Tuesday, July 20, 2004

மின்மடல் இதழ்கள்

[ஜூலை 20, 2004 அன்று நான் எழுதிய "மின்மடல் இதழ் வலைப்பதிவையும் குழுமத்தையும் விட மேலான வடிவமா?" என்கிற பதிவு காணாமல் போய்விட்டது. ப்ளாக்ஸ்பாட்டில் இது அவ்வப்போது நடக்கிறது. எனவே, என்னுடைய கோப்பில் இருந்து அதை மீண்டும் ஏற்றியிருக்கிறேன். 11 நண்பர்கள் அதற்குக் கருத்து சொல்லியிருந்தனர். அந்தக் கருத்துகள் ஹாலோஸ்கேனில் அப்படியே இருக்கின்றன. நீக்கப்படவில்லை. அவற்றை இந்தப் புதிய பதிவுடன் எப்படி இணைப்பது என்பது குறித்து யாரும் உதவினால் நன்றிகள்.]

திண்ணை இணைய இதழில் வெங்கடேஷின் "நேசமுடன்" - அறிவுபூர்வமான தளம்: அக்கறையான தேடல் என்னும் தலைப்பில் ரமா என்பவர் எழுதியிருக்கிறார். சி·பி வெங்கடேஷ் நடத்தி வரும் நேசமுடன் என்கிற வாராந்தர மின்மடல் இதழைப் பற்றி அந்தக் கட்டுரையில் ரமா எழுதியிருக்கிறார். சி·பி வெங்கடேஷின் எழுத்துகள் ரமாவுக்குப் பிடிக்கும் போலிருக்கிறது. ம.வெ. சிவகுமார் (அவர் சரியான பெயர் ம.வே.சிவகுமார்) என்கிற எழுத்தாளரைக் கூட இப்போது வெங்கடேஷின் நேசமுடன் படித்தபின்தான் அறிந்ததாகச் சொல்கிறார் ரமா. இதிலிருந்தே வெங்கடேஷின் நேசமுடன் மின்மடல் இதழ் ரமாவுக்கு மிகவும் பிடித்துப் போனதற்கான காரணங்களை அறிந்துவிட முடிகிறது. இப்படிப்பட்ட வாசகர்களுக்கு வெங்கடேஷின் நேசமுடன் இதழ் இலக்கியச் சேவை புரிந்து வருவதில் நமக்கும் மகிழ்ச்சியே. நேசமுடன் இதழில் வெளியான பல கட்டுரைகளை நானும் ரசித்திருக்கிறேன். மின்மடல் இதழ் என்கிற வடிவத்தை வெங்கடேஷ் தேர்ந்தெடுத்தது அவர் வசதிக்காக என்றும் உணர்ந்திருக்கிறேன். ஆனால், வெங்கடேஷ் நடத்துகிற நேசமுடன் என்கிற மின்மடல் இதழ் உலகின் சாலச் சிறந்த இதழியல் வடிவம் என்று ரமா நம்புகிறார் போலும். ரமாவின் நம்பிக்கை அவருக்கு. இதிலும் நமக்குப் பிரச்னை இல்லை. ஆனால், ஒன்றை உயர்த்துவதாக நினைத்துக் கொண்டு இன்னொன்றைத் தாழ்த்துவதே நம்மில் பெரும்பாலோர் அறிந்தும் செய்வது. அதையே ரமாவும் செய்திருக்கிறார். வலைப்பதிவு, மின்குழுமம் ஆகிய வடிவங்களை விட மின்மடல் இதழ் என்கிற வடிவம் மேலானது என்பதை வெங்கடேஷின் மேற்கோள்களுடன் சொல்ல முயல்கிறார். அதனால்தான் நாம் மூக்கை நுழைக்க வேண்டியிருக்கிறது.

இணைய உலகின் முதல் கருத்துப் பரிமாற்ற வடிவம் மின்மடல்கள். அவை பரிணாம வளர்ச்சியடைந்து இணைய சஞ்சிகைகளாகவும், மின்குழுமங்களாகவும் இப்போது வலைப்பதிவுகளாகவும் செழித்திருக்கின்றன. நாளை இன்னொரு புதிய வடிவம் வரக்கூடும். வரும். எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் காலத்துக்கேற்ற வடிவங்களைத் தங்கள் சிந்தனைகளை முன்வைக்கப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. அந்த வடிவில், மின்மடல்கள் (மின்மடல் இதழ்கள் இதில் அடக்கம்), இணைய சஞ்சிகைகள், மின் குழுமங்கள், வலைப்பதிவுகள் என்கிற வரிசை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அமைந்த வரிசை.

இந்த வரிசையைப் பார்த்தோமேயானால், முதலில் வந்த மின்மடல் இதழ்கள் ஒருவழிப் பாதை மாதிரி. எதிர்க் கருத்தையும் விமர்சனத்தையும் விரும்பாத எந்த எழுத்தாளரும் இந்த கற்கால வடிவத்தை ஆர்வத்துடன் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நேசமுடன் மின்மடல் இதழ், இதுவரை 14 இதழ்கள் வந்திருக்கின்றன என்று ரமா எழுதுகிறார். முந்தைய இதழ்களைப் பற்றிய வாசகர் கருத்தோ, எதிர்வினையோ பிரசுரமானதாக எனக்கு நினைவில்லை. ஆனால், அவ்வப்போது நேசமுடனைப் பாராட்டி வாசகர் கடிதங்கள் பிரசுரமாகியிருப்பதாக ரமா எழுதியிருக்கிறார். என் நினைவு தவறென்று தள்ளி ரமா சொல்வதை நான் நம்புகிறேன். பாராட்டுகளைத் தவிர எத்தனை விமர்சனங்களும் எதிர்வினைகளும் நேசமுடன் இதழுக்கு வந்தன என்று இன்றைக்கு யாருக்கும் தெரியாது. வெங்கடேஷைத் தவிர. இதுதான் மின்மடல் இதழ்களின் பெருங்குறை. மின்மடல் இதழை நடத்துபவர் விரும்பினால் மட்டுமே எதிர்க்கருத்துகளை இடம்பெறச் செய்ய இயலும். இல்லையென்றால் பாராட்டுகளை மட்டுமே போட்டு தோரணம் கட்டி மகிழ்ந்து கொள்ள முடியும். இதனால் வாசகர்கள் முன்வைக்கிற ஆக்கபூர்வமான எதிர்வினைகள்கூட வெளியே தெரியாமல் போய்விடுகிற வாய்ப்பிருக்கிறது. எழுத்தாளரின் கருத்துகளை மட்டும் வாசகரின் பார்வைக்கு முன்வைத்து வாசகரின் கருத்தென்ன என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் போகிற வாய்ப்பை மின்மடல் இதழ்கள் தருகின்றன. அதனாலேயே அவற்றை ஒருவழிப்பாதை என்கிறேன். ஜெயகாந்தன், சா.கந்தசாமி போன்ற எழுத்தாளர்களுக்கு விமர்சகர்கள் மீதும் அவர்கள் முன்வைக்கிற விமர்சனங்கள் மீதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், வாசகர்களையும் அவர்களின் கருத்துகளையும் பொருட்படுத்திப் படித்தவர்களிலும் பதில் சொன்னவர்களிலும் அவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் அடங்குவர் என்பதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

மின்மடல் இதழ்களைவிட ஓரளவுக்கு இணைய சஞ்சிகைகள் மேல். ஏனென்றால், இணைய சஞ்சிகைகள் வாசகர்களின் எல்லாக் கடிதங்களையும் பிரசுரிப்பதில்லை என்று எடுத்துக் கொண்டோம் என்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பாராட்டுகளையும் கடிதங்களையும் எதிர்வினைகளையுமாவது பிரசுரிக்கின்றன என்று ஆறுதல்பட்டுக் கொள்ள முடியும். தமிழின் இணைய சஞ்சிகைகள் பொதுவாக எல்லாக் கடிதங்களையும் அப்படியே பிரசுரித்து விடுவது இந்த விதத்தில் நல்ல விஷயமும் கூட. ஆனாலும், இணைய சஞ்சிகைகளிலும் கருத்துத் தணிக்கைக்கான வாய்ப்புகள் மின்மடல் இதழ்கள் போல உண்டு என்பது ஒரு குறை. அதனாலேயே, ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்துக்கும் விவாதத்துக்கும் உதவாத மின்மடல், இணைய சஞ்சிகைகள் என்ற வடிவங்களை விட்டு இணையம் வேறு வடிவங்களைத் தேடிக் கொள்ள ஆரம்பித்தது.

அடுத்து வந்தவை. இணையக் குழுமங்கள். தன் எழுத்தும் கருத்தும் கவனிக்கப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு மின் குழுமங்கள் ஒரு வரப்பிரசாதம். மின்குழுமங்களில் எல்லாரும் எழுத்தாளர்களே. எழுத்தாளனும் வாசகனாகிற தளம் அது. வாசகனும் விமர்சகனாகவும் எழுத்தாளனாகவும் உருமாறுகிற தளமும் இதுதான். எழுத்தாளனையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கிற கருத்துகள் வெளியாகிற வாய்ப்புகள் உள்ள இடம். ஆனாலும் இங்கே எழுத்தாளன் ஒரு தளத்திலும் வாசகர் இன்னொரு தளத்திலும் பேசிக் கொண்டிருக்கிற விபத்துகள் நேரிடுவதுண்டு. இது எழுத்தாளர் வாசகருக்கு இடையே மட்டுமில்லாமல், எந்த விவாதத்திலும் ஈடுபடுகிற இருவருக்குமிடையே நேரக்கூடியதுதான் என்பது ஆறுதலான விஷயம். ஆனாலும், அவற்றையெல்லாம் மீறி உடனுக்குடன் வாசக அனுபவங்களை அறிந்து கொள்ளவும், படைப்பூக்கத்தைப் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிற வடிவம் இணையக் குழுமம். ஆனாலும், பலர் பங்கேற்கும் பரந்துபட்ட நேரடி விவாதத்துக்கு வழி கோலும் இணைய குழுமங்களுக்கும் குறை உண்டு. அது என்னவென்றால், குழுமங்களின் மட்டுறுத்துனர்கள் சில நேரங்களில் சர்வ வல்லமை பொருந்திய அவதாரமெடுத்து தாங்கள் விரும்பாதவற்றை அனுமதிப்பதில்லை. மேலும் மின் குழுமங்களில் ஒருவரின் படைப்புகளையும் அவற்றைப் பற்றிய விவாதங்களையும் தொடர்ந்து படிக்க முடியாது. ஒரே நேரத்தில் பல இழைகள் ஓடிக் கொண்டிருக்கும். குழுமத்திற்கென்று ஒரு தனிமுகம் இல்லை. பல முகங்களின் கூட்டுத் தொகுப்பு அது. இவற்றைத் தீர்க்க வந்த அடுத்த விடிவம் வலைப்பதிவு. ஆனாலும், உறுப்பினர்களின் கருத்துகளை மட்டுறுத்தித் தணிக்கை செய்யாத பல இணையக் குழுமங்கள் தமிழில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டு வருகின்றன. அங்கே மிகவும் அறிவார்ந்த ஆழமான விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன என்பது நாமறிந்த உண்மையுமாகும். விவாதத்துக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் மிகச் சிறந்த வடிவம் மின்குழுமங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து வந்த வடிவம் - வலைப்பதிவு. இதில் ஒருவர் தான் விரும்பியதைத் தான் விரும்பிய வண்ணம் எழுதிக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லை, மற்றவர்கள் தாங்கள் விரும்பிய வண்ணம் எதிர்வினைகளைத் தருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர முடியும். வலைப்பதிவுகள் தன்னளவில் இணைய சஞ்சிகைகள் போன்றவை. அதன் சிறப்பு - கால வரையறையின்றி வேண்டிய பொழுது பிரசுரமாவதும், உடனுக்குடன் வாசகர்கள் எதிர்வினை தருவதற்கான கருத்துப் பெட்டிகளைத் தருவதும்தான். வலைப்பதிவுகள்தான் எதிர்காலம் என்று நினைக்கிற எழுத்தாளர்களில் வெங்கடேஷின் நண்பர் பா.ராகவனும் உண்டு என்பதைப் பா.ராகவன் வலைப்பதிவைத் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவர். வலைப்பதிவுகளின் சிறப்பே அவற்றின் தனித்தன்மையும் ஒருவரின் ரசனைகளையும் கருத்தாக்கங்களையும் வெளிப்படுத்தவும், அதைக் குறித்த விவாதத்தில் பங்கேற்று தன்னைக் கூர்படுத்திக் கொள்ளவும் ஏற்ற இடம் என்பதுதான். எஸ்.ராமகிருஷ்ணன் போன்று எழுத்தைத் தீவிரமாக அணுகுபவர்கள் கூட வலைப்பதிவு என்கிற வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது இணையப் பரிணாம வளர்ச்சியில் வலைப்பதிவின் இன்றைய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

எனவே, தான் எழுதுவது மட்டுமே முக்கியம். அதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்கிற கருத்துடையவர்களுக்கு மின்மடல் இதழ் சிறந்த வடிவம் எனலாம். எந்த எழுத்தும் விவாதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மாற்றுக் கருத்துகள் கொள்வது வாசகரின் உரிமை என்று நம்புபவர்களுக்கும் ஏற்ற வடிவம் மின் குழுமங்களும் வலைப்பதிவுகளும். வரலாற்று ரீதியாகப் பார்ப்போமேயானால், எழுத்தாளனுக்குக் கருத்துச் சுதந்திரம் தருகிற அடிப்படை வடிவத்திலிருந்து, அனைவரின் கருத்துகளையும் வெளிப்படுத்த விரும்புகிற உலகளாவிய கருத்துச் சுதந்திர வடிவத்தை நோக்கி இணைய இதழியல் வடிவங்கள் முன்னேறி வந்துள்ளதை அறிய முடிகிறது. தான் எழுதுவதை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிற எந்த எழுத்தாளரும் தன்னைப் பற்றி வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிய விழைவதும் இயற்கை. அதற்கு உடனுக்குடன் சுலபமான வழிகளில் சிறப்பாக உதவுவது இத்தகைய நவீன வடிவங்கள்.

"வலைப்பதிவுகளின் வடிவமே அந்நியத் தன்மையோடு இருக்கிறது" என்று வெங்கடேஷ் சொன்னதாக ரமா எழுதியிருக்கிறார். எந்த ஒரு புது வடிவத்த்தையும் எளிதில் ஒத்துக் கொள்ளாத ஒரு மனப்பாங்காகவே இதை நான் காண்கிறேன். இந்த மனப்பான்மை சமூகத்தில் பரவலாக இருப்பதுதான். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. புதிய வடிவம் தன்னை நிரூபிக்கும்வரை காத்துக் கொண்டிருக்கிற ஜாக்கிரதையுணர்வு என்று இதை நேர்மறையாகக் கூட எடுத்துக் கொள்ளலாம். பேனாவிலும் பேப்பரிலும் கடிதங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மின்னஞ்சல் வந்தபோது, மின்னஞ்சலை குறித்தும் இதே போன்ற கருத்தை வெங்கடேஷ் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வாசகருடன் (எழுத்தின் நோக்கம் வாசகரை அடைவது. அவரின் சிந்தனையைக் கிளறுவது என்றால்) நேரடியாக உறவாடவும் பின்னூட்டங்கள் பெறவும் உதவுகிற நெருக்கமான உரையாடல்களை ஏற்படுத்த உதவுகிற வடிவங்கள் மின் குழுமங்களும் வலைப்பதிவுகளுமே. மாறாக, வாசகர்களை அந்நியத் தன்மை கொள்ள வைக்கிற பழைய வடிவம் மின்மடல் இதழ்கள். ஆகையால், வலைப்பதிவுகளின் வடிவமே அந்நியத் தன்மையோடு இருக்கிறது என்கிற வாதம் என்னளவில் ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை.

வலைப்பதிவுகளில் என்னென்ன பதியப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நிகழ்ந்து வருவதை வலைப்பதிவு வடிவத்தைத் தேர்ந்தெடுக்காததற்கு ஒரு காரணமாகச் சொல்கிற வெங்கடேஷ்தான், ரமாவின் கட்டுரையில் இன்னொரு இடத்தில் வலைப்பதிவுகள் மினி செய்தித்தாள்களாக மாறி வருகின்றன என்றும் வலைத்தளத்தின் வடிவம் அது என்றும் சொல்கிறார். இது உங்களுக்கு முரண்பாடாகத் தோன்றினால் நான் பொறுப்பில்லை. எந்த வடிவத்திலும் என்ன உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்பது, அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுப்பவர் நிர்ணயிப்பது என்று நான் நம்புகிறேன். வெங்கடேஷின் மின்மடல் இதழே கூட எனக்குப் பலவிதங்களில் மினி செய்தித்தாள் போலவும், வலைப்பதிவுகளில் உள்ளது போல, கவிதை, கட்டுரை, அலசல் போன்றவற்றை உள்ளடக்கியுமே இருக்கிறது. எனவே, வலைப்பதிவுகளைப் பற்றி அவர் வைத்திருக்கிற இந்த விமர்சனத்தை அவரின் மின்மடல் இதழுக்கும் பொருத்திப் பார்க்க ஒருவரால் முடியும். வெங்கடேஷின் மின்மடல் இதழ் கூட வலைப்பதிவுகள் போலவே ஒருவரின் நம்பிக்கைகளைச் சிந்தனைகளை மட்டுமே முன்வைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வலைப்பதிவில் வாசகர் உடனுக்குடன் கருத்துச் சொல்லவும், விவாதம் செய்யவும் வழியிருக்கிறது. எதிர்க்கருத்து என்ற பெயரில் தனிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன என்பது வலைப்பதிவுக்கும் குழுமங்களுக்கும் ஒரு குறைதான். ஆனால் இந்தக் குறை அச்சுப் பத்திரிகையிலிருந்து இணைய சஞ்சிகை வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது. எனவே, இது வலைப்பதிவு, குழுமங்கள் ஆகியவற்றின் குறை மட்டுமில்லை.

"மடலாடற் குழுக்கள் என்பவை ஒரு கட்டத்தில் மிகவும் Impersonal ஆகத் தொடங்கி விட்டது" என்று வெங்கடேஷ் சொல்வதாக ரமா எழுதியிருக்கிறார். இது மடலாடற் குழுக்களின் குறை மட்டுமில்லை. இன்றைக்குத் தமிழில் இருக்கிற இணைய வடிவங்கள் எதிலும் காண்கிற குறைதான். திண்ணை போன்ற பிரபலமான இணைய இதழ்களில் கூட இத்தகைய குறைகளைக் காண முடியும். எந்த ஒரு வடிவமும் அதில் பங்கேற்கிறவர்களின் விரிவாழத்தைப் பொறுத்தே சிறப்பாகவோ மோசமாகவோ அமைய முடியும். பலரும் ஆர்வமுடன் பங்கேற்கும்போது தனித்தன்மையும் நோக்கும் போக்கும் சிலநேரங்களில் மாறிப்போவதும் தொலைந்து போவதும் உண்மைதான். ஆனால், தன் நோக்கம் எது என்று அறிந்த ஒருவர் இவற்றைச் சுலபமாகக் கையாள முடியும். தமிழ்ச் சிறுபத்திரிகையுலகின் ஆழத்தையும் விரிவையும் இன்றைக்குத் தமிழ் இணைய உலகில் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த ஆழமும் விரிவும் இல்லையென்று எழுதாமலும் இருப்பது சரியில்லை. அப்படி எழுதாமல் இருப்பது, இணையத்தில் இருக்கிற தட்டையான மேம்போக்கான திருப்தியற்ற நிலையே தொடர வழிவகுக்கும். மாறாக, தமிழில் அறிவும் ஆழமும் மிக்க சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இணையத்தில் நுழைந்து ஒருவழிப்பாதையாக எழுதித் தனக்கான அங்கீகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதோடு நின்று விடாமல், ஆக்கபூர்வமான விவாதங்கள், பங்கேற்புகள் ஆகியவற்றின் மூலம் தன் சுற்றுப் புறத்தின் தரத்தையும் உயர்த்த முடியும். அந்த நம்பிக்கையில்தான் ஜெயமோகன், எஸ்.இராமகிருஷ்ணன், இரா.முருகன் போன்றோர் இணைய உலகிலும் மின்குழுமங்களிலும் (எஸ்.இராமகிருஷ்ணன் மின்குழுமங்களில் பங்கேற்கவில்லை) தீவிரமாகப் பங்கேற்று வந்தனர். வருகின்றனர். வெங்கடேஷிக்கும் அந்த நம்பிக்கை உண்டு என்றே நான் நம்புகிறேன். ஆனால், அவருக்கு மின்மடல் வடிவம் பிடித்திருக்கிறது என்பதற்காக மற்றவற்றை இப்படிச் சரியில்லை என்ற மாதிரி கருத்து சொல்வதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது. தனக்கு மின்னிதழ் வடிவம் பிடித்திருக்கிறது, அதனால் அதைப் பயன்படுத்துகிறேன் என்று வெங்கடேஷ் சொல்லியிருந்தால் நமக்கு மாற்று கருத்தில்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு கருத்துப் பரிமாற்ற வடிவத்துக்கும் குறிப்பிட்ட சிறப்பியல்புகளும் பலவீனங்களும் உண்டு. ஆனாலும் பரிணாம வளர்ச்சி என்பது காலத்துக்கேற்ற தேவைகளைத் தருவது. ரமாவுக்கு இன்றைய உலகிலும் மாடு பூட்டிய கட்டை வண்டியில் போவதுதான் பிடித்திருக்கிறது என்றால் அது அவர் விருப்பம். எனக்கும் மாட்டு வண்டியில் போவது பிடிக்கும்தான். கட்டை வண்டி மனிதனின் பயணத்துக்கு உதவிய முதல் வடிவங்களில் ஒன்று என்கிற மரியாதையும் மதிப்பும் எனக்கும் உண்டு. அதற்காக நவீன போக்குவரத்து வடிவங்களை மாட்டு வண்டியை விட மோசம் என்று நான் சொல்ல முயல மாட்டேன். ஆனால், ரமா முயல்கிறார். அவர் மேற்கோள் காட்டுகிற வெங்கடேஷின் வாசகங்கள் முயல்கின்றன. அதனாலேயே இவ்வளவு விவரமாக எழுத வேண்டியிருந்தது.

பின்குறிப்பு: இது ஒரு முரண்நகையாக இருக்கலாம். ரமாவின் கட்டுரை கடைசியில், வெங்கடேஷின் மின்மடல் இதழ் வலைத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லி, அதற்கான இணைய முகவரியைத் தருகிறது. :-)

No comments: