Saturday, August 14, 2004

ஆம். இந்தியா உலகிற் களிக்கும்!

இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் மஹாகவி பாரதியின் இந்தப் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

பாடல்: பாரத ஸமுதாயம்
ராகம்: பியாக்
தாளம்: திஸ்ர ஏகதாளம்

பல்லவி:

பாரத ஸமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத ஸமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய --- (பாரத)

அனுபல்லவி:

முப்பது கோடி ஜனங்களின் ஸங்க
முழுமைக் கும்பொது உடைமை
ஒப்பி லாத ஸமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க --- (பாரத)

சரணங்கள்:

மனித ருணவை மனிதர் பறிக்கும்
    வழக்க மினியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ? - புலனில்
வாழ்க்கை யினியுண்டோ? - நம்மி லந்த
வாழ்க்கை யினியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
    எண்ணரும்பெரு நாடு
கனியுங் கிழங்குந் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்தநித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க --- (பாரத)

இனியொரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனியொ ருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம் - வாழ்க --- (பாரத)

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்;
எல்லாரு மமரநிலை யெய்துநன்முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க --- (பாரத)

எல்லாரு மோர்குலம் எல்லாரு மோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எலலரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க --- (பாரத)

பாரதியார் கவிதைகள் - கவிதா வெளியீடு - கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை - 17

No comments: