Tuesday, June 29, 2004

திண்ணை களஞ்சியம் - இந்த வாரக் கவிதை

ஜெயகாந்தன் "நண்பர்களின் மனைவிமார்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் வருவது இது. ஜெயகாந்தனின் தெருவில் குடியிருக்கிற அவர் நண்பர் ஒருவர் ஷாப்பிங் செண்டரும் பூங்காவும் உருவாக்க வரைபடத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில், குடிசை மாற்று வாரியத்தால் பலமாடிக் கட்டிடங்கள் கட்டப்படுவதை எதிர்த்துத் தயாரிக்கப்பட்ட மனுவில் ஜெயகாந்தனிடம் கையெழுத்து வாங்க வருகிறார். "வரைபடமும் வாக்குறுதியும் இருக்கட்டும். குடிசையில் வாழ்கிற மக்களுக்கு வீடுகட்டித் தருகிற காரியத்த்தை நாம் தடுக்கவும் முடியாது; தடுக்கவும் கூடாது" என்று சொல்லி ஜெயகாந்தன் கையெழுத்திட மறுத்து விடுகிறார். ஜெயகாந்தனை அறிந்தவர்களுக்கு அவரின் இந்தச் செய்கை ஆச்சரியம் தராது. முக்கியமான விஷயம் இங்கே வருகிறது. ஜெயகாந்தன் பதிலைக் கேட்ட நண்பர் அட்டகாசமாகச் சிரித்தபடி பிரகடனம் செய்தார். "என் மனைவி அப்போதே சொன்னாள். அவர் எப்போதும் குடிசைவாழ் மக்களின் சார்பாகத்தான் நிற்பார். நீங்கள் கையெழுத்து வாங்கப் போய் ஏமாறப் போகிறீர்கள்" என்று. அப்போது ஜெயகாந்தன் நினைத்துக் கொண்டாராம். "என் நண்பர்களை விடவும் அவர்களால் முகமறியாமல் அறிமுகம் செய்யப்படுகிற என்னை அந்த நண்பர்களின் மனைவிமார்கள் சிறப்பாகப் புரிந்து கொள்வார்கள்" என்று.

ஏறக்குறைய 1988 வாக்கில் நான் படித்த இந்தக் கட்டுரை என் மனத்தில் ஆழப் பதிந்து விட்டது. இந்தக் கட்டுரை என் மனத்தில் ஆழப் பதிந்துவிட என்ன காரணம் இருக்க முடியும் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். நம்முடன் பழகியவர்கள், நம்மை நன்றாக அறிந்தவர்கள் என்று நாம் நம்புபவர்கள்கூட நம்மைப் புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்புகள் நிறைய இருக்கிற சகஜத்தை இந்தக் கட்டுரை காட்சியுடன் விவரிக்கிறது. புரிந்து கொள்ளாமல் போவதைவிடவும் நாம் சொல்வதால் அவர்கள் காயமடைந்துவிடக் கூடிய வாய்ப்பு இருப்பதையும் இது காட்டுகிறது. அது மட்டுமில்லை, நம்மை நேரடியாக அறிந்திராதவர்களில் சிலர் கூட நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கலாம் என்கிற நிஜத்தையும் சொல்கிறது. நம்மை அறிந்திராமல் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருப்பவர்களை விடவும், நம்மை அறிந்தபின் நம்மைப் புரிந்து கொள்ளாமல் காயப்பட்டுப் போகிறவர்கள் அதிகம் என்பதையும் உணர முடிந்தது.

எனவே, வாழ்வின் முக்கியப் பிரச்சினை இதுதான். நாம் அன்பு செலுத்துபவர்கள்கூட நம்மைப் புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்பிருக்கிற உலகத்திலே, நம் உணர்வுகளைக், கருத்துகளை அவர்களிடம் எப்படித் தெரிவிப்பது. ஜெயகாந்தனுக்கு இந்தச் சங்கடம் எல்லாம் இல்லை. அன்பின் பொருட்டு கூட கருத்துகள் சொல்லாமல் அவரை இருக்கச் செய்ய முடியாது. போற்றுவார் போற்றினும், புழுதிவாரித் தூற்றுவார் தூற்றினும், தன் சுதர்மத்துக்குச் சரியென்று படுவதைச் சொல்லிவிட்டுப் போய்விடுபவர் அவர். இந்த விஷயத்தில் அவரைப் போல இருப்பவர்கள் உண்டு. ஆனால், எல்லாராலும் அப்படி இருக்க முடியாது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உதாரணமாக, இணையத்திலே எழுதுகிறவர்களில் சிலரைப் பார்த்தீர்களேயானால் எல்லா மடல்களிலும் பின்வரும் பொருள் வரும்படி எழுதியிருப்பார்கள். "நான் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்" அல்லது "என் கருத்துகளின் பிழைக்கு பெரியவர்கள் மன்னிக்கவும். பெரியவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். அவர்கள் தலையில் குட்டி சொல்லித் தந்தால் மாணவனாக/மாணவியாக என்றும் ஏற்றுக் கொள்வேன்". எல்லார்க்கும் கருத்துகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. எனவே, இக்கூத்துகளைப் படிக்கும்போது, தன் கருத்தைச் சொல்வதில்கூட பிறரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எனக்குப் பிறக்கும். அப்படியே தவறு செய்தாலோ, பிடிக்காதது எழுதினாலோ இதமாக எடுத்துச் சொல்லப்பட்டோ அல்லது கருத்து வேறுபாடு என்ற ஆரோக்கியத்துடனோ விஷயம் எடுத்துக் கொள்ளப்படும் என்கிற நம்பிக்கையோ அவர்களுக்கு இல்லாத சூழல் நிலவுகிறது என்றும் அவர்கள் நினைக்கக் கூடுமோ என்று சொல்லிக் கொள்வேன். இதற்கு அடிப்படைக் காரணம், யார் என்ன தவறு செய்கிறார்கள் என்று காத்திருந்து பார்த்து அவர்கள் மீது பாய்ந்து பிராண்ட யாரும் இருப்பதாக அவர்கள் நினைக்கலாம் அல்லது அப்படி இருப்பவர்களை அவர்கள் அறிந்திருக்கலாம். மேலும், இந்த மன்னிப்பு கோருகிற அல்லது பொறுத்துக் கொள்ளச் சொல்லக் கோருகிற விஷயம் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது அது நிஜமான உணர்வுடன் செய்யப்பட்டாலும் படிப்பவர்க்கு அலுப்பூட்டி பாசாங்கு மாதிரி தெரிந்து விடுகிறது. ஆனாலும், "நலம். நலமறிய ஆவல்" ஆகிய மடல்களைக் கூட - பிழையிருந்தால் மன்னிக்கவும் என்கிற முன்னுரையுடனோ பின்னுரையுடனோ எழுதுபவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதைவிடவும், தம்முடைய எழுத்து புரிந்து கொள்ளாமல் போகிற வாய்ப்பு இருக்கிற நிதர்சனத்தை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. அதற்காகவாவது அப்படி எழுதுபவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது; பொறுத்துக் கொள்ளவும் முடிகிறது.

நான் பணிபுரிந்த இடத்தில் மேலாளர் ஒருவர் அலுவல் தொடர்பாக யார் எந்த மின்மடல் எழுதினாலும் Politically Correct ஆக எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதன் பொருள் மற்றவர்கள் மீதுள்ள அன்பு அல்ல. தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பது. இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, பிழையிருப்பின் மன்னிக்கவும் என்ற வாசகத்துடன் கருத்துகளை முன்வைப்பவர்கள் பிறர் மீதுள்ள பரிவினால் அவ்வாறு செய்கிறார்கள் என்பதைவிட தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்கும் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கும் அப்படிச் செய்கிறார்கள் என்றும் சொல்லலாம். காலப்போக்கில் அவர்கள் இதன்மூலம் தங்கள் தனித்தன்மையை இழந்துவிடக் கூடிய அபாயமிருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. அல்லது, இதையே அவர்கள் தங்கள் தனித்தன்மை என்று நினைக்கிறார்கள் என்றால் என்னிடம் அதற்கு பதில் இல்லை. வாழ்த்துகள் மட்டும் உண்டு. ஆனால், இதற்கு அவர்களைக் குறை சொல்வது சரியில்லை என்று நான் நினைக்கிறேன்.

ஏனெனில், வாழ்வில் பெரிய பிரச்னை எதிரிகளுக்குப் பதில் சொல்வது இல்லை. சுற்றத்திடமும் நட்பிடமும்கூட எப்படி உறவாடுவது என்பதே. மற்றவர் மனம் கோணாமலும் சொல்ல வேண்டும் தன் கருத்தையும் சொல்ல வேண்டும் என்பது மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்படுவது மாதிரிதான். இதனாலேயே பல நேரங்களில் நாம் மவுனமாகவும் அல்லது வார்த்தைகளின் வீரியத்தையோ கருத்தின் வீரியத்தையோ குறைத்துப் பேசியும் சமரசம் செய்து கொள்கிறோம். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் நம்புவதைத் தைரியமாகச் சொல்லிவிட்டுப் போகிறவர்கள் சொற்பமாக இருந்தாலும் அந்தக் குணத்துக்காகப் பாராட்டத்தக்கவர்கள். அவர்களும்கூட எல்லா நேரங்களிலும் அப்படி இருப்பதில்லை என்கிற புள்ளிவிவரத்துடன் யாரும் வரக்கூடும்.

ஆனால், இதையெல்லாம் மீறி, நாம் நினைக்கிற கருத்தை நாம் நினைக்கிற விதமாக அதே நேரத்தில் நாம் நம்முடைய கருத்தைச் சொல்கிறோம் என்று மற்றவர் நினைக்கிற அளவுக்கு இதமாக எடுத்துச் சொல்கிற ஆசை எல்லாருக்கும் இருக்கிறது. இது முடியாத காரியம்தான். ஏனெனில், மெத்தப் படித்த சான்றோரும் சாதனைகள் புரிந்த கலைஞர்களில் பலருமேகூட விமர்சனங்களையும் கருத்துகளையும் தனிப்பட்டவிதமாக எடுத்துக் கொண்டு சுருங்கிப் போகிற அல்லது எதிர்வினை புரிகிற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் சுற்றத்திடமும் நட்பிடமும் அன்பு என்கிற பெயரிலும் நட்பு என்கிற பெயரிலும் நாம் மாட்டிக் கொள்கிற விலங்குகள் சொல்ல விரும்புவதைச் சொல்லவிடாமல் செய்துவிடுகின்றன. அதையும் மீறி நாசூக்காகக் கோடிகாட்ட இயலுமென்றால், அந்த நாசூக்கு புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்யப்படுகிற வாய்ப்பு இருக்கிறது. நம் கருத்துகளை நாம் அன்பு செலுத்துவோர் உட்பட நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளாதபடிக்கு எடுத்துச் சொல்வது எப்படி என்கிற கேள்வியை எழுப்புவதன் மூலம், அப்படி எடுத்துச் சொல்கிற சாத்தியங்கள் குறைந்துபோன வாழ்க்கையை நாம் கைகொண்டிருக்கிறோம் என்பதை அடித்துச் சொல்கிறது இந்தப் பக்கத்தில் உள்ள ஜெயந்தனின் மூன்றாவது கவிதை. அது மட்டுமில்லாமல், இதமாக எப்படிப் பேசுவது என்கிற தலைப்பினூடே இந்தக் கவிதை மனைவி, மகன், நண்பன், தியாகி உள்ளிட்டோர் பற்றிய விமர்சனங்களையே முக்கியமாக முன்வைக்கிறது. ஒன்றைப் பேசுவதுபோல இன்னொன்றைச் சுட்டுவது உதவக்கூடும் என்கிற பதிலையும் இக்கவிதை சொல்லாமல் சொல்லி நிற்கிறது.

இதமாய்
பதமாய்
எப்படிச் சொல்வது?

நம் வாழ்க்கை இதற்கு மேலும்
சுலபமாய் இருக்க முடியுமென்று
எப்படி நினைக்கிறாய் நீயென்று
மனைவியுடமும்..

இந்த வாழ்க்கை இவ்வளவு சுலபமாய்
கழிந்தால் போதும்
கழியுமென்று
எப்படி நினைக்கிறான் இவனென்று
பிள்ளையிடமும்..

ஏழில் தனக்கு ஊட்டப் பட்டதை
அப்படியே அப்படியே
எழுபதில் பிறன் மேல்
வாந்தி எடுக்கும்
மத போதகன் மாதிரி
முப்பதாண்டு காலம்
மறு பரிசீலனை இல்லாத
உனது தத்துவத்தை
எப்படிச் சுமக்கிறாய் நீயென
நண்பனிடமும்...

சுதந்திரம் சமத்துவம்
அன்பு அகிம்ஸை
பாசம் பாவமன்னிப்பு
ஒரு குடும்பம் ஒரே ரத்தம்
என்று என்று....
ஓட்டு வாங்கி எஜமானர்களிடம்
ஆட்சி வாங்கிய
ஜன நாயகத் தலைவனே
பாஸிஸ்ட் ஆக முடியுமென்றால்,
(உனது கணக்குப் படியே)
வரும் போது வெட்டும் குத்தும்
கொலையும் ரத்தத் தெறிப்பும்,
நண்பன் நல்லாசிரியன்
சோதரன் சொந்தப்படை வீரன்,
யாராயிருந்தாலும் யாராயிருந்தாலும்
ஏ கே நாற்பத்தேழு பொரிகளை
அள்ளித் தெளிக்கும் நீ,
நாளை என் சந்ததிக்கு
முத்தம் மட்டும் கொடுப்பாய் என்பது
என்ன நிச்சயம் என்று
ஆயுதம் தாங்கிய தியாகியிடமும்...

இதமாய்
பதமாய்
ஏற்கும்படி
எப்படிச் சொல்வது?
எப்படிச் சொல்வது?

- ஜெயந்தன்

1 comment:

விடியலின் கீதம். said...

தனித்தவம் இழக்காது வாழ்ந்து கொண்டிருப்போமேயானால் அருகில் யாருமே இரார். தனித்தவமற்று வாழ்வதை விட யாருமில்லாமல் வாழ்ந்து விட்டப்போகலாம்.இது எனது அனுபவம்.

பயணம்
அது எத்தனை
நீண்ட தொடராய்

ஏறுவோரும்
இறங்கு வோரும்
நேரத்தை தவறவிட்டு
காத்து நிப்போரும்

அருகிருந்து
சிரித்துவிட்டு
முகம் சுழித்தே போவோரும்

பிடிக்காத போது
விலத்தி இருக்க
வைப்போரும்

கைபிடி தவறி
படிகளில் விழும் போது
ஓடி வந்து
கைபிடித்து
தூக்குவோரும்

பாரங்களை
சுமக்கிற போது
பக்குவமாய்
இறக்கி வைக்க
உதவுவோரும்

மலையில் இருந்து
விழும் நீர் வீழ்ச்சியாய்
மனசெல்லாம்
அதன் உணர்வெல்லாம்
மகிழ்வைத்தருவோரும்

இது புகையிரதப்பயணம்
போல் தரிப்பிடங்கள்
ஏதும் இல்லை.

பலர் ஏறுவர்இறங்குவர்
காணாமலும் போவர்.
ஆனாலும் யாரோ
ஓரிருவர் மட்டுமே
காக்க வைத்து
தவிக்க விட்டு
பயண முடிவு வரை
வரவேண்டும் என


ஒத்த உணர்வலைகள்
நிச்சயம்
தொடர்ந்து வரும்.

சுவாரசியமம்துன்பமும்
ஏக்கமும்ஆசைகளுமாய்
பயணம்நீண்டு தான்
போகிறது.

-------
14-12-2002
Nalayiny Thamaraichselvan