Sunday, March 28, 2004

நாம் யார்க்கும் குடியல்லோம்

அகத்திணை சார்ந்த ஒரு பழைய பாடலைப் படிக்க நேர்ந்தது. கலித்தொகையிலிருந்து -

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே

காதலனுடன் மகள் சென்றுவிட்டாள். அதை அறிந்த தாய் கண்கலங்கி நிற்கிறாள். அவளுக்கு ஆறுதல் கூறுபவர் சொல்வதாக வருவது இப்பாடல்.

"அம்மா, சந்தனம் மலையில் பிறக்கிறது. ஆனால் மலைக்குப் பயன்படுவதில்லை; பூசிக்கொள்பவர்களுக்குப் பயன்படுகிறது. உன் மகளும் உன்னைவிட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதும் அவ்வாறு இயற்கையே. முத்து கடல்நீரிலே பிறக்கிறது. ஆனால் கடலுக்கு அதனால் என்ன பயன்? அணிபவர்க்கே பயன்படுகிறது. உன் மகளும் அப்படியே. இசை யாழிலே பிறக்கிறது. ஆனால், அந்த யாழுக்குப் பயன்படுவதில்லை. கேட்பவர்க்கே பயன்படுகிறது. உன் மகளும் அப்படியே." - மு.வரதராசன்.

இந்த அகத்துறைப் பாடலைப் படித்தவுடன் எனக்கு ஒரு புறத்துறை சார்ந்த விஷயம் நினைவுக்கு வந்தது. யாஹீ குழுமங்கள். யாஹீ குழுமங்கள் குறித்து சமீபத்தில் "வலைப்பூ"வில் நடந்த விவாதத்தில் நண்பர் பத்ரி எழுதியிருந்த கருத்துகள் பெரும்பாலும் என்னால் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கவையாக இருந்தன. எல்லாக் குழுக்களையும் ஒன்றிணைப்பதைவிட நூறு குழுக்கள் வர வேண்டும் என்று பத்ரி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் "நூறு பூக்கள் மலரட்டும்" என்ற மாசேதுங்கின் வரிகள் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

மாடரேட்டர்களைத் தாயாக எடுத்துக் கொண்டால், யாஹீ குழுமங்கள் காதலனுடன் சென்றுவிட்ட மகளுக்கு ஒப்பானவை. அதைத் தோற்றுவிப்போர் அதன் அரசகுடிகள் அல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் குழுமத்தை வளர்க்க உதவுகிற அனைத்து உறுப்பினர்களூமே அதன் சொந்தக்காரர்கள். உறுப்பினர்களின் பங்களிப்புகளாலேயே அவை ஜீவிக்கின்றன; செழிக்கின்றன. மாடரேட்டர்கள் என்பவர்கள் உறுப்பினர்களின் பங்களிப்புக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டுமே தவிர, தம் அதிகாரத்தை நிலைநாட்டுபவர்களாகவும், குழுமத்துக்குச் சொந்தம் கொண்டாடுபவர்களாகவும் இருப்பது கூடாது. (Moderators are facilitators and are not power centers.) அதேபோல், மாடரேட்டருக்குப் பிடித்த விஷயம் குறித்து மட்டுமே பேசவேண்டும் என்று சொல்வதும் முறையாக இருக்காது. மூத்தகுடி என்று முன்னரே சேர்ந்துவிட்ட சில உறுப்பினர்களுக்கு பின்னால் சேர்ந்த உறுப்பினர்களைவிட அதிகமான எந்த முன்னுரிமையும் வழங்கப்படுதலும் நியாயமில்லை. எல்லா உறுப்பினர்களும் எல்லா நேரங்களிலும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

தமிழ் போன்று ஒரு குறிப்பிட்ட மொழியினர் பங்கு கொள்ளும் ஒரு குழுமத்தில் இந்த விஷயம் குறித்துத்தான் பேச வேண்டும்; இன்னொரு விஷயம் குறித்துப் பேசக்கூடாது என்கிற விதிகள் எந்த அளவுக்குப் பொருந்தி வரும் என்று சொல்ல இயலாது. வாழ்க்கையே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். எதன் அடிப்படையிலும் எந்தச் சங்கிலியையும் அறுத்துவிட்டு, ஒரு விஷயத்தைத் தனியாக எடுத்து விவாதிக்க இயலாது. அத்தகைய முயற்சிகள் ஒரு விஷயத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் காண உதவாது. முக்கியமாக - வாழ்க்கை, கலை, சமூகம் என்று குழுமத்தின் நோக்கம் இருந்துவிட்டால் இந்த மூன்றுக்குள் எல்லாமே அடங்கிவிடுமென்பதால் இதைப் பற்றிப் பேசாதே, அதைப் பற்றிப் பேசாதே என்று எதையும் சொல்லக் கூடாது.

அடுத்தவர் சொல்லப் போகிற விஷயம் தனக்குப் பிடித்தமானதாகவும், தனக்குப் பிடித்த வார்த்தைகளிலும் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பவர்கள் குழுமங்களில் எழுதாமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பது மன, தேக ஆரோக்கியத்துக்கு உதவும். வார்த்தைகளை நாகரீகமானவை, நாகரீகமற்றவை என்று வேண்டுமானால் பிரிக்கலாம். இதைக்கூட, வாழ்க்கையே நாகரீகமற்று நாறிக் கொண்டிருக்கும்போது வார்த்தைகளை வடிகட்டித் தர எனக்கென்ன உரிமை என்று யாரேனும் கேட்டால் என்னிடம் பதில் இல்லை. ஆனால், கடுமையான வார்த்தைகள், சர்க்கரை தடவிய இனிமையான வார்த்தைகள் என்று பிரிப்பது அவரவர் மனநிலையையும் முதிர்ச்சியையும் பொறுத்த விஷயம். ஒருவருக்குக் கடுமையாகத் தோன்றுகிற வார்த்தைகள் மற்றவர்க்குச் சாதாரணமாகத் தோன்றலாம். உறுப்பினர்களின் மடல்களை மட்டுறுத்தாமல் வெளியிட வேண்டியது எந்தக் குழுவுக்கும் அடிப்படை நியதியாக இருக்க வேண்டும். இதனால் சில நேரங்களில் விரும்பத்தகாதன விளையலாம். ஆனால், சுதந்திரம் தொடர்ந்து கொடுக்கப்படும்போது அதை யாவரும் முறையாகப் பயன்படுத்தத் தொடங்கி விடுவர் என்று நான் திடமாக நம்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக - குழுவைத் தோற்றுவிப்பவர்களும், குழுவின் மூத்த உறுப்பினர்களும் குழுவின் மேல் அன்பின் பொருட்டுகூட அதிகாரம் செலுத்தக் கூடாது. குழுமம் உறுப்பினர்களுக்கானது. உறுப்பினர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாறல்கள், விவாதங்கள், சண்டைகள், சமாதானங்கள், கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் மூலமே ஒரு குழுமம் வளர முடியும். உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் என்று வரும்போது மாடரேட்டர்கள் தலையிடாமல் அவற்றை உறுப்பினர்களே தீர்த்துக் கொள்ளூம்படிவிட வேண்டும். இதற்கு மாடரேட்டர்கள் விருப்பு வெறுப்பற்று அனைவரையும் அணுக வேண்டும். குழுமங்களில் ஜனநாயகத் தன்மையும், சகிப்புணர்வும் இன்றைக்கு மிகவும் அத்யாவசியமானவை. கருத்து ரீதியான வேறுபாடுகளை தனிப்பட்ட தாக்குதல் என்று நினைத்துச் சோர்ந்தும் சுருங்கியும் போவோரால் உண்டாகிற குழப்பங்கள் குறித்து மாடரேட்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தனிப்பட்டத் தாக்குதலாக எடுத்துக் கொண்டு குழுமத்தின் செயல்பாட்டுக்கு ஊறு விளைவிக்காதீர்கள் என்று மாடரேட்டர்கள் தனிப்பட்ட முறையில் அன்புடன் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒரு குழுமத்துக்காக மாடரேட்டர்களும் அதன் மூத்த உறுப்பினர்களும் எவ்வளவுதான் உழைத்திருந்தாலும், அதே துறைசார்ந்த இன்னொரு புதிய குழுமம் வருவதை வரவேற்காவிட்டாலும், தடுக்க முயலக்கூடாது.

மேற்சொன்னவை எல்லாம் விதிகள் அல்ல. உரத்த சிந்தனைகளே. இதையெல்லாம் சிந்திக்காமல் போனால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள பாடலில் அம்மாவுக்கு ஆறுதல் சொன்னவர் மாதிரி தமக்கும் ஆறுதல் சொல்ல மாடரேட்டர்கள் யாரையாவது தேட வேண்டி இருக்கும்.

பின்குறிப்பு: இந்தக் கட்டுரை தற்போது தமிழில் இயங்குகிற எந்த யாஹீ குழுமத்தையும் மனதில் கொண்டு எழுதப்பட்டதல்ல.

No comments: