Friday, June 25, 2004

தலைப்பு இல்லாத கவிதை - 1

மோதுகிற காற்றின் போதையில்
உடல்விரித்துச் சீற்றம்கொண்டு
பேயாட்டம் ஆடியது
வழிகின்ற வியர்வைத்துளிகள்
இலைவடிவத்தில் விழுந்தன
யார் கழுத்தையோ
முறித்துப் போடுகிற
சத்தம் எழுப்பியது அடிக்கடி

அவ்வப்போது
கடக்கின்ற வெளிச்சங்களினூடே
நரசிம்மவதாரமெடுத்துப் பின்
வாமனனாகிச் சிறுத்துப் போய்
வித்தியாசமாய் உருமாறி
விதவிதமாய் பயமுறுத்தியது

சிறுத்திருக்க வேண்டியவை பெருத்தும்
பெருத்திருக்க வேண்டியவை சிறுத்தும்
இருக்க வேண்டியவை இல்லாதிருந்தும்
இல்லாமலிருக்க வேண்டியவை இருந்தும்
ஒவ்வாமை தருகிற தோற்றம் காட்டியது

எதையோ கவனிப்பதுபோலவும்
யாரோ பார்த்துவிட்டதால்
பதுங்குவது போலவும்
செயலற்று இற்றுப்போய்
பல நிமிடம் நின்றுவிட்டு
எதிர்பாராத ஒரு கணத்தில்
இயக்கம் பெற்று இயங்கி ஓடி
பார்ப்போரைப் பின்வாங்கச் செய்கிற
அதிர்ச்சியளித்து விளையாடியது

வழிதவறி வந்து திரிகிற
பெரிய காட்டுவிலங்கோவென்றும்
போன வருஷம் செத்துப் போன
பக்கத்து வீட்டுக்காரியோவென்றும்
கன்னம் வைக்க வந்திருக்கும்
திருட்டுக் கூட்டமோவென்றும்
பூதகணங்களோவென்றும்
எச்சரிக்கையையும் திகிலையும்
வளர்த்தது பூதாகரமாய்

தூரத்துத் தெருவிளக்கொளியிலும்
அதில் அமிழ்ந்துபோன
மெல்லிய நிலவொளியிலும்
ஜன்னலுக்கு வெளியே
உயிர்பெற்று நடக்கின்ற
மரநிழல் சொல்லித்தந்தது
நிஜங்கள்
நிழல்களைவிட
அழகாக இருக்கலாமென்று

No comments: