சுந்தர ராமசாமியின் சவால் என்ற இந்தக் கவிதை பிரமிளுக்குப் பதிலாக எழுதப்பட்டது என்று ந. முத்துசாமி சுந்தர ராமசாமி அஞ்சலிக் குறிப்பொன்றில் எழுதியிருந்தார். பிரமிளுக்கும் சுந்தர ராமசாமிக்குமான சண்டை தமிழ் இலக்கிய உலகில் பரிச்சயம் உடையவர் அறிந்தது.
அதைப் பற்றியும் ஜெயமோகன் தன்னுடைய "சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்" நூலில் எழுதியிருக்கிறார். (அதை நேரம் கிடைக்கிற பின்னொரு நாளில் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.) இந்தக் கவிதையின் "ஓய்ந்தேன் என மகிழாதே / உறக்கமல்ல தியானம் / பின்வாங்கல் அல்ல பதுங்கல் என்ற வரிகளின் ஆங்கில மொழியாக்கத்தை (என்று நினைக்கிறேன்) டெல்லியில் கூத்துப்பட்டறை நடத்திய ஒரு நாடகத்தின் இறுதியில் சொல்ல, ஆடியன்ஸ் அனைவரும் அதன் தாக்கத்தில் நின்றதைப் பற்றியும் ந.முத்துசாமி சுந்தர ராமசாமிக்கான அஞ்சலிக் குறிப்பில் எழுதியிருந்த ஞாபகம். அந்த ஆடியன்ஸுக்குப் பிரமிளுக்கும் சு.ரா.வுக்குமிடையேயான பிரச்னைகள் தெரியாது. ஒரு படைப்பை அது ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையில் சரியாக மதிப்பிட்ட அவர்களைப் போன்றவர்களால்தான் இலக்கியப் பயணங்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும்கூட தனிப்பட்ட சண்டைகளும் சச்சரவுகளும் பொருட்டுப் பிறக்கிற எதிர்வினையான படைப்புகள் மிகவும் இலக்கியத்தரமானதாக இருக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதுவும் ஓர் உதாரணம். இணையச்
சண்டைகளும்கூட அப்படிப்பட்ட நல்லக் கட்டுரைகளுக்கோ படைப்புகளுக்கோ வழிவகுக்க முடியும் என்று அறியாதவர்கள், சண்டைகளைப் புத்தகமாகப் போட்டுக் கொண்டிருப்பதாகப் புலம்பும்போது எனக்குப் பரிதாபம் வருகிறது. இதைச் சொல்வதன்மூலம், என் எழுத்து இலக்கியம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், சச்சரவுகளின் சண்டைகளின் பொருட்டு எழுந்த எழுத்து என்று எதையும் புறந்தள்ளுவது மிகவும் அபத்தமான காரியம் என்பதே நான் சொல்லவருவது. சு.ரா. கவிதையில் இன்னும் தொடர்ந்திருந்தால், இன்னும் அதிகமான உயரங்களைத் தொட்டிருப்பார். அதை அவரிடமே நான் நேரில் சொன்னேன். எனக்குப் பிடித்த சு.ரா.வின் கவிதைகளுள் ஒன்றான இதை உங்களுடன் பகிர்ந்து
கொள்வதில் மகிழ்ச்சி.
சவால்
--சுந்தர ராமசாமி
நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்.
எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.
எனது கொடி பறக்கிறது
அடி வானத்துக்கு அப்பால்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice one PKS, thanks for sharing.
Post a Comment