Tuesday, April 13, 2004

நதிகள் இணைப்பு

பா.ஜ.க.வுக்குத் தான் ஓட்டுப் போடப் போவதற்குக் காரணமாக நதிநீர் இணைப்பை அக்கட்சித் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ரஜினி. ரஜினி காரணமே சொல்லாமல் பா.ஜ.க.வுக்கு அவர் ஓட்டு என்று சொல்லியிருந்தாலும் அவர் ரசிகர்கள் ஜென்ம சாபல்யம் அடைந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே, அவர் சொல்லியிருப்பது சால்ஜாப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ரஜினியின் அறிக்கையைப் படித்தவுடன் தேர்தலில் நிற்கிற பிற கட்சிகள் தாங்கள் எவ்வளவு ஆண்டுகளாய் நதிகளின் இணைப்புக்குக் குரல் கொடுத்து வருகிறோம் என்று பட்டியலிட ஆரம்பித்து விட்டன. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்புப் பற்றிச் சொல்லியிருந்தால் ரஜினி தன் ஓட்டை அனைத்துக் கட்சிகளுக்கும் அளித்துச் செல்லாத ஓட்டாகியிருப்பாரா என்கிற கேள்வி குதர்க்கமானதோ யூகத்தின் அடிப்படையிலானதோ இல்லை. நதிகளின் இணைப்பை எதிர்க்கிற எந்தக் கட்சியும் இருக்க முடியாது. நதிகளின் இணைப்பு அனைத்துக் கட்சிகளின் கொள்கை என்கிற அரசியலாகி வருடங்கள் பல ஓடிவிட்டதை ரஜினி அறியவில்லை என்றும் சொல்ல இயலாது. தபசில் இருந்தாலும் எது நடக்கிறது எங்கே நடக்கிறது என்பதையும் எப்போது வரவேண்டும் என்பதையும் நன்கறிந்தவர் ரஜினி. ரஜினி ஒரு கோடி ரூபாயை நதிகளின் இணைப்புக்குத் தருகிறேன் என்று அறிவித்தபோதும் அதற்கடுத்த ஆண்டுகளிலும் பா.ஜ.க.தான் ஆட்சியிலிருந்தது. அடுத்தத் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காமல், பா.ஜ.க. உடனடியாகவே நதிகளின் இணைப்பைக் கடந்த ஆட்சியிலேயே செயல்படுத்தத் தொடங்கி இருக்கலாம். ஏன் செய்யவில்லை என்றெல்லாம் ரஜினி யோசிக்க மாட்டார். யோசிப்பார் என்று எதிர்பார்ப்பதும் கூடாது.

சொந்தக் காரணங்களுக்காக அல்லது காரணங்கள் இல்லாத அபிமானம் காரணமாக ரஜினி பா.ஜ.க.க்கு இத்தேர்தலில் ஓட்டளிக்க முடிவெடுத்து விட்டார். அதற்கு நியாயம் தேடி நதிநீர் இணைப்பை இழுக்கிறார் என்று தோன்றுகிறது.

நதிகளின் இணைப்பைப் பற்றி எடுத்துக் கொண்டால், தமிழில் அது குறித்து விரிவாகவும் அறிவுபூர்வமாகவும் உருப்படியாகவும் எழுதியிருப்பவர் பழ.நெடுமாறன் ஒருவர் மட்டுமே என்று எண்ணுகிறேன். அவர் புத்தகத்தின் சில பகுதிகளை ஞாநி சில மாதங்களுக்கு முன் தீம்தரிகிடவில் வெளியிட்டார். பழ.நெடுமாறன் தேர்தலில் நின்றால், நதிநீர் இணைப்புக் குறித்து உருப்படியாகப் பேசியதற்கும் எழுதியதற்கும் ரஜினியின் ஓட்டைக் கட்டாயப்படுத்திக் கேட்கலாம். அல்லது, அப்போது பா.ஜ.க.வுக்கு ஓட்டளிக்க ரஜினி வேறு காரணங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருக்குமோ?

ரஜினியும் அவர் ரசிகர்களும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். தம்முடைய திறனை நிரூபிக்கட்டும். அதற்காக அடுத்தவர்களை முட்டாளாக்கும் காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.

No comments: