படித்து முடித்துவிட்டு வெளியூர்களில் பணிபுரிந்த காலங்களில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறேன். மாநகரங்களில் வாடகை வீட்டுக்காரனாக இருப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும். வீட்டு சொந்தக்காரர் கீழ் போர்ஷனில் இருக்க நீங்கள் மாடியில் குடித்தனம் இருக்கிறீர்கள் என்றால் பொறுமையுடன் நிறைய பெருந்தன்மையும் வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் வந்து கேட்டைத் திறக்கக் கூடாது என்பது உட்பட நிறைய நிபந்தனைகள் இருக்கும். சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர் பிரச்னை சொல்லி மாளாது. வீட்டில் கிணறு இருந்தாலும், கிணற்றில் தண்ணீர் வந்தாலும், வீட்டுக்காரர் மோட்டர் போட மாட்டார். நாளுக்கொரு முறை காலையில் அரைமணி நேரம் பாத்ரூம் குழாய்களில் தண்ணீர் வரும். அப்போது குடங்கள் முதல் கிண்ணங்கள் வரை பிடித்து வைத்துக் கொண்டு பின்னர் நாளெல்லாம் அதை யோசித்து யோசித்து செலவு செய்ய வேண்டியிருக்கும். வீட்டுக்காரர் சில விஷயங்களில் மேம்போக்காகவும் நாகரிகமாகவும் நடந்து கொள்ளக் கூடும். அவர் மனைவி எல்லாவற்றிலும் கணக்காகவும், குற்றம் கண்டுபிடிப்பவராகவும் இருப்பது சகஜம். குடித்தனக்காரர்களுக்கு நிறைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற உளவியல் அது. காலையில் நன்றாகப் பேசுகிற வீட்டுக்காரர் அவர் மனைவி நாள்பொழுதில் அவரிடம் ஏதோ சொல்லிவைக்க மாலையில் முகம் கொடுத்துப் பேச மாட்டார். அல்லது, உங்கள் இரண்டு சக்கர வாகனத்திலிருந்து ஆயில் இரண்டு சொட்டுகள் ஒழுகி வீட்டின் முன்புறத் தரையைப் பாழ்படுத்திவிட்டது என்று குற்றம் கண்டுபிடிப்பார். அவர் வைத்திருக்கிற பழைய காலத்து வண்டியிலிருந்து தினமும் ஆயில் ஒழுகுவது பற்றி அவருக்குக் கவலை இருக்காது. அந்த மாதிரி சமயங்களைப் புன்சிரிப்புடனும், உன்னை நான் புரிந்து கொள்கிறேன் என்பது மாதிரியான் பெருந்தன்மையுடனும் சமாளிக்கக் கற்றுக் கொண்டேன். ஆயில் ஒழுகியது தெரியாமல் சுத்தம் செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்து விடுவேன்.
கல்யாணமான புதிதில் இப்படிப்பட்ட ஒரு குடித்தனக்காரனாக சென்னையில் நான் வசித்திருக்கிறேன். ஒரு வருடம் முடிந்ததும் வாடகையில் 50 சதவீதம் ஏற்றி விட்டார். என்ன காரணமென்றால், மார்க்கெட்டிற்கு ஏற்ப என்று சொன்னார். உயர்த்தப்பட்ட வாடகை கொடுத்தும் ஒன்றும் மேம்படவில்லை. எனவே, அதற்கப்புறம் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அபார்ட்மென்டைத் தேடிப் பிடித்துக் கொண்டு காலி செய்துவிட்டேன். ஆனாலும், அந்த ஒன்றரை வருடங்கள் அந்த வீடு எங்களூக்கு வீடாகவே இருந்தது. வீட்டின் பின்புறம் விசாலமான மொட்டை மாடி. மொட்டை மாடிக்குப் பின்னர் மரங்கள். இரவுகளில் உட்கார்ந்து பேசவும், வானம் பார்க்கவும் என்று அந்த மொட்டை மாடியும் அதன் பின்னர் இருந்த மரங்கள் தருகிற காற்றும் அம்மரங்களின் அணில்களும் என்று அந்த வீடு மிகவும் பிடித்துப் போனது. ஆனாலும், சென்ற முறை இந்தியா சென்றிருந்தபோது தூரத்திலிருந்து அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்தேன். வீட்டுக்காரர் கொடுத்த பிரச்னைகள் கொணர்ந்த காயங்கள் ஆறிப்போய் அந்த வீடு எனக்குள் நல்ல நினைவுகளையே மீட்டித் தந்தது.
அப்படி ஒவ்வொரு குடித்தனக்காரருக்கும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளும், அவ்வீடும் அதன் சுற்றமும் அவர்களுக்குக் கொடுத்த சந்தோஷமான நினைவுகளும் பந்தமும் இருக்கும். இந்தப் பக்கத்தில் உள்ள பாவண்ணனின் "வாடகை வீட்டில் வளர்த்த மரம்" என்கிற கவிதை அப்பிரச்னைகளையும் அவற்றை மீறிய பந்தத்தையும் சொல்வதால் எவருடனும் உடனடியாக ஒன்றிவிடக் கூடியது.
விட்டுச் சென்றதும் குடிவைத்துக் கொள்ள
ஆள் கிடைத்த மகிழ்ச்சியில்
நாள்கடந்து போவதை ஞாபகமுட்டுகிறீர்கள்
அன்புக்குரிய உரிமையாளரே
பெட்டிகள் படுக்கை மின்விசிறி
தொலைக்காட்சி அடுப்பு எரிவாயு
முட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்
வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக் கொண்டு கிளம்புகிறோம்
கொண்டுசெல்ல முடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஒருமரம்
எங்களை நினைவூட்டினாலும்
எங்களைப் போலிருக்காது அது
குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது
மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்துக் குழையாது
மழை புயல் கஷடங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது
நேருக்குநேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது
வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்
மரத்துக்காவது கருணை காட்டுங்கள்
- பாவண்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment