குழந்தைகள் அற்புதங்கள். குழந்தைகள் ஞானவான்கள். எந்தக் குழந்தையும் சிலாகிக்கவும் கொஞ்சவும் தக்க அழகும் அறிவும் நிரம்பியதே. குழந்தைகள் நமக்குக் கற்றுத் தருகிற பாடங்களுக்குக் குறைவில்லை. குழந்தைகள் வளர வளர அவர்களுக்குச் சொல்லித் தருகிறோம் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் நாம் விதைக்கிற விஷ(ய)ங்களுக்கும் குறைவில்லை. நான் ஏன் குழந்தையாகவே இல்லாமல் போனேன் என்பது என் பெரும்குறை. என் குழந்தைகள் நாளும் வளர்கிறார்கள். அறிவையும் கனவையும் தேடுகிற பயணத்தில் குழந்தமையைத் தொலைத்துக் கொண்டு வருகிறார்களே என்கிற எதுவும் செய்ய இயலாத ஏக்கமும் இருக்கிறது. பொருள் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிற அவசர கதியிலும், கிடைக்கிற சொற்ப நேரத்தில் இலக்கியம், வாசித்தல் இன்னபிற என்று பங்கிட்டுக் கொள்வதிலும் நான் என் குழந்தைகளுடனான நேரத்தை எவ்வளவு குறைத்துக் கொள்கிறேன் என்றும், எத்தகைய மீண்டும் கிடைக்காத சந்தோஷங்களை இழக்கிறேன் என்றும் என் மனைவி அடிக்கடி சொல்லும்போது, குற்ற உணர்வுடன் மௌனம் காப்பதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றுவதில்லை. நான் மட்டுமில்லை; பெரும்பாலோர் இப்படித்தான் என்று அறிய நேரும்போது ஆறுதலைவிட வருத்தமே அதிகரிக்கிறது.
சமீபத்தில் என் மூன்று வயது மகளுக்கும், என் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடல்களில் சில:
"மாமி, நான் ஒரு ஜோக் சொல்லட்டுமா?"
"சரி, சொல்லு"
என் மகள் ஒரு ஜோக் சொல்கிறார். சொல்லிவிட்டுப் புரிந்ததா என்று கேட்கிறார்.
"புரியவில்லையே." - மனைவி.
"ஆமாம். இந்த ஜோக் மிஸ்டரி" - மகள்
"மிஸ்டரின்னா என்னம்மா" - மனைவி
தயக்கமே இல்லாமல் பட்டென்று வந்த பதில் - "கோயிங் பார் ஷாப்பிங்"
என் மனைவி ஷாப்பிங் போகும்போதெல்லாம் என் மகள் உடன் போவார் என்கிற செய்தி மேற்கண்ட உரையாடலை மேலும் ரசிக்கவும், இன்னொரு கோணத்தில் பொருள் கொள்ளவும் உதவலாம்.
ஒருநாள் இரவு தூங்குவதற்கு முன் நடந்த உரையாடலில்:
"ஐ லவ் யூ கண்ணு" - மனைவி மகளிடம்.
"ஐ லவ் யூ மாமி. யூ ஆர் த பெஸ்ட் மாமி இன் த வோல் வேர்ல்ட்" - மகள்
"உன் அளவும், உன் அண்ணா அளவும் என்னை நேசிப்பதாகச் சொன்னவர்கள் யாருமில்லை. நேசித்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படி அடிக்கடிச் சொன்னவர்கள் யாருமில்லை." - மனைவி.
"வொய்? வாட் அபவுட் யுவர் மாமி?" - மகள்
என் குழந்தைகள் மட்டுமில்லை. எல்லாக் குழந்தைகளுமே இப்படிக் குழந்தைப் பருவத்தில் மேதைமையும் சூட்டிகையும் அன்பும் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்பதை பிறரின் குழந்தைகளைப் பார்க்கும்போதும், அவர்களிடம் உரையாடும் போதும் நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பின்னே, ஒருவருக்குப் படிப்பு சரியாக வரவில்லை என்று சொல்கிறோம். ஒருவர் முரடராகி விட்டார் என்று சொல்கிறோம். ஒருவரை மக்கு என்கிறோம். எனவே, குறை என்பது நாம் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கிறதா? தவறு எங்கே நிகழ்கிறது? குழந்தைப் பருவத்தில் எல்லாக் குழந்தைகளும் காட்டுகிற சுட்டித்தனத்தைத் தொலைக்க வைப்பது எது என்பது குறித்து ஒரு தந்தையாக நான் நிறைய யோசிக்கிறேன்.
குழந்தைகள் வளர வளர அவர்களிடம் நம்முடைய எதிர்பார்ப்புகள் வளர்ந்து கொண்டே போவதும், நம் கனவுகளையெல்லாம் நிறைவேற்ற வந்தவர்கள் என்று அவர்கள் மீது நம் ஆசைகளைத் திணிப்பதும், புத்திசாலித்தனம் என்ற பெயரில் சுயநலத்தையும், பொறாமையையும், போட்டியையும் நியாயப்படுத்துவதும் என்று பல கோணங்களில் இவற்றுக்கானக் காரணங்களைத் தேட வேண்டும். உளவியல் ரீதியாகவும், ஞானபூர்வமாகவும் பெற்றோரும், சமூகமும், சம வயதினரும், கல்விக் கூடங்களும் குழந்தைகளை எந்த அளவுக்கு மேம்படுத்துகிறார்கள் என்ற ஆராய்ச்சி இன்றைக்கு அவசியமான ஒன்று. இதைத் தேர்வுகளினால், படிப்பறிவால் அளந்துவிட முடியும் என்று தோன்றவில்லை.
ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் நம் சமூகமும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவனவற்றின் போதாமை குறித்தும், நம் கல்விமுறையின் குறைமிகுந்த கோட்பாடுகள் குறித்தும் சொல்லியிருப்பன நினைவுக்கு வருகின்றன. இவைபற்றியெல்லாம் பிரக்ஞை இருந்தும் மகன் வீட்டுப் பாடம் செய்துவிட்டாரா, மியூசிக் கிளாஸ் போனாரா என்கிற கவலைகள் கொள்கிற ஒரு சராசரி தந்தையாக இருக்க வேண்டியிருக்கிறதே என்று வெட்கமாகவும் இருக்கிறது.
Innocence is a bliss.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment