Tuesday, April 06, 2004

மறந்துபோன மூன்று விஷயங்கள்

கணையாழியின் கடைசிப் பக்கங்களுக்கு வாசக அனுபவம் எழுதியபோது எழுத நினைத்து மறந்துபோன மூன்று விஷயங்களைப் பிற்சேர்க்கையாகத் தருகிறேன்.

பல கட்டுரைகளில் அவர் பார்த்த பிறமொழிப் படங்களைப் பற்றி விவரமாக எழுதியுள்ளார் சுஜாதா. சினிமா என்கிற ஊடகத்தின்மீது ஆரம்பம் முதல் அவருக்கிருந்த அக்கறையையும் ஆர்வத்தையும் இதில் காண முடிகிறது. நல்ல பிறமொழிப் படங்களைப் பார்த்தபோதெல்லாம், தமிழில் அவற்றின் சாத்தியக் கூறுகள் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறார். சினிமாவுடனான தொடர்பு அவருக்கு ஏற்பட்ட பிறகு, அவர் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு நனவாகக் கொண்டுவர முடிந்தது என்கிற கேள்விக்கு நேரான எளிய விடை இல்லை என்று அறிவேன். ஆனாலும், அவர் அதுகுறித்து ஏற்கனவே அங்கங்கே துண்டுதுண்டாகச் சொன்னவை மாதிரி இல்லாமல், முழுமையாக எழுதுவார் என்று வாசகராக எதிர்பார்க்கிறேன்.

இருபத்தைந்து எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவரின் ஒரு சிறுகதையைத் தேர்ந்தெடுத்து, ஒரு மானசீகமான சிறுகதைத் தொகுப்பு கொண்டுவர ஆசை என்று சுஜாதா ஏப்ரல் 1973-ல் குறிப்பிட்டிருக்கிறார். பதினைந்து எழுத்தாளர்கள் தேறி இருக்கிறார்கள் என்று அவர்களின் பெயரையும் சொல்கிறார். அவர்கள், கு.ப.ரா, புதுமைப்பித்தன் (ரொம்ப யோசனைக்குப் பிறகு), ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், கிருஷ்ணமூர்த்தி, முத்துசாமி, ராஜநாராயணன், ராஜேந்திர சோழன், சார்வாகன், சுப்ரமண்ய ராஜீ, இந்திரா பார்த்தசாரதி மற்றும் ஆதவன் ஆகியோர். அந்தப் பட்டியலில் புதுமைப்பித்தனைப் போட ரொம்ப யோசித்தது ஏன் என்பதை புதுமைப்பித்தன் ஒரு பீடமாகவும் வியாபார உத்தியாகவும் ஆக்கப்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் அறிவது அவசியமாகும். எனவே, அதுகுறித்து சுஜாதா சொல்கிற காரணங்களைக் கேட்க ஆவல். புதுமைப்பித்தனின் இடத்தையோ புகழையோ குறைப்பது என் நோக்கமில்லை. புதுமைப்பித்தனின் எழுத்துலகச் சாதனைகளை நான் மறுக்கவும் இல்லை. அதே நேரத்தில், புதுமைப்பித்தனுக்கு வீரவணக்கம் வேண்டாம் என்று சொல்வோர் வைக்கிற வாதங்கள் பல இன்றும் என்னைக் கவர்கின்றன. எனவே, புதுமைப்பித்தனை மானசீக சிறுகதைத் தொகுப்பில் தேர்ந்தெடுக்க சுஜாதா ரொம்ப யோசித்தது ஏன் என்கிற கேள்வி ஆவலை உண்டாக்குகிறது. மேலும், இப்போது அவர் முடிவில் இருபத்தைந்து எழுத்தாளர்கள் தேறிவிட்டார்களா? ஆமெனில், அவர்கள் யார்? முதலில் நினைத்த பதினைந்து எழுத்தாளர்களும் அந்தப் பட்டியலில் இன்னும் நிலைக்கிறார்களா என்பது போன்ற கேள்விகளூம் எழுகின்றன.

மே 1975-ல் பின்வருமாறு எழுதியிருக்கிறார்: "ஹீத்ரோ விமான நிலையத்தில் பாத்ரூம் அலம்புவதிலிருந்து சிகரெட் துண்டுகளைப் பொறுக்குவது, தரை சுத்தம் செய்வது இதெல்லாம் யார் இந்தியர்கள்! பஞ்சாபிப் பெண்கள். வருத்தமாக இருந்தது. அவர்களுக்குக் கிடைக்கும் பிரிட்டிஷ் பவுண்டுகளைப் பதினெட்டால் பெருக்கிப் பார்த்தால் நிச்சயம் இந்தியாவில் ஒரு என்ஜினியருக்குக் கிடைக்கும் சம்பளத்திலும் அதிகமாக இருக்கலாம்... இருந்தும், அதற்காக இப்படியா பொறுக்கி வாழ வேண்டும். புரியவில்லை." இருந்தும் அதற்காக இப்படியா பொறுக்கி வாழ வேண்டும் என்கிற வரிகளில் சுஜாதா சறுக்கி விட்டார். நேர்மையாக உழைத்து வாழ்கிற தொழில் - அது எப்படிப்பட்டதாயினும் - பொறுக்கித்தனம் இல்லை என்பதை அறியாதவர் இல்லை சுஜாதா. அதனாலேயே, இவ்வரி நிறைய வருத்தத்தை உண்டாக்கியது.

****** ***** *****

குளோரியா ஸ்டீநெம் (Gloria Steinem)ஐ நீங்கள் அறிந்திருக்கக் கூடும். The Thousand Indias என்கிற நூலின் ஆசிரியர். நியூயார்க் இதழைத் தொடங்கியவர்களுள் ஒருவர். அறுபதுகளின் இறுதியிலிருந்து எழுபதுகளில் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண்ணிய இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். Ms என்கிற இதழைத் தொடங்கியவர். சமீபத்திய டைம் இதழ் (ஏப்ரல் 5, 2004) ஒன்றில் 10 கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அவற்றுள் - பின்வரும் கேள்விகளுக்கு அவர் சொல்லிய பதில்கள் கவனத்துக்குரியவை. எழுபது வயதிலும் என்ன போடு போடுகிறார் என்று பாருங்கள். போகிற போக்கில் அவசரமாக நான் செய்திருக்கிற தமிழாக்கத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

"காலம்காலமாகப் பெண்கள் செய்துவருவதை ஆண்கள் செய்வதற்கானக் காலம் வந்துவிட்டது என்று சொல்லும்போது நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்?" என்கிற கேள்விக்குப் பின்வருமாறு பதில் சொல்லியிருந்தார்.

"வேலைக்குப் போகிற பெண்கள் குழந்தை கவனிப்பு, குடும்பத்தை நிர்வகித்தல் போன்ற வேலைகளைச் செய்யும் வரை, அவர்கள் ஒரு வேலையை அல்ல, இரண்டு வேலைகளைச் செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், முக்கியமாக - பெண்கள் மட்டுமே அன்பு காட்டியும் சீராட்டி வளர்க்கவும் செய்கிறார்கள், ஆண்களால் அவற்றைச் செய்ய இயலாது என்கிற எண்ணத்துடன் குழந்தைகள் வளர்கிறார்கள். பெண்கள் எந்த அளவுக்கு அக்கறையுடன் குழந்தைகளை வளர்க்கிறார்களோ அதே அளவுக்கு அக்கறையுடன் ஆண்களும் குழந்தைகளை வளர்க்கிற சமூகத்தை அடைவது அத்யாவசியமானதாகும்."

"சில இளம்பெண்கள் பெண்ணியவாதிகள் என்கிற அடையாளத்தை விட்டு ஓடுவதாகத் தெரிகிறது. பெண்களின் உரிமைகள் குறித்த தாகமுடையவர்களாக்க அவர்களை எப்படி உற்சாகப்படுத்துவீர்கள்?" என்கிற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கிற பதில் அமெரிக்காவிலும்கூட இன்னும் பெண்விடுதலை முழுமையாகச் சாத்தியப்படவில்லை என்பதை உணர்த்தும்.

"இளம்பெண்களுக்கு இந்த அடையாளத்துடன் பிரச்னை இருக்கிறதென்றால், அவர்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்பதே இன்னும் தெரியவில்லை என்று அர்த்தம். ஒரு வேலையை வாங்க முயற்சித்தபோது என் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கு உண்டான விழிப்புணர்வு, இளம்பெண்களுக்கு 10 அல்லது 15 ஆண்டுகள் வேலையில் இருந்த பிறகு, அவர்களுக்கு பதவி உயர்வுகள் மறுக்கப்படும்போது ஏற்படுகிறது. பெண்கள் இளமையில் பழமைவாதியாக இருக்கிறார்கள். வயதாக வயதாக அவர்கள் விழிப்புணர்வு பெற்றவர்களாக மாறுகிறார்கள். ஏனென்றால், வயதாக அவர்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள். எனவே, ஓர் இளம்பெண் இன்னும் பெண்ணியவாதியாகவில்லை என்றால், கொஞ்சம் காத்திருங்கள் என்றே நான் சொல்வேன்."

"ஓரினத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்குவதற்கானப் போராட்டம் முக்கியமானப் போராட்டமா அல்லது பிற முக்கியமான பெண்களின் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புதலா?" என்கிற கேள்விக்கு அவர் சொல்லியுள்ள பதில் அதைப் பெண்களின் பிரச்னை என்கிறது.

அவர் சொல்கிறார். "இது பெண்களின் பிரச்னை. பால்ரீதியான வித்தியாசம் பெண்கள் குழந்தை பெறுவதற்காக என்னும்போது மட்டுமே சரி என்கிற சித்தாந்தமே பெண்களை ஒடுக்குகிறது. பெண்களின் ஆரோக்கியம் பால்வித்தியாசத்தை இனப்பெருக்கத்திலிருந்து பிரித்துப் பார்ப்பதில் இருக்கிறது. இது ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் பொருந்தும். புஷ்ஷீம் வலதுசாரி அணியினரும் அளவுக்கு அதிகமாக இவ்விஷயத்தில் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், ஓரினத் திருமணங்களை எதிர்க்கிறவர்கள்கூட அரசியல் சட்டத் திருத்தம் வேண்டுமென்று கேட்கவில்லை."

***** ***** *****

சரியாகப் படிக்காத மாணவர்களைப் பெயிலாக்குவது இந்தியக் கல்விமுறையில் நாம் அறிந்ததே. தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது மூன்றாம் வகுப்புவரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக்கூடாது என்கிற வழிமுறையைக் கொண்டுவந்தார். அதற்காக - அந்தக் காலத்தில் அவர் விமர்சிக்கவும் பட்டார்.

சிகாகோ நகரத்தில் பெயிலாக்குகிற நடைமுறை இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் - மூன்றாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில் அவர்களிடையே குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படவில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆறாம் வகுப்பில் பெயிலானவர்களுக்கு அடுத்த வருடம் நடந்த தேர்வில், மாணவர்களின் தரம் முன்னைவிட மோசமாக இருக்க வாய்ப்பிருப்பதையும் அறிந்திருக்கிறார்கள். (ஆதாரம்: டைம் ஏப்ரல் 5, 2004)

எனவே, ஒரு குழந்தையை ஒரே வகுப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட வருடங்கள் இருத்தி வைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.

என்னைக் கேட்டால், எட்டாம் வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் பெயிலாக்கக் கூடாது. படிப்பில் மோசம் என்று தோன்றுகிற குழந்தைகளைப் பயிற்றுவிக்க பெயிலாக்குவது தவிர வேறு எத்தனையோ உருப்படியான வழிகள் உள்ளன.

No comments: