Thursday, April 22, 2004

கோயில் விளையாட்டு

(திண்ணையில் முன்னர் பிரசுரமான என் சிறுகதை ஒன்று. திண்ணைக்கு நன்றி.)

கோயில் விளையாட்டு
- பி.கே. சிவகுமார்

விழித்ததும் 'இன்னைக்கு கோயிலுக்குப் போகிற நாள்' என்ற ஞாபகம் வந்தது சரணுக்கு. பக்கத்தில் கீதாவும், அவள் கழுத்தைக் கட்டியவாறு குழந்தை நிவேதாவும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். மைக்ரோ வேவில் காபி வைத்தபோது, 'இவள் குழந்தையுடன் அல்லாடிக்கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல் கிடப்பாள். சாமி தரிசனம் முடிந்தபின்னால்தான் பல்லிலே பச்சைத் தண்ணீர்கூட விடுவாள்' என்ற நினைப்பு வந்தது. 'கோயிலுக்குப் போகிற நாட்களில் செய்வதுபோலவே, இன்னைக்கும் ஆபிஸிலிருந்து சீக்கிரம் வந்துவிட வேண்டும்' என்று சொல்லிக் கொண்டான்.

அவனுக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை உண்டு. ஆனால், "உள்ளம் தொட்டு நின்றால் போதுமடா" என்றுணர்ந்த பக்தி அது! அம்மாவால் சிறுவயது முதலே இறைநம்பிக்கையூட்டி வளர்க்கப்பட்டதால், கடவுள் குறித்த அறிவியல்பூர்வமான கேள்விகள் பெரும்பாலும் அவனிடம் எழுந்ததில்லை. கல்லூரியில் படித்த காலங்களில் சிலவேளைகளில் தன்னை ஒரு agnostic என்று அவன் நினைத்துக் கொண்டதுண்டு. அதுவும்கூட அந்தப் பருவத்திற்கேயுரிய இயல்பான உணர்ச்சிபோல் தோன்றிப் பின் மெல்ல மறைந்து விட்டது.

சிறுவயதில் அம்மாவின் கைப்பிடித்து வாரம் இரண்டு மூன்று முறை கோயில் போகும் வழக்கமிருந்தது. அப்போதெல்லாம் கூட கோயிலின் சிற்பங்களும், பொரி வாங்கிப் போட்டால் கூட்டமாய் வந்து மொய்க்கும் கோயில் குளத்து மீன்களும், மெல்லிய குரலில் சன்னமாய் சுருதி பிசகாமல் அவ்வப்போது தேவாரம் இசைக்கும் பெண்டிரும், நெய்மணக்கக் கிடைக்கும் வெண்பொங்கல் பிரசாதமும், சாமி கும்பிட்டு முடித்தபின் ஆசுவாசமாக அமர்ந்து பெண்கள் பேசும் குடும்பக்கதைகளுமே, அவனைப் பெரிதும் கவர்ந்தவை. அம்மாதான் பாலும் தௌ¤தேனும் என்றும், நாள் என்செய்யும் வினைஎன் செய்யும் என்றும் எளிமையாய்த் தொடங்கி, தமிழ் இலக்கியத்தின்மேல் அவனுக்குக் காதல் பிறக்கச் செய்தாள். வளர்ந்த பின்னர், தமிழ் பக்தி இலக்கியங்களில் துய்க்க துய்க்க, அவற்றை ஆழ்ந்துணர்ந்து அனுபவிப்பதற்காவது கடவுள் நம்பிக்கை இருப்பதாக பாவித்துக் கொள்வது அவசியமென்று அவன் உணர்ந்து கொண்டான்.

வீட்டோடு தங்கிப் படிக்கும்வரையிலும் அம்மாவின் துணையோடு கோயில் போகும் பழக்கமும் தொடர்ந்தது. கடவுளை ஒரு தோழனாக பாவிப்பதற்குரிய மனோபாவத்தை அவன் அம்மாவிடமே கற்றுக் கொண்டான். இத்தனைக்கும், அம்மா சோமவார விரதம், கிருத்திகை விரதம் என்று எல்லா விரதங்களையும் அனுஷ்டிப்பாள். ஆனால், கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என்கிற விண்ணப்பங்கள் ஏதும் வைக்க மாட்டாள். 'சாமி மட்டும்தான் நாம கும்பிடணும். நமக்கு எது நல்லதோ அதை அவரே தருவார்' என்று அவள் பலமுறை சொன்னது வேதவாக்காய் மனசில் பதிந்துவிட்டது. அதனால்தானோ என்னவோ, நமக்கு வேண்டியதை கடவுள் தருவார் என்பதால், வளர்ந்தபின் கல்லூரியில் சேர ஊரைவிட்டு வந்தபின், கோயிலுக்குப் போகும் பழக்கமும் அவனுக்குக் குறைந்து போனது. வருடம் ஒருமுறை ஊரில் விசேஷமாய் கொண்டாடப்படும் பங்குனி உத்திரத்தின்போது ஒன்றுசேரும் சொந்தக்காரர்களையெல்லாம் பார்க்க, லீவு போட்டுவிட்டு ஊருக்குப் போவான். அப்போது கோயிலுக்குப் போவதோடு சரி என்றாகிவிட்டது. இவன் பிறந்தநாட்களின் போது மட்டும் அம்மா தவறாமல் கோயிலுக்குப் போகச் சொல்லுவாள். சில சமயம் போயிருக்கிறான். சில சமயம் போக முடிந்ததில்லை.

யு.எஸ். வந்தபின் - எப்போதாவது நண்பர்களுடனும், சமைக்க முடியாது சோம்பிக் கிடக்கும்போது கோயில் கேப்டீரியாவில் புளியோதரையும், மெதுவடையும் சாப்பிடவும் கோயிலுக்குப் போயிருக்கிறான். அமெரிக்கக் கோயில்களின் கடவுள்கள் எல்லாம் கூட, அமெரிக்காவைப் போலவே பணக்காரர்கள் என்று ஜோக்கடித்திருக்கிறான். கிரானைட் ப்ளோர் என்ன, ஒவ்வொரு சாமிக்கும் குட்டிப்பிரகாரத்துடன் சன்னதி என்ன, எல்லாச் சாமிகளுக்கும் இடம் என்கிற சமத்துவம் என்ன என்று டாலரில் இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட கோயில்கள் அவனுக்கு ஆச்சரியமளித்தாலும், கரியும் எண்ணெய்ப் பிசுக்குமேறிய ஊர்க்கோயிலின் வாசமும், அதன் கற்பிரகாரமும் கவர்ந்ததுபோல் இந்த நவீனக் கோயில்கள் அவனை ஆகர்ஷிக்கவில்லை.

கல்யாணம் ஆனதும் எல்லாம் மாறிப்போனது. கீதா ஒரு தீவிர பக்தை. விரதங்கள் அனுஷ்டிப்பதில் அம்மாவைப் போன்றவள். இப்படித்தான், கல்யாணம் ஆகிவந்தவுடன் "இந்த சனி ஞாயிறில் நியூயார்க் சுத்திப் பாக்க போகலாமா" என்று கேட்டான். "மொதல்ல பக்கத்துல இருக்கிற கோயிலுக்குக் கூட்டிப் போங்க" என்றாள் அவள். "என்ன இது! பொண்டாட்டி வேணும்னு சாமியாரினியைக் கட்டிட்டு வந்துட்டேன்போல" என்று கிண்டலடித்தாலும் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற அவளின் ஆசையைப் புரிந்து கொண்டான். வாரமொருமுறை என்றில்லாவிட்டாலும் அடிக்கடி - மாதத்திற்குக் குறைந்தது இருமுறையேனும் - கோயிலுக்குப் போவது வழக்கமாகிப் போனது. அவன் அலுவலகத்தில் இருந்து வருவதற்குள் நேரமாகிவிடும் என்பதாலும், வாரவிடுமுறைகளின் கூட்ட நெரிசலில் கோயிலுக்குப் போவதை அவன் விரும்புவதில்லை என்பதாலும் அவளும் வாரமொருமுறை அழைத்துச் சென்றேயாக வேண்டும் என்று சத்தாய்ப்பதில்லை. சாமி தரிசனம் முடித்தபின் அவள் முகத்தில் தெரிகிற திருப்தியும் பரவசமும் அவள் அழகைக் கூட்டுவதாக அவனுக்குத் தோன்றும். அதைப் பார்ப்பதற்காகவே முடிந்தபோதெல்லாம் அவளை கோயிலுக்கு அழைத்துச் செல்வான்.

கோயிலுக்குச் சென்றால், அவள் ஒவ்வொரு சாமிக்கும் நேரம் எடுத்து நெக்குருக வேண்டிய பின்னே அடுத்த சாமிக்குச் செல்வாள். சிலநேரங்களில் பக்திப் பரவசத்தில் அவள் கண்களில் மாலை மாலையாய் நீர் பெருகும். "பார்க்கிறவர்கள் யாரேனும் நான் உன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், அதை நீ சாமியிடம் முறையிடுவதாகவும் நினைத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்று அவன் கிண்டலடிப்பான். "எல்லாமே உங்களுக்குக் கிண்டல்தான்" என்று அதை ஒதுக்கிவிட்டாள். அவன் வேகவேகமாய் கும்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்து விடுவான். "பொண்டாட்டிகூட நின்னு சாமிகும்பிட முடியாம கூட அப்படி என்ன அவசரம்" என்று அவள் முதலில் நிறைய ஆதங்கப்பட்டாள். நாளாக ஆக அவன்போக்கில் விட்டுவிட்டாள்.

நிவேதா பிறந்தபின் - இரண்டே கால் வருஷங்களாக - வாரம் ஒருமுறை கோயிலுக்குப் போவது கட்டாயமாகிப் போனது. 'வெளிநாட்டிலே இருக்கிறோம். குழந்தைக்கு நம்ம வேல்யூஸ், கலாச்சாரம் எல்லாம் சொல்லித் தந்து வளர்க்க வேணாமா" என்று காரணம் சொன்னாள்.

அவன் குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டிருக்கும்போது கீதா எழுந்துவந்தாள்.

"குட்மார்னிங்! என்னை எழுப்பறதுதானே, லஞ்ச் ரெடிபண்ணி இருப்பேனே."

"குட்மார்னிங்! எனக்கு மட்டும்தானே, வெளியே சாப்பிட்டுக்கறேன்"

"ஐயோ அதுல என்ன சிரமம், வெளியிலே அடிக்கடி சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும், பிரேக் பாஸ்டுக்கு சீரியல்தானே சாப்பிடுவீங்க. இட்லி மாவு இருக்கு. இட்லி ஊத்தறேன். லஞ்சுக்கு அதை எடுத்துப் போங்க."

வேண்டாம் என்று சொல்லி இவளை ஜெயிக்க முடியாது என்று நினைத்தபடி "சரி" என்றான்.

டிவியில் டிராபிக் ரிப்போர்ட் பார்த்தபடி சீரியல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கண்களைக் கசக்கியபடி எழுந்துவந்த குழந்தை அப்பா மடியில் வந்து உட்கார்ந்தாள்.

"வணக்கம் செல்லம். அம்மா என்ன சொல்லி இருக்கேன்" என்றாள் கீதா.

"வன்கம் மாமி" என்ற குழந்தை "சாமிக்கு பஸ்ட் வன்கம் சே பண்ணும். பிரே பண்ணும்" என்றாள். (பண்ணும் = பண்ணனும்)

"அப்போ எழுந்ததும் நீ சாமிக்கு வணக்கம் சொன்னியா"

"மாத்தேன். ஐ வன்கம் சாமி. சாமி நோ வன்கம்" (மாட்டேன். நான் சாமிக்கு வணக்கம் சொல்றேன். ஆனால், சாமி பதிலுக்கு வணக்கம் சொல்றதில்லை.)

சரணுக்கு சிரிப்பில் புரையேறிக் கொண்டது. "அப்பா லொள்ளு அப்படியே வந்திருக்கு" என்று சரண் தலையை தட்டிக் கொடுத்தாள் கீதா. பின் - "நீ கண்ணை மூடி கும்பிட்டு வணக்கம் சொன்னா, சாமியும் உனக்கு வணக்கம் சொல்லுவார். வா... சாமி கும்பிட்டுட்டு, பிரஷ் பண்ணலாம். அப்புறம் அம்மா இட்லி ஊட்டிட்டே டிவிலே பூ ஸ்டோரி போடறேன்" என்று மகளை அழைத்தாள்.

"அய்ய்ய்... பூ ஸ்டோரி" என்றபடி அவன் மடியை விட்டு இறங்கி ஓடினாள் குழந்தை.

"சரி, சாயந்திரம் கோயிலுக்குப் போக ரெடியாக இருங்கோ" என்றபடி ஆபிஸீக்குக் கிளம்பினான் முரளி.

"பை பை டாடி, ஐ லவ் யூ" - சாமி க்ளோசட் அருகிலிருந்து குழந்தையின் குரல்.

"பை பை செல்லம். ஐ லவ் யூ டூ. கீதா போயிட்டு வரேன்."

"லஞ்ச் பேக் எடுத்துக்கிட்டீங்களா? பாத்து பத்திரமா கார் ஓட்டுங்க" என்ற பதில் வந்தது வழக்கம்போல.

***** ***** ***** *****

ஆபிஸிலிருந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்ததும் "டாடி" என்று கத்தியபடி ஓடிவந்த குழந்தை "வீ கோ கோவில்?" என்றாள்.

குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியவாறே, "ஆமாம் செல்லம்" என்றான் சரண்.

"அய்ய்ய்.... மாமி... வீ கோ கோவில் வீ கோ கோவில்" என்று கூச்சல்.

"கீழே இறங்கு. அப்பா காபி சாப்பிடட்டும்" என்றபடி வந்த கீதா "இந்தாங்க காபி" என்றாள்.

"யூ தூக்கு மீ" என்று அம்மாவிடம் கைமாறினாள் குழந்தை.

வழக்கம்போல - மூணாவது ப்ளாக்கில் ப்ளவர் பொக்கே விற்கிற குஜராத்தி அம்மாவிடம் பூ வாங்கி அதை கோயிலுக்குத் தொடுத்து வைத்திருந்தாள் கீதா.

கோடையானதால் மாலை ஆறுமணிக்கு மேலும் வெயில் குறையவில்லை. கோயிலுக்கு போகிற வழியில் - அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸீக்குள் இருந்த பார்க்கையும் ஊஞ்சலையும் பார்த்துவிட்டாள் குழந்தை. "டாடி பார்க்.. மாமி ஸ்விங். ஐ வாண்ட் ஸ்விங், ஐ வாண்ட் ஸ்விங்" எனக் கேட்டு கார்சீட்டில் இருந்து எம்பிக் குதிக்க முயற்சித்தாள். குழந்தைக்கான கார்சீட்டும், அதன் பெல்ட்டும் முழுதும் எம்பவிடவில்லை.

"இன்னைக்குக் கோயிலுக்குப் போய்ட்டு நாளைக்கு அம்மா பார்க் கூட்டிட்டு போறேன்".

"நோ கோவில்... ஐ வாண்ட் ஸ்விங்" என்று உரத்த குரலெடுத்து அழுகை.

"அழாம கோயில் வந்தா, அம்மா லாலிபாப் தருவேன்"

"நோ லாலிபாப், ஐ வாண்ட் ஸ்விங்... டாடி ஐ வாண்ட் ஸ்விங்"

"அம்மா நெறிப்படுத்தும்போது அப்பா தலையிடாமல் இருக்க வேண்டும், அப்பா நெறிப்படுத்தும்போது அம்மா தலையிடாமல் இருக்க வேண்டும்" என்று கீதா எங்கேயோ படித்த "பேரண்ட்டல் டிப்"புக்கேற்ப, காது கேட்காதவன்போல் கார் ஓட்டலானான் அவன்.

"சரி அப்போ, நோ லாலிபாப், நோ ஸ்விங்"

அரை நிமிடம் அழுகை; அரை நிமிடம் சிணுங்கல்; அரை நிமிடம் அமைதி; அதற்கப்புறம் - "ஐ வாண்ட் ரெட் கலர்"

"சரி, அழுவாம கோயில் வந்தா, அம்மா ரெட் கலர் லாலிபாப் தரேன்."

அதற்கப்புறம் அழாத குழந்தை, கொஞ்ச நேரத்தில் கார் சீட்டிலேயே தூங்கிப் போனாள். கோயிலுக்குச் சென்று கார் சீட்டிலிருந்து எடுத்ததும்தான் விழித்தாள்.

இப்போதெல்லாம் கோயிலில் அவனுக்கு வேலை அதிகமாகி விட்டது. முன்புபோல வேகமாக சாமி கும்பிட்டுவிட்டு வந்து உட்கார்ந்துவிட முடிவதில்லை. குழந்தை தொந்தரவு இல்லாமல் கீதா சாமி கும்பிட வேண்டும் என்பதற்காக குழந்தையை பார்த்துக் கொள்கிற வேலையும், குழந்தையும் சாமி கும்பிடப் பழக வேண்டும் என்பதற்காக - ஒவ்வொரு சன்னதி முன்னும் நின்று சாமி கும்பிட்டு - குழந்தைக்கும் கும்பிட கற்றுத் தருகிற வேலையும்.

கோயிலில் உள்ளே நுழைந்ததும் சிவன் சன்னதி முன்னிருந்த ஆலய மணியைப் பார்த்த குழந்தை, "டாடி, ஐ வாண்ட் பெல்" என்றாள்.

"சரி, அங்கே போகும்போது நீ மணி அடிக்கலாம். இப்போ எலபண்ட் சாமி கும்பிடலாம் வா" என்றான் சரண்.

பிள்ளையார் முன் நின்று "சாமி, அம்மா காப்பு, அப்பா காப்பு, ஆல் உயிர் காப்பு" (காப்பு = காப்பாத்து) என்று அவசரமாய் கிளிப்பிள்ளையாய் சொன்னாள்; குனிந்து தரையைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்; பின் நிமிர்ந்து "டன் டாடி, ஐ வாண்ட் பெல்" என்றாள்.

"நல்லா விழுந்து கும்பிடு" என்றாள் பக்கத்திலிருந்த கீதா. குழந்தை அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல், மணியடிக்க ஓடினாள். பின்னாலேயே போன சரண், அவளைத் தூக்கி மணியடிக்க உதவி செய்தான். ஐந்தாறு முறை மணியடித்த பின்னும் குழந்தைக்கு ஆசை ஓயவில்லை. "ஐ வாண்ட் மோர்" என்றாள். "போதும். நம்ம டர்ன் முடிஞ்சு போச்சு. மத்தவங்க மணி அடிக்க வேணாமா" என்று சொல்லிக் கீழே இறக்கிவிட்டான். அதற்குள் - கொண்டுவந்த பூவை ஆரம்பிக்கப்போகும் முருகர் அபிஷேகத்திற்குக் கொடுக்கப் போன கீதாவைப் பார்த்துவிட்டு, "மாமி, ஐ வாண்ட் கிவ்" என்று ஓடினாள்.

ஒவ்வொரு சன்னதிக்கும் வேகமாக ஓடினாள்; ஒன்றிரண்டு சன்னதியருகே ஆராதனைத் தட்டும் குங்குமமும் இருந்தன; குங்குமத்தை எடுத்து நெற்றியில் கோணல்மாணலாக இட்டுக் கொண்டாள்; பின் கண்களை மூடிக்கொண்டு "டாடி, ஊது மீ" என்றாள். சில நொடிகள் கைகூப்பி வணங்கினாள்; அடுத்த நொடி கன்னத்தில் ஒருமுறை போட்டுக் கொண்டாள்; சன்னதியை ஒருமுறை ஓடிச் சுற்றிவந்தபின் "டன் டாடி" என அறிவித்தாள். "கோயிலுக்குள்ளே அவளை ஓடவிடாதீங்கோ. கைப் பிடிச்சிக் கூட்டிப் போங்க" என்றாள் கீதா வழக்கம்போல. "நீ நிதானமா கும்பிட்டுட்டு வா, நான் பாத்துக்கறேன்" என்றான் அவன். ஆஞ்சநேயரைப் பார்த்ததும் மலர்ந்து, "டாடி, மன்க்கி சாமி" என்று மகிழ்ந்தாள் குழந்தை.

எல்லாச் சன்னதியும் சுற்றி முடித்தபின், அபிஷேகம் நடந்து கொண்டிருந்த முருகர் முன்வந்து அமர்ந்தனர். குழந்தை நெற்றி முழுதுமிருந்த குங்குமத்தைச் சரியாக்கி நேர்படுத்தினாள் கீதா. சாமி முன் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள்களையும், வாழைப்பழச் சீப்பையும் பார்த்தவள் "மாமி... ஆப்பிள்" என்று சத்தமாகக் கத்தினாள். "அது சாமிக்குப் படைக்கறதுக்கு. கார்ல ஆப்பிள் இருக்கு. நான் அப்புறமா தரேன்" என்றாள் கீதா. அடிக்கடிக் கோயில் வருவதால் பரிச்சயமாகிப் போன - அபிஷேகம் செய்து கொண்டிருந்த - குருக்கள் குழந்தையின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்து நட்புடன் சிரித்தார். குழந்தை அதற்குள் கவனம் மாறி, பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்களின் கைக்குழந்தையைக் காட்டி "டாடி... பேபி" என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். "உஷ். எல்லோரும் சாமி கும்பிடும்போது சத்தம் போட்டு பேசக் கூடாது" என்று எச்சரித்த கீதா "அப்பா மடியிலே அமைதியா உட்காரு" என்றாள்.

அபிஷேகம் முடிந்து ஆரத்தி வந்தது. குழந்தையும் பவ்யமாகத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிறபோது குழந்தைக்கு ஆப்பிளும் வாழைப்பழமும் கொடுத்தார் குருக்கள். "டேங்க் யூ" என்று ஆப்பிளை மட்டும் வாங்கிக் கொண்டாள். பின் - "டாடி, சாமி நோ ஷேரிங்.. அங்கிள் ஷேரிங்" என்றாள். பளீரெனச் சிரித்துவிட்ட குருக்கள் "நல்லாப் பேசறியே" என்று குழந்தை கன்னத்தைத் தட்டிவிட்டு வாழைப்பழத்தையும், அபிஷேகப் பூவையும் கீதாவிடம் கொடுத்தார். "பேச்சுக்கு ஒரு குறைச்சலும் இல்லை" என்ற முனகிய கீதா, இவன் முகத்தில் தெரிந்த முறுவலைப் பார்த்து, "உன் அப்பாக்கு நீ செய்யறதெல்லாம் பெருமைதான் போ" என்று அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில் சொன்னாள்.

கோயிலைவிட்டுக் கிளம்புவதற்குமுன், கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தபோது, ஆப்பிளை வைத்து சில நிமிடங்கள் விளையாடினாள் குழந்தை. பின்னர் "மாமி, யூ ஹேவ் இட்" என்று கொடுத்துவிட்டாள். "அப்பவே எனக்குத் தெரியும் நீ ஆப்பிள் சாப்பிடமாட்டேன்னு" என்றாள் கீதா. "வீட்டுக்குப் போகலாமா" என்று சற்று நேரம் கழித்துக் கேட்டான் சரண். "சரி" என்று எழுந்தாள் கீதா. "மூலவர் முன்னாடி விழுந்து கும்பிட்டுட்டு வந்துடறேன்" என்று போனான். "அப்பாவோட போய் நீயும் விழுந்து கும்பிடு" என்றாள் அவள் குழந்தையிடம். சாஷ்டாங்கமாக விழுந்து அவன் கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஒடிவந்து முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்ட குழந்தை "டாடி, லெட்ஸ் ப்ளே ஹார்ஸ்" என்றாள் உற்சாகமாக. "வீட்டிலே ஹார்ஸ் விளையாடலாம், இப்போ கீழே இறங்கி நீயும் விழுந்து கும்பிடு" என்றான் அவன். பின்னால் வந்த கீதா குழந்தையை அவன் முதுகில் இருந்து தூக்கி இறக்கி விட்டாள். பக்கத்திலிருந்த நாலைந்து பேர் மெல்லச் சிரித்தார்கள். "இவ பண்ற அட்டகாசம் தாங்கல" என்று முணுமுணுத்த கீதா, முழந்தாளிட்டு மூலவரைச் சேவித்து எழுந்தாள்.

படிகளில் இறங்கும்முன், "படிக்கட்டுல அப்பா கையைப் பிடிச்சிட்டுதான் வரணும்" என்றாள் கீதா. "ஓகே மாமி." அவன் கையைப் பிடித்துக் கொண்டு, "ஒன்", "டூ" என்று சத்தமாக ஓவ்வொரு படிக்கும் நம்பர் சொல்லியபடி குதித்து இறங்க ஆரம்பித்தாள். "த்ரீ" என்று குதித்து சட்டென நின்றவள் - திரும்பி, கைநீட்டி "மாமி, கிவ் மீ லாலிபாப்" எனக் கேட்டாள்.

No comments: