Thursday, January 04, 2007

ஜெயமோகனின் விசும்பு - புத்தக அறிமுகம்


ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. அறிவியல் புனைகதைகளின் முன்னோடியான சுஜாதாவுக்குப் புத்தகத்தை அன்புடன் சமர்ப்பித்திருக்கிறார்.

ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் எனிஇந்தியன் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் பதிப்பாசிரியர் கோபால் ராஜாராம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளைப் பற்றி அவர் சொல்வதாவது: "விஞ்ஞானத்தின் அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆர்தர் சி கிளார்க், ஐசக் அசிமோவ் போன்றோரிடம் காணக் கிடைக்கிறது. குர்ட் வானகட், ரே பிராட்பரி விஞ்ஞானக் கதைகளில் சமூக விசாரத்தைப் புகுத்தியவர்கள். அறிவியல் புனைவை தத்துவ அடிப்படைக்கு நகர்த்தியவர்களும் உண்டு. ஜெயமோகனின் அறிவியல் கதைகள் சமூக, தத்துவ அடிப்படைகளில் இயங்குவதைக் காணலாம். விஞ்ஞானம் என்பது வெறும் தொழில் நுட்பம் மட்டுமல்ல. ஒரு சமூகம் தன் இயல்புக்குத் தக்க மேற்கொள்ளும் தேர்வுகள்தான் என்பது ஜெயமோகனின் பல கதைகளின் அடிநாதமாய் உள்ளது. அந்தத் தேர்வுகளைக் கேள்விக்குள்ளாக்கும் கலைஞனின் சுதந்திர வேட்கையும் சமூக முன்னெடுப்பும் தணியாத ஆவலும் இவற்றில் காணக் கிடைக்கின்றன."

தமிழில் அறிவியல் புனைகதைகள் என்ற தலைப்பில் இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். "அறிவியல் புனைகதைகளை அறிவியலை வைத்து மதிப்பிடக் கூடாதென்றே சொல்லலாம். வரலாற்று நாவலை வரலாற்றை வைத்து மதிப்பிடக் கூடாது என்பதுபோல. வரலாற்றை வைத்து மதிப்பிட்டால் தல்ஸ்த்தோயின் போரும் அமைதியும் ஒரு பிழையான நாவல். அறிவியல் புனைகதைகள் வெளிப்படுத்தும் இலக்கியக் கூறுகளே அதை மதிப்பிடுவதற்குரிய புள்ளிகள். இலக்கியப் படைப்புக்குத் தேவை கற்பனை செய்வதற்கான ஒரு சாத்தியக்கூறு. வரலாறானாலும் அறிவியலானாலும்." என்று முன்னுரையில் எழுதுகிறார்.

இத்தொகுப்பில் ஜெயமோகனின் 10 அறிவியல் புனைகதைகள் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய 150 பக்கங்கள் உடைய இப்புத்தகத்தின் விலை ரூபாய் 85. வலைப்பதிவர் ஆனந்த் வினாயகம் எடுத்த புகைப்படம் புத்தகத்தின் அட்டையை அலங்கரிக்கிறது. பின்னட்டை புகைப்படம்: நண்பர் எம்.கே. குமார். அறிவியல் புனைகதைகளைத் தமிழில் வளர்த்தெடுக்கும் முயற்சியாக எனிஇந்தியன் வெளியிடும் இரண்டாவது அறிவியல் புனைகதைத் தொகுப்பு இது. எனிஇந்தியன் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகம் கண்டிப்பாக சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் கடை எண் 326-ல் கிடைக்கும்.

No comments: