எளிமையான உரைநடையில் உயிர்ப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்தவர் சுஜாதா. உரைநடையிலும் உத்திகளிலும் அவர் புகுத்திய புதுமைகள் பல. ".... மறந்தவர்களுக்கு அடுத்த வேளைச் சோறு கிடைக்காது" (ஜனவரி 1973), "அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்" (ஜனவரி 1975), "அவர்களுக்குச் சகல ஐசுவரியங்களும் கிட்டும். உடல் நலம் ஓங்கும், வாகனங்களால் இன்பம் கிட்டும். கடிதத் தொடர்பால் உத்தியோக உயர்வு. ஒப்பந்த வியாபாரங்களில் மிகுந்த லாபம். சிறுபயண பலிதம் இவை ஏற்படும்." (செப்டம்பர் 1975) ஆகியவை பல பத்து ஆண்டுகளுக்கு முன் சுஜாதா எழுதியவை. இவற்றை இன்றும்கூட பெயர் பெற்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சுஜாதாவின் தாக்கத்தை ஒருவர் அறிந்து கொள்ள இயலும்.
அக்டோபர் 1972-லிருந்து அக்டோபர் 1989 வரை கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா எழுதியவையும் இன்னும் சில வேறு கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியவையும் இன்றைக்கும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பது சுஜாதாவின் டிரேட் மார்க். அவருடைய புனைகதைகளைவிட Non-fictions எனக்கு அதிகம் பிடித்திருக்கின்றன. இதற்குக் காரணம் தெரியவில்லை. தகவல் களஞ்சியமாக அடுத்தவர் சொன்னால் ஆகிவிடக்கூடிய விஷயங்களுக்குக் கூட எளிமையும் இலக்கிய மெருகும் அவரால் Non-fictionsல் தரமுடிவது ஒரு காரணமாக இருக்கலாம். எளிமை மட்டும் சுஜாதாவின் சிறப்பல்ல. அறிவுஜீவி வேஷம் போடுகிற எழுத்தாளர்களிடையே அவர் நிஜமான அறிவுஜீவிதான் என்பதை அவரைப் பிடிக்காதவர்களும் ஒத்துக் கொள்வர். அது வாசகரை அவர்பால் ஈர்க்கிறது. சுய விருப்பு வெறுப்பு என்கிற தற்குறிப்புகளை சொல்லுகிற விஷயத்தின்பால் அதிகம் ஏற்றாமல் நுட்பமான அங்கதத்துடனும், சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கிற வெடிகளுடனும், என் அறிவைப் பார் என்று அலட்டிக் கொள்ளாமல் வெளிப்படுகிற புத்திக் கூர்மையுடனும் பேசுவது சுஜாதாவின் வெற்றிக்குப் பின்புலங்கள். சுஜாதாவின் வெற்றிக்கு இன்னொரு காரணம் தன் படைப்புகளில் Repetition இல்லாமல் பார்த்துக் கொள்வது. சுஜாதாவைத் தொடர்ந்து படிப்பவர்கள் - தினமணியில் தொடர்ந்து எழுதிவந்த அறிவியல் கட்டுரைகளை அவர் நிறுத்தி விட்டதற்கு முக்கியமான காரணம் ஒரு அளவுக்கு மேல் Repetition வந்து விடுகிறது என்று அவர் சொன்னதைப் படிப்பதற்கு முன்னேரே - இதை உணர்ந்திருக்கிறார்கள்.
அவர் உரைநடையை எல்லாரும் எளிமைக்கு உதாரணம் காட்டுவர். அவர் செய்த புதுமைகளில் பல ஏற்கனவே புதுமைப்பித்தன் செய்தவைதான் என்று அவர் சொன்னதாக ஒருமுறை படித்த ஞாபகம். சுஜாதா கணையாழியின் கடைசிப் பக்கங்களில் கூட, 1940-லேயே பண்டிதராயினும் எவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார் என்று உ.வே.சா.வின் "என் சரித்திரத்தை" எடுத்துக் காட்டுகிறார்.
பின்வரும் வரிகளில் கச்சிதமாக ஞானக்கூத்தனைப் பற்றி அவர் சரியாகச் சொல்லியிருப்பதைப் பார்த்து "ஆமாம்" என்று தலையாட்டிக் கொண்டேன். "ஞானக்கூத்தனைப் பாகுபடுத்துவது கஷ்டம். அவர் வரிகளை ரசிப்பதும், அவற்றில் நம்மையே கண்டுபிடிப்பதும் சுலபம்."
மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்டு ஆனால் மரபின் மயக்கத்தில் ஆழ்ந்துவிடாமல், நவீன வாழ்வும் இலக்கியமும் வாழ்க்கைக்குக் கொண்டு வந்திருக்கிற புதிய பரிமாணங்களையும் புரிந்து கொண்டு, இரண்டுக்கும் பாலம் அமைத்து, இருப்பதை மீறிப் புதியதாக ஒன்றைச் சிந்திக்கத் தூண்டுவது எழுத்தாளரின் வேலை என்பதை சுஜாதா தெரிந்தோ தெரியாமலோ அறிந்து வைத்திருக்கிறார். இலக்கியம் எதற்கு, அதற்கு நோக்கமுண்டா என்னும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை அந்தக் காலம் முதலே அவர் தவிர்த்து வந்திருக்கிற போதினும், அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அவருக்குத் தெரிந்தே இருக்கின்றன என்பதை அவர் Non-fictionsஐக் கூர்ந்து அவதானிக்கும்போது அறிந்து கொள்ள முடிகிறது.
யாப்பு, தொல்காப்பியம், சிவவாக்கியர், புறநானூறு, நேரிசை வெண்பா என்று அலசுகிற சுஜாதாதான் ரேடியோ கார்பன் டேட்டிங், ஹைக்கூ, ராபர்ட் ப்ராஸ்ட், எரிக்கா ஜாங், புதுக்கவிதை, புவியரசு, ஞானக்கூத்தன், HDTV, போயிங் என்று நவீன வாழ்வின் முகங்களையும் தமிழுக்குக் காட்டியிருக்கிறார். மரபைக் குறித்து இவ்வளவு எளிமையாக தமிழாசிரியர்கள் கூட சொல்ல முடியுமா என்பது கேள்வியென்றால், அறிவியலையும் நவீன இலக்கியம் பற்றியும் கூட இவ்வளவு எளிதாக இன்னொருவர் சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அறிவியல் தமிழ் எழுத விரும்புபவர்கள் இத்தொகுப்பில் சுஜாதா எழுதியுள்ள ரேடியோ கார்பன் டேட்டிங் பற்றியக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்.
"உண்மையான ரசிகர்கள் கடிதம் எழுதுவது அல்லது நேரில் வந்து சந்திக்கிற ஜாதியில்லை" என்று ஏப்ரல் 1976ல் சுஜாதா எழுதியிருப்பதில் பெருமளவு உண்மை இருக்கிறது. மேலும் மே 1977ல் "மற்றவர்கள் எப்படியோ எனக்கு 'எழுத்தாளர்களைச் சந்தியுங்கள்' என்றால் எப்போதும் அலர்ஜி" என்றும் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க, அம்பலம் சாட்டில் வாசகர்களுடனானக் கலந்துரையாடலுக்கு அவரைத் தூண்டியது எது என்று வாய்ப்புக் கிடைத்தால் அவரைக் கேட்க வேண்டும். ஒருமுறை நான் அம்பலம் சாட்டில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். சந்தை மாதிரி ஒரே நேரத்தில் பலர் பேசிக் கொண்டு ஏக இரைச்சல். சுஜாதா பொறுமையாக எல்லாருடைய கேள்விகளுக்கும் சுருக்கமாகப் பதில் சொல்ல முயல்கிறார். ஆனால், வருபவர்களில் பாதிப்பேராவது அவர் மீதுள்ள அன்பினால் வாராவாரம் வருபவர்கள் என்று தோன்றியது. எந்தவிதமான சீரியஸ் உரையாடலையும் ஒரு வாசகன் எழுத்தாளருடன் இத்தகைய forumகளில் நிகழ்த்தி விட முடியாது என்பதை மீண்டும் உணர்ந்தேன். அம்பலம் சாட்டைவிட ஓர் இதழில் வாசகர் கேள்விக்கு அவர் சொல்கிற பதில்கள் உருப்படியான நிகழ்ச்சி. சுஜாதா இல்லாதபோது அவர் சார்பாக அவரின் தீவிரவாதி வாசகர்கள் பதிலளிப்பதில் தவறில்லை. ஆனால், அன்றைக்கு சுஜாதாவிடம் ஒருவர் ழ-கணினி சார்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தபோது ஒரு தீவிரவாதி வாசகர் சுஜாதாவை பேசவே விடாமல் இடையில் புகுந்து புகுந்து எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். கேள்வி கேட்டவர் "நீங்கள் கொஞ்சம் சும்மா இருங்கள். நான் சுஜாதாவைக் கேட்கிறேன்" என்றுக் கடுமையாகச் சொன்னபின்னே அமைதியானார். சுஜாதா அந்தக் கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொன்னார். சுஜாதாவைவிடச் சிறப்பாக அவர் வாசகர்கள் பதில் சொல்லிவிட முடியாது. எனவே, அன்பின் பொருட்டுகூட இப்படித் தீவிரவாதி வாசகர்கள் இடையில் புகுந்து அவருடனான உரையாடலைக் கெடுக்க சுஜாதா அனுமதிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.
மரபில் பயிற்சி பெற வேண்டும் என்று என் நண்பர்கள் சிலரும்கூட வெண்பா முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நானும் ஈடுபட்டவன்தான். தவறில்லை. ஆனால், எதுகை, மோனை, தளை என்று இலக்கணச் சுத்தமாக எழுதவேண்டும் என்பதில் காட்டுகிற முனைப்பை உள்ளடக்கத்தில் பெரும்பாலும் அவர்கள் காட்டுவதில்லை. அதனாலேயே, அவர்கள் எழுதுகிற வெண்பாக்கள் பெரும்பாலும் "என் புருஷனும் சந்தைக்குப் போனான்" என்கிற ரேஞ்சில் உள்ளன. அவர்கள் சுஜாதாவின் பின்வரும் இரண்டு நேரிசை வெண்பாக்களைப் படித்து அவை சுட்டுகிற பொருள், அங்கதம், தொனி ஆகியவற்றின் சிறப்பை அறியலாம்.
வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் - உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும்போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.
மீசா மறைந்து எமர்ஜென்ஸிவிட்டுப் போய்
தேசாயின் ஆட்சியில் சந்தோஷம் - பேசாமல்
பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டெல்லாரும்
..... குடிக்க வாரும்!
ஜப்பானியர்கள் அவர்கள் மொழியிலேயே பயில்கிறார்கள் என்பதைச் சொல்லுகிற சுஜாதா, "மொழியைக் கன்னி, தாய் என்று கொஞ்சுகிற பிஸினஸ்ஸை விட்டொழித்தால் தான் நமக்கு விடிவு காலம்" என்று சொல்வது மிகவும் சிந்தனைக்குரியது. "டாக் என்று எழுதினால் அது Talk, Dog, Dock எல்லாவற்றிற்கும் பொதுவாகிறதே. கனமான க, ட, த, ப சப்தங்களுக்கு நான்கே நான்கு எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் தேவை" என்று மே 1973லேயே சுஜாதா எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
டில்லி தமிழ்ச் சங்கத்தில் ஜனவரி 1980ல் "பிரபலமாயிருப்பவர்கள் இலக்கியம் படைக்க முடியாது, பிரபலத்தைத் தாக்குவது சம்பிராதய சந்தோஷங்களில் ஒன்று" என்று சுஜாதா நம்புகிற வண்ணம் நடந்த வாசகர் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்தபின் சுஜாதா எழுதிய பின்வரும் பாரா என்னை மிகவும் கவர்ந்தது. .
"குளிர் எலும்பைத் தொடுகிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட புகைப்படலம் நகரத்தைக் கவ்வுகிறது. அந்தச் சேலத்துச் சிறுமி சாக்குப் பையைத் தன்மேல் சுற்றிக் கொண்டு தன் தங்கச்சியையும் அணைத்துக் கொண்டு மரத்தடியில் தூங்குவதற்கு ஆயத்தம் செய்கிறாள். இலக்கியம் என்பதே ஒரு தேவையில்லாத சமாச்சாரமாகப் படுகிறது அப்போது. எல்லாக் கதைகளையும் கவிதைகளையும் எரித்து அவளைச் சூடு பண்ண வேண்டும் போலிருக்கிறது."
மேற்கண்ட பாராவின் கடைசிவரி பொட்டில் அடித்து என்னை நிறைய நேரம் அவஸ்தைக்குள்ளாக்கியது.
வலைப்பதிவுகளில் மோசமான கமெண்ட்டுகள் எழுதப்படுகின்றன என்று பலர் வருத்தப்படுகிறார்கள். உண்மைதான். இவை குறித்து அந்தந்த வலைப்பதிவின் உரிமையாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். என்னுடைய வலைப்பதிவில் என்னைப் பற்றி எவ்வளவு மோசமான கமெண்ட் வந்தாலும் அதை அனுமதிக்க வேண்டும் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்து விட்டேன். அடுத்தவரைப் பற்றி மோசமாக வந்தால், அவற்றை தேவைக்கேற்ப எடிட் செய்யவோ நீக்கவோ வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். இது, அடுத்தவரைத் தாக்க என் வலைப்பதிவைப் பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்கிறேன் என்பது மாதிரியான குற்றச்சாட்டுகள் வரக்கூடாது என்பதால். ஆனால், கடுமையாக விமர்சிப்பவர்களையும் பிரசுரிப்பது Gamesmanship உத்தி. எதிர்ப்பவனையே பதிப்பிப்பதில் எதிர்ப்பின் பிரகாசம் போய்விடுகிறது என்று சுஜாதா எழுதியுள்ளது மிகவும் உண்மை. அசோகமித்திரனின் "இன்னும் சில நாட்களில்" வெளிவந்தபோது மேல்உறையின் உள்பக்கத்தில் அசோகமித்திரனை கடுமையாக விமர்சித்திருப்பவர்களையும் பிரசுரித்திருந்ததை சுஜாதா குறிப்பிடுகிறார்.
புறநானூறைப் பற்றிச் சுஜாதா எழுதியவையும் அதனால் அவருக்குக் கிடைத்த விமர்சனங்களும் இத்தொகுப்பில் உள்ளன.
"புறநானூறைச் சற்று ஆழமாகப் படித்தேன். எனக்கு நிறையச் சந்தேகங்கள் எழுந்தன. அவை இவை. ஏன் நானூறு? காலம் என்ன? திணை துறைப்படுத்தியவர் யார்? ஏன் பெரும்பாலான பாட்டுகளின் அரசர்களை இரவலர்கள் பிய்த்துப் பிடுங்குகிறார்கள்? 'உன்னைப்போல உண்டா நீ தருவாய். தராமலா இருப்பாய். எவ்வளவோ தந்தவனாச்சே நீ" என்று சோப்பு வைத்து "என்னைப் பார். நெடுந்தூரம் வந்திருக்கிறேன். வயிறு ஒட்டியிருக்கிறது. எலும்பு தெரிகிறது. எனக்குத் தெரியும் உன்னைப் புகழாமலேயே கொடுப்பாய். நீ பெரிய ஆள்" என்று பாடல்கள் நிறைந்த புறநானூற்றுக் காலம் பஞ்ச காலமா?"
சுஜாதா மேலும் தொடர்கிறார். "பொதுவான உணர்ச்சி கலக்காத தன்மை - போரில் இறந்துபோன கணவனுக்கு ஒப்பாரிப் பாட்டிலும் இயற்கை வருணனை - சில திரும்பத் திரும்ப வரும் சொற்றொடர்கள், இவைகளை எல்லாம் பார்க்கையில் ஒரே ஆளே முழுவதையும் எழுதியிருக்கலாம் என்று சந்தேகம் தோன்றுகிறது."
இக்கருத்துகளைக் குறித்து சுஜாதா இப்போது என்ன நினைக்கிறார் என்று வாய்ப்புக் கிடைத்தால் கேட்க வேண்டும். இத்தகையக் கருத்து கொண்டிருந்தவரை புறநானூறுக்கு எளிய உரை எழுதத் தூண்டியது எது என்றும் அறிய வேண்டும்.
சுஜாதா புறநானூறைப் பற்றிச் சொந்த அபிப்பிராயங்களாக மேற்கண்ட கட்டுரையை எழுதியதும், "எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதுகிறார்" என்று அவர்மேல் தாக்குதல் நடந்திருக்கிறது போலிருக்கிறது. புன்னகையுடன் மன்னிப்போம் என்று பதில் சொன்ன சுஜாதாவின் பின்வரும் கூற்று இன்றைக்கும் பொருத்தமானது. "பண்டிதத்தனத்துக்கு அப்பாற்பட்டு இம்மாதிரி சில கேள்விகள் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத இந்த நிலைகூட தமிழன் தலைவிதிகளில் ஒன்று." சுஜாதா, வாழ்நாள் முழுவதும் இப்படி நீங்கள் புன்னகையுடன் மன்னிக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி ஏற்படும். இணையமயமாகிவிட்ட உலகில் இத்தகைய கூக்குரல்களும், குற்றம் கண்டுபிடிப்பவர்களும் நேற்றைவிட அதிகம். அவற்றினாலெல்லாம், இந்த மாதிரி புதுக்கோணங்களைக் காட்டுவதை நிறுத்தி விடாதீர்கள்.
தாமஸ் டிஷ் என்ற அமெரிக்க எழுத்தாளரை சுஜாதா கண்ட நேர்காணலின் பின்வரும் பகுதி சுஜாதா எழுத்துகளில் விரவிக் கிடக்கும் நகைச்சுவைக்கு ஒரு சோறு.
சுஜாதா: "மிஸ்டர் டிஷ், இந்தியாவில் உங்கள் முதல் அனுபவங்கள் எவ்வாறு இருந்தன?"
டிஷ்: "இந்தியாவில் முதன் முதல் என்னைக் கவர்ந்தது பம்பாய் தெருவில் நான் பார்த்த பசுமாடுதான். போக்குவரத்தைப் பற்றிக் கவலையே படாமல் மெதுவாக மென்று கொண்டு அது நடந்து செல்ல அதைப் பின் தொடர்ந்தேன். ஒரு மார்கெட்டை அணுகியது. அங்கே பார்த்தால் அதன் சகாக்கள் ஒரு மந்தையே இருந்தன. சுதந்திரமாகச் சாப்பிட்டுக் கொண்டு... சாதுவாக... ஆஹா, நியூயார்க்கில் இப்படி பசுக்கள் உலவினால் எவ்வளவு நன்றாக இருக்கும்."
சுஜாதா: "நிச்சயம் அனுப்புகிறோம்."
நல்ல கவிதையை அடையாளம் கண்டுபிடிக்க உத்திரவாதமாக சுஜாதா சொல்கிற பத்து வழிகளைக் கவிதை எழுத முனைபவர் அவசியம் படிக்க வேண்டும்.
கருத்தின் தர்க்கத்தன்மையினால் ஒருவழியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். "மரபில் எழுதியிருந்தால் பெரும்பாலும் நீக்கிவிடலாம். சீர், தளை என்று கட்டாயப்படுத்தும்போது கவிதானுபவம் பாதிக்கப்படுகிறது. பாசாங்கு வந்துவிடும். விதி விலக்காக மிக மிகச் சில கவிதைகள் மரபில் வரலாம். ஞானக்கூத்தனின் அம்மாவின் பொய்கள் விருத்த வடிவுள்ளது தற்செயலே. மரபின் நல்ல கவிதைகள் அனைத்தும் எழுதப்பட்டு விட்டன." என்று சொல்கிற சுஜாதா, "தற்காலத்தில் மரபு எழுதினால் அது அனக்ரரனிஸம், பாசாங்கு" என்று முடிக்கிறார். ஞானக்கூத்தனிடம் கூட யாப்புடன் எழுதுவதால் சில வரிகள் அனாவசியமாக நீண்டு விடுவதற்கு உதாரணமாக "யெதிரெதில் உலகங்கள்" கவிதையை இன்னொரு இடத்தில் சொல்கிறார். இதைப் படித்தவுடன், சுஜாதாவை மரபின் பரமவைரி என்று உருவகித்துக் கொண்டு, அவரைச் சிலர் வசைபாடி மற்போருக்கு அழைக்கக் கூடும். சுஜாதா, அப்படியேதும் நிகழ்ந்தால் என்னை மன்னியுங்கள். இந்த மாதிரியான சிந்திக்கத்தக்க கருத்தால் நான் கவரப்பட்டதைச் சொல்லாவிடில் என் வாசக அனுபவம் முழுமை பெறாது.
"நான் கவிஞனல்ல, கவிதையை மொழி பெயர்ப்பது எனக்குச் சிறிது துணிச்சலான காரியமாகவே படுகிறது" என்கிற சுஜாதா, ·ப்ராஸ்டின் இரண்டு கவிதைகளை அழகாகவும் எளிமையாகவும் மொழிபெயர்த்திருக்கிறார்:
1. புல்வெளியை சுத்தம் செய்யச் செல்கிறேன்
இலைகளை மட்டும் பெருக்கிவிட்டு வந்துவிடுவேன்
சிலவேளை ஜலம் வடிவதைப் பார்த்துவிட்டு வருவேன்
அதிக நேரமாகாது நீயும் வாயேன்.
2. கன்றுக்குட்டியைக் கொண்டுவரப் போகிறேன் அதன்
அம்மாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது ரொம்பச் சின்னது
அம்மா அதை நக்கிக் கொடுக்கும்போது தடுக்கி விழுகிறது
அதிக நேரம் ஆகாது. நீயும் வாயேன்.
ராயப்பேட்டை பாலுவைப் பற்றி சுஜாதா எழுதிய பன்னிரண்டடியான் வந்த பல விகற்பப் ப·றொடை வெண்பாவும் இத்தொகுப்பில் உள்ளது. அதை நான் குறிப்பிடாவிட்டால் எனக்கு மோட்சம் கிடைக்காது என்ற நண்பரின் ஆசைக்காக இதோ.
எல்லோரும் பாட்டெழுத நான் ஏன் விதிவிலக்கா?
எல்லோரும் என்பதுடன் (யோசி) எதுகைக்கு
எல்லோரா! எப்படி? ஈஸி, கவிஎழுத
வல்லோரில் நான்ஒருவன் என்பதைக் காட்ட
அடுத்த கவிதைக்கு வந்துவிட்டேன் மேலே
தொடுத்து அமைப்பதில் தொந்தரவு இல்லை
படுத்துக் களைத்திருக்கும் பத்மாவைப் பாச்சா
கடித்த* கதைபற்றிச் சொல்ல நினைத்தவன்
பாயை விரித்துப் படுத்தவளைப் பாச்சா
வாயைத் திறந்து ..' வரைக்கும் வந்துவிட்டேன்
மாயச் சுழலிது, மேலே முடிச்சவிழ்க்க
ராயப்பேட்டை பாலு! வா!
* - கெடுத்த என்றும் பாடம்
வலைப்பதிவு வைத்திருக்கிற அன்பர்கள் அனைவரும் பெரும்பாலும் கட்டுரைகள் எழுதி வருகின்றனர். கட்டுரை எழுத நினைக்கிற அனைவரும் படிக்க வேண்டிய எழுத்தாளர்களுள் சுஜாதா முக்கியமானவர்.
நன்றி: கணையாழியின் கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - விசா பப்ளிகேஷன்ஸ், பழைய எண் 55, புதிய எண் 16, வெங்கட் நாராயணா ரோடு, தி. நகர், சென்னை - 17. போன் 24342899, 24327696, - இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 2003 - விலை ரூபாய் 52.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment