Friday, September 17, 2004

அறிவியல் புனைகதைப் போட்டி

(இது குறித்து நான் முன்னர் இட்ட பதிவு காணாமல் போய்விட்டதால் தலைப்பை மாற்றி மறுபடியும் இடுகிறேன். மூக்கு சுந்தர் அந்தப் பதிவில் கருத்து சொல்லியிருந்தார். அக்கருத்து haloscanல் இருக்கிறது. எப்படி இணைப்பு கொடுப்பது என்று தெரியவில்லை. மன்னிக்கவும்.)

திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி பற்றிய விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

தமிழ் இணையத்தில் இது ஒரு மைல்கல். ஓர் இணைய இதழும் இணையக் குழுமமும் இணைந்து போட்டி நடத்துகிற புதிய முயற்சி. இணையத்தில் தமிழ், அரசியல், சமூகம், அறிவியல், இலக்கியம் என்று பல துறைகளில் ஆழமாக எழுதுபவர்க்கும், புதிதாக எழுதுபவர்க்கும் இடம் கொடுத்த கொடுக்கிற முன்னோடியாகப் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் திண்ணையும், இலக்கியப் போட்டிகளின் மூலமும் எழுத்தாளரைக் கேளுங்கள் போன்ற நிகழ்ச்சிகளின் மூலமும் எழுத்தாள - வாசகர் உறவினை மேம்படுத்தியும் புதிய எழுத்தாளர்களை உருவாக்கியும் வருகிற மரத்தடியும் கைகோர்த்திருக்கிற கூட்டணி. தமிழில் மேலும் வளர வேண்டிய துறையான அறிவியல் புனைகதையின்பால் விசேட கவனம் செலுத்துகிற அரிய முயற்சி. நடுவராக அறிவியல் புனைகதைகளில் பெயர் பதித்த சுஜாதா இருக்கிற பொருத்தம். பரிசுகளும் அபாரம்.

ஒரு நிகழ்ச்சியை எவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்தாலும், நடத்தினாலும் கலந்து கொள்கிறவர்களின் பங்கேற்பினாலேயே அது வெற்றியடைகிறது. இது போன்ற மேலும் பல சிறப்பான நிகழ்ச்சிகள் இணையத்தில் தொடர வேண்டுமென்றால் இத்தகைய நிகழ்ச்சிகளின் வெற்றி இன்றியமையாதது. இணையம் உலகளாவிய ஓர் அற்புத ஊடகம். இதிலே தமிழும் நாமும் சாதிக்க வேண்டிய விஷயங்கள் பலவும் உள. தமிழ்ச் சூழலில் நிலவுகிற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், மனமாச்சரியங்கள், வருத்தங்கள், சர்ச்சைகள் மற்றும் சண்டைகள் ஆகியவற்றைவிட்டு சற்று வெளியே வந்து இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தருவதன்மூலம் இதைப் போல பல செயல்களைப் பிறர் இணையத்தில் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகளை நம்மால் ஏற்படுத்த முடியும். அதனால், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், தங்கள் நண்பர்களைக் கலந்து கொள்ளச் சொல்லுமாறும் அன்புடன் வேண்டுகிறேன். சகோதர இணையக் குழுமங்களும், வலைப்பதிவாளர்களும், வலைத்தளங்களும் இப்போட்டி குறித்த செய்தியைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு இதில் பங்குபெறுமாறு தங்கள் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டுமென்றும் அன்புடன் வேண்டுகிறேன்.

இது திண்ணையும் மரத்தடியும் நடத்துகிற நிகழ்ச்சி மட்டும் அல்ல. தமிழ் இணைய உலகில் ஆர்வமுடன் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் நடத்துகிற நிகழ்ச்சி. இந்தப் போட்டி பல நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காட்டுகிற அற்புதமான கண்ணாடியாக அமையப் போவதோடு, நம்மிடையே எல்லாம் நல்லுறவையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்கக் கூடிய வலிமை மிக்கதாகவும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்ஙனமே ஆகுக!

1 comment:

Arun Vaidyanathan said...

Dear Sivakumar,
Greetings. This is a great news. Today morning, I wanted to post a comment here...but it didnt allow me to do so. Great start...All the best!
Love,Arun