மாற்றுக் கருத்து சொன்னால் தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் ஆட்டோ அனுப்புகிறார்களாம். அன்பான மிரட்டல்கள் வருகின்றனவாம். இணையத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னால் ஆட்டோ வராது, ஆனால் அதற்கினையான வார்த்தைகள் வரும். வம்புகளில் இழுத்துவிடப் படுவோம். நம்மைப் பற்றி மட்டுமில்லாமல் நம் முன்னோர்களையும் திட்டுகிற உரிமை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆபாசமான வசை பாடுவதா கருத்துச் சுதந்திரம் என்று கேட்டால் அவர்களைப் பொருத்தவரை வசைகளும் கருத்தாக்கமே என்று சிலர் நியாயப்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு நம் சார்பாக அவர்கள் விஷயத்தைத் திரித்து விடுகிறார்கள். அரசியலில் இது எல்லாம் சகஜம் என்பதுபோல் வாழ்க்கையிலும் ஆகிவிட்டது. நேரடியாகச் சென்று முரண்களைச் சுட்டிக் காட்டிக் கேட்டால், சப்பைக்கட்டு பதில்களோ நான் சொல்லாததைப் பத்திரிகை பிரசுரித்து விட்டது என்று பிறர் மேல் பழிபோடும் காரணங்களோ கிடைக்கலாம். சொல்கிற கருத்து சரியோ தவறோ அதில் கடைசிவரை உறுதியாக நிற்க வேண்டும் என்கிற கொள்கை ஏதும் பொதுவாழ்வில் இருப்பவர்களில் பெரும்பாலோரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சூழ்நிலைக்கேற்றவாறு எப்படித் தப்பித்துக் கொள்வது என்பதிலேதான் அனைவரும் மும்முரமாக இருக்கிறார்கள். உண்மையிலும் கூட எத்தனை கோணங்கள்!
அமெரிக்க அரசியலிலும் ஒன்றும் வாழ்ந்துவிடவில்லை. நிலைமை இதேதான். என்ன, ஆட்டோ அனுப்பப்படும் என்றெல்லாம் யாரும் மிரட்ட முடியாது. ஆனால், இருக்கிற பேச்சு, எழுத்து, அரசியல், சட்டம் ஆகியவற்றின் துணையுடன் மணிக்கணக்காகப் பேசி விஷயத்தை spin செய்து விடுவதில் மன்னர்கள். புஷ் ஈராக் மீது போர் தொடுத்தது சரியா என்று விவாதிக்க ஆரம்பித்தால், கிளிண்டனிலும் மோனிகாவிலும் கொண்டு நிறுத்துவார்கள். மாற்றுக் கருத்து சொல்கிற எதிராளியின் தனிப்பட்ட பலவீனங்கள் என்னவென்று தேடுவதிலும், எதிராளிக்கு நோக்கம் கண்டுபிடிப்பதிலுமே இங்குள்ள அரசியல் கட்சிகள் சிரத்தை காட்டுகின்றன.
வலதுசாரி பழமைவாதியான வில்லியம் எப். பக்லியிடம் (William F. Buckley) "நீங்கள் 45 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளீர்கள். இவ்வளவு புத்தகங்களை முனைப்புடன் எழுத உங்களைத் தூண்டியது எது?" என்று கேட்கப்பட்டது.
அவர் பதில்: "என்னுடைய எதிரி என்னை விட அதிகமாக எழுதிவிடக் கூடுமோ என்கிற பயம்தான்"
அமெரிக்க அரசியலில் பரஸ்பரம் குழிபறித்தலும் மாற்றுக் கருத்துடையோரை மேலே வரவிடக் கூடாது என்கிற எண்ணமும் எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்பதை மேற்கண்ட கேள்வி-பதில் உணர்த்தும்.
ஆலிவர் ஸ்டோன் புகழ்பெற்ற இயக்குனர். ஆஸ்கார் பரிசு வென்றவர். சர்ச்சைக்குரிய விஷயங்களைப் படமெடுப்பவர் என்ற பெயரெடுத்தவர். "புஷ் குடும்பத்தைப் பற்றிய வரலாற்றைச் சொல்கிற தொலைகாட்சி படத்தை எப்போதாவது செய்வீர்களா?" என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அவர் பதில். "அந்த மாதிரி ஏதும் நான் செய்ய முயன்றால், ஓர் அடி படம் எடுப்பதற்குள் நான் அடுத்தடுத்தும் மூர்க்கமாகவும் தாக்கப்படுவேன். என் முதுகில் அந்த வடுக்களைச் சுமப்பதற்கு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று பதில் சொல்லியிருக்கிறார்.
என்ன அமெரிக்காவிலும், மனிதர்கள்தானே இருக்கிறார்கள். இப்படித்தான் இருக்கும் என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
அமெரிக்க அரசியலில் டெமாக்கிரட்டுகள், ரால்ப் நேடருக்குப் போடும் வோட்டு புஷ்ஷீக்குப் போடப்படும் மறைமுக ஓட்டு என்று பிரச்சாரம் செய்கிறார்களாம். ஜான் கெர்ரிக்குப் போடப்படும் ஓட்டுகள் புஷ்ஷீக்குப் போடப்படும் ஓட்டு என்று ரால்ப் நேடர் பதிலடி கொடுக்கக் கூடும். பயப்படாமல் பதிலடி கொடுக்கக் கூடியவர்தான் அவர். சமீபத்தில் டைம் இதழில் ஒரு கட்டுரையில் ஜான் கெர்ரி ஜெயிக்க வேண்டுமானால் ஜான் மெக்எயினைத் தன் துணை ஜனாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று ஒருவர் எழுதியிருந்தார். படித்ததும் சிரித்துவிட்டேன். இரு கட்சி முறையிலிருந்து ஒரு கட்சி முறைக்கு வழி சொல்கிறாரே என்று. ஓட்டு தேவைப்படும்போது விஷயங்களைக் குறித்துத் தங்களின் தீவிரமான கருத்தாங்களைக் காட்டிக் கொள்ளாமல், ஜெயித்தபின் அவற்றை மெதுவாக அமுலுக்குக் கொண்டுவருவது இங்கே இரண்டு கட்சிகளின் செயல்பாடாகவும் இருக்கிறது. ஜான் கெர்ரி ஜெயிக்க வேண்டுமானால், அதற்கு என்னுடைய ஆலோசனை. ரால்ப் நேடரின் ஆதரவு பெற்று அவரை ஜான் கெர்ரி தன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இதற்கு ரால்ப் நேடர் ஒத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். ஆனால் ரால்ப் நேடர் மாதிரியான ஒருவரைத் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால், இன்னும் நான்கு வருடங்களுக்கு புஷ் தொடர்வதற்கான வாய்ப்புகள் இப்போதைக்குப் பிரகாசமாகத் தெரிகின்றன. தேசபக்தி, பயங்கரவாதம் என்கிற கோஷங்களில் புஷ் வெற்றி பெற்றுவிடக் கூடும். ஜெயிக்கிறாரோ இல்லையோ அமெரிக்க அரசியலுக்கு ரால்ப் நேடர் மாதிரியானவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்திய தமிழ்நாட்டு அரசியலில் ரால்ப் நேடருக்குச் சமமாக யாரைச் சொல்ல முடியும் என்று யோசிக்கிறேன். ரால்ப் நேடர் ஜெயிப்பது என்பது கனவுதான். ஆனாலும், அவர் இருப்பது மற்ற வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதிகளிலும், செயல்பாடுகளிலும் கவனம் காட்ட வைக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment