நாகரீகமற்ற அல்லது ஆபாசமான வார்த்தைகளை (மனித குறி சார்ந்த அல்லது புணர்ச்சி சார்ந்த வட்டார அல்லது எதிர்மறை வார்த்தைகளை அல்லது சுருக்கமாகச் சொன்னால் "பச்சை பச்சையாகப் பேசுவதை") "கெட்ட வார்த்தைகள்" என்று சொல்லிக் கொடுக்கிறோம். அப்படி சொல்லிக் கொடுக்கிற ஆனால் அதையே தேவை ஏற்படும்போது பயன்படுத்துகிற சமூகத்தால் வளர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இத்தகைய வார்த்தைகளை என்ன பெயரிட்டு அழைப்பது என்பது ஒரு கேள்விக் குறி. வார்த்தைகளில் என்ன புனிதம் இருக்கிறது. எல்லாமே வார்த்தைதானே. நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்றெல்லாம் ஏதும் உண்டா? ஒரு வார்த்தை கெட்ட வார்த்தை என்றால் அதை அனுமதித்திருக்கிற மொழிக்கு அதில் பங்கில்லையா, மொழியின் ஒரு பகுதியும் அப்போது கெட்ட மொழியா என்றெல்லாம் எனக்கும் தீர்மானமான விடைகள் தெரியாத கேள்விகள் இருக்கின்றன. இத்தகைய வார்த்தைகளை வசைச் சொற்கள் என்று அழைப்பது எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனென்றால், ஒரு மொழியில் தரமான வசைச் சொற்களும், இப்படிப்பட்ட வார்த்தைகளின் வகைப்பாட்டுக்குள் வராத வசைச் சொற்களூம் இருக்கும். அதனாலேயே, எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட விதத்தில் இவற்றைக் "கெட்ட வார்த்தைகள்" என்றே இப்போதைக்கு வசதிக்காக அடையாளப்படுத்திக் கொள்கிறேன்.
இவற்றை ஆங்கிலத்தில் Indecent words, Unparliamentary words, obscene words, vulgar words என்று பலபெயர்களில் அழைக்கிறார்கள்.. சென்னை பல்கலைக்கழகப் பேரகராதி Vulgar என்ற வார்த்தைக்கு இழிவழக்கு என்றும் ஒரு பொருள் சொல்கிறது. எனவே, இவ்வார்த்தைகளை இழிவழக்கு என்று அழைக்கலாமா என்றும் யோசிக்கலாம். புன்மொழி என்று இன்னொரு பெயரும் தோன்றுகிறது. வேர்ச்சொல் ஆராய்ச்சியும் மொழியியலும் என் cup of tea அல்ல. ஆனால், பயன்படுத்துகிற சொற்கள் பிறருக்கும் சுலபமாகப் புரிகிறவையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அதனாலும் இந்தக் கட்டுரையில் கெட்ட வார்த்தை என்ற சொல்லையே பிடித்துக் கொள்கிறேன்.
சில கெட்ட வார்த்தைகள் காலப்போக்கில் அவற்றின் பொருளையும் வீரியத்தையும் இழந்து விடுகின்றன. அவை பலரும் உபயோகிப்பதால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சொற்களாகி விட்டனவா, அவற்றைக் குறித்த மதிப்பீடுகள் காலப்போக்கில் மாறிவருவதால் இது நிகழ்கிறதா, கலாசாரமும் நாகரீகமும் நவீனமும் ஒன்றுடன் ஒன்று பிணைந்து புணர்வதால் ஏற்படுகிற பக்கவிளைவுகள் இதற்கு காரணமா, கெட்ட வார்த்தை என்று ஒதுக்கி வைக்கப்படுவதாலேயே மக்களுக்கு அதன்மீது வருகிற கவர்ச்சியினாலா, கோபம், இயலாமை, எரிச்சல், விரக்தி, வெறுப்பு, ஆவேசம், வக்கிரம் ஆகியவற்றை உடல்ரீதியான செயல்களால் (வன்முறை முதலியன) வெளிப்படுத்த இயலாத சூழல்/வெளிப்படுத்த விரும்பாமை இச்சொற்களுக்கான தேவைகளை உண்டாக்குகின்றனவா என்று ஓர் ஆராய்ச்சியாளர் இதற்கு மானுடவியல், உளவியல், மொழியியல் ரீதியாக பலமுகமாகக் காரணங்களைத் தேடக் கூடும். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா தவறா என்ற விவாதத்தில் இறங்காமல், இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றும் சொல்லாமல் இவ்வார்த்தைகள் சமூகத்தில் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றியே இந்தக் கட்டுரை பேசப் போகிறது.
அடித்தள மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட இச்சொற்கள் அவர்களுக்கிடையே புழங்கும்போது கோபாவேசத்தின் கணநேர வெளிப்பாடாக வெளிப்பட்டுப் பின் அர்த்தம் இழந்து போகின்றன. தன் வீட்டுச் சோற்றைத் திருடி தின்றுவிட்டான் என்பதற்காக "தேவடியா பெத்த பயலே" என்று மண்ணாங்கட்டிச் சிறுவனைத் திட்டுகிற மாரியாயி, அவன் தாய் இறந்துபோன பிறகு அவனுக்குச் சோறுபோட்டு அவனை "மவனே" என்று உச்சிமோந்து அழுகிற ஜெயகாந்தனின் "ஒரு பிடி சோறு" இதற்கு நல்ல உதாரணம். பாமாவின் "கருக்கு"வைப் படிக்கும்போது இத்தகைய பல வார்த்தைகள் வாழ்வில் எவ்வளவு யதார்த்தமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அறிய முயலும். அவற்றைப் படிக்கும்போது வாசகர்க்கு அருவருப்போ அவை ஆபாசம் என்கிற எண்ணமோ தோன்றுவதில்லை. கெட்ட வார்த்தைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து வாங்கித் தந்த எழுத்தாளர்களைப் பார்த்துவிட்டு, அவற்றைப் போட்டு எழுதினாலேயே யதார்த்தம் என்றும் இலக்கியம் என்றும் அந்தஸ்து வந்துவிடும் என்று முயன்றவர்களும் உண்டு. சினிமா இயக்குனர்களும் நடிகர்களும் சினிமாவையும் இதில் விட்டுவைக்கவில்லை. கல்லூரி மாணவர்களூக்கிடையே கூட ஆத்தா, அம்மா தொடர்பான பிரயோகங்களூம் இன்ன பிற வார்த்தைகளூம் நட்பின் அடிப்படையில் மிக சகஜமாகப் பயன்படுத்தப்படுவதை 80களின் பின்பகுதியிலும் 90களின் ஆரம்பங்களிலும் நான் மாணவனாக இருந்த காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.
எனவே, கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பது சரியா தவறா என்கிற பட்டிமன்றம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அச்சொற்கள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நிஜமாக இருக்கிறது. இத்தகைய சொற்களைப் பிறர் பேசக் கேட்டாலே காதைப் பொத்திக் கொள்கிற மேல்தரத்தினரும் அறிவுஜீவிகளும்கூட அவற்றை ரகசியமாகவோ மனதுக்குள்ளாகவோ வேறுவழியின்றியோ சில நேரங்களிலாவது பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகக் கூடும். அத்தகைய நேரங்களில் மற்றவர்கள் பேசுவதைத்தானே நாமும் பேசுகிறோம் என்ற சமாதானங்களை அவர்கள் தமக்குள் சொல்லிக் கொள்ளக் கூடும். சில நேரங்களில் இத்தகைய வார்த்தைகளைவிடப் பொருத்தமான இயல்பான பதில் இல்லை என்று சொல்லத்தக்க கணங்களும் வாழ்வில் ஏற்படுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட இனம் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும்போது சரியென்று நினைக்கிற வார்த்தைகளைப் பிறர் தம்மீது பயன்படுத்தும்போது கோபப்படுவதும் அவமானம் என்று உணர்வதும் உண்டு. எனவே, இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிற காரணம், சூழல், அவசியம், இவற்றுக்குப் பதில் பொருத்தமான வேறு என்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம், எந்த சபையில் (தனிப்பட்ட பேச்சிலா, பொது சபையிலா மற்றும் who is the audience) பயன்படுத்தப்படுகிறது ஆகிய பல காரணிகளைக் கொண்டு இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியென்றும் சரியில்லை என்று அவரவர் தீர்மானிக்கலாம்.
அமெரிக்காவில் இத்தகைய வார்த்தைகளை மத நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள், ஜனநாயகக் கட்சியினர், குடியரசு கட்சியினர், வெள்ளைக் காலர் உத்தியோகம் பார்ப்பவர்கள், ப்ளூகாலர் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்று பெரும்பாலோர் சரளமாகவும் சகஜமாகவும் பயன்படுத்துகின்றனர். "One man's vulgarity is another man's lyric" என்று சொல்லி 1971-ல் "F--- the draft" என்று டீஷர்ட்டில் எழுதிக் கொண்டு வந்தவர் மீது தொடரப்பட்ட வழக்கில், - பேச்சுரிமை வழங்குகிற முதல் சட்டத் திருத்தத்தை (First Amendment) அடிப்படையாகக் கொண்டு, - கலிபோர்னியா நீதிபதி குற்றம் சாட்டபட்டவரை விடுவித்தார். (First Amendment in US Constitution: Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the government for a redress of grievances. )
Federal Communications Commission என்ற அமைப்பு ஊடகங்களில் (பத்திரிகைகள், தொலைகாட்சிகள் முதலியன) ஆபாசமான வார்த்தைகளோ, காட்சிகளோ வராமல் நெறிப்படுத்துகிற காரியத்தையும் செய்கிறது. இந்த ஆண்டு அமெரிக்கக் கால்பந்து லீகான NFLன் இறுதி ஆட்டம் (Finals) நடந்தபோது இடைவேளையின் போது நடைபெற்ற ஜானட் ஜாக்சனின் (மைக்கேல் ஜாக்சனின் சகோதரி இவர்) ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் அவருடன் பாடியவர் அவர் மேலாக்கைப் பிடித்திழுக்கத் தவறுதலாக அது பிய்ந்துபோய் அவர் மார்பகம் வெளியே தெரிந்துவிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அது பற்றி பல கண்டனங்கள் சொல்லப்பட்டன. பின்னர் அந்நிகழ்ச்சியைத் தயாரித்தளித்த Viacom நிறுவனமும் ஒளிபரப்பிய CBS TVயும் மன்னிப்பு கேட்டுக் கொண்டன. அமெரிக்க காங்கிரஸில் இது குறித்த விவாதமும் விசாரணையும் நடைபெற்றன. இந்நிறுவனங்களூக்கு அபராதமும் விதிக்கப்பட்டன. அனைவரும் பார்க்கக் கூடியவை என்று வகைப்படுத்தப்பட்ட பொதுநிகழ்ச்சியில் இது நடைபெற்றது குழந்தைகளையும் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்ற வாதம் சரியாக இருக்கிறது. அமெரிக்காவில் இதற்கென்றே R rated சேனல்களும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. அவற்றில் இத்தகைய காட்சிகளூம் வார்த்தைகளும் சகஜமாக வருவதை அமெரிக்கர்கள் முகம் சுளிக்காமல் கண்டு களிக்கவே செய்கின்றனர். Late Night show, Jey Leno, David Letterman, Jerry Springer, Howard Stein போன்றவர்கள் நிகழ்ச்சியில் பட்டவர்த்தனமாகவோ மறைமுகமாகவோ இவை வெளிப்படுகின்றன. பணம் பண்ணுவதை நோக்கமாகக் கொண்ட சமுதாயத்தில் எவையும் நியாயப்படுத்தப்படுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும், தொலைகாட்சி மற்றும் ஊடகங்களில் ஆபாசம் என்பது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதை அது உள்ளடக்கினாலும், தனிப்பட்ட தலைப்பாக ஆராயப்படக் கூடியது. வாழ்வின் ஒரு அங்கமாகக் கெட்ட வார்த்தைகள் இங்கே மாறிவிட்டதற்கு உதாரணமாகவே இந்த உதாரணங்களைத் தருகிறேன். மற்றபடிக்கு "ஊடகத்தில் ஆபாசம்" என்ற பொருள் குறித்து பேசுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.
நகைச்சுவையாகவும் ரசனையாகவும் கெட்ட வார்த்தைகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல், தங்களின் கோபம், இயலாமை, விரக்தி, எரிச்சல் முதலான உணர்வுகளை வெளிப்படுத்தவும் அமெரிக்கர்கள் அத்தகைய வார்த்தைகளை உபயோகிக்கின்றனர். ரிச்சர்ட் கிளார்க் எழுதிய அகென்ய்ன்ஸ்ட் ஆல் எனிமிஸ் என்ற புத்தகத்திலே வருகிற உரையாடல்களிலிருந்து அமெரிக்க அரசாங்கத்தை நிர்வகிக்கிற பிற துறைகளின் தலைமைப் பதவியிலே இருக்கிற பலரும் F... you, F..... up என்பது மாதிரியான வார்த்தைகளை எவ்வளவு சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறியலாம். அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் முன்னாளில் டெக்ஸாஸ் மாநில கவர்னராக இருந்தபோது, எந்தச் சட்டத்தை நிறைவேற்றவும் ஜனநாயகக் கட்சியுடன் அடிக்கடி உறவாட வேண்டியிருந்தது. அந்த விதத்தில் அவருக்குப் பழக்கமான ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஒருவர் ஒரு பிரச்னையில் "I am going to f... you on this" என்று புஷ்ஷிடம் சொன்னார். அப்போது சிரித்தபடி ஜார்ஜ் புஷ் "You have to first kiss me for that" என்று சொன்ன பதில் நினைவுகூரத் தக்கது. அமெரிக்க சாலைகளில் எரிச்சலைடைந்து போன வாகன ஓட்டுனர்கள் எரிச்சலூட்டிய ஓட்டுனரைப் பார்த்து கோபத்தில் நடுவிரலை உயர்த்திக் காட்டுவதும், F... you என்று கத்துவதும் சகஜம். பெண்களும்கூட இயல்பாக இதைச் செய்கிறார்கள்.
அலுவலகத்தில் என் மேலாளர் ஒருவர் கோபமும் இயலாமையும் வரும்போது "F.... him/her" , "S.... up" போன்ற வார்த்தைகளைப் பிறரைக் குறித்து சாதாரணமாகப் பெண் ஊழியர்கள் முன்னிலையிலும் பயன்படுத்துவார். சொல்லிவிட்டு "ஸாரி" என்று அவர் ஒப்புக்காகச் சொல்லும்போது பெண்ஊழியர்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதையும், "Not a problem" என்று சிலநேரங்களில் சொல்வதையும் பார்த்திருக்கிறேன். ஒரு முறை ஒரு பெண் ஊழியர் தமாஷாக "என்னைச் சொல்லாதவரை எனக்குப் பிரச்னையில்லை" என்றார் சிரித்தபடி. மேலாளர் இப்படி ஒவ்வொருமுறையும் சொல்லி முடித்தபின் "நான் இப்போது நிம்மதியாக உணர்கிறேன். என் மனத்திலிருந்து பாரத்தை இறக்கிவிட்ட உணர்வு வருகிறது" என்றும் சொல்லிக் கொள்வார். உடலியல் ரீதியான வன்முறையில் இறங்காமல் இப்படி வார்த்தைகளுடன் நின்றுவிடுகிறார்களே என்று கலாசார சீரழிவுக்கும் நியாயம் தேட வேண்டிய நிஜம் இப்படி எல்லா இடங்களிலும் இங்கே இருக்கிறது. இத்தகைய லெட்-அவுட் செய்கிற முறையிருந்தும் அதையும் மீறி வன்முறையும் துப்பாக்கி கலாசாரமும் குற்றங்களும் இங்கே ஏன் அதிகமாயின என்பதும் ஆராயப்படக் கூடியது.
அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் சேனி (Dick Cheney) ஹாலிபர்ட்டன் என்கிற நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் (போர்டில்) முன்னர் இருந்தார். இராக்கை மறு கட்டுமானம் செய்கிற பணிகளுக்கான பல காண்ட்ராக்ட்கள் தன்னிச்சையாகவும், போட்டி நிறுவனங்களைப் பரிசீலிக்காமலும், ஹாலிபர்ட்டன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன. இதுபற்றி ஜனநாயகக் கட்சியினரும், ஒரு சில பத்திரிகையாளர்களும் எழுப்பிய குரல்கள் ஒன்றையும் செய்ய இயலவில்லை. அதுபற்றி டிக் சேனியை கேள்வி கேட்டு கடுப்பேற்றியவர் வெர்மாண்ட் மாநிலத்தைச் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் செனட்டரான பேட்ரிக் லேஹி. சென்றவாரம் செனட் கூட்டத்தொடர் முடிந்து செனட்டர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்று கொண்டிருந்தபோது, டிக் சேனி பேட்ரிக் லேஹியைப் பார்த்து கோபத்தில் சொல்லிய திருவாசகம் - F.... youself. பின்னர் டிக் சேனி இதைப் பற்றிப் பின்னர் பேசும்போது தான் பேட்ரிக் லேஹியைச் சபித்ததை ஒத்துக் கொண்டாலும், அப்படிச் செய்தபின் நிம்மதியாக உணர்ந்தேன் என்றும் பதில் சொன்னார்.
இத்தகைய வார்த்தைகளை வாழ்வின் ஓர் அங்கமாகப் பார்த்துப் பார்த்து பழகிப் போன அமெரிக்கர்களுக்கு டிக் சேனி இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியது ஆச்சரியம் தந்திருக்காது. பேட்ரிக் லேஹி இதற்கு என்ன பதில் சொன்னார் என்பதும் தெரியவில்லை. ஆனால், ஈராக் மீதான போர் பற்றிய கேள்விகளுக்கும், ஹாலிபர்ட்டன் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட கான்ட்ராக்டுகள் பற்றிய கேள்விகளுக்கும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அமெரிக்க மக்களுக்கும் உலகத்துக்கும் அலட்சியமாகவும் ஆணவமாகவும் சொன்ன பதில் F... yourself என்பதை அறியாமல் பெரும்பாலான அமெரிக்கர்கள் அதை இயல்பாக எடுத்துக் கொள்வதைப் பார்த்தால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது இது குறித்து அறிந்திருந்தும் ஒன்றும் செய்ய இயலாமல்/விரும்பாமல் இருக்கிறார்களா அல்லது வருகிற நவம்பர் முதல் வாரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களா என்பதும் போகப்போகத் தெரியும்.
பி.கு.: ரிச்சர்ட் என்கிற பெயரை அமெரிக்கர்கள் சுருக்கி டிக் (Dick) என்று அழைக்கிறார்கள். டிக் (dick) என்கிற வார்த்தைக்கு அமெரிக்க பேச்சு வழக்கில் ஆண்குறி என்கிற பொருளும் உண்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment