Tuesday, August 03, 2004

கனிமொழி - ஓர் அறிமுகம்

[மரத்தடி யாஹ¥ குழுமத்தில் Ask the Author நிகழ்ச்சியில் மரத்தடி நண்பர்களின் கேள்விகளுக்குக் கனிமொழி பதிலளிக்கப் போகிறார். கனிமொழி பற்றிய அறிமுகமாக மரத்தடி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொண்டதை இங்கேயும் இடுகிறேன்.}

பெண்களுக்கான உரிமைகள், சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசும்போது மஹாகவி பாரதி பெண் விடுதலை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து நோக்குங்கால் காரைக்கால் அம்மையாரையும், ஆண்டாளையும் (கன்னடத்தில் அக்கம்மா தேவியையும்) பெண் விடுதலையின் சின்னங்களாக ஒருவர் பார்க்க முடியும். "சங்க காலத்துக்கு முந்தைய புராதன தமிழ்ச் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்திருக்கலாம்" என்று எழுதுகிற ஜெயமோகன் அதற்கு ஆதாரமாக சங்கப் பாடல்களிலிருந்து தடயங்களைக் காட்டுகிறார். (தோற்கடிக்கப்பட்ட அன்னை - ஜெயமோகன் - உயிர்மை - டிசம்பர் 2003). எனவே, பெண் விடுதலை இடையில் இல்லாமல் போனது என்றாலும், அல்லது, ஆரம்பம் முதலே இல்லையென்று சொன்னாலும்கூட பெண் விடுதலை குறித்த பிரக்ஞையும் பெண்களுக்கான உரிய மரியாதை தருகிற பார்வையும் இந்திய மரபிலும் தமிழ் மரபிலும் இருந்திருக்கிறது எனலாம். கேரள தாய்வழி சமூக அமைப்பு அதற்கு இன்னோர் உதாரணம்.

1960களின் பிற்பகுதியில் அமெரிக்காவில் எழுந்த பெண்களின் குரல் பெண் விடுதலைக்குப் பெண்ணியம் என்று புதுப்பெயர் கொடுத்தது. அந்தப் புதுக்குரலும் புதுப்பெயரும் எழுந்த அறுபதுகளின் பிற்பகுதியில், தன்னை "நிச்சயமாக" ஒரு பெண்ணியவாதி என்று நம்புகிற கனிமொழி பிறந்தார். ஆனாலும், தமிழ் மரபின் மீதும் சங்க இலக்கியத்தின் மீதும் கனிமொழிக்கு ஆர்வம் இருக்கிறது. அதனாலேயே நஞ்சுண்டன் அவரை, "நெடிய தமிழ் மரபின் தொடர்ச்சியாகக்" காண்கிறார் (அகத்திணை முன்னுரை - நஞ்சுண்டன்).

"ஒரு கவிதை என்பது எப்போதும் கவிதை மட்டுமே அல்ல" என்கிறார் கனிமொழியின் கருவறை வாசனைக்கு வாழ்த்துரை எழுதிய கல்யாண்ஜி. கனிமொழியின் கவிதைகளை இந்த வாக்கியத்தின் பின்புலத்தில் அணுகுவது கனிமொழியையும் அவர் எழுத்துகளையும் புரிந்து கொள்ள உதவும். அந்த அணுகுமுறையே, யூ.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற ஜாம்பவான் எழுத்தாளர்களைக் கூட கனிமொழியைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறது. படைப்பை வைத்து மட்டுமே படைப்பாளியை மதிப்பிட வேண்டும் என்பது சரியான அணுகுமுறையாக இருந்தாலும், படைப்பாளியின் குடும்பம், சமூக அந்தஸ்து, அவர் குடும்பத்துப் படைப்பாளிகள், அவர்கள் எழுதியவை, அதிலிருந்து படைப்பாளி எவ்வாறு வேறுபடுகிறார் அல்லது வேறுபடவில்லை என்கிற பல கதவுகளின் வழியே படைப்பாளியை அணுகுவதும் மதிப்பிடுவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. விமர்சனம் என்ற ரீதியில் இவை செய்யப்படாதபோது, படைப்பாளியைப் புரிந்து கொள்ளவும், படைப்பின் மீது பரிவு காட்டவும் இத்தகைய அணுகுமுறை உதவும் என்றும் சொல்லலாம். சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டவர்கள், புதியதாக எழுத வந்தவர்கள் என்ற இத்தகைய பல அடையாளங்களே தலித் இலக்கியத்தையும் பெண் எழுத்தாளர்களையும் புரிந்து கொள்ளவும் ஆதரிக்கவும் உதவவில்லையா. அதுபோல.

தன் குடும்பம், பெற்றோர் ஆகியவற்றின் மூலம் பரவலாக அறியப்படுகிறார் என்பது கனிமொழி போன்ற எழுத்தாளர்கள் மீது பலரும் வைக்கிற குற்றச்சாட்டு. குடும்ப அந்தஸ்து என்பது பலநேரங்களில் எழுத்தாளர்களுக்கு வசதியைவிட சுமை¨யைத் தருகிற, சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிற விலங்காகி விடுகிறது. இதைக் குற்றம் சாட்டுகிற பலர் அறிவதில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. குடும்பமும் பெற்றோரும் ஒரு நல்ல அறிமுகத்துக்கு உதவக் கூடும் ஆனால் நல்ல எழுத்தாளர் என்ற பட்டம் வாங்கித்தர எழுத்துதான் துணை நிற்கும் என்பதைக் கனிமொழி அறிந்திருக்கிறார் என்பதை அவர் எழுத்துகளில் இருந்து அறிய முடிகிறது. நல்ல கவிதைகளைத் தந்ததாலேயே தி.க.சிவசங்கரன் மகன் என்ற அளவுகோலை விட்டு வெளிவந்து கல்யாண்ஜி என்ற கவிஞரை அறிந்து கொள்ளவும், கல்யாண்ஜியின் தந்தை தி.க.சி என்று சொல்கிற அளவுக்கும் கல்யாண்ஜியைப் புரிந்து கொள்ள வைத்தது. அப்படியே, கனிமொழியின் எழுத்துகளைப் படிக்கும்போது அவர் தந்தையின் புகழ், பிம்பம், நடை, கருத்தாக்கங்கள் ஆகியவற்றை விட்டு வெளிவந்து தனக்கென ஒரு தனிஅடையாளம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை விமர்சகர்களும் ஒத்துக் கொள்வார்கள். அவர் தந்தையின் எழுத்துகளை விமர்சிப்பவர்கள் கூட கனிமொழி எழுத்துகளில் தென்படுகிற மரபின் தொடர்ச்சி, நவீனம், பெண் விடுதலை, தனிஅடையாளம், முற்போக்கு (பெரும்பாலும் இடதுசாரி) கருத்தாக்கங்களை மகிழ்வுடன் கவனித்தே வருகிறார்கள் என்பது என் அனுமானம்.

கனிமொழி பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். தி ஹிந்து, சிங்கை தமிழ் முரசு ஆகிய நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவமும் உண்டு. கருவறை வாசனை (1995), அகத்திணை (2003) ஆகிய கவிதைத் தொகுதிகளும், பார்வைகள் (1995), கறுக்கும் மருதாணி (2003) ஆகிய கட்டுரைத் தொகுதிகளும் வெளிவந்திருக்கின்றன.

கனிமொழியின் கவிதைகளைப் பற்றிப் பேசவரும்போது நஞ்சுண்டன் பின்வரும் கருத்துகளைத் தெரிவிக்கிறார்: (அகத்திணை முன்னுரை - நஞ்சுண்டன் - 2003. வாக்கிய அமைப்பு வசதிக்காக என் வார்த்தைகளை ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன். ஆனால், கருத்தை மாற்றவில்லை. )

1.) வெறுமனே இலக்கியத்தில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதாக இல்லாமல், ஆண்களால் சொல்ல முடியாத பெண்களின் பிரச்சினைகள் உள்ளாகப் பெண்ணுக்கத்தின் நுட்பமான கூறுகளைப் பதிவு செய்வது பெண்கவிகள் முன் உள்ள சவாலாகிறது. இதைக் கனிமொழி புரிந்திருக்கிறார்.

2.) அமானுடங்கள் கவிதையில் அமைந்து தமக்குள்ளும் மனிதர்களுடனும் உறவுகொள்வதும் மரபின் ஓர் அம்சமே. அமானுடங்களின் இயக்கம் அல்லது அவை மனிதர்களுடன் கொள்ளும் உறவுகள் கனிமொழி கவிதைகளின் இரண்டாவது தொகுதியில் தென்படுகிறது.

3.) கனிமொழியின் பல கவிதைகளையும் கவனித்தால் அவர் தன்னை மரபிலிருந்து விலக்கிக் கொள்ள நினைக்கிறவராகத் தெரியவில்லை. ஆனால், மரபு சார்ந்த அமைப்புகளால் ஒரு சார்பாகக் குவியும் அதிகாரத்தின் மீதான தன் விமர்சனத்தை உரத்துப் பேசாத வரிகளின் மூலம் முன்வைக்கிறார்.

4.) கனிமொழியின் கவிதைகள் தமிழ்க் கவிதைகளைக் கூர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு நிச்சயம் வேறு சில கவிதை வரிகளை மனத்தில் கிளர்த்தும். (இதை நஞ்சுண்டன் பாராட்டாகவே சொல்கிறார். ஒரு கவிதை அனுபவம் அதன் கருப்பொருளுடன் அல்லது அது சார்ந்த பிற காரணிகள் தொடர்புடைய இன்னொரு கவிதையையோ அனுபவத்தையோ நினைவுறுத்துவது போல.)

5.) கனிமொழியின் கவிதைகள் முதல் தொகுதியைவிட இரண்டாவது தொகுதியில் கச்சிதமான வடிவத்தில் உள்ளன.

6.) ஒரு கருத்தாடலை முன்வைக்காத தூய கவிதை (pure poetry) எழுதுகிற நிலைக்கு கனிமொழி வளர்ந்திருக்கிறார்.

7.) தன்னை அடையாளப்படுத்தும் படிமங்களைக் கனிமொழி இனிமேல்தான் படைக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சாத்தியம் என்பதற்கான தடயங்கள் தென்படுகின்றன.

கறுக்கும் மருதாணி கட்டுரைத் தொகுதிக்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

" இந்தக் கட்டுரைகளின் சொற்களுக்கு அப்பால் ததும்பிக் கொண்டிருக்கும் 'தாயன்பு' பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். புத்தர் குறிப்பிட்ட 'மைத்ரி' என்ற பொருளில் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தூங்கும் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு அதனுடன் பேசுவது போல, கவனமாகத் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் ஒரு தாயை இக்கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. பொய்மையோ பாசாங்கோ இல்லாத, பொறுப்பும் கடப்பாடும் கொண்ட சொற்களால் நெய்யப்பட்டிருக்கும் இக்கட்டுரைகள் இப்படியாகத்தான் படைப்பிலக்கியத்தின் மதிப்பையும் ஆற்றலையும் பெறுகின்றன. அதிகாரத்தின் பொறியமைவுகளைச் சிதைத்து அதிகார உறவுகளை மாற்றியமைக்கவும் முற்படுகின்றன."

ஒரு எழுத்தாளனுக்கு தாயைப் போன்ற பொறுப்பும் உணர்வும் கவலையும் அன்பும் கண்டிப்பும் வேண்டும். அதுவே நல்ல எழுத்தாளனுக்குள் இருக்கிற தேடல். (இதை நான் ஆன்மீகத் தேடல் அல்லது உண்மைக்கான தேடல் என்பேன். ஆன்மீகம் என்றால் பக்தி என்ற பொருளில் அல்ல.) அந்தத் தேடல் எழுத்தாளனையும், எழுத்தையும், அவன் சார்ந்த சமூகத்தையும் எட்ட இயலாத உயரங்களுக்கு அழைத்துச் செல்லும். இத்தகைய மனப்பான்மையும் தேடலும் ஒருவரை ஞானியாக்கவும் கூடும். "முக்காடிட்டவாறு கதவின் பின்னால் மறைந்து நின்று அடக்க ஒடுக்கமாகப் பேசும் குல ஸ்திரீயானாலும் சரி, வாயில் தாம்பூலம் தரித்துக் கொண்டு, வெளித் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, போவோர் வருவோரைப் பார்த்துச் சிரிக்கும் பரஸ்திரீயானாலும் சரி, நான் பராசக்தியையே காண்கிறேன்" என்ற ராமகிருஷ்ண பரமஹம்சருக்குள் இருந்த தாயைப் போன்ற பொறுப்பும் மனநிலையும் அந்தத் தேடல் அடைந்த முதிர்ச்சியுற்ற கண்டுபிடிப்புக்கு உதாரணம். இத்தகைய ஒரு தேடல் தன்மையைக் கொண்டிருக்கின்றன கனிமொழியின் எழுத்துகளும் கவிதைகளும்.

வேண்டியது வேண்டி
வேண்டியது கிட்டியபின்
வேண்டியது வேண்டா
மனது

என்கிற வரிகள் அந்தத் தேடலைத், தேடல் தொடர்கிற நுட்பத்தைப் பதிவு செய்வதைக் காணலாம். அந்தத் தேடல் தமிழ் இலக்கியத்தில் கனிமொழியின் பெயரைப் பதிக்கிற பல படைப்புகளை அவரிடமிருந்து கொணரும் என்ற எதிர்பார்ப்பையும் தருகிறது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யத் தேவையான மரபும், தைரியமும், தனித்தன்மையும், நவீனமும், சுதந்திர உணர்வும், கருத்தாக்கங்களும் அவர் இதுவரை எழுதியவற்றில் நிறைய இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தருகிற விஷயமாகும்.

தான் சொல்ல நினைப்பதைத் தயக்கமின்றி முன்வைக்கும் அச்சமற்ற தன்மையைக் கனிமொழி எழுத்துகளில் பார்க்க முடிகிறது. அச்சம் தவிர்த்து சொல்ல நினைப்பதைச் சொல்வதில் உண்டாகிற மகிழ்ச்சியும் போதையும் பெருமிதமும் அளப்பதற்கரியன. அதைக் கனிமொழி உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் எழுத்துகளில் பல இடங்களில் காண முடிகிறது.
ஒரு சோறாக, "இங்கு தீவிர நவீன தமிழ்ப் படைப்பாளியான ஜெயமோகனை 'மலையாளி' என்று சொல்லிக் கொச்சைப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்" என்று கணிப்பும் காழ்ப்பும் கட்டுரையில் 2002ல் அவர் எழுதியதைக் குறிப்பிடலாம்.

ஜாதி ரீதியிலான கொடுமைகள் மற்றும் பாகுபாடுகள் ஆகியவற்றை எதிர்க்கிற கனிமொழி பின்வருமாறு எழுதுவது அவர் மீதுள்ள நம்பிக்கையை உயர்த்துகிறது. "சங்கத் தமிழில் எந்த ஜாதிக்கு உரிமை உள்ளது என்று வரையறுத்துக் கூறிவிட முடியுமானால் மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம். உ.வே.சா. படாத பாடுபட்டு சேர்த்திருக்காவிடில் திராவிடப் புகழ் பாடும் இந்தச் செல்வங்கள் எப்போதோ செல்லரித்திருக்கும். அவர் பார்ப்பனர் என்பதால் தமிழ் இலக்கியங்களைக் கடலில் கொண்டு விட்டுவிடலாமா? அல்லது சங்கப் புலவர்களில் யார் இன்ன ஜாதி என்று தெளிவாக வரையறுக்கத்தான் முடியுமா?"

"நாம் பார்த்தும் கவனிக்காமல் கடந்து போகிறவற்றினூடாக நமது வாழ்வின் ஆதாரமான சிக்கல்களை அணுகியிருக்கிறார் கனிமொழி" என்கிறார் ரவிக்குமார். (கறுக்கும் மருதாணி முன்னுரை - ரவிக்குமார் - 2003). இப்படிப்ப்பட்ட விமர்சனங்களும் வாழ்த்துகளும் தருகிற உற்சாகத்தில் கனிமொழியின் எழுத்துகள் அவருக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள வகையில் தொடரவும் சிறக்கவும் வேண்டுகிறேன்.

நன்றி: மரத்தடி யாஹ¥ குழுமம்

No comments: