திண்ணை ஆசிரியர் கோபால் ராஜாராம் ஒருநாள் அழைத்து, "அஜீவன் கனடாவுக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார். அப்படியே அமெரிக்காவுக்கும் வர விரும்புகிறார். இங்கிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்றிலிருந்து அவருக்கு அழைப்பிதழ் கடிதம் தேவை. நீங்கள் ஏதேனும் செய்யுங்கள்" என்று ஒரு பொறுப்பை ஒப்படைத்தார்.
நியூ ஜெர்ஸியில் சிந்தனை வட்டம் நடத்திய, தமிழ்க் கலைப்பட விழாவில் அஜீவனின் நிழல் யுத்தம் குறும்படத்தைப் பார்த்திருக்கிறேன். அக்குறும்பட விழாபற்றி நான் எழுதிய பதிவுக்கு அஜீவன் நன்றி சொல்லி எழுதினார். இப்படி அஜீவனுக்கும் எனக்குமான உறவு படைப்பாளி - வாசகன் என்ற அளவிலானது மட்டுமே. நிழல் யுத்தம் படத்தின் செய்நேர்த்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தச் சமயத்தில் தமிழ்க்கலைப் பட விழாவில் திரையிடப் படங்களைத் தேர்ந்தெடுக்கும்விதமாக நண்பர்களுடன் சேர்ந்து பலத் தமிழ்க் குறும்படங்களைப் பார்த்திருந்தேன். ஆதலால், அஜீவன் படத்தின் செய்நேர்த்தி, கேமரா என்று பலவற்றில் தெரிந்த முதிர்ச்சியையும், professionalism-ஐயும் உடனடியாக அடையாளம் காண முடிந்தது. நிழல் யுத்தம் படத்தில் வருகிற கனவுக் காட்சி மிக இயல்பாகவும், கனவு என்று பார்ப்பவர் ஊகிக்க முடியாதவண்ணமும் படமாக்கப்பட்டிருப்பதைக் கோபால் ராஜாராம் இந்தச் சந்திப்பிலும் சொன்னார். அஜீவன் போன்ற கலைஞர்களை வரவேற்பதும் ஊக்குவிப்பதும் தமிழ்க் குறும்பட வளர்ச்சிக்கு நல்லது என்று அப்போதிருந்தே நினைத்து வந்திருக்கிறேன். ராஜாராம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்ததும், ஸ்ரீகாந்த் மீனாட்சி அண்ணாச்சியை அழைத்து, அஜீவனுக்கு அமெரிக்கா வருவதற்கு ஓர் அழைப்பிதழ் கடிதம் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஸ்ரீகாந்த் அண்ணாச்சி வாஷிங்டனில் சங்கரபாண்டி உள்ளிட்ட அவர் நண்பர்களுடன் பேசி, அவர்கள் உதவியுடன், வாஷிங்டன் டி.ஸி. தமிழ்ச்சங்கம் சார்பாக அஜீவனுக்கு ஓர் அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைத்தார்.
அதன்படி, அஜீவன் சமீபத்தில் அமெரிக்கா வந்தார். வாஷிங்டன் டி.ஸி. பகுதியில் அந்தப் பகுதி நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தபடி குறும்படப் பயிற்சிப் பட்டறை ஒன்றை சென்ற வாரம் நடத்தினார். சனியன்று காலை கனெக்டிகட் மாநிலத்தில் ராஜாராம் அவர்கள் இல்லத்தில் குறும்படத் திரையிடலும் கலந்துரையாடலும், அடுத்த நாள் நியூ ஜெர்ஸியில் என் வீட்டில் அதே மாதிரியான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மெமோரியல் டே லாங் வீக்-எண்ட் என்பதால், கூட்டம் இருக்காது என்று அஜீவனிடம் நிகழ்வைத் திட்டமிடும்போதே சொல்லி வைத்திருந்தேன். ஏனென்றால், ஒரு சாதாரண வார விடுமுறையின்போது, காலையிலிருந்து மாலை வரை 12 குறும்படங்களும், ஒரு முழுநீளத் திரைப்படமும் திரையிட ஏற்பாடு செய்து, இலவச அனுமதி, இலவச மதிய உணவு என்று வசதிகள் செய்து தந்தும், நியூ ஜெர்ஸியில் நடந்த தமிழ்க் கலைப்பட விழாவுக்கு, ஏறக்குறைய 75 தமிழன்பர்களே கலந்து கொண்டு வந்து பேராதரவு தந்ததைப் பார்த்த அனுபவம் இருந்தது. :-) அஜீவனும் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பது முக்கியமில்லை. ஆர்வமுள்ளவர்கள் ஓரிருவர் கலந்து கொண்டாலும் சரி. இல்லையென்றாலும், உங்களையெல்லாம் சந்தித்த மாதிரி இருக்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்லி விட்டார்.
சனியன்று காலை வீட்டிலிருந்து கிளம்பி நண்பர் துக்காராம் வீட்டிற்குச் சென்றேன். நண்பரின் நண்பர் திரு. அ. வெற்றிவேல் அவர்கள் சவூதியிலிருந்து அமெரிக்கப் பயணம் வந்திருக்கிறார். அவரை ராஜாராம் வீட்டிற்கு நான் அழைத்துச் செல்வதாகத் திட்டம். துக்காராம் வீட்டிற்கு வந்து இறங்கிய நண்பர் வெற்றிவேலுடன் அறிமுகம் ஆனது. திசைகள் அமைப்பில் இருப்பதாகச் சொன்னார். அவரும் நானும் ராஜாராம் வீட்டிற்குக் கிளம்பினோம். அந்த மூன்று மணி நேரப் பயணத்தில், இலக்கியம், அரசியல், பொதுவான எழுத்தாள நண்பர்கள் என்று பேசியதில் வெற்றிவேல் மிகவும் நெருக்கமாகி விட்டார். வாஷிங்டனிலிருந்து ரயில் மூலம் அஜீவன் ஏற்கனவே கனெக்டிக் வந்திருந்தார். சில நிமிடங்களிலேயே ·ப்ரெண்ட்லியாகவும் ஜாலியாகவும் நண்பர்களுடன் பேசத் தொடங்கிவிட்டார். கச்சேரி களை கட்டுவதற்கு முன்பு, திருமதி. ராஜாராம் அவர்களின் சமைத்து வைத்திருந்த மதிய விருந்தை ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டபின் மறுபடி பேச்சு. இரண்டு மணிக்குத் தொடங்க வேண்டிய நிகழ்ச்சி, சில நண்பர்கள் வரவேண்டியிருந்ததால், நான்கு மணி சுமாருக்குத் தொடங்கியது. பதினைந்து நண்பர்கள் (குழந்தைகள் இல்லாமல்) நிகழ்வில் கலந்து கொண்டனர். நியூயார்க்கிலிருந்து அஜீவனின் நண்பர் கிருபா அவரது மகனுடன் வந்திருந்தார். யேல் பல்கலைக் கழகப் பேராசிரியர் E. அண்ணாமலை அவர்கள் அவரது துணைவியாருடன் வந்திருந்தார்.
முதலில் - அனைவரும் சுயஅறிமுகம் செய்து கொண்டோம். அஜீவனும் தன்னைப் பற்றிச் சொன்னார். "குறைவாகப் படிப்பவன். ஆனால், அதைப் பற்றி அதிகமாகப் பேசுபவன்" என்று என்னைப் பற்றிச் சொன்னேன். "மிகவும் குறைவாக (அரிதாக என்ற பொருளில்) எழுதுபவர். ஆனால், உறைக்கிற மாதிரி ஷார்ப்பாக எழுதுபவர்" என்று என்னைப் பற்றி அஜீவனிடம் யாரோ சொன்னார்கள் என்று அஜீவன் சொன்னார். அறிமுகக் கலந்துரையாடல் பொதுவாக இப்படி ஜாலியாக இருந்தது. பின்னர், திரையிடல் தொடங்கியது. ஒவ்வொரு குறும்படத்திற்கும் முன்னர், அதைப் பற்றி அஜீவன் ஓரிரு நிமிடங்கள் பேசுவார். பின்னர், படம் திரையிடப்படும். அதன் பின்னர், கலந்துரையாடல் என்று போனது. அஜீவன் எடுத்த அழியாக் கவிதை, நிழல் யுத்தம் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
அஜீவனிடம் நான் பார்த்த ஒரு நல்லப் பழக்கம். தன் படத்தை மட்டும் திரையிடாமல், அவர் நண்பர்கள் எடுத்த நல்ல படங்களையும் திரையிட்டார். அதன்மூலம், சிங்கள சினிமா மற்றும் சிங்களக் குறும்படத்தின் சிறப்பான கலைஞர்களைப் பற்றிய சிறு அறிமுகம் கிடைத்தது. நிழல் யுத்தத்திற்கு அடுத்து, அவர் நண்பர் ஆனந்தா அபயநாயகே எடுத்த "Darkness at dawn" என்ற குறும்படத்தைத் திரையிட்டார். மிகவும் artistic-ஆக அப்படம் எடுக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களிடையேயும் தமிழர்பால் அன்பும் அனுதாபமும் கொண்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இப்படங்கள் மூலம் அறிய முடிந்தது என்று பார்த்தவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர், அஜீவன் தயாரித்த, Heritage of Sri Lanka என்ற 25 நிமிட டாக்குமெண்டரி திரையிடப்பட்டது. அதன் பின்னர், இரவு விருந்து. பேச்சு பேச்சு பேச்சு. இரவு ஒன்பதரை மணிக்கு அஜீவனையும், நண்பர் வெற்றிவேலையும் அழைத்துக் கொண்டு நியூ ஜெர்ஸி பயணம் ஆரம்பமானது. நண்பர் வெற்றிவேலை விமான நிலையம் அருகே அவர் ஹோட்டலுக்குச் செல்ல இறக்கி விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும்போது மணி இரவு ஒன்றரை.
காலை ஏழுமணிச் சுமாருக்கு எழுந்து, அஜீவன் கொண்டுவந்த டிவிடிக்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்று முன்னோட்டம் பார்த்தோம். அந்தப் பொழுதிலே, சுனாமி பற்றி அஜீவன் எடுத்து விரைவில் வெளிவர இருக்கிற wave என்ற குறும்படம் எப்படி எடுக்கப்பட்டது என்றுச் சொல்கிற "The making of Wave" என்ற குறும்படத்தை என் குடும்பத்துடன் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மன், சுவிஸ் குழுக்களுடன் சேர்ந்து அஜீவன் சுனாமியின்போது நேரடியாகக் களத்தில் இறங்கி நிவாரண உதவிகள் செய்திருக்கிறார் என்று அறிய முடிந்தது. அது பற்றிய பல தகவல்களை அப்போது பகிர்ந்து கொண்டார்.
காலை உணவிற்குப் பின் கடைகளுக்குச் சென்று வந்தோம். இங்கிருந்த கடைகளையும் மக்களையும் அறிந்து கொள்வதில் அஜீவனுக்கு அது உதவியது என்று சொன்னார். பிற்பகல் உணவிற்குப் பின் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து சேர, குறும்பட நிகழ்வு தொடங்கியது. இங்கும் ஏறக்குறைய 15 நண்பர்கள் வந்திருந்தார்கள். நண்பர்கள் அறிமுகத்திற்குப் பிறகு, குறும்படத் திரையிடல் தொடங்கியது. வெளியூர்ப் பயணம் முடிந்து அன்று காலைதான் வந்திருந்த நண்பர் முருகானந்தமும் வந்து சேர்ந்தார். கனெக்டிகட் மாதிரியே, அஜீவன் படத்திற்கு முன்பு ஓரிரு நிமிடங்கள் படத்தைப் பற்றிப் பேசினார். பின்னர் படம். அதன்பின்னர், கலந்துரையாடல் என்று போனது. Feel the pain, நிழல் யுத்தம், அழியாக் கவிதை ஆகிய அஜீவனின் படங்கள் திரையிடப் பட்டன. அதன் பின்னர், அஜீவனின் சிங்கள நண்பர்கள் எடுத்த, Hide & Seek, Darkness at Dawn ஆகிய குறும்படங்களும், Death on a Full Moon day என்ற முழுநீளத் திரைப்படமும் (ஏறக்குறைய 65 நிமிடங்கள்) திரையிடப்பட்டன. Darkness at Dawn, Death on a Full Moon Day ஆகியன பார்த்தவர்களை மிகவும் பாதித்தன. Death on a Full Moon Day பற்றிய விவரங்களைப் பின்வரும் சுட்டிகளில் காணலாம்: http://www.vithanage.com/ , http://www.infolanka.com/org/diary/111.html , http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/1470164.stm , http://www.timeout.com/film/65162.html
அதன் பின்னர், வந்திருந்த நண்பர்கள் ஒவ்வொருவரும் விடைபெற்றுச் சென்றனர். வலைப்பதிவு நண்பரான நெய்வேலி விச்சு அவர்கள் விடைபெறும்போது, "நிகழ்ச்சி இவ்வளவு நன்றாக இருக்கும் என்று தெரியாது. இனிமேல் எந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தாலும் தவறாமல் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போனார்.
இரவு உணவிற்குப் பின் - எங்களுக்கு, அவர் எடுத்த சில விளம்பரப் படங்கள், பாடல் காட்சிகள் ஆகியவற்றையும், சுவிட்ஸர்லாந்துக்கு அகதியாக வருகிறவர்களுக்கு புகலிடம் கிடைக்கிற முறை (process) பற்றி சுவிஸ் அரசாங்கத்திற்காக அவர் எடுத்த, My name is Mike Goring என்ற ஆங்கில டாக்குமெண்டரியையும், அஜீவன் போட்டுக் காட்டினார். இந்தப் பயணத்தின்போது, நியூ ஜெர்ஸியில்தான் நிறைய படங்கள் திரையிடப் பட்டன என்று அஜீவன் சொன்னதில் அடைந்த மகிழ்ச்சியில் இரவு பத்தரை மணிக்கு மேல் படுக்கப் போனோம். திங்கள் காலை ஏழரை மணிக்கு அஜீவனை Newark விமான நிலையத்தில் டொரண்டோவிற்கு வழியனுப்பி வைத்தேன். முந்தைய நாள் நியூ யார்க் நகரைச் சுற்றிப் பார்க்க போன நண்பர் வெற்றிவேல், ஹோட்டலைக் காலி செய்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு அவரை அழைத்திருந்தேன். ஆதலால், அஜீவனை வழியனுப்பிவிட்டு, வெற்றிவேலுடன் வீடு திரும்பினேன்.
காலை முழுவதும், வெற்றிவேலுடன் நன்றாகப் பேச முடிந்தது. "உங்கள் எழுத்தின் முதிர்ச்சியைப் படித்துவிட்டு, உங்களை வயதானவராக நினைத்திருந்தேன். இப்படி இருப்பீர்கள்" என்று எதிர்பார்க்கவில்லை என்றார். அவருக்குக் கனடிய நிரந்தரக் குடியுரிமை கிடைத்தும் வராமல் இருந்துவிட்டவர் அவர். அதுகுறித்து வருத்தமும் அடைந்ததில்லையாம். நீங்கள் எல்லாரும் இப்படி இலக்கியம், புத்தகங்கள் என்று அமெரிக்காவில் பேசுவதைப் பார்க்கும்போது, அமெரிக்காவிற்கோ கனடாவுக்கோ வந்திருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது என்றார். மதிய உணவிற்குப் பின்னர், டெக்ஸாஸ் செல்ல வேண்டியிருந்த வெற்றிவேலை விமான நிலையத்திற்கு ரயிலேற்றி விட்டேன்.
மூன்று மணி சுமாருக்கு வீட்டிற்குள் நுழைந்ததும், இரண்டு நாட்கள் கலகலவென்று இருந்த வீடு வெறிச்சென்று இருந்தது. குழந்தைகள் சாயந்திரம் பார்க்கிற்கு அழைத்துச் செல்லச் சொல்லிக் கேட்டனர். ஐந்து மணிக்கு மேல் போகலாம் என்று சொல்லிவிட்டுச் சிலமணி நேரங்கள் தூங்கப் போனேன்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
nice.
Nandri Sivakumar,
Ungali santhithathil Peru mahilchchi..........
Dear PKS,
I regret missing this important meet due to personal reasons.
I will surely make it next time.
Thanks for the post.
Regards
Sundar.
Post a Comment