Thursday, January 04, 2007
ஞானரதத்தில் ஜெயகாந்தன் - புத்தக அறிமுகம்
ஞானரதம் 1970 ஜனவரியில் துவக்கப்பட்டது. ஜனவரியிலிருந்து முதல் மூன்று இதழ்கள் ஆசிரியர் குழுவின் பெயர்கள் இல்லாமலேயே வெளிவந்தன. நான்காம் இதழிலிருந்து நிர்வாக ஆசிரியராக தேவ சித்ரபாரதி (அப்பாஸ் இப்ராஹிம்) பணியாற்றினார்., ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்ட குழுவில் ஜியாவுடீன், ந.முத்துசாமி, Y.R.K.சர்மா, வையவன், செல்வி சாதனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒன்பதாவது இதழ்வரை ஜெயகாந்தன் ஆசிரியப் பொறுப்பேற்று இருந்தார். பின்னரும் பிறரின் ஆசிரியப் பொறுப்பில் ஞானரதம் சிலகாலம் வெளிவந்தது. 2007-இல் ஞானரதம் இதழ் தொகுப்பு வே. சபாநாயகம் அவர்களால் தொகுக்கப்பட்டு க்ருஷாங்கினி முன்னுரையுடன் எனிஇந்தியன் வெளியீடாக வரவிருக்கிறது. தற்போது, ஞானரதத்தில் ஜெயகாந்தன் என்ற இந்தப் புத்தகம் ஞானரதத்தில் ஜெயகாந்தன் எழுதியவற்றின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. வே. சபாநாயகமே இந்நூலையும் தொகுத்திருக்கிறார். கணையாழி களஞ்சியம், தீபம் இதழ் தொகுப்பு ஆகியவற்றின் தொகுப்பாசிரியராகச் சிறப்பாகப் பணியாற்றியவர் சபாநாயகம். ஆழ்ந்த வாசகர். தேர்ந்த ரசிகர்.
தமிழ் இலக்கியப் பரப்பில் ஞானரதத்தின் இடம் என்ன? "இலக்கியப் பத்திரிகைகளின் ஒரு குறிப்பிட்ட போக்கிற்கு 'எழுத்து' முன்னோடி என்றால், இன்னொரு போக்கிற்கு 'ஞானரதம்' முன்னோடியாகத் திகழ்கிறது. இலக்கியம் மட்டுமேயான அக்கறையைப் பிரதிபலித்த 'எழுத்து' பின்னாட்களில் 'நடை', 'கசடதபற' இதழ்களில் தன் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்றைய ஏடுகளில் காணப்படும், இலக்கியம் தாண்டிய கருத்துலகின் மீதான அக்கறை ஞானரதத்தின் பாதிப்புதான் என்று சொல்லலாம். ஞானரதம் இலக்கிய இதழுக்கு ஜெயகாந்தன் ஆசிரியப் பொறுப்பேற்றதே இலக்கிய ஏடுகளில் ஏற்பட்ட இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கின்ற ஒன்றுதான். இலக்கியம் தாண்டிய சமூகம், அரசியல் என்று பரந்த ஈடுபாடு கொண்ட ஜெயகாந்தனை ஆசிரியராய்க் கொண்ட ஞானரதம், முதல் இதழிலிருந்தே ஜெயகாந்தனின் ஆசிரியத்துவத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்தியது. உரத்த சிந்தனை பகுதிகளிலும் கேள்வி-பதில் பகுதிகளிலும் ஜெயகாந்தனின் வித்தியாசமான அதேசமயம் பொறுப்புள்ள கருத்துகள் வெளியாயின. அது நாத்திகம் ஆகட்டும், மதுவிலக்கு ஆகட்டும், ஆபாசம் ஆகட்டும், எதுவானாலும் வெறும் சூத்திரங்களுக்குள் அடங்குகிற வார்த்தை ஜாலங்களை மீறிய அசல் சிந்தனை ஞானரதத்தில் பவனி வந்தது. சமூகப் பொறுப்பு என்பது சமூகத்தின் கருத்துகளாக முன்வைக்கப்பட்டு வந்த சம்பிரதாயச் சிந்தனையிலிருந்து சமூக மனத்தை விடுவிப்பதுதான் என்பது ஜெயகாந்தனின் நோக்கமாய் இருந்தது என்பதும் ஞானரதத்தைப் பார்ப்பவர்களுக்கும் புரியும். கருத்துகள் என்பதே ஒட்டியும் வெட்டியும் ஜனநாயக ரீதியான பரிமாற்றத்தின் விளைவுதான் என்ற உணர்வு இருந்ததால் தங்குதடையற்ற கருத்து மோதல்களும் ஞானரதத்தில் நிகழ்ந்தன. ஜனநாயகப் பண்பின் மீது அசையாத நம்பிக்கை கொண்ட ஜெயகாந்தன் கருத்துலகிற்கு அளித்த தனித்துவம் மிக்க பங்களிப்பே ஞானரதம். பதிப்பாசிரியராய்ச் சித்ரபாரதி ஜெயகாந்தனுக்கு அமைத்த களன் ஒரு புதிய கருத்துச் சாளரத்தைத் தமிழில் திறந்து வைத்தது. கற்றுச் சொல்லிகளிடமிருந்து கருத்துலகத்தைக் காப்பாற்றி, சுயசிந்தனையாளர்கள் ஒரு சுதந்திரமான சூழலில் நாகரீகமான முறையில் கருத்துகளைப் பரிமாற வேண்டும் என்ற உணர்வு எழுந்தது. இந்தப் பங்களிப்பிற்கு ஜெயகாந்தனிடம் தமிழ்க் கருத்துலகம் என்றென்றும் நன்றி பாராட்ட வேண்டும்" என்று "ஞானரதத்தில் ஜெயகாந்தன்" நூலின் பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.
இந்நூலுக்கு ஜெயகாந்தன் முன்னுரை எழுதியிருக்கிறார். "இவற்றிலுள்ள கருத்துகளும் பிரகடனங்களும் இறுதியானவை அல்ல. மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கத்தக்கவையும் உண்டு. இந்த நாற்பதாண்டுக் காலத்தில் எவ்வளவு மாற்றங்கள், வளர்ச்சிகள், இழப்புகள், லாபங்கள் நமக்குச் சம்பவித்திருக்கின்றன. அவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே வாசகர்களுக்கு எனது வேண்டுகோள்" என்கிறார் ஜெயகாந்தன்.
"ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ஞானரதம் வருகிறது என்றறிந்ததுமே என்னைப் போன்ற இலக்கிய ரசிகர்களும் விமர்சகர்களும் மிகுந்த பூரிப்போடு வரவேற்று பாராட்டி இருப்பதை ஞானரதம் முதல் இதழில் காணலாம். கி. ராஜநாராயணன், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், வல்லிக்கண்ணன், வெங்கட் சாமிநாதன், நா. பார்த்தசாரதி உள்ளிட்டோரும் பாராட்டி எழுதினார்கள்" என்று ஞானரதத்துடனான தன் வாசக அனுபவத்தைத் தொகுப்பாசிரியர் உரையில் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிறார் வே. சபாநாயகம்.
ஜெயகாந்தன் கவிதைகள், உரத்த சிந்தனை, முன்னோட்டம் என்று மூன்று பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய 145 பக்கங்கள் உடைய இந்நூலின் விலை ரூபாய் 80. சென்னை புத்தகக் கண்காட்சியில் எனிஇந்தியன் கடை எண்: 326-ல் கண்டிப்பாகக் கிடைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
என்ன, ஒரே கறுப்பு சிகப்பா இருக்கு? ஜெயகாந்தன் தி.க ன்னு இவ்ளோ நாளா தெரியாம போச்சே...
Post a Comment