Thursday, May 27, 2004

நகரம்

சப்-வேயிலிருந்து மேலேறி வந்தவுடன்
நடப்பதுபோல ஓடுகிற லாகவம்
ரெட் லைட்டும் வாக் சைனும்
வருவதற்கு முன்னே
சாலையைக் கடக்கிற தைரியம்

கிம் மி அ குவார்ட்டர் என்று
தட்டேந்தியபடி கேட்கிறவனை
புன்னகை செத்துபோன முகத்துடன்
உணர்ச்சியற்று
ஒதுக்கித் தள்ளுகிற கவலை

பிக் ஆப்பிள் என்றும்
நியூ யார்க் என்றும்
வாய் பிளந்து பார்த்தபடி
போட்டோக்கள் எடுத்துக் கொள்கிற
ஆர்வம்

மற்ற பகுதிகளைத் திறந்துகாட்டி
மேக்கப்பால் முகத்தை மூடிக் கொள்ளும்
பெண்களைப் பின்தொடர்ந்து
காமுறும் கண்கள்

கோட்டு சூட்டு போட்டபடி
பிளாட்பார வண்டிகளில்
ஹாட் டாகும் ஸ்டீக்கும் சாப்பிட்டுவிட்டு
அடுத்த மீட்டிங்குக்கு ஓடுகிற அவசரம்

விசிலடித்தும் கைகாட்டியும்
டாக்ஸியை நிறுத்தச் சொல்லி
தொற்றிக் கொள்கிற தேவைகள்

ரேடியோ சிட்டி மியூசிக் ஹாலை
மியூசிக் ஆல்பம்
வெளியிடும் கனவுகளோடு
வெறிக்கும் கண்கள்

கனடா விசா கிடைக்குமா
நயகராவை கனடா பக்கமிருந்து
பார்க்க முடியுமா வென்று
புளிசாதத்துடன் கவலையை
மெல்லுகிற வாய்

பார்க்கிங் கிடைக்காமல்
சுற்றி சுற்றி வர வேண்டியிருக்கிறதே
என்றலுத்துக் கொள்கிற கார்

நியூஜெர்ஸி டிரான்ஸிட்டோ
லாங் ஹைலேண்ட் ரயில்ரோடோ
மெட்ரோபாலிடன் டிரான்ஸ்போர்ட்
அதாரிடியோ பிடித்து
வீடு சேர்கிற எண்ணத்துடன்
பிழையுடன் புரோகிராம்
தட்டும் விரல்கள்

வேர்ல்ட் டிரேட் செண்டர்
விழுந்த பின்னே
எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில்
கூட்டம் அதிகமாகி விட்டதென்று
புள்ளிவிவரம் சொல்கிற
உள்ளூர் ஞானம்

கவச குண்டலமாய்
ஒட்டிக் கொண்டிருக்கும்
வாக் மேன்
மீதி நேரத்தைப்
பறித்துக் கொள்ளும்
செல்போன்

இருண்ட பின்
ஆளில்லாத இடத்தில்
தனியாக நிற்கக் கூடாது
என்கிற பயம்

பயங்கரவாத எச்சரிக்கை
அறிவிப்புகளை
அலட்சியம் செய்யாமல்
அடிபணிகிற கட்டுப்பாடு

வெளியே
தைரியமாய் காட்டிக் கொண்டாலும்
ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்கிற
அலைபாயும் உள்ளுணர்வு

கண்ணை உறுத்தி நிற்கிற
விளம்பரங்கள் விளக்குகள் பற்றிய
ஈடுபாடும் விமர்சனமும்

ஓய்வில்லாமல் சுவாசித்தும்
நில்லாமல் இயங்கியும்
தன் ஆத்மாவைக்
கண்டுணர முயலும்
நகரத்து டாலர் சமரசங்கள்

எதுவுமில்லை
மற்றவர் போடுகிற
பிரெஞ்ச் பிரையையும்
சிக்கன் நக்கட்டையும்
பிரெட் துண்டையும்
கைநீட்டி வாங்கித் தின்றுவிட்டு
மீதி நேரம்
துணையைத் துரத்துகிற
ராக்பெல்லர் சென்டர் மரத்து
அணிலுக்கு

No comments: