Tuesday, March 30, 2004

ஓடி விளையாடு

பள்ளி நாள்களில் நான் எந்த விளையாட்டிலும் பெயர் வாங்கியதில்லை. ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆர்வக்கோளாறால் ஒரு வெறிபோல கிரிக்கெட் ஆடியது உண்டு. நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஓர் அணிகூட வைத்திருந்தோம். அப்போதெல்லாமும் கூட எனக்குப் பந்தின் பின்னால் ஓடுவதில் இருந்த திறமை பந்தை அடிப்பதிலும், போடுவதிலும் இல்லை. என் பள்ளிப் பருவத்து நண்பர்கள் பலர் நல்ல விளையாட்டு வீரர்கள். இயற்கையான திறமை மிக்கவர்கள்.

கால்பந்திலும் இப்படியே. ஒன்பது பத்தாம் வகுப்புகளின்போது என்னுடன் படித்த சரவணனுக்குக் கால்பந்துமீது மிகவும் ஆர்வம். எனவே, உடற்பயிற்சி வகுப்புகளின் போதெல்லாம் வெறும் காலுடன் அல்லது செருப்புக் காலுடன் கால்பந்தை வகுப்பு நண்பர்களுடன் துரத்திக் கொண்டிருப்போம். கால்பந்தைச் சரியாகக்கூட உதைக்கத் தெரியாமல் கால்பெருவிரலைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பாபு, கோபு, இராமலிங்கம், யோகசுந்தரம் என்று பல நண்பர்கள் எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து கலக்குவார்கள். இவர்கள் அனைவரும் எங்கள் ஊருக்கு அருகில் இருந்த சர்க்கரை ஆலையிலிருந்து வருபவர்கள். சர்க்கரை ஆலையில் இருக்கிற மனமகிழ் மன்றத்தின் வசதிகள் மூலமாக விளையாட்டுகளில் இயல்பாகத் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள். எல்லாப் போட்டிகளிலும் சர்க்கரை ஆலையைச் சார்ந்த நண்பர்களே பரிசுகளை அள்ளிச் செல்வார்கள். அவர்களுக்குள் சாம்பியன்ஷிப் வாங்குவது யார் என்கிற போட்டி வேறு இருக்கும். அவர்களையெல்லாம் உற்சாகப்படுத்தி கைதட்டுகிற கும்பலில் இருந்திருக்கிறேன். விளையாட்டுக்கும் எனக்கும் நிறைய தூரம்; அது நமக்கு வராது என்று அப்போதெல்லாம் எனக்குள் ஓர் அசரீரி மிகவும் சரியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.

விளையாடாவிட்டாலும் விளையாட்டின்மீது அதீத ஆர்வம் இருந்தது. கிரிக்கெட் பற்றிய செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் மனப்பாடமாக ஒப்படைப்பேன். விளையாடத்தான் வரவில்லை. இதைக்கூட செய்ய முடியாவிட்டால் எப்படி? அந்த ஆர்வம் அப்படியே கால்பந்து, டென்னிஸ் என்று பிற துறைகளுக்கும் பரவியது. மோகன் பகானையும், ஈஸ்ட் பெங்காலையும் படித்துக் கொண்டிருந்தவனுக்குக் கால்பந்து மீது காதல் வர வைத்தவர் மாரடானோ. இன்றளவும் அவர் செய்த தவறுகளையெல்லாம் மீறி அவர்மீது அபிமானம் உண்டு. டென்னிஸில் பெக்கர், ஸ்டெப்பி, சபாடினி என்று பலரைப் பிடிக்க ஆரம்பித்தது.

கல்லூரியில் சேர்ந்ததும் திறமை இல்லாவிட்டாலும் பல விளையாட்டுகளில் பங்குபெறுகிற வாய்ப்பை விடுதி வாழ்க்கை தந்தது. அசட்டுத் துணிச்சலுடன் விடுதி நாள் விழாவுக்காக நடத்தப்படும் எல்லாப் போட்டிகளூக்கும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பெயர் கொடுத்து லூட்டி அடித்திருக்கிறோம். ஈட்டிங் காம்படீஷனில் கூட ஒருமுறை முதல் பரிசு பெற்றிருக்கிறேன். நான் அப்போது பார்ப்பதற்கு நோஞ்சானாக இருப்பேன் என்பது தனிக்கதை. இப்படித்தான், வாலிபால், பால் மேட்மிண்டன், ஷட்டல் காக் ஆகிய விளையாட்டுகளை கல்லூரி நாள்களில் ஓர் அமெச்சூராக முயற்சித்துப் பார்த்து மகிழ முடிந்தது. தெரியாததையும் வெட்கம்விட்டு முழுமனதுடன் முயற்சிக்க விடுதி வாழ்க்கை கற்றுத் தந்தது. அப்படி முயற்சித்தபோது, பல விளையாட்டுகளில் நான் இரண்டும்கெட்டான் என்று சொல்கிற அளவுக்குச் சுமாராக செய்ய முடிந்தது ஆறுதல் தந்த விஷயம். சென்னையில் பணிபுரிந்த நாள்களில் கூட அலுவலகத்து நண்பர்களூடன் மாலையிலும் வாரக் கடைசியிலும் ஷட்டில் காக், கிரிக்கெட் என்று பொழுதைக் கழிக்க முடிந்தது.

அமெரிக்கா வந்ததும் அதுவரை முயற்சித்தே இராத டென்னிஸை முயற்சிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. இங்கிருக்கிற அபார்ட்மெண்ட்களில் டென்னிஸ் கோர்ட்டும் நீச்சல் குளமும் வழக்கமாகிப் போனதைப் பார்த்து முதலில் ஆச்சரியமாக இருந்தது. இந்த ஊரில்தான் எல்லா தரப்பு மக்களுக்கும் இத்தகைய வசதிகள் எவ்வளவு சுலபமாகக் கிடைக்கின்றன என்று யோசித்திருக்கிறேன். இந்தியாவில் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிற குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் டென்னிஸ் ஆடவேண்டும் என்று நினைத்தால், அதற்கான வாய்ப்புகள் எவ்வளவு என்ற கேள்வி எழுவது வழக்கமாகி விட்டது. கோடைக்காலங்களில் உடற்பயிற்சிக்குப் பதில் டென்னிஸ் ஆடுகிற பல இந்தியர்களூள் நானும் ஒருவனாகிப் போனேன். டென்னிஸைக் கூட விளையாட்டு என்று நினைக்காமல், உடற்பயிற்சி என்றே நினைத்து ஆடிவருகிறேன் என்றால் நான் எவ்வளவு நன்றாக ஆடுவேன் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஆனால், தொலைகாட்சியில் விளையாட்டுகளைப் பார்க்கிற ஆசை இன்னும் வற்றவில்லை. வருடம்தோறும் NBA, NFL என்று பாஸ்கட்பால், அமெரிக்கன் புட்பால் என்று நாள்கள் மிகவும் சுவாரஸ்யமாக ஓடுகின்றன. அவையில்லாமல் இப்போதெல்லாம் அவ்வப்போது டிஷ் நெட்வொர்க்கின் புண்ணியத்தில் கிரிக்கெட்டும் சேர்ந்து கொண்டது.

இதுதான் என் விளையாட்டுத் திறமையின், அறிவின் பின்புலம். இப்படி விளையாட்டை வேடிக்கையாக அணுகுகிற நான், ஓர் அணிக்கான "சாக்கர் கோச்" ஆக இப்போது இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது, ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நான் சாக்கர் கோச் ஆனது ஒரு தனிக்கதை. அதை அடுத்துப் பார்ப்போம்.

No comments: