Monday, September 25, 2006

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - வாசக அனுபவம்

(தமிழ்.சி·பி.காமில் - http://tamil.sify.com/fullstory.php?id=14298289 என்னும் முகவரியில் - பிரசுரமானது)

நாஞ்சில் நாடன் என்ற பெயர் முதலில் என் பார்வையில்பட்டுப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது அந்தப் பெயர் என்னை ஈர்க்கவில்லை. என் ரசனைக்கும் அறிவுக்கும் ஒவ்வாமையைத் தந்த பெயராகவே அதை உணர்ந்தேன். அந்தப் பெயர் புதுமையானதாக இல்லை என்பது போன்ற காரணங்களை அதற்குச் சொல்ல முடியாது. அந்த நாட்களில் மட்டுமில்லை - இப்போதும் - நான் பழமையைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பவன் இல்லை. பழமையின் வீரியம்மிக்க செழுமைக்கு மரியாதை செலுத்துபவன்தான். நாஞ்சில் நாடன் என்ற பெயர் பழமையான பெயராகவும் எனக்குத் தோன்றவில்லை. பெயர்களின் மீது எனக்கும் ஒரு ரொமான்டிஸிசம் இருந்தது. ஆனாலும், நாஞ்சில் நாடன் என்ற பெயர்மீது ஏன் பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை? எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் உணர்ச்சிவசப்பட்டு அச்சு பிச்சென்று பெயர்கள் வைத்துக் கொள்வது எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. தமிழ்மொழியும் தமிழ்நாடும் பிரசாரமாகப் போய் ஒரு மாநிலத்தின் தலைமுறையே பாதிக்கப்பட்டதைப் பார்த்து வளர்ந்ததால், நாடு மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய புனைபெயர்கள் மீது எனக்கு ஒவ்வாமை இருந்தது. எழுத்தாளர்களும் பேராசிரியர்களும் தமிழில் மட்டும்தான் தமிழவன், தமிழ்நாடன், நாஞ்சில் நாடன், காவிரிநாடன் என்று நாமகரணம் சூட்டிக் கொள்வார்கள் என்ற ஏளனமும் என் பார்வையில் இருந்திருக்கலாம். புதுமைப்பித்தன் என்ற பெயரை முதலில் பார்த்தபோது தன்னை அது ஈர்க்கவில்லை, தன் ரசனைக்கு மாறான பெயராக அது இருந்தது என்று சுந்தர ராமசாமி எழுதியது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

நான் புதுமையான மற்றும் வித்தியாசமான பெயர்களுக்கு ரசிகனாக இருந்தேன். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு என் தந்தையார்தான் பெயர் வைப்பார். அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த கிராமத்தில் அவர் பெயர் வைத்த குழந்தைகள் நிறைய உண்டு. என் பெரிய அத்தைப் பெண்ணுக்கு பாரதி, என் தங்கைக்கு வைஷ்ணவி, சித்தப்பா பையனுக்கு குஹப்பெருமாள் என்று அவர் சூட்டிய பெயர்கள் பலருக்கும் பிடித்தவையாக இருந்தன. நான் பிறந்தபோது எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனைப் பெயர் வைக்கச் சொல்லிக் கேட்க, அவர் சித்தார்த்தன் என்று பெயர் வைத்தாராம். மூன்று வருடங்கள் குழந்தை இல்லாமல் என் அம்மா சிவனிடம் விரதம் இருந்து வேண்டிக் கொண்டதால் நான் பிறந்தேனாம். அதனால் எனக்கு சிவகுமார் என்று பெயர் வைக்க அவர் ஆசைப்பட, அம்மாவின் ஆசை நிறைவேறிற்று. இந்த விஷயத்தில் என் அப்பாவின் முதிர்ச்சியும் என் அம்மாவுக்காக விட்டுக் கொடுத்த பெருந்தன்மையும் எனக்கு இல்லை. என் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்று கல்யாணத்திற்குப் பல வருடங்கள் முன்னரே முடிவு செய்துவிட்டேன் நான். அந்தப் பெயர்களையே வைக்கவும் செய்தேன்.

இப்படிப் பெயர்களுடன் ஈடுபாடு கொண்டிருந்தவனாக நான் இருந்தேன். அந்த ஆர்வத்தினாலாயே நாஞ்சில் நாடன் என்ற பெயர் என்னைக் கவராமல் போயிற்றோ? நாஞ்சில் நாடனின் எழுத்துகளைக் கல்லூரிக் காலத்தில் அவ்வப்போது எங்கேனும் பார்த்தாலும் படிக்கிற ஆர்வம் வராமல் போய்க் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் பள்ளி நாட்களிலிருந்து எனக்கு மிகவும் நெருங்கிய நண்பனாக இருந்து வருபவரின் பெயர் அண்ணாதுரை. அவருடனான நட்பின் நெருக்கத்தில் அந்தப் பெயருடன் எனக்கிருந்த கருத்து ரீதியான ஒவ்வாமையை நான் உணர்ந்த கணங்களே இன்றுவரை நினைவுக்கு வரவில்லை. நெருங்கியவர்கள் எந்தப் பெயர் கொண்டிருந்தாலும் நம் மனம் பொருட்படுத்துவதில்லை. தெரியாதவர்களிடம்தான் எல்லாப் பொருத்தமும் பார்க்கிறோம் போலிருக்கிறது. என் தங்கைக்குக் குழந்தை பிறந்ததும் தொலைபேசியில் என் தந்தையிடம் என்ன பெயர் வைத்தார்கள் என்று கேட்டேன். என் தங்கையின் புகுந்த வீட்டில் சௌம்யா என்று பெயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று சொன்னார். "சி.என். அண்ணாதுரையின் புனைப்பெயர் சௌமியன். அவர் சௌமிய ஆண்டில் பிறந்ததால் அந்தப் புனைபெயர் வைத்துக் கொண்டார். சௌம்யா என்ற பெயரைக் கேட்டதும் இது நினைவுக்கு வந்தது" என்றும் தொடர்ந்தார். தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவரின் புனைபெயரைச் சார்ந்த பெயர் என் தங்கை குழந்தைக்கு இருப்பது பற்றிய வருத்தம் என் தந்தையையோ என்னையோ அப்போது நிறைக்கவில்லை. அதுமட்டுமில்லாமல், என் தந்தை வழி உறவில் என் தாத்தாக்கள் உட்படப் பலர் திராவிட இயக்க ஆதரவாளர்கள்தான். அதனால் உறவின் நெருக்கம் குறைந்ததில்லை. இப்படிப்பட்ட விசாலமான பார்வையுடையவனாகவே நான் வளர்க்கப்பட்டிருந்த போதிலும் நாஞ்சில் நாடன் என்ற பெயர் ஏன் கவரவில்லை என்று மறுபடியும் யோசிக்கிறேன். காரணம் என்னுடைய அலட்சியமும் முன்முடிவும் என்றே சொல்லலாம்.

ஆனாலும் நல்லூழ் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அதுதான் என்னை நாஞ்சில் நாடனைப் படிக்க வைத்தது என்று நம்புகிறேன். பொழுதுபோகாத ஒரு நேரத்தில் படிக்க வேறு ஒன்றும் பக்கத்தில் இல்லாத பொழுதில் முதலில் நாஞ்சில் நாடனைப் படித்தேன். "இந்த மனிதருக்குத் தமிழ் இலக்கிய மரபில் எவ்வளவு ஆழமான அறிவும் ரசனையும் இருக்கிறது." என்ற பிரமிப்புதான் முதலில் வந்தது. அது ஒன்றே அவர்மீதான பிடிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தியது. அந்தப் பொழுதிலிருந்து நாஞ்சில் நாடன் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவராக ஆகிப் போனார். அதன் பின்னர், அவர் எழுத்தில் தெரியும் மனிதாபிமானம், யாரையும் காயப்படுத்தக் கூடாது என்ற நல்லுணர்வு, மண்ணின் மனம் என்று ஒவ்வொன்றாகக் கண்டு கொண்டேன்.

நாஞ்சில் நாடன் எழுதிய சிறுகதைகள் அனைத்தையும், அவருடைய மிதவை, மாமிசப் படைப்பு ஆகிய நாவல்களையும் படித்திருக்கிறேன். அவருடைய கவிதைகளில் தேர்ந்தெடுத்தவற்றை ஜெயமோகன் திண்ணை.காமில் பகிர்ந்து கொண்டபோது படித்திருக்கிறேன். பல கட்டுரைகளை உதிரிகளாகப் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று என்ற இந்தக் கட்டுரைத் தொகுதியைப் படித்திருக்கிறேன். "ஓர் எழுத்தாளனை முதலில் அவன் குடும்பம் கொல்கிறது. பின்னர் விமர்சகன் கொல்கிறான்" என்ற மேற்கோளை ஒரு கட்டுரையில் நாஞ்சில் நாடன் சுட்டுகிறார். வண்ணதாசன் சிறுகதைப் பற்றிப் பேசும்போது, "ஒரு தேர்ந்த கலைஞன் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும்போது எச்சரிக்கையுடனான நியாயபுத்தியுடன் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது" என்றும் சொல்கிறார். பொதுவாக, விமர்சனம் என்ற சொல்லைத் தவிர்த்து வாசக அனுபவம் என்று நான் எழுதுவதே அந்தக் காரணத்தினால்தான் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். தன்னுடைய முதல் சிறுகதைக்காக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற திறமையாளர் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாடனை முழுவதுமாய்ப் படித்த வாசகனும் இல்லை நான். பல நேரங்களில் என் வாசிப்பு மேம்போக்கானதும் பசிக்காக சாப்பிடுவதும் அல்லது peer pressure-க்காக செய்வது போலவும்தான். அதனாலேயே, ஓர் ஒப்பீடாகவோ, விமர்சனமாகவோ அல்லாமல், நான் படித்த அளவில் அவர் கட்டுரைகளிலும் நாவல்களிலும் என் ரசனையின்படி நெருக்கமாக உணர்கிறேன் என்று சொல்வது நியாயமானதாக இருக்கும்.

கட்டுரை முதலிய அபுனைவுகளைப் பற்றிய ஓர் இளக்காரமான எண்ணம் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. எனக்கு இந்த எண்ணத்தில் உடன்பாடில்லை. "கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த வாசிப்பு, ஆய்வு மனப்பான்மை, நுண்ணறிவு, நியாயபுத்தி எல்லாம் வேண்டும். எனவே கட்டுரைகள் எழுதுவதில் எனக்குத் தயக்கம் இருந்தது" என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன். எனக்கு இதைப் படிக்க உவப்பாக இருந்தது. அவர் கட்டுரைகளில் நான் கண்ட ஆழ்ந்த வாசிப்பு, நுண்ணறிவு, நியாய புத்தி ஆகியவையே என்னை அவரின் வாசகராக்கின. இந்தத் தொகுப்பில் இருக்கிற, நவீனத் தமிழ் இலக்கியம் - எனது பார்வை, தமிழ்ச் சிறுகதை சங்கம் முதல் 2000 வரை, சமூகம் - தனிமனிதன் - உறவுகள் முதலிய கட்டுரைகள் அவரின் ஆய்வு மனப்பான்மையின் ஆழத்தையும் காட்டுகின்றன.

நாஞ்சில் நாடன் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக, பொதுவுடைமைக் கட்சி அனுதாபியாக இருந்திருக்கிறார். இந்தப் பின்னணிகள் அவருக்குள் பிராமண துவேஷத்தையும் பணக்கார துவேஷத்தையும் ஏற்படுத்தி இருந்தன. அவர் பம்பாய் சென்றபிறகும் அது குறையவில்லை. ஆனால், நாஞ்சில் நாடனால் ஒருசேர மூன்றுமுறை சாப்பிட்டிருக்க முடிகிற, ஒன்றே முக்கால் ரூபாய் சாப்பாட்டை, ஓர் ஏழை புரோகிதரும் அவருடைய பதின்ம வயது மகனும் பகிர்ந்து கொள்கிற காட்சியை நேரில் சந்திக்கிறார். அந்தக் கணம் அவர் பிராமண துவேஷம் கழன்று ஒரு சகமனித அனுதாபியாக நிற்கிறார். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அதை விருப்பு வெறுப்பற்ற கதை ("முற்பகல்") ஆக்குகிறார். என் சிறுகதைகளின் பின்புலம் என்ற அவரின் கட்டுரை இப்படி அவர் சந்தித்த காட்சிகள், அவற்றைக் கதையாக்கிய விதம் ஆகியவற்றை - ஓர் எழுத்தாளருக்குரிய நியாயத்தோடு - சுவையாக விவரிக்கிறது.

இன்னொரு கட்டுரையில் கோவையிலிருந்து திருவனந்தபுரம் போகும் பஸ்ஸில் சந்தித்த காட்சியைச் சொல்கிறார். பஸ் கிளம்புவதற்கு முன், சூடம் காட்டி, ஓட்டுநர் தேங்காயை 'வெடல்' போட, முதியவர் ஒருவர் அதை ஓடியோடிப் பொறுக்குகிறார். அந்த முதியவரை அரசாங்க பஸ் சக்கரத்தில் சிக்குமாறு சாகடித்து முற்போக்குக் கதை எழுதிவிடலாம். ஆனால், அந்த முதியவர் சாகவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. அவரைப் பார்த்த கணத்தில் தனக்குள் சுரந்த பரிவு நாணயமானதாக இருந்தால், அந்தக் கதையைத் தான் சொல்லும்விதம் அதே பரிவை வாசகர்களுக்குள்ளும் உண்டாக்க வேண்டும் என்கிறார் நாஞ்சில் நாடன். செகாவ் கதையொன்றைப் படித்த நிறைவு உண்டாகியது இதைப் படித்தபோது.

நான் இந்தியா சென்றிருந்தபோது நாஞ்சில்நாடனிடம் தொலைபேசியில் பேச முடிந்தது. என் சிறுகதை ஒன்றை அப்போது அவர் படித்திருந்தார். "லாங்வேஜைக் கொஞ்சம் grip பண்ணுங்க தம்பி" என்றார். என் தந்தையும் கதை இடையில் கொஞ்சம் சவசவ என்று இருந்தது என்றார். மொழியை ஆளுவது என்றால் என்ன?

ஒரு கட்டுரையில் நாஞ்சில் நாடனே பதில் சொல்கிறார்: "எனது மொழியைக் கூர்மைப்படுத்தியாக வேண்டும். தேய்ந்துபோன சொற்களை வைத்துக்கொண்டு எந்தச் சித்திரத்தையும் வரைந்து காட்ட முடியாது. பெரும்பாலும் திரும்பத் திரும்பக் கையாளப்படுகின்ற சொற்களை நான் வேண்டுமென்றே தவிர்க்க முயல்கிறேன். தேய்ந்த சொற்களைத் தவிர்ப்பதென்பது புதிய சொற்களைக் கண்டுபிடிப்பதாகச் சொல்லி மொழியைக் கேவலப்படுத்துவதல்ல. கோரக் கோரக் குறையாத வெள்ளம் என் மொழி. சரியாகக் கையாள வேண்டுமெனில் இரண்டாயிரமாண்டுத் தொன்மையில் நீச்சல் பழக வேண்டும். நான் இன்னும் பழகிக் கொண்டிருக்கிறேன்." இதையே விரித்து மொழியையும் வட்டார வழக்கையும் பயில்வது பற்றிய தன் பார்வையை "எனது நாவல்களும் வட்டார வழக்கும்" என்ற கட்டுரையில் விரிவாகப் பேசும்போது, லாங்வேஜை grip செய்வது என்றால் என்ன என்று என்னால் உணர முடிந்தது.

"எந்தக் கருத்தும் உரிய மரியாதையுடன் கையாளப்பட வேண்டும். எனக்கு அதைக் கற்பித்தவர் சுந்தர ராமசாமி" என்று ஒரு கட்டுரையில் நினைவு கூர்கிறார் நாஞ்சில் நாடன். சுந்தர ராமசாமியை இருமுறை சந்தித்து உரையாடி இருக்கிறேன். நாஞ்சில்நாடன் சொல்வது சரிதான்.

நினைத்ததை எல்லாம் எழுதவில்லை. எழுதுவதற்குமுன் ஒரு தணிக்கை வந்துவிடுகிறது என்று ஒரு இடத்தில் சொல்கிறார் நாஞ்சில் நாடன். இந்தக் கட்டுரைத் தொகுதியைப் படிக்கும்போது ஆரம்பக் கட்டுரைகளில் இதை சில இடங்களில் உணர முடிகிறது. சொல்ல வந்ததை மென்மையாகச் சொல்கிறார் அல்லது அரசியல் - சமூகம் சார்ந்த விஷயங்களில் திட்டவட்டமான விமர்சனங்களைத் தவிர்க்கிறார். ஆனால், போகப் போக, பின்னால் எழுதிய கட்டுரைகளில் - குஞ்சு மிதித்துக் கோழியும் சாகும், வன்மம் முதலிய பல கட்டுரைகளில் - இயல்பான உணர்வுகளுடன் தன் ஆதங்கத்தையும் கோபத்தையும் சாடல்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

தொகுதியின் தலைப்பைக் கொண்ட கட்டுரை, குடிப்பதைப் பற்றியது. குடியைப் பற்றி எழுதலாம். சிலாகிக்கலாம். ஆனால், அது குடியைப் பரிந்துரைப்பதாக இருந்துவிடக் கூடாது என்ற சரியான வரையறைக்கு இந்தக் கட்டுரை பொருத்தமானது.

"If you hate someone, you dont understand him" என்று நகுலன் நாஞ்சில் நாடனிடம் சொன்னாராம். தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்கிற மட்டுமல்ல நேசிக்கிற எழுத்துக்குச் சொந்தக்காரரான நாஞ்சில் நாடனின் எழுத்துகள் வெறுப்பை விலக்கி வாழ்க்கையையும் மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவுகின்றன என்று நான் திடமாக நம்புகிறேன்.

- நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று - நாஞ்சில் நாடன் - யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை - 86 - ரூபாய் 55

நன்றி: தமிழ்.சி·பி.காம்

1 comment:

ramachandranusha(உஷா) said...

வந்துட்டேன் :-)
கொஞ்சம் பொறுங்க கையில் நாஞ்சில் நாடன் அவர்களின் பிராந்து மற்றும் முழு சிறுகதை தொக்குப்பு உள்ளது.