Monday, June 21, 2004

ஏஞ்சல்

அல்சேஷன் க்ராஸ்
பெட்டையென்று
பிறர் ஒதுக்கிவிட
ஒயர்கூடையில் உட்கார்ந்தபடி
அப்பாவின் சைக்கிளில்
ஒன்பது நாள் குட்டியாய் வந்திறங்கியதும்

அது குடிக்கும்
பால் புட்டிக்கு ரப்பர் வாங்க
கிராமம் விட்டு இரண்டு மைல்
பஸ் போகும் பாதையிலே
குரங்கு பெடல் அழுத்தியபடி
ஒன்பது வயதில் போய்வர
முதன்முறையாய் அப்பா அனுமதித்ததும்

விலங்குகள் பற்றிய பயத்தைப் போக்குகிற
தோழனாய் அது விளையாடியதும்
கோபத்தில் திட்டினாலும்
ஈசிக் கொண்டு நின்றதும்

வாலிபத்தில்
வாசற்படியில்
தேங்காய் மூடியுடன் அது
போராடிக் கொண்டிருந்தபோது
தாண்டிப் போக எத்தனித்த என்னை
ஓர் உறுமலில் சீண்டிப் பல் பதித்துவிட
அப்பாவிடம் அடிவாங்கி
புழக்கடையில் கட்டப்பட்டு
நாளெல்லாம் பாவமுடன் பார்த்ததும்

யார் புதிதாய் வந்தாலும்
அதிகமாய் குரைத்தாலும்
சில நிமிடங்களில்
வாலைக் குழைத்து விளையாடியதும்
சப்போட்டா மரங்களுக்கு வரும்
குரங்குகளைத் துரத்திச் சென்று
சண்டையிட்டதும்

ஈன்ற குட்டிகளை
ஆளுக்கொருவர் எடுத்துப்போய்விட
இரண்டு மூன்று நாள்கள்
எதையோ தொலைத்ததுபோல
வலம் வந்ததும்
அந்த போதிலும்
ஆளைப் பார்த்துவிட்டால்
வாலாட்ட மறக்காததும்

விடுதி வாழ்க்கையிலிருந்து
வீட்டுக்குத் திரும்பும் நள்ளிரவில்
அழைப்பு மணியின் யாரது கேள்விக்கு
நான்தான் என்ற பதில் வந்ததும்
அடையாளம் கண்டு கொண்ட சந்தோஷத்தில்
கொஞ்சுகிற குரலில் குரைத்ததும்
கதவு திறந்த பின்னே
முன்னங்கால்களைத் தூக்கிப் போட்டு
மேலேறிக் கொஞ்சியதைக்
கவனிக்க நேரமில்லாமல்
தட்டிக் கொடுத்து நடந்ததும்

முதுமை வந்து
கண்பார்வை போனபின்னே
கண்ட இடங்களில்
அசிங்கம் செய்துவிடுகிறதென்று
கட்டி வைக்கப்பட்ட நிலையிலும்
புதுக்குரலோ நடைசத்தமோ கேட்டவுடன்
ஒரு நிமிடம் குரைத்துவிட்டு
இளைப்பெடுத்துப் பின் தூங்குவதும்

ஒருநாள்
காலையிலே எழுந்து வந்தால்
குரைப்பு நின்றுபோய்
விறைத்துக் கிடந்ததுவும்

பதினெட்டு ஆண்டுகள்
பதிந்துவிட்டுப் போன
நினைவுகள் பீறிட்டெழ
ஏஞ்சல் என்றேன்
நாய் பொம்மைக்கு
என்ன பெயர் வைக்கலாம்
என்ற குழந்தையிடம்

ஏஞ்சல் ஏஞ்சலென்று
பொம்மையைக் கொஞ்சிக் கொஞ்சி
குழந்தை விளையாடும்போது
ஏஞ்சல் இருந்த காலத்தில்
சரியாகக் கவனிக்காமல் போனோமோ
என்று எழுகிற கேள்விக்குப்
பதில் தெரியாமல்
கண்கள் பொம்மையை வெறிக்க
ஏஞ்சலென்றால்
நாய் பொம்மையென்று
சொல்லிச் சொல்லி
பழக்கப்படுத்திக் கொள்ளும் மனம்

No comments: