Sunday, March 28, 2004

புதுக்கவிதையும் மரபுக்கவிதையே

மரபு என்று இன்று நாம் கொண்டாடுகிற அனைத்தும் முன்னர் ஒருநாள் புதுமையாகப் பார்க்கப்பட்டவையே. அதனால்தான், பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்னும்போது காலத்துக்கு ஒவ்வாத மரபுகள் சட்டையுரித்துவிட்டு, புத்துயிர்ப்புப் பெறுவதைத் தமிழ் மரபு அங்கீகரிக்கிறது என்கிற புரிதலைப் பெற்றிருக்கிறோம். இன்றைக்குப் புதுமையாக வருகிற விஷயங்கள், நேற்றிலிருந்து இருக்கும் மரபுடன் உடன்பட்டு, முரண்பட்டு, மரபை செழுமையாக்குகின்றன. அப்படி கேள்விக்குரியதாக்கப்படுகிற மரபுகள் காலாவதியாகிப் போனவையாக இருந்தால், புதுமையே புதிய மரபாகவும் வரையறை செய்யப்பட்டு விடுகிறது.

மரபுக்கவிதைக்கு மாற்றாக வந்த புதுக்கவிதை என்பது போன்ற கோஷங்களைத் தமிழில் நிறையவே கேட்டுவிட்டோம். மரபுக்கவிஞர்கள் புதுக்கவிதையை அங்கீகரிக்காமலும், புதுக்கவிஞர்கள் மரபுக்கவிதையை ஏற்காமலும் எதிர்கொண்ட காலங்கள்போய், தமிழில் புதுக்கவிதை ஒரு மரபாக இன்றைக்கு நிலைத்துவிட்டது. இது தற்செயலான ஒன்றல்ல. புதுக்கவிதையின் தாக்கம் தாங்காமல் மரபுக்கவிதை நெகிழ்ந்து கொடுத்து அதை ஏற்றுக் கொண்ட வரலாறு அல்ல. தமிழ்ச் செய்யுளின் வளர்ச்சியே காலந்தோறும் இவ்வாறுதான் நிகழ்ந்துள்ளது. தமிழ்ச் செய்யுள் வரலாற்றை கூர்ந்து பார்ப்போமானால், தமிழின் மரபுப்படி, புதுக்கவிதையும் மரபுக் கவிதையே என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

தமிழ்ச் செய்யுளின் ஆதிகாலத்தில் அகவல், கலிப்பா, பரிபாடல் ஆகிய செய்யுள் வகைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவையில்லாமல், இசையுடன் அமைத்துப் பாடுவதற்குரிய பாடல் வகையாகத் தொல்காப்பியம் பண்ணத்தி என்னும் பாடல் வகையையும் சொல்கிறது. பரிபாடலும் ஒருவகையான இசைப்பாடல் வடிவம்தான். எனவே, ஆதிமரபுக் கவிதைகள் என்று அகவற்பா, கலிப்பா, பரிபாடல் வகைச் செய்யுள்களையே சொல்ல முடியும். அக்காலத்து உரைநடையும் அகவல்பா வடிவத்தை ஒத்திருந்ததாகத் தமிழறிஞர்கள் சொல்வது கவனத்துக்குரியது.

தொல்காப்பியம் வெண்பா இலக்கணத்தைச் சொல்லியிருக்கிறது. ஆனால், வெண்பா பின்னரே கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் செல்வாக்குப் பெற்றது. இன்றளவும் வெண்பாவில் எழுதுபவர்கள் உள்ளனர். எனவே, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் வகைகளில் எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெண்பா புதுக்கவிதையாக வந்தது.

சங்ககாலப் பாடல்களில் காப்பியம் இல்லை; அல்லது இருந்தது நமக்குத் தெரியவரவில்லை. காப்பிய மரபு தமிழில் சிலப்பதிகாரத்துடன் பிறந்தது. நாட்டுப்புறப்பாடல்களின் அடிப்படையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பலப் புதுமைகளைப் புகுத்தினார். எனவே, சிலப்பதிகாரமே அந்தக் காலத்துப் புதுக்கவிதையில் எழுதப்பட்டது என்று யாரேனும் எழுதினால் வியப்படைய வாய்ப்பில்லை. செம்படவர்களின் காதல் பாடல்கள், காவிரியைப் பற்றி மக்கள் வழிவழியாய்ப் பாடிவந்த பாடல்கள், வேடர்கள் காளியை வணங்கிப் பாடியப் பாடல்கள், ஆயர் மகளிர் குரவைக்கூத்து ஆடும்போது பாடிய பாடல்கள், மலைவாழ் மக்கள் முருகனைப் பாடியவை, சேரநாட்டுப் பெண்களின் அம்மானை, நெல் குற்றும்போது பாடியது என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ பல நாட்டுப்புறக் கலை வடிவங்களுக்கும், அக்கால உரைநடைக்கும் இடம் கொடுத்திருப்பதாக டாக்டர் மு.வ. போன்றவர்கள் எழுதுகிறார்கள். வெண்பா புகழடைய ஆரம்பித்திருந்த காலகட்டத்தில், இது புதுமையே.

காப்பியங்கள் அகவல்பா வகையைப் பெரிதும் பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் திருத்தக்கதேவர் முதலில் விருத்தத்தைப் பயன்படுத்தினார். கம்பரும், சேக்கிழாரும் பின்னர் விருத்தத்தில் பெரும்வெற்றி பெற்றனர். கம்பர் பின்னால் "விருத்தத்திற்கோர் கம்பன்" என்று பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது. விருத்தம் என்னும் சொல் வடமொழிச் சொல் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, விருத்தம் புதுக்கவிதையாகவே தமிழில் நுழைந்தது.

தமிழின் பக்தி இயக்கக் காலகட்டத்திலும் (கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை) ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாட்டுப்புற பாடல்வடிவங்களைப் பாடல்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறிய வருகிறோம்.

இப்படி தமிழ்ச் செய்யுள் மரபு, பல புதுக்கவிதை வடிவங்களைக் காலம்தோறும் வரவேற்று அங்கீகரித்தே வந்திருக்கிறது. பின்னர், பதினேழாம் நூற்றாண்டில் வந்தவையே சிந்து, கண்ணி, கும்மி முதலியன.

இவையெல்லாம் தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் மரபு புதுமைக்கு இடம்கொடுத்து வரவேற்றுப் பின், புதுமை மரபாகிப் போன வரலாற்றுக்கு சில உதாரணங்கள் மட்டுமே.

அதேபோல, இன்றைக்குத் தமிழில் புதுக்கவிதையின் இடம் நிரந்தரமாக்கப்பட்டு விட்டதால், புதுக்கவிதையும் மரபுக்கவிதையே என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அல்லது, புதுக்கவிதைக்கு அடுத்த வடிவம் தமிழில் வந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னரே, புதுக்கவிதையை மரபுக்கவிதை என்று அங்கீகரிப்போம் என்று யாரேனும் சொல்வார்களேயானால், ஒரு முறுவலுடன் அவர்களுக்குத் தேவையான காலத்தைக் கொடுப்போம்.

2 comments:

மாரியப்பன்.சி said...

//இவையெல்லாம் தமிழ்ச் செய்யுள் வரலாற்றில் மரபு புதுமைக்கு இடம்கொடுத்து வரவேற்றுப் பின்,
புதுமை மரபாகிப் போன வரலாற்றுக்கு சில உதாரணங்கள் மட்டுமே//

நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் ...!

Unknown said...

ஐயா, இப்பொழுது எழுதும் புதுக்கவிதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் தளிர் விடும் போது உள்ள வடிவம்.

தொல்காப்பியத்தில் வெண்பா உள்ளது .அது தொல்காப்பிய காலத்திற்குமுன்பே இருந்திருக்கிறது. நமக்கு எந்த நூலும் கிடைக்கவில்லை. விருத்தாப்படிவம் தொல்காப்பியத்தில் கூறப்ப்ட்டுவிட்டது.
சிலப்பிதிகாரம் தொடங்குவதே வெண்பாவில்தான்.
வெண்பாவில் எழுதியதால்தான் இன்றும் திருக்குறள் வடிவத்தை இழக்காமல் உள்ளது. Dont Reinvent the wheel. உரைவீச்சு வெண்பாக மாறமுடியாது, விருத்தமாகவும் மாற முடியாது. உரைவீச்சு உரைவீச்சு மட்டுமே.
இவண்
ஆ.மகாலிங்கம்
சிங்கப்பூர்.
செல்பேசி: +65 98127509