Monday, February 04, 2008

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். இந்த மடல் எனிஇந்தியன் சார்பான பதில் இல்லை. என் சார்பான பதில் மட்டுமே.

இருபது ஆண்டுகளாக உங்கள் எழுத்துகளைப் படிக்கிறவர்களுக்காக எழுதுவதாகச் சொல்லியிருந்தீர்கள். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக உங்களைப் படித்து வருகிறேன். நேற்றுவரையிலும்கூட, நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்களோ அவர்களில் ஒருவனாகக் கருதப்பட்டதான நினைவு. இன்றைக்கு நீங்கள் எனக்காக எழுதவில்லை என்று உங்கள் வாயால் அறிய நேர்ந்ததும் ஒருவகை மகிழ்ச்சியே. ஆனால், வாசகர்களை மிரட்சியடையச் செய்யக்கூடிய இப்படிப்பட்ட வாக்கியங்கள் எனக்குள் எந்தத் தாழ்வுணர்ச்சியையும் உருவாக்கவில்லை. நீங்களேகூட, "இணையம் விமரிசனம் அந்தரங்கமான உரையாடலாக இருந்த நிலையை மாற்றியது. இணையவிவாதங்கள் வழியாக பலவகைப்பட்ட புதியவர்கள் இலக்கியத்துக்குள் வந்தனர். பல புதிய கேள்விகளை முன்வைத்தனர். புதுமைப்பித்தன் படைப்பாளி,கல்கி கேளிக்கையாளர் என்பது இலக்கியச்சூழலில் தெளிவாகவே நிறுவப்பட்ட ஒன்று,ஆனால் ஒருசில பக்கங்கள் கூட எழுதப்படவில்லை. ''ஏன், கல்கிதானே பெரிய நாவலை எழுதியிருக்கிறார்? அவர்தானே வரலாற்றையும் தமிழ் பண்பாட்டையும் சித்தரித்திருக்கிறார்?'' என்ற வினா, அதற்கே உரிய அப்பாவித்தனத்துடன், கேட்கப்பட்டது இணையம் வழியாகவே. அப்போதுதான் இலக்கிய விமரிசனமும் விவாதமும் அக்கேள்வியை புறவயமாக சந்தித்தன. அதன் பின்னர்தான் நாவல், ரொமான்ஸ் என்ற வடிவங்களை தமிழ் இலக்கியச் சூழல் வேறுபடுத்தி தெளிவுபடுத்திக் கொண்டது. இவ்வாறாக இலக்கியத்தின் பயன்பாடு குறித்தும், அதன் எல்லைகள் குறித்தும் மீண்டும் மீண்டும் புதிய ஐயங்கள் எழுப்பியபடி புதியவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்." என்று என் கட்டுரைத் தொகுதிக்கான முன்னுரையில் எழுதியதுண்டு. அப்படி எழுதிய ஓர் எழுத்தாளர் இன்றைக்கு உங்களுடன் உடன்படவில்லை என்பதாலேயே, நம்புகிறவர்களுக்காக எழுதுகிறேன் என்று சொல்ல நேர்ந்திருப்பதையும் புதிய பாடமாகவே கற்றுக் கொள்கிறேன்.

உங்களைக் கேள்வி கேட்கப் போகிறேன் என்று நான் மிரட்டுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உங்களின் கற்பனை மட்டுமே. நான் ஏதும் சொல்லப் போனால் அப்படிப்பட்ட விபரீதமான வண்ணங்கள் அதற்குப் பூசப்பட்டுவிடும் என்ற என் பயத்தை நான் ஏற்கனவே சொல்லியும் தாங்கள் இப்படிச் சொல்வது அயர்ச்சியாக இருக்கிறது. உங்களிடம் கேட்பதற்கு இனி எதுவுமில்லை. இதுவரை பதிலளித்த பொறுமைக்கு நன்றி. ஆனால் நீங்கள் என்னைப் பற்றியும், ராஜாராமைப் பற்றியும் எனிஇந்தியனைப் பற்றியும் வைத்தது விமர்சனம் அல்ல, அவதூறு.அவதூறுகளுக்குப் பதில் சொல்லாவிட்டால் சமூகத்தில் அவை உண்மையெனக் கருதப்படும் அபாயம் இருக்கிறது என்பதால் இந்த விளக்கங்கள்.

இன்னொரு கிழக்கு என்றோ கிழக்கு இல்லை என்றோ நாங்கள் எங்களைப் பற்றி எங்கும் இதுவரை சொல்லவில்லை. பத்ரி கண்டிப்பாக நான் பின்பற்ற விரும்புகிற பிஸினஸ் முன்மாதிரி. மார்க்கெட்டிங் என்றால் கிலோ என்னவிலை என்று கேட்டுக் கொண்டிருந்த தமிழ்ப் பதிப்பாளர்களிடையே புத்தகம் விற்கும் கலையை அறிமுகப்படுத்தியவர். அதேபோல, காலச்சுவடு கண்ணன் ஒரு பத்திரிகையை எவ்வளவு professional ஆக நடத்த வேண்டும் என்பதில் என்னைக் கவர்ந்தவர். அவர்களின் அரசியல், வர்த்தக நெறிகள் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம். கிழக்கு மாதிரியும் எனிஇந்தியன் பதிப்பகமும் காலச்சுவடு மாதிரி எனிஇந்தியன் நடத்தும் பத்திரிகையும் உங்கள் ஆசிர்வாதத்தின்படி வெற்றிகரமாக நடக்குமானால் மகிழ்ச்சியே.

அதேபோல, சுந்தர ராமசாமியும் க.நா.சு.வும் இப்போது நீங்களும் முன்வைக்கிற இலக்கியத் தூய்மைவாதமும் எனக்கோ ராஜாராமுக்கோ உடன்பாடில்லை என்பது எங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருகிறவர்களுக்குத் தெரியும். க.நா.சு. இலக்கியத் தடம் (என்று நினைக்கிறேன்) புத்தகத்தில் கோபால் ராஜாராமின் கட்டுரைக்கு அறிமுகம் கொடுக்க வந்த பதிப்பாசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் ராஜாராமைப் பெரியாரியத்தில் ஆர்வம் உடையவராகக் குறிப்பிட்டார். கசடதபற விவாதங்களில் வெ.சா. ராஜாராமை இடதுசாரி முற்போக்கு இலக்கியக் கொள்கையுடையவர் என்றே திட்டியிருக்கிறார். ராஜாராம் நடத்துகிற, தாங்கள் தொடர்ந்து எழுதி வருகிற திண்ணை பத்திரிகையிலும் பரவலான, அமெச்சூர் என்ற நீங்கள் சொல்லக்கூடியவர்களே எழுதி வருகிறார்கள். திண்ணையின் அட்டைப்பட முகப்பில் பெரியார், கலைஞர், அண்ணா, பெருஞ்சித்திரனார் என்று பலரும், தமிழில் எழுத்தாளர்கள் என்று தாங்கள் கருதாத பலரும் தொடர்ந்து இடம் பெற்று வந்திருக்கிறார்கள்.

என்னுடைய யோசனையில் மரத்தடி இணையக் குழுமத்தில் நடத்தப்பட்ட எழுத்தாளரைக் கேளுங்கள் நிகழ்ச்சியில், நீங்கள், மனுஷ்ய புத்திரன், ஞாநி, அ.முத்துலிங்கம், பிரபஞ்சன், கனிமொழி ஆகியோரை அழைத்திருக்கிறார்கள். அப்போது கனிமொழி குறித்து நான் எழுதிய அறிமுகத்தை ஆகஸ்ட் 3, 2004 அன்றே என் வலைப்பதிவில் இட்டிருக்கிறேன். அதன் முகவரி: http://pksivakumar.blogspot.com/2004/08/blog-post.html கனிமொழி அப்போது அரசியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல எனக்குப் பிடித்த கவிதைகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முயற்சியில் சல்மா, இறையன்பு, கனிமொழி ஆகியோரின் கவிதைகளையும் மரத்தடி இணையக் குழுமத்தில் கடந்த ஆண்டுகளில் தட்டச்சு செய்து வாசகர் படிக்க இட்டிருக்கிறேன். நீங்கள் முன்னுரை எழுதிய என் கட்டுரைத் தொகுதியிலேயேகூட, நீங்கள் இலக்கியவாதியாக அங்கீகரிக்காத வல்லிக்கண்ணனைச் சிலாகிக்கும் என் கட்டுரை ஒன்று இருக்கிறது. சு.ரா.வுடனான பதிவு செய்யப்பட்ட உரையாடலில், அவருடைய இலக்க்கியக் கோட்பாடுகளுடன் எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும் அவர்மீது மதிப்பு உண்டு என்பதைப் பதிவு செய்திருக்கிறேன். இலக்கியம், அதன் பயன் ஆகியன குறித்த கருத்துகளில் நான் இன்னமும் பெரும்பங்கு இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் சொல்கிற கருத்துகள் பக்கமே சார்ந்துள்ளேன். மொழி தூய்மைவாதம்போலவே இலக்கியத் தூய்மைவாதமும் நிஜவாழ்க்கைக்கு ஏற்பில்லாதது என்பது என் கருத்தென்பதை என் எழுத்துகளைப் படிப்பவர்கள் உணர்வார்கள். ஜெயகாந்தனைப் பற்றி அரவிந்தன் விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு நான் எழுதிய பதிலிலும் என் இலக்கிய நம்பிக்கைகள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் என் இலக்கியக் கோட்பாடுகள் எப்படியிருந்தாலும் எனக்குப் பிடித்த படைப்பை நான் பாராட்டத் தயங்குவதில்லை. அதேபோல சுந்தர ராமசாமி (இருமுறை), காலச்சுவடு கண்ணன், ஆ.ரா. வேங்கடாசலபதி, பிரபஞ்சன், பி.ஏ. கிருஷ்ணன், சல்மா, அருண் வெற்றிவேல் உள்ளிட்ட பல தரப்பட்ட இலக்கிய அன்பர்கள் அமெரிக்கா வந்திருந்தபோதும், அவர்களைச் சென்று சந்தித்து உரையாடியிருக்கிறேன். இவையனைத்தும் என்னுடைய கடந்தகால இலக்கியச் செயற்பாடுகளுக்கான சாட்சியங்கள்.

ஏற்கனவே உங்களுக்குத் தனிமடலிலும் குழுமத்திலும் சொன்னதுபோல இதழ் விளம்பரம் குறித்த எங்கள் பார்வை இது: "இதழ் விளம்பரம் கொடுக்கும்போதுகூட, பெண்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே பெண்கள் பெயர் முதலில் கொடுக்கப்பட்டது. பின்னர், அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களும் அவர்களின் வயது வரிசையில் இருக்கட்டும், கோபால் ராஜாராமின் பெயர் கடைசியில் இருக்கட்டும் என்று சொன்னோம். அதில் பிரசன்னா சிறுபிழை செய்துவிட்டார். அ.முத்துலிங்கம் அவர்களின் வரிசை பெயர் மாறிவிட்டது. மற்றபடிக்குத் தமிழ் இலக்கியத்தில் உங்களின் நிலையான இடம் இத்தகைய வரிசைகளால் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதைத் தாங்கள் நன்கறிந்தவர் என்றாலும் தங்களின் வருத்தம் என்னவென்று தெரியாத நிலையில் இதைச் சொல்வது கடமையாகிறது."

அதிலும்கூட நீங்கள் உங்கள் வலைப்பதிவில் எழுதியிருப்பதுபோல, தமிழச்சிக்கும் சல்மாவுக்கும் முதல் வணக்கம் வைக்கவில்லை. லதா ராமகிருஷ்ணன் பெயரே முதலில் வருகிறது. மேலும், சில பக்கங்கள் தமிழச்சியையும் சல்மாவையும் எழுதச் சொல்வதன்மூலம் அவர்கள் அதிகாரத்தின் சலுகைகளை மற்றவர்கள் பெற்றுவிட முடியும் என்கிற அளவுக்கு விவரம் தெரியாதவர்களாக அவர்கள் இருந்துவிடவும் முடியாது. வாஸந்தி தற்போது வேறுஒரு பணியில் மும்முரமாக இருப்பதால் முதல் இதழில் எழுத இயலாது ஆனால் எதிர்காலத்தில் கண்டிப்பாக எழுதுகிறேன் என்று சொன்னார். ஆதலால், முதல் இதழில் இருந்தே சமரசத்துடன் ஆரம்பிக்கிறோம், அதிகாரத்திற்குப் பயப்படுகிறோம் ஆகிய உங்கள் குற்றச்சாட்டுகள் கற்பனையின் அடிப்படையில் பிறந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பது இதன்மூலம் விளங்கும்.

சல்மாவுக்கும் தமிழச்சிக்கும் உங்கள் இலக்கியப் பார்வையில் இடம் இல்லையென்றால், எல்லார் பார்வையிலும் அப்படியே இருக்க வேண்டும் என்று தாங்கள் நினைப்பதுதான் சமரசமின்மை என்றால் அந்தச் சமரசமின்மையைச் செயற்படுத்த இயலாதது குறித்து வருந்துகிறோம். கடந்தகாலத் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தாங்கள் பிறக்கும்போதே சமரசமே செய்து கொள்ளாதவராகப் பிறந்திருப்பது மாதிரி, கோபால் ராஜாராமும் நானும் பிறக்கும்போதே சமரசம் செய்து கொள்கிறவர்களாகப் பிறந்திருக்கிறோம் என்று தாங்கள் அடுத்த கட்டுரையை எழுத வாழ்த்துகள்.

அன்புடன், பி.கே. சிவகுமார்

1 comment:

PKS said...

அன்புள்ள ஐகாரஸ் பிரகாஷ்,

நேற்று இரவு இந்தப் பதிவை இட்டவுடன் தூங்கப் போய்விட்டேன். பதிவை இடும்போது இதில் வருகிற பின்னூட்டங்களை வெளியிட இயலாது என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். என் தவறுதான். இந்தப் பதிவே ஒரு தன்னிலை விளக்கம்தான் என்பதாலும் இதுகுறித்த விவாதங்களை நடத்த இது சரியான இடமும் நேரமும் இல்லை என்பதாலும் பின்னூட்டங்களை வெளியிட விரும்பவில்லை. ஆதலாலேயே உங்கள் பின்னூட்டத்தை வெளியிட இயலவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். இதைப் படித்துவிட்டு யாரும் உங்கள் பின்னூட்டம் அநாகரீகமாகவோ தாக்குதலாகவோ இருந்தது என்று நினைத்துவிடலாம். அவர்களுக்காகச் சொல்கிறேன். உங்கள் பின்னூட்டத்தில் அப்படி எதுவும் இல்லை.

மற்ற நண்பர்களுக்கும், இந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டால் வெளியிட இயலாத நிலையில் இருக்கிறேன். நன்றி.

அன்புடன், பி.கே. சிவகுமார்