Thursday, June 17, 2004

கறை படிந்தவர்கள் அமைச்சர்கள் ஆகலாமா?

கறை படிந்த அமைச்சர்களை பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க.வும் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்த செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தன. ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் தொடர்புடையதாகக் கருதப்பட்டு நீதிமன்றங்களில் தம் பேரில் வழக்குகள் நிலுவையில் உள்ள அமைச்சர்களைக் கறை படிந்த அமைச்சர்கள் என்று பொதுவாக வரையறுக்கலாம். எந்தக் கட்சிக்கும் இன்னொரு கட்சியை இவ்விஷயத்தில் குறை சொல்கிற அருகதை இல்லை. பொதுவாகப் பார்க்கும்போது இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சிகளில் பொதுவாழ்வில் நேர்மையானவர்கள் அதிகமாகவும், பிற கட்சிகளில் விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய அளவிலும் இருக்கிறார்கள். பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த பலர் மீது இப்படி வழக்குகள் நிலுவையில் இருந்த போதும் அவ்வழக்குகளில் தொடர்புடையவர்கள் அரசாங்க பதவி வகித்தவர்கள்தான் என்பது ஊரறிந்த ரகசியம். முக்கியமாக, பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய அத்வானி போன்றவர்களும், குஜராத் கலவரங்கள் குறித்து நேர்மையான விசாரணை நடத்தி அதன் முடிவுகள் வரும்வரை, அக்கலவரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறிய, மைனாரிட்டிகளுக்கெதிரான கலவரங்களை அடக்காமல் வேடிக்கை பார்த்த என்று குற்றம் சாட்டப்படும் நரேந்திர மோடியும் பதவி வகிக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிற அறச்சீற்றம் பா.ஜ.க.வுக்கு வராமல் போனது நாம் பார்த்த விஷயமே. அப்போது வாஜ்பாயிலிருந்து பா.ஜ.க.வின் எல்லாப் பரிவாரங்களும் அத்வானி, மோடிக்கு எதிராக எதுவும் பேசவில்லை. எனவே, இப்போது பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் இப்படிக் கூக்குரலிடுவது நல்ல தமாஷாக இருக்கிறது. அதேபோல, காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அப்போது கூச்சலிட்டுவிட்டு இப்போது அதே காரியத்தைச் செய்திருக்கின்றன.

புதிய அரசாங்கம் பதவியேற்றவுடனே அதை எதிர்ப்பதற்குக் கிடைத்த ஆயுதமாகவே இப்பிரச்னையை பா.ஜ.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் பயன்படுத்துகின்றன என்பது வெளிப்படை. அந்தக் காலத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றவுடன், அதற்கு கொஞ்ச காலம் கொடுத்தபின்னர், அதன் குறைகளை விமர்சிக்கிற முதிர்ச்சி அந்தக் கால அரசியல் தலைவர்களுக்கு இருந்தது. அதை ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்து ஜெண்டில்மேன் என்று அனைவராலும் பாராட்டப்பட்டு ஆனால் தன் சொந்தக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தெரியாத முன்னாள் பிரதமர் திருமிகு.வாஜ்பாய் போன்றவர்கள் தங்கள் கட்சிக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும், கறை படிந்தவர்கள் அமைச்சர் பதவிகளை வகிக்கலாமா என்கிற கேள்வி பொதுமக்கள் எழுப்பக்கூடிய தார்மீகக் கேள்வியே.

இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம்? தார்மீக ரீதியாக ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகும்வரை அரசாங்க பதவி வகிக்கக் கூடாது என்று சொல்வது நிஜத்துக்கு உதவாது. எல்லாக் கட்சிகளும் இந்தத் தார்மீகத்தை அடுத்த கட்சி பின்பற்ற வேண்டும் என்று போராடும். தனக்கென்று வரும்போது வாயடைத்த ஊமையாகி, தான் விரும்பியதைச் செய்யும். அரசியல் கட்சிகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பொதுமக்களில் கணிசமானோர் மனப்பான்மையே அப்படித்தான் இருக்கிறது. எனவே, தார்மீக ரீதியாகவோ விழுமியங்கள் வழியாகவோ இதை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று போராடுவது சரியாக இருக்காது.

ஆனால், ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அவ்வழக்குகள் தீர்ப்பாகித் தாங்கள் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும்வரை அரசாங்கப் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தலாம். அப்படி ஒரு சட்டம் இல்லையென்றால் கொண்டு வரலாம். இதில் பிரச்னை என்னவென்றால், முதலில் இப்படிப்பட்டவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க வகை செய்ய வேண்டும். இப்போது நடப்பது என்னவென்றால், இப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு வசதியான தொகுதிகளில் போட்டியிட்டு வென்று விடுகிறார்கள். அவர்கள் வென்ற பின்னே, அவர்கள் மந்திரியாகக் கூடாது என்று சொல்வது ஹிப்போகிரஸி. அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதே தடை செய்யப்பட வேண்டும். எனவே, எவர் தேர்தலில் நிற்கலாம் என்கிற விதிகள் கடுமையாக்கப்பட்டு அங்கேயே ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் தடுக்கப்பட்டால் இந்தப் பிரச்சினையை சரி செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

இப்படிப்பட்ட சட்டம் கொண்டு வரப்பட்டால், பழிவாங்கும் நடவடிக்கையாகவும், எதிர்கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்கிற நினைப்புடனும் ஆளும் கட்சி பிடிக்காதவர்கள் மீது ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளைத் தொடர்ந்து அவர்களைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுத்துவிட்டால் என்ன செய்வது என்பது நல்ல கேள்வி. ஆனால், சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரியான ஓட்டைகள் இப்படிப்பட்ட சட்டத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும், அப்படி யாரும் பாதிக்கப்படுவதாக நினைக்கப்பட்டால் விரைவில் நிவாரணம் காண வழி செய்யும் வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, முதல் தகவல் அறிக்கை ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். பின்னர், ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் அவ்வழக்கில் முகாந்திரம் இருக்கிறது இல்லை என்று சொல்ல வேண்டும். வழக்கில் தொடர்புடையவர் தேர்தலில் நின்றால் அவ்வழக்கின் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தேர்தல் ஆணையமும் விவரங்களையும் ஆவணங்களையும் ஆராய்ந்து தொடர்புடையவர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லலாம். நான் சட்ட நிபுணன் இல்லை. ஆனால், எம்.பி.யும் எம்.எல்.ஏ.வும் ஆனபின்னே ஒருவரை நீ மந்திரியாகக் கூடாது என்று சொல்வதை விட, நீ எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தேர்தலிலேயே நிற்க முடியாது என்று சொல்வது சரியான வழி என்று நம்புகிறேன். மேலும் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு. அது இவ்விஷயத்தில் எழுகிற கேள்விகளையும் பிரச்னைகளையும் ஓரளவுக்கு (தன்னாட்சியுடன் இயங்குகிற அமைப்பைக் கூட ஓரளவுக்கு என்ற அடைமொழியுடனேயே எழுத வேண்டியிருக்கிற துரதிர்ஷ்டத்துக்கு மன்னிக்கவும்) நேர்மையுடன் அணுகித் தீர்ப்பளிக்கும் என்று நம்பலாம்.

இந்த விஷயத்தில் எழுகிற இன்னொரு கேள்வி. ஒருவர் எம்.பி அல்லது எம்.எல்.ஏ ஆனபின்னர் அல்லது அமைச்சராக இருக்கும்போது இத்தகைய புகார்களில் சிக்கிக் கொண்டால் என்ன செய்யலாம் என்பது. அந்த நேரங்களில் அத்தகைய புகார்களை ஆராய்ந்து அவர்கள் பதவியில் நீடிக்கலாமா வேண்டாமா என்று சொல்கிற அதிகாரம் எம்.பி. என்றால் குடியரசுத் தலைவரிடமும் எம்.எல்.ஏ./எம்.எல்.சி என்றால் மாநில ஆளுநரிடமும் இருக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் கட்சிகளின் ஏஜண்டுகளாகச் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சொல்லி ஆளுநர் அளிக்கிற தீர்ப்பில் நம்பிக்கை இல்லையென்று யாரேனும் நினைத்தால் குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்கிற வழிமுறை இருக்க வேண்டும். ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையின் மீதான பதிலை கிடப்பிலே போட்டு வைத்திருந்த ஆளுநர்(கள்) மாதிரி இல்லாமல், இந்த மாதிரியான பிரச்னைகளில் குடியரசுத் தலைவரும் ஆளுநரும் ஒரு மாதத்துக்குள் தங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என்றும் விதிமுறைகள் கொண்டு வரலாம்.

இவ்விஷயத்தில் சரியான சட்டமும் நடைமுறையும் கொண்டுவர ஆழ்ந்த விவாதம் தேவை. அதன் பொருட்டே என் கருத்துகளைச் சொல்லியுள்ளேன். இவற்றை ஒட்டியும், வெட்டியும், மேற்கொண்டு பதப்படுத்தியும் தொடர்ந்து உரையாடல்கள் நடைபெறுமானால் கறை படிந்தவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் செயல்படுத்திப் பார்க்க இயலலாம்.

No comments: