Thursday, April 01, 2004

ஓடி விளையாடு - 2

என் மகன் pre-school படிக்கும்போது என் மனைவிக்கு நட்பானவர் மர்லின். மர்லினின் இரண்டாம் மகனும் என் மகனும் pre-schoolல் ஒன்றாகப் படித்தவர்கள். அமெரிக்கர்கள் குறித்துப் பொதுவாகப் பிறரிடம் காணப்படும் எதிர்மறையான பிம்பங்களை உடைக்கக் கூடிய குணாதிசயங்கள் உடையவர் மர்லின். நான் இங்கே பார்த்ததில் பாதிப்பேர் இப்படிப்பட்டவர்கள். உதாரணமாக, அமெரிக்கர்கள் குழந்தைகளை டே கேரில் விட்டுவிட்டு தங்கள் வேலை, பொழுதுபோக்கைப் பார்ப்பவர்கள் என்று ஒரு பிம்பம் உள்ளது. இது கணிசமான அளவில் உண்மையாக இருக்கலாம். கணவனும் மனைவியும் வேலை செய்கிற குடும்பத்துக்கு வேறு வழிகள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பேரன் பேத்திகளைப் பார்த்துக் கொள்வதற்குத் தாத்தா பாட்டிகள் உடன் வசிப்பதில்லை. உடன் வசிக்காமல் அருகிலேயே வசித்தாலும் அவர்களைத் தினசரி தொந்தரவு செய்வது சரியில்லை என்று தனிமனித உணர்வுகளை மதிப்பவர்களாக அமெரிக்கர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். என் இந்திய நண்பர்கள் பலருமே - இருவரும் வேலை செய்தால் - குழந்தைகளை டே கேரில் விடுபவர்கள்தான். இதை வைத்துக் குழந்தை மேல் அக்கறையில்லை என்கிற குற்றச்சாட்டை வாசிப்பது சரியாகத் தோன்றவில்லை. மேலும், என் மகன் pre-school படிக்கும்போது, காலையில் அவரைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் அலுவலகம் சென்று விடுவேன். பள்ளி முடிந்ததும் என் மகனைத் தன் காரில் அழைத்துவந்து எங்கள் வீடு சேர்க்கிற உதவியை முகம் சுளிக்காமல் ஏறக்குறைய ஒரு வருடம் மர்லின் செய்திருக்கிறார்.

தன் முதல் மகன் பிறந்ததும் குழந்தை வளர்ப்புக்காகப் பார்த்துக் கொண்டிருந்த பார்மாஸிஸ்ட் வேலையை விட்டுவிட்டவர் மர்லின். அந்த மகன் இந்த வருடம் கல்லூரிக்குப் போயிருக்கிறார். அந்த மகனின் pre-schoolலில் இருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை, மகன் கல்விச்சாலைகளில் கற்றது, வரைந்தது, பெற்ற மதிப்பெண்கள், சான்றிதழ்கள் என்று அனைத்தையும் வருடம்தோறும் ஆவணமாக்கி வைத்திருக்கிறார். அமெரிக்கக் கல்வி, இங்குக் குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் எதிர்கொள்ளக் கூடிய பிரச்னைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, நூலக வசதிகள் என்று பல நல்ல விஷயங்களை ஒரு தாயின் பொறுமையுடன் அவர் பலமுறை என் மனைவியிடம் விளக்கியிருக்கிறார். குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி குறித்து இங்கே கிடைக்கிற பல வசதிகள் மர்லின் இல்லையென்றால் எங்களுக்கு மிகவும் தாமதமாகவே தெரிந்திருக்கும்.

கால்பந்து குறித்தும் எங்களுக்குச் சொன்னவர் மர்லினே. பொதுவாக எல்லா நகரங்களிலும் இயங்குகிற லாபநோக்கமற்ற கால்பந்து கூட்டமைப்பு எங்கள் நகரத்திலும் இயங்குகிறது. வசந்த மற்றும் இலையுதிர்காலங்களில் அது நடத்தும் லீகில் குழந்தைகள் பங்கெடுத்துக் கொள்ள முடியும். ஒரு சீசனுக்குப் பத்து கேம்கள் இருக்கும் என்கிற விவரங்கள் அறிந்தோம். கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அமெரிக்கா நிலையாக முன்னேறி வருவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த முன்னேற்றம் அதிர்ஷ்டத்தால் வந்ததில்லை. அந்த வெற்றிக்கு, இப்படி உத்வேகம் கொண்டு முறையான பயிற்சி அளிக்க ஊருக்கு ஊர் செயற்படும் கால்பந்து அசோஷியேஷன்கள் ஒரு மூலகாரணம்.

நம் குழந்தையைக் கால்பந்தில் சேர்க்க விரும்பினால், வசந்த காலத்துக்கு குளிர்காலத்திலும், இலையுதிர்காலத்துக்கு கோடைகாலத்திலும் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு சீசனுக்கு 40 டாலர்கள் கட்டணம். லீக் செலவுகள் அதிகமாகி விட்டதால், ஜனநாயக முறையில் பெற்றோரின் கருத்தைக் கேட்டறிந்து, இப்போது 60 டாலர்கள் ஆக்கி விட்டார்கள். அதிலிருந்தே, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமாக ஒரு ஜெர்ஸி, ஒரு ஷார்ட்ஸ், ஒரு ஜதை சாக்ஸ் ஆகியன தருவார்கள். இந்த ஜெர்ஸி முதுகுபுறத்தில் பெரிய எழுத்தில் எண் போட்டு முன்புறத்தில் மார்பருகே சிறிய அளவில் United Soccer Association என்று பெயர் மற்றும் ஊர் பொறித்த லோகோவுடன் பார்ப்பதற்கு விளையாட்டு வீரர்கள் அணிவது போல இருக்கும். ஒவ்வொரு அணிக்கும் இத்தகைய சீருடைகள் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். இவையில்லாமல், கோச்சுகளுக்கு கோச் என்று எழுதப்பட்ட டீ-ஷர்ட் கிடைக்கும். சாக்கர் நெட்ஸ், எல்லைகளை வரையறுக்க உபயோகப்படுத்துகிற கோன்கள் என்று லீக் உபகரணங்களையும் கொடுக்கும். சீசன் முடிந்ததும் இத்தகைய உபகரணங்களை லீகிடம் திருப்பித் தந்துவிட வேண்டும். இவை மட்டுமில்லாமல், பள்ளிக்கூடங்களிடம் அனுமதி வாங்கி, சனிக்கிழமைகளில் அம்மைதானங்களை கால்பந்து மைதானமாகப் பயன்படுத்திக் கொள்ள தயார்படுத்தி வைப்பது, விளையாடும்போது குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டால் அதற்கான இன்ஸ்யூரன்ஸ் என்று லீக் பல ஏற்பாடுகளைச் செய்து வைக்கும். இதே போல் பேஸ்பால் லீகும் உள்ளது.

முதன்முறை முன்பதிவு செய்யும்போது குழந்தையின் வயது சான்றிதழ், இந்த ஊரில் இருக்கிறோம் என்பதை நீருபிக்க மின்சார கட்டண ரசீது என்று ஏதேனும் ஓர் ஆதாரம் கேட்கிறார்கள். அடுத்த முறை முன்பதிவு செய்யும்போது, இவை தேவையில்லை. முன்பதிவு செய்துள்ள குழந்தைகளிலிருந்து ஒரே வகுப்பில் படிக்கிற குழந்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பல அணிகளாகப் பிரிக்கிறார்கள். நம் குழந்தை அவர் நண்பர்களுடனான அணியில் அல்லது தெரிந்தவர் கோச் செய்கிற அணியில் இருக்க வேண்டுமென்று நாம் விரும்பினால் விண்ணப்பப் படிவத்தில் அதை எழுத வேண்டும். இம்மாதிரியான விசேஷமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயல்வோம்; ஆனால் நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்க இயலாது என்று குறிப்பிட்டாலும், முடிந்தவரை நிறைவேற்றி விடுகிறார்கள். சீசன் முடிவில் குழந்தைகளுக்கு பீட்ஸா பார்ட்டி வைக்க ஒரு குழந்தைக்கு நான்கு டாலர்கள் என்று கோச்சுக்குப் பணமும் கொடுக்கிறார்கள். பீட்ஸா பார்ட்டியின்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் குழந்தையின் பெயர் பொறித்த டிராபியை லீக் சார்பாக கோச்கள் அளிப்பார்கள். இந்த டிராபியையும் லீகே தயாரித்துத் தருகிறது.

ஒவ்வொரு அணிக்கும் ஒரு கோச், ஒரு அஸிஸ்டெண்ட் கோச் நியமிக்கப்படுவார். அது இல்லாமல், ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு இயக்குநர் இருப்பார். உதாரணமாக, இரண்டாம் வகுப்பில் பயிலும் குழந்தைகளைக் கொண்டு, பத்து அணிகள் இருக்கின்றன என்றால் பத்துக்கும் சேர்த்து ஒரு இயக்குநர். கிண்டர் கார்டனிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை மைக்ரோ சாக்கர் லீக் என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக கால்பந்து விதிகள் உள்ளன. உதாரணமாக, இரண்டாம் வகுப்புவரை கோல்கீப்பர் கிடையாது. மூன்று என்கிற எண்ணால் குறிப்பிடப்படுகிற அளவுள்ள கால்பந்து பயன்படுத்தப்படும். மேட்சின் போது அணிக்கு நான்கு பேர் விளையாடுவார்கள். உதாரணமாக, ஓர் அணியில் பன்னிரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், நான்கு பேர் கொண்ட இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, எதிரணியுடன் (எதிரணியும் அவ்வாறே பிரிக்கப்பட்டிருக்கும்) இரண்டு மேட்ச்கள் நடைபெறும். மீதி நான்கு குழந்தைகள் மாற்று ஆட்டக்காரர்களாக விளையாடுவர். கால்பந்தைத் தலையால் எதிர்கொள்வது (Heading) கிடையாது என்று வயதுக்கேற்றமாதிரி விதிகள் உள்ளன. வாராவாரம் சனிக்கிழமை மேட்ச் இருக்கும். ஒவ்வொரு வாரமும் அதே வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் இருக்கிற இன்னோர் அணியிடம் ஆட வேண்டும். கோச்சின் வசதிக்கேற்ப வாரத்தில் ஒருநாள் பயிற்சி (Practice) இருக்கும். இத்தகைய அணிகளை மனமகிழ் கால்பந்து அணிகள் என்று சொல்கிறார்கள். மேலும் ஆர்வம் உடையவர்களுக்கு Travel Teams வைத்திருக்கிறார்கள். Travel Teams-ல் இருப்பவர்கள் வெளியூர் சென்று அந்த ஊரில் இருக்கும் அவர்கள் வயதை ஒத்த அணிகளுடன் விளையாடுவார்கள். இவையில்லாமல் தனியார்கள் நடத்தும் சாக்கர் லீகுகள் உள்ளன. அவை கோடைக்காலத்திலும், குளிர்காலத்தில் உள்-அரங்குகளிலும் கால்பந்து விளையாட்டுகளை நடத்துகின்றன. அவற்றுக்கான கட்டணங்கள் பெருமளவு அதிகமாகும்.

கோச், இயக்குநர், லீக் வைஸ் பிரசிடென்ட் என்று எல்லாருமே சொந்த விருப்பத்தால் ஆர்வலர்களாக முன்வந்திருப்பவர்கள். யாருக்கும் சம்பளம் கிடையாது. பள்ளிக்கூடத்திலும் கால்பந்து குறித்த விவரங்கள் தந்தனுப்புவார்கள் என்றாலும், மர்லின்மூலம் இவையெல்லாம் முன்னரே அறிந்தோம்.

வடகிழக்கு அமெரிக்க மாநிலங்களில் - பனிப்பொழிவும் கடுங்குளிரும் நிறைந்த பகுதிகளில் - வாழ்கின்ற குழந்தைகளைக் குளிர்காலத்தில் பார்த்தால் பாவமாக இருக்கும். கட்டிப் போட்டதுபோல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. வெளியில் சென்று விளையாட முடியாது. பூங்காக்களுக்கும் செல்ல முடியாது. எனவே, வசந்தகாலம் முதல் இலையுதிர்காலம் வரையுள்ள ஆறுமாதங்களே அவர்கள் வெளியில் சென்று விளையாடவும், நண்பர்களூடன் பொழுதைக் கழிக்கவும் ஏற்ற பருவம். அதனால், கால்பந்து, பேஸ்பால் என்று இப்படி நடக்கிற விளையாட்டுகளில் பங்கு கொள்ள குழந்தைகள் ஏங்குவது சகஜமே. கால்பந்து சீசன்கள் கோலாகலமாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தையின் பெற்றோர் அணியில் விளையாடுகிற அனைவருக்கும் இடைவேளையில் சாப்பிட பழங்கள், பானங்கள் முதலியன கொண்டு வருவார். குழந்தைகளின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், தாத்தா-பாட்டிகள், உறவினர்கள் என்று பலரும் வந்து மைதானத்துக்கு அருகில் இருக்கை போட்டு அமர்ந்து கொண்டு, குழந்தைகளை உற்சாகப்படுத்துவார்கள். கேமிராக்கள், கேம்கார்டர்கள் என்று குழந்தைகளின் ஆட்டங்கள் பெற்றோரால் பதிவுசெய்யப்படும்.

கிண்டர்கார்டன் படிக்கும்போது இலையுதிர்காலத்தில் என் மகன் முதன்முறையாகக் கால்பந்து ஆடினார். அப்போது கோச்சாக இருந்தவரை அதற்குமுன் நாங்கள் அறிந்திருக்கவில்லை. வசந்த காலத்தில் விளையாடியபோது மர்லின் கணவர் கோச்சாக இருந்தார். இந்த இரண்டு சீசன்களிலும் கோச்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், மேட்ச்கள் எப்படி நடக்கின்றன என்பதை அருகிலிந்து பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது. பன்னிரண்டு பதிமூன்று வயதுவரை குழந்தைகள் கால்பந்து நுட்பங்களையும் வியூகங்களையும் அறிவதில்லை. பந்தைத் துரத்துவதும், கூடி விளையாடுவதில் மகிழ்வு கொள்வதுமே இந்த வயதின் நோக்கம் என்று பின்னர் நான் கோச்சிங் டிரெய்னிங் போனபோது அறிந்தேன்.

இரண்டு சீசன்களுக்குப் பிறகு லீகுக்கு பெற்றோர் ஏதேனும் ஒருவிதத்தில் ஆர்வலராக உதவி புரிய முன்வர வேண்டும். எனவே, மூன்றாவது சீசனுக்கு முன்பதிவு செய்யும்போது அசிஸ்டெண்ட் கோச் ஆக இருக்கிறேன் என்று சொன்னேன். மேட்சுகளின் போது மைதானத்துக்கு வெளியே நின்றுகொண்டு கத்தியபடி குழந்தைகளை உற்சாகப்படுத்துவதைப் பார்த்த பெற்றோர் ஒருவர், "சிவா, நீங்கள் கோச்சாக இருக்காலம்" என்று சொல்லியதால் வந்த வினை இது. (நான் கோச்சானதும், அவர் மகனை எங்கள் அணியில் கொண்டுவந்து சேர்த்துவிட்டார்.)

மாலைப் பொழுதுகளில் மூன்று நாள்கள் பயிற்சி தருவார்கள்; அதை முடித்தவுடன் கோச்சிங் லைசன்ஸ் தருவார்கள் என்று அதற்குள் அறிந்திருந்தேன். மேலும், கோச்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்திருந்ததால், அதை நாமும் செய்துவிட முடியும் என்கிற அசட்டுத் துணிச்சல். மூன்று நாள் பயிற்சியில் - மாலை ஆறுமணி முதல் இரவு பத்து வரை பிழிந்தெடுத்து விட்டார்கள் - நிறைய கற்றுக் கொண்டோம். கால்பந்தை பாதத்தின் ஆறு பகுதிகளைப் பயன்படுத்தி தொட்டு நகர்த்தலாம் என்பது அதில் ஒன்று.

அப்புறம் சீசன் ஆரம்பிப்பதற்கு முன் ஒருநாள் லீகிலிருந்து என் மகன் வகுப்புக்கான இயக்குநரிடமிருந்து தொலைபேசி வந்தது.

"நீங்கள் கோச்சாக இருக்க விரும்புகிறீர்களா?"

"நான் அசிஸ்டெண்ட் கோச்சாக மட்டுமே இருக்க விண்ணப்பித்து இருக்கிறேன். எனக்குக் கோச்சிங்கில் அனுபவம் இல்லை. எனவே, அசிஸ்டெண்டாக இருந்து முதலில் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்."

"இதில் கற்றுக் கொள்ள ஒன்றுமில்லை. நீங்கள் கோச்சிங் லைசன்ஸ் வாங்கியிருந்தால் போதும். உங்கள் பேட்சில் எல்லாரும் புதுமுகங்கள். யாரும் கோச்சாக முன்வரவில்லை. அசிஸ்டெண்ட் கோச்சாகவே இருக்க விரும்புகிறார்கள். நீங்கள் ஏன் கோச்சாகக் கூடாது. உங்களால் முடியும். வேண்டிய உதவிகள் செய்ய லீக் இருக்கிறது" - எதிர்முனையில் பேசிய, நான் அதற்குமுன் பார்த்தேயறியாத இயக்குநர் அம்மா, உற்சாகமூட்டும் விதமாகப் பேசினார்.

"அப்படியானால் சரி"

என்னுடைய அசிஸ்டெண்ட் கோச் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். என்னுடைய காம்ப்ளெக்ஸிலேயே வசிக்கிறார். அவர் நல்ல விளையாட்டு வீரர் என்பது எனக்கு வாய்த்த அதிர்ஷ்டம். டென்னிஸ் ஆடும்போது ஏற்கனவே அவரை அறிந்திருந்தேன். விளையாட்டுகளில் அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் கோச்சாக இருந்து, நான் அசிஸ்டெண்டாக இருப்பதே முறை. எனவே, அடுத்த சீசன் வந்தபோது நீங்கள் கோச்சாக இருங்கள், நான் அசிஸ்டெண்டாக இருக்கிறேன் என்றேன் அவரிடம். இவையெல்லாம் பொருட்டில்லை. நீங்களே இருங்கள். நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டார் அவர்.

இப்படிக் கடந்த இரண்டு வருடங்களாக - நான்கு சீசன்களாக - கோச்சிங் செய்துவருகிறோம். முதன்முறை எங்கள் அணியில் இருந்த 10 குழந்தைகளில் 8 குழந்தைகள் தொடர்ந்து நாங்களே வேண்டும் என்று இதே அணியில் இருந்து வருகின்றனர். மீதி இருவரில் ஒருவர் ஊர் மாற்றிச் சென்றுவிட்டார். இதைப் பார்க்கும்போது, எங்கள் கோச்சிங் தேவலாம் போல என்று எங்களுக்குள் சொல்லிக் கொள்வோம்.

இப்படிக் கோச்சாக இருந்தாலும், நிஜமான கோச் யார் தெரியுமா? குழந்தைகள்தான். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஒவ்வொரு விஷயம் பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம். சம்பளம் இல்லாத ஆர்வலர் வேலை என்றாலும் சம்பளம் கிடைக்கிற வேலையைவிட இது அதிக சந்தோஷம் தருவதற்குக் காரணம் குழந்தைகளே.

பயிற்சியின் ஆரம்பத்தின்போது வார்ம் அப்புக்காக எல்லாக் குழந்தைகளும் மைதானத்தை முதலில் சுற்றி ஓடிவர வேண்டும். அதைச் செய்யப் போகிறோம் என்று சொன்னதும், நாங்கள் எதிர்கொண்ட முதல் கேள்வி. "கோச், வில் யூ ஆல்சோ ரன் வித் அஸ் ஆர் நாட்." நான் ஏழாம் வகுப்புப் படித்தபோது கடைசி பீரியடில் அந்த வகுப்புக்குரிய டீச்சர் அன்று லீவானதால் வகுப்பே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. ரகளையை அறிந்த வகுப்பு ஆசிரியை வகுப்புக்கு வந்து எல்லா மாணவர்களையும் பெஞ்சின் மீது நிற்க வைத்துவிட்டார். அதோடு இல்லாமல் கோபத்தில், இரவு எட்டுமணி வரை நிற்க வேண்டும் என்றார். துடுக்கான நான் சும்மா இல்லாமல் "நீங்களும் எட்டு மணி வரைக்கும் இருப்பீர்கள்தானே டீச்சர்" என்று கேட்டு அடிவாங்கியது அப்போது நினைவுக்கு வந்தது. ஒரு புன்முறுவலுடன் குழந்தைகளுடனும் சக கோச்சுடனும் சேர்ந்து மைதானத்தைச் சுற்றி ஓடிவர ஆரம்பித்தேன்.

No comments: