அர்த்தம் வருகிற மாதிரி எழுத வேண்டியிருந்தால், அதை நேரடியாகவே நான் எழுதுவேன். அந்த ஆனாலும் அங்கே தேவையில்லைதான். எடுத்து விடுகிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. ஆனால், வரிகளுக்கிடையே படிக்க வேண்டாமென்று வேண்டுகிறேன்.

- பி.கே. சிவகுமார்.

ROSAVASANTH said...

//ஒரு பத்திரிகை எவ்வளவு ஜனநாயகத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், பத்திரிகை ஆசிரியர் எவ்வளவு குறைவாக படைப்பாளியின் எழுத்தில் கை வைத்துத் திருத்தவோ நீக்கவோ வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், இவர் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் திண்ணை.காமைச் சொல்லலாம்//

இந்த அளவிற்கு பொருத்தமான, நேர்மையான வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்பதை நேரடியாகவே அனுபவம் மூலம் உணர்ந்திருப்பதால் புரிந்துகொள்கிறேன். நன்றி!

PKS said...

Roza Vasanth, உங்கள் வலைப்பதிவில் நீங்கள் எழுதுவது மாதிரி "குறியை அறுக்க வேண்டும்", "பாஸ்டர்ட்" என்றும், பிறரின் வலைப்பதிவு கமெண்ட்டுகளில் "நங்கநல்லூர் வரும்போது அவிழ்த்துக் காட்டுகிறேன்" என்றும் நீங்கள் எழுதுகிற உங்களின் "தரமான அறிவுபூர்வ" எழுத்துகளைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்களா திண்ணையில்? அந்த அனுபவத்தைச் சொல்கிறீர்களா? உங்களின் மோசமான எழுத்துகளைப் பிரசுரிக்க திண்ணை மறுத்திருந்தால் - திண்ணைக்குக் கோடி நமஸ்காரம் சொல்வேன். தமிழ்மணத்தில் வாசிக்கிற எழுதுகிற எந்தக் கொம்பருக்கும் இல்லாத தைரியம் திண்ணைக்கு அப்போதே இருந்திருக்கிறதே! அதனால்தான்.

- பி.கே. சிவகுமார்

PKS said...

A comment that I received from Gopal Rajaram through e-mail is pasted here for others. (- PK Sivakumar)

அன்புள்ள பி கே சிவகுமார்,

உங்கள் வலைப்பதிவை இப்போது தான் பார்த்தேன்.
என் ஈடுபாடுகள் பற்றிய சிறு குறிப்பில் உள்ள ஒரு தகவல் பிழையைச் சரிசெய்யுமாறு வேண்டுகிறேன்.
என் அரசியல் நோக்கு மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சார்ந்த நண்பர்களாலும்,. என் இலக்கியப் பார்வை
பேராசிரியர் ஆல்பர்ட் அவர்களாலும் செழுமை செய்யப்பட்டது. திராவிட இயக்கங்களில் நான் ஈடுபாடு
கொண்டதில்லை. ஆனால் பெரியார், ஈ வெ ரா-வின் கருத்துகளை இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டும்
என்பது என் கருத்து. தயவுசெய்து சரிசெய்யவும்.

என்னைப் பற்றி மிக அதிகமாக உங்கள் பதிவில் கிடைப்பது எனக்குக் கூச்சம் அளிக்கிறது. அப்படிப்
பொருட்படுத்தும் அளவிற்கு நான் எதுவும் செய்துவிடவில்லை.

அன்புடன்
கோ ராஜாராம்.

ROSAVASANTH said...

திண்ணை விஷயத்தில் சிவக்குமார் எழுதியுள்ளது பொய். தெரிந்தே சொன்ன பொய். அது குறித்து என் பதிவில் எழுதியுள்ளேன்.

http://rozavasanth.blogspot.com/2005/06/blog-post_21.html