Thursday, April 15, 2004

இன்னும் கொஞ்சம் பழைய கவிதைகள்

என் கல்லறை வாசகம்:

எப்போதேனும்
எனைத் தேடி
இங்கு
வர வேண்டாம்
பூக்களுடன்

மரித்தவருக்கு
மரியாதை செய்ய
பூக்களைக் கொல்வதில்
விருப்பமில்லை
எனக்கு

நீங்களும்
நானும்கூட
அறிந்திராத ஏதோவொன்றாய்
எப்போதும் சிரிக்கிறேன்
உங்கள் வீட்டில்
நான்

அவ்வப்போது
அடையாளம் கண்டு
சிநேகமாய்
முறுவலிக்கும்
உங்கள் வீட்டு
பூச்செடிகள்

(மனுஷ்ய புத்திரன் "இங்கே யாரும் இல்லை" என்று கல்லறை வாசகம் என்னும் தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருப்பதாக நினைவு. அதைப் படித்த பாதிப்பில் எழுதியது மேலே இருப்பது)

**** **** ****

இதுவும் காதல்தான்:

நீயும்
நானும்
பேசினோம்
விவாதித்தோம்
குரல் உயர்த்தினோம்
சண்டை போட்டோம்
அடித்துக் கொண்டோம்
ஒருவரையொருவர்
ரணமாகக் கீறிக் கொண்டோம்
பிறர்
குருதி குடித்தோம் சுவைத்து
ஒரு மௌன கணத்தின்
ஆசுவாசத்தில்
ஆரத்தழுவி ஆலிங்கனம்
செய்து கொண்டோம் முரடர்களாய்
முத்தங்கள் பரிமாறிக் கொண்டோம்
உன்மத்தர்களாய்
'நாளைக்கு பார்க்கலாம்' என்ற முணுமுணுப்பில்
மெல்ல விலகி கையசைத்து
நடக்க ஆரம்பித்தோம்
வெவ்வேறு திசைகளில்
ஏமாற்றங்களை அடைகாத்தபடி

***** ***** *****

வழி விடுதல்:

என் கவிதை
உனக்குள்
உண்டாக்குகிற
சலனங்களையும்
மௌனங்களையும்
நான் அறிவேன்
பிடிக்காதவள் போல
பார்வையால் புறந்தள்ளி
போய்க்கொண்டிரு
வழக்கம்போல
நீ

(இக்கவிதைகள் 2003 வசந்தகாலத்தில் ஓர் நாள் எழுதப்பட்டவை)

No comments: