Tuesday, October 26, 2004

தமிழின் மறுமலர்ச்சி - 3

(தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிளளை நினைவு மன்றம், 'வையகம்', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28.)

தமிழும் சுதந்திரமும் என்ற தலைப்பிலான கட்டுரையிலிருந்து...

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பேராசிரியர் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். சுதந்தித்தால் அந்நியரின் தொடர்பு முற்றிலும் நீங்கவில்லை என்று காந்திஜி கருதுவதைச் சொல்கிற பேராசிரியர், பூரண சுதந்திரம் அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அதற்கு ஒற்றுமை ஒன்றே வழி என்று சொல்கிறார். சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் நடைபெற்ற இந்து-முஸ்லீம் கலவரம் பேராசிரியரைப் பாதித்திருக்கிறது. இந்தியா பூரண வெற்றியடைய இந்துக்களும் முஸ்லீம்களும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதேபோல, தமிழ்நாட்டில் ஒருபிரிவினர் தனிப்பட்ட வாழ்க்கையை (பிரிவினையை) சுயநலத்தின் பொருட்டு ஊக்குவிப்பதையும் (அந்தக் காலத்தில் பிரிவினைவாதம் பேசிய திராவிட இயக்கத்தைப் பேராசிரியர் சொல்கிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன்.) பேராசிரியர் குறிப்பிடுகிறார். வட இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லையென்று அப்பிரிவினைவாதிகள் சொல்லி வருகிறார்கள். அதிலே உண்மையில்லை.

நமது சமயமும் தெய்வங்களும் வட இந்தியாவுக்கும் உரியவையே. உதாரணமாக,

புறநானூற்றில் கடவுள் வணக்கச் செய்யுளில் சிவபெருமானது நீலகண்டம்,

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே

என்று குறிக்கப்படுகிறது.

நீல மணிமிடற்றொருவன் போல

என்று பிற இடங்களிலும் வந்துள்ளது.

நற்றிணையில்,

வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே

என்று திருமால் வணக்கம் சொல்லப்படுகறட்து. இப்படியே இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களும் தமிழ்நாட்டுக்கும் உரியவை என்று தொல்காப்பியம் கூறுகிறது. உயிர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, பந்தம், வீடு, பேறு முதலிய நம் சமயக் கொள்கைகள் வடநாட்டினருக்கும் உரியவையாகும். பஞ்ச பூதங்கள், இவை தோன்றிய வரலாறு முதலிய பௌதிக சாஸ்திரக் கொள்கைகளும், கிரஹண வரலாறு முதலிய கொள்கைகளும், நால்வகை வருணம் எண்வகை மணம் முதலிய சமூகக் கொள்கைகளும், இந்திர விழா முதலிய உற்சவங்களும், இன்னும் கலைப் பண்பிற்குரிய பல அம்சங்களும் சங்க காலம்தொட்டே வட நாட்டிலும் தென்னாட்டிலும் ஒன்றாய் இருந்ததை சங்க இலக்கியங்களால் அறியலாம். அதுமட்டுமில்லாமல், பாரத தேசம் முழுமையும் ஒன்று என்ற கொள்கையும் பழங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது.

புறநானூற்றில் 'பொற்கோட்டி மயமும் பொதியமும் போன்றே' என்று நமது தேசத்தின் வடகோடியையும் தென்கோடியையும் இணைத்துக் கூறுகிறார் ஒரு புலவர். இரு பேரெல்லைகளுக்குள்ளும் அகப்பட்ட நிலம் முழுவதும் ஆட்சி புரிந்த தமிழ் மன்னர் ஒரு சிலர் உளரெனச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

குமரியடு வட இமயத்து
ஒரு மொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்கு...

என்று வாழ்த்துக் காதையில் வருகின்றது.

ஆகவே, வடநாட்டினரும் தென்னாட்டினரும் வெவ்வேறு மனித வர்க்கத்தினர் (different races) என்ற கொள்கை பிற்காலத்ததே என்று அறியப்படும். இலக்கியங்களாலும் சரித்திரங்களாலும் எட்ட முடியாத பழங்காலத்தில் இவ்விரு நாட்டினரும் வெவ்வேறு வர்க்கத்தினராக இருந்திருக்கலாம். ஆனால் இரண்டு வர்க்கங்களும் ஒன்றாய்க் கலந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. சிலர் தம்மை ஆரியரென்றும், சிலர் தம்மை திராவிடரென்றும் கூறிக் கொள்வது இப்போது பொருளற்றது. இப்படிக் கூறிக் கொண்டு தென்னாட்டவருக்குத் தனிப்பட்ட ஒரு ஸ்தானம் வேண்டுமென்று வாதிப்பது சரித்திர விரோதமும், மனித வர்க்க சாஸ்திர விரோதமுமாகும். ஆனால், மொழி பற்றிய மாகாணப் பிரிவினை அவசியமாகும். அது வேறு பிரச்னை.

பேராசிரியர் இந்தக் கட்டுரையில் பிரிவினை மனப்பான்மையைப் பற்றி மேலும் விவரமாகப் பேசுகிறார். தேசப்பிரிவினைக்கு ஒவ்வாத சிலர் கூட வடமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதச் சொல்வது சரியில்லை. வடமொழிச் சொற்கள் நூல்களிலும், மேற்குடியிலும், படித்தவர்கள் இடையிலும் மட்டும் இருக்கிறது என்பதும் தவறு. நம் மக்களில் எல்லாப் பகுதியினரிடமும் வடமொழிச் சொற்கள் பல காலமாகத் தமிழ் சொற்களாகவே புழங்கி வருகின்றன. சில உதாரணங்கள், அச்சு, அதிகாரம், அதிட்டம், அன்னம், ஆதி, இட்டம், இயக்கி, இந்திரன், ஈயம், ஈனசாதி, உத்தரவு, உருவம், உட்டணம், ஊசி, எசமான், எமன், எந்திரம், ஏலம், ஒட்டகம், கலியாணம், காரியம், குடும்பம், சந்திரன், சனி, சாதி, சூரியன், தண்டம், தந்திரம், நகம், நாயன், பக்கம், பாவம், புதன், மந்திரம், மாசம், முகம், முக்கியம், முழுத்தம், யமன், ரத்தம், ராசா, லச்சை, லாபம், வசியம், வஞ்சனை.

அதேபோல வடமொழி சாஸ்திரக் கலை போன்றவற்றை அந்தணர் மட்டுமே இயற்றினர் என்று கருதுவதும் தவறு. பிற சமயத்தினரும், அந்தணர் அல்லாதாரும், இந்திய தேசத்தில், தமிழ்நாட்டினர் உள்படப் பல நாட்டினரும் வடமொழி சாஸ்திரங்களையும் கலைகளையும் இயற்றியுள்ளார்கள். எனவே, அந்தணர் மீது கொண்டுள்ள வெறுப்பை வடமொழி மீது செலுத்துவது தவறாகும். இம்மொழி இந்தியப் பொதுமொழியாகும். இம்மொழியை இழப்பது தமிழர்கள் பூர்வார்ஜிதத்தை இழப்பது போலாகும். சமுதாய உலகத்தில் தமிழ் மக்களாகிய நாம் எப்படித் தனித்து வாழ்தல் இயலாதோ, அப்படியே மொழியுலகில் தமிழ் தனித்து வாழ்தல் இயலாது. வடமொழியை நன்றாகப் பயன்படுத்துவதற்குத் தமிழுக்குப் பூரண சுதந்திரம் உண்டு. இதைச் சொல்வதால் வடமொழிக்கு நாமும் தமிழும் அடிமையாக வேண்டுமென்ற அர்த்தமில்லை. தமிழ்தான் தென்னாட்டில் தலைமை வகிக்க வேண்டும். வடமொழி வழக்கொழிந்த மொழி. தமிழ் உயிர்த்தத்துவமுடைய மொழி. இவ்வாறு சொல்கிற ஆசிரியர் செழித்துக் கொண்டிருக்கிற தமிழின் சிறப்புகளை விவரித்து இன்னும் ஆறு காரணங்கள் சொல்கிறார். அக்காரணங்களால் தமிழ் தமிழ்நாட்டில் தலைமை பெற உரியதென்று விளக்குகிறார்.

இப்படித் தமிழ்மொழியை முதற்கடமையாகப் போற்ற வேண்டிய நாம், அடுத்து அன்பு பூண்டு பேண வேண்டியது வடமொழியாகும் என்கிறார் பேராசிரியர். இருமொழிகளுக்கும் இடையிலான உறவையும், வரலாற்றையும் அதற்குக் காரணமாகப் பேராசிரியர் சொல்கிறார்.

தமிழ்ப் பேரிலக்கியங்கள் பற்றி அடுத்துப் பேசுகிறார் பேராசிரியர். தமிழ்ப் பேரிலக்கியங்கள் நிலைத்த மதிப்புடையன. அவை தவிர்த்த பிறநூல்கள் பெரும்பாலும் வடமொழியைப் பின்பற்றியவை. விஞ்ஞான அறிவு பரவுவதற்கு இவை பயன்படா. அதனால்தான் சர்.சி.வி.ராமன் நமது தேசத்தின் நூல் நிலையங்களிலுள்ள நூல்களில் பெரும்பாலனவற்றை எரித்துவிட வேண்டுமென்று ஒருமுறை சொன்னார். அப்படிச் செய்வது பிழையாகும். ஆனால் சர்.சி.வி.ராமனின் உட்கருத்து போற்றத்தக்கது. விஞ்ஞான அறிவுதான் சிறந்த அறிவு. அதை வளர்ப்பதற்கும், மக்களிடம் பரப்புவதற்கும் உரிய வல்லயையைத் தமிழ் பெற வேண்டும்.

தமிழ் தெய்வத்தன்மை உடையது என்றும், ஆங்கிலத்தின் துணை விரும்பத்தக்கது இல்லை என்றும், தமிழில் எல்லா அறிவு நூல்களும் நிரம்பியுள்ளன என்றும், தமிழுக்கு இனி வளர்ச்சி வேண்டாமென்றும் ஒரு சாரார் கருதுகிறார்கள். இது கேடு விளைவிக்கக் கூடியது. என்று நமது மொழி பரிபூரணமடைகிறதோ அன்று அதனுடைய இறப்பு திண்ணம். ஆனால், பரிபூரண நிலையை அது என்றும் அடைய முடியாது. மனித அறிவு வளர்ச்சிக்கு எல்லையில்லை. அதைப் போன்றதுதான் மொழியின் வளர்ச்சியும். ஓடிக்கொண்டிருக்கும் ஜீவநதி போன்றது மொழி. அது பரிபூரணமடைந்துவிட்டது என்பது, நதியை அணைபோட்டுத் தடுப்பது போலாகும்.

தேசத்தின் சுதந்திரத்தை புறத்தே தெரியும் ஆட்சி முறைகளால் அறியலாம். மொழியின் சுதந்திரம் அப்படி எளிதில் அறியப்படுவதன்று. மொழியின் ஆற்றலைக் கொண்டே அதை ஊகித்துணர முடியும். ஆகவே, நமது மொழியும் சுதந்திர நெறியில் செல்லத் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவுறுகிறது.

அடுத்த கட்டுரை, பாரதி யுகம் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. மஹாகவி பாரதி மீது பேராசிரியருக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்பதை அவர் எழுத்துகளிலிருந்து அறிய முடிகிறது. பல இடங்களில் பாரதியை மேற்கோள் காட்டுகிறார். பாரதியைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன.

(தொடரும்)

No comments: