கவிதையைப் பற்றிப் பலர் பலவாறான கருத்துகளை மொழிந்துள்ளார்கள். அக்கருத்துகளில் பலவும் கவித்துவமுடையனவே. வேர்ட்ஸ்வொர்த் சொல்லிய கவிதைக்கான இலக்கணத்தை உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். (Poetry is the spantaneous overflow of powerful feelings which takes its origin from emotion recollected in tranquility) இன்றளவும் நெஞ்சில் பசுமரத்தாணி போன்று தங்கிவிட்டது அது. கவிதையைப் பற்றி யோசிக்கும்போதெல்லாம் முந்திக் கொண்டு முன்வந்தும் நிற்கிறது. வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் உண்டான பல்வேறு வகையான போக்குகளையத்து கவிதைக்கு வெவ்வேறு வரையறைகள் இருக்கக் கூடும்.
தமிழில் எடுத்துக் கொண்டால், "தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல்" என்கிற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. பாரதியின் கவிதைகள் அவன் நினைத்தபடியெல்லாம் இருந்தது தமிழ் பெற்ற வரம். "கவிதை மனதிற்குள் ஓர் அசைவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்" என்றார் ந.பிச்சமூர்த்தி. என் கல்லூரி காலத்தில் நான் படித்த இவரின் சில கவிதைகள் எனக்கு அப்போது சுத்தமாகப் புரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது இவர் கவிதைகளைத் தேடி அவை இவர் வரையறையைப் பூர்த்தி செய்கிறதா என்றறியப் படிக்க வேண்டும்.
கவிதை "சிக்கலும் சிடுக்கும் உள்ளதாக இருக்க வேண்டும்" என்று க.நா.சுப்ரமண்யம் சொல்லியிருக்கிறாராம். சொல்லக் கூடியவர்தான். உலக இலக்கியங்களை எல்லாம் உற்றுப் பார்த்து அத்தகைய முயற்சிகள் தமிழில் வரவேண்டும் என்று அவர் விரும்பியதாகவே அவர் எழுத்துகளைப் (இலக்கியக் கருத்துகளை என்றும் வாசித்துக் கொள்ளலாம்) படிக்கும்போது உணர்ந்திருக்கிறேன். அவரும் கவிதைகள் எழுதியிருக்கிறார். மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் புனைந்திருக்கிறார். என் சிற்றறிவை ஈர்க்கும் வண்ணம் அவை இல்லை. அப்புறம் எப்படி, அதில் சிக்கலும் சிடுக்கும் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பது. பரிசோதனை முயற்சிகளாகவே அவரின் படைப்புகள் தோற்றமளிப்பதுண்டு. என் வாசகப் பார்வையின் குறையாக இது இருக்கலாம்.
கவிதை குறித்து இன்னார் இன்ன சொன்னார் என்றோ, சொல்லிவிட்டு இப்படிக் கவிதை எழுதிப் போனார் என்றோ நான் பட்டியலிடப் போகிறேன் என்ற எதிர்பார்ப்பில் இன்னமும் இருப்பீர்களேயானால் கடைசியில் ஏமாந்து போகக்கூடும்.
வலைப்பதிவு எழுதுகிற வேகத்திலும், அவசர உலகம் வெளிக்கொணர்கிற எக்ஸ்பிரஸ் சிந்தனைகளின் தாக்கத்திலும் கவிதை என்றதும், நினைவுக்கு வந்ததை மேலே கொட்டி வைத்திருக்கிறேன்.
கவிதைக்கு ஆயிரம் வரையறைகள் இருக்கின்றன. கவிதையியல் குறித்து அதே அளவுக்குப் பார்வைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், ஒரு கவிதையை முதன்முறையாகப் படிக்கும்போதும், அது நல்ல கவிதையா இல்லையா என்ற முடிவுக்கு மனம் உடனடியாக வரும்போதும், இத்தகைய வரையறைகள் எந்தவிதமான நேடியான பங்களிப்பும் ஆற்றுவதில்லை என்றே சொல்லலாம். இத்தகைய வரையறைகளை முன்னரே படித்திருந்தால், அவை அடிமனதின் ஆழத்தில் தேங்கிப் போய், கவிதை நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற முடிவெடுக்க மறைமுகக் காரணமாக இயங்கக் கூடும். கவிதை தருகிற அனுபவம், அது வாசகரின் மனத்துள் கிளர்த்துகிற பிற அனுபவங்கள், நினைவலைகள், பார்வைகள், பாதிப்புகள் என்று வாசகருக்கே உரித்தான பல அந்தரங்கக் காரணிகளின் அடிப்படையில் ஒரு கவிதையை நல்ல கவிதையா இல்லையா என்று வாசகர் தீர்மானிக்கிறார். வாசகரின் அறிவும், அனுபவமும் அவற்றின் விரிவும் இன்னொரு காரணமாகவும் இருக்கும். அறிவும் அனுபவமும் கவிதையை கவிதையியலில் பல்வேறு பார்வைகளை வைத்து அளவிட உதவுகின்றன. ஆனால், ஒரு கவிதையைப் படிக்கும்போது ஒருவர் எப்போதும் இத்தகைய பார்வைகளுடன் உட்காருவதில்லை. ஒரு வாசகராகவே உட்காருகிறார் என்று நேர்மறையாகவே - என் அனுபவத்தின் அடிப்படையில் - நான் நம்புகிறேன்.
ஒரு கவிதையை நல்ல கவிதை என்று எப்படிச் சொல்வது என்ற கேள்விக்கு விவரமான விடை கிடைக்குமா? புதுக்கவிதையோ மரபுக்கவிதையோ எந்தக் கவிதையானாலும் அது நல்ல கவிதை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஜனவரி 1959, சரஸ்வதி இதழில் க.நா.சுப்ரமண்யம் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்? அதில் பின்வருமாறு எழுதுகிறார். (வாசிக்கச் சுலபமாக, ஒரு பத்தியில் தொடர்ந்த வாக்கியங்களாக இருந்ததை, நான் உடைத்துத் தந்திருக்கிறேன்.)
"பொதுவாக ஒரு நான்கு விஷயங்கள் சொல்லலாம் - புதுக்கவிதைக்கும் பழங்கவிதைக்குக் பொதுவான விஷயங்கள் இவை.
வார்த்தைச் சேர்க்கைகள் காதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில் மீண்டும் எதிரொலி எழுப்புகிறதா என்பது முதல் கேள்வி.
இரண்டாவதாக, எந்தக் காலத்திலுமே வாழ்க்கை எந்தக் காலத்து மனிதனுக்கும் சிக்கலானதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அந்தந்தக் காலத்துக் கவிதை - நல்ல கவிதை - அந்தக் காலத்துச் சிக்கலை அப்படியே தருகிறது நமக்கு. அப்படி இன்றையப் புதுக்கவிதை இன்றைய வாழ்க்கைச் சிக்கல் தொனிக்க அமைந்திருக்கிறதா என்பது இரண்டாவது கேள்வி.
இன்றைய வாழ்க்கைச் சிக்கலையும் புதிரையும் போலவே முதலில் புரியாததுபோல இருந்து, படிக்கப் படிக்கப் புரியத் தொடங்குகிறதா என்பது மூன்றாவது கேள்வி.
கடைசியாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய நான்காவது கேள்வி இது. நள்ளிரவில் விழித்துக் கொள்ளும்போது, இந்தக் கவிதையில் ஒரு அடியாவது திடுதிப்பென்று காரண காரியமே இல்லாமல் மனதில் தானே தோன்றிப் புது அர்த்தம் தருகிற மாதிரி இருக்கிறதா?
எந்தக் கவிதையைப் படித்துவிட்டு இந்த நான்கு கேள்விகளுக்கும் ஆம், ஆம், ஆம், ஆம் என்று பதிலளிக்க முடிகிறதோ, அந்தக் கவிதை - நல்ல கவிதை - உயர் கவிதை என்று நாம் முடிவு கட்டி விடலாம்."
(நன்றி: சரஸ்வதி களஞ்சியம், தொகுப்பாசிரியர்: வ.விஜயபாஸ்கரன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை - 17)
நல்ல படைப்புகளைக் காலந்தோறும் பட்டியலிட்டு வந்தவர் க.நா.சு. ஆனால், ஒரு படைப்பு அவர் பட்டியலில் இடம் பெறுவதற்கான அல்லது இடம் பெறாமல் போனதற்கான காரண காரியங்களை அவர் போதுமான அளவுக்கு விளக்கியது இல்லை என்று எழுத்தாளர்களுக்கும் பிற விமர்சகர்களுக்கும் அவர் மீது ஒரு குறை உண்டு. அப்படிப்பட்ட க.நா.சு, எது நல்ல கவிதை என்பது குறித்து இவ்வளவு விளக்கமாக எழுதியிருக்கிறார் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
க.நா.சு கேட்கச் சொல்கிற நான்கு கேள்விகளில் மூன்றாவது கேள்வியின் முதற்பகுதி "முதலில் புரியாததுபோல இருந்து" என்பது மட்டுமே எனக்குக் கேள்விக்குறி. முதலில் இருந்து கடைசிவரை முதல்தடவையே புரிகிற பல நல்ல கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். க.நா.சு. சொல்கிற மற்ற விஷயங்கள் எனக்கு உடன்பாடானவையே.
ஆனால், எது நல்ல கவிதை என்று நிர்ணயிக்க நான் வேறு ஏதேனும் கேள்விகளும் கேட்பேனோ என்று யோசிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்கிறேன். கொஞ்சம் அவகாசமும் நேரமும் எடுத்துக் கொண்டு அதைப் பற்றி நிதானமாக யோசிக்கப் போகிறேன். உடனடியாகத் தோன்றுவது இது. எல்லாப் படைப்புகளுக்கும் இருக்க வேண்டியதுபோலவே, சொந்த அனுபவத்தைச் சொல்வதாக இருந்தாலும், ஒரு புள்ளியில் அந்த அனுபவம் பிரபஞ்சத்துக்கும் ஒத்த பொதுவிஷயமாக வாசகரால் பார்க்கப்படுகிற தன்மை கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக, பல கவிதைகளைச் சொல்ல முடியும். ஆனாலும், தவிர்க்கிறேன். இன்னமும் யோசிக்கும்போது இன்னமும் தோன்றலாம்.
இந்த நேரத்தில் ஒரு நல்ல கவிதையின் லட்சணம் என்று நீங்கள் எதெதைச் சொல்வீர்கள் என்று யோசித்து இங்கு பகிர்ந்து கொள்ளுங்களேன். நல்ல கவிதையில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற எதிர்பார்ப்புக்கு (லட்சணத்துக்கு) ஒரு யுனிவர்சல் தன்மை (பிரபஞ்சத்துவம்) இருக்க வேண்டும் என்று சொல்லி வைப்பது உதவக் கூடும். உதாரணமாக, நல்ல கவிதை என்றால் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது ஒரு யுனிவர்சல் எதிர்பார்ப்பு ஆக முடியாது. ஏனெனில் மொழி கவிதைக்கான ஊடகம்தான். மேலும், நல்ல கவிதை தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லையே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment