Thursday, October 21, 2004

தலாய் லாமா பேசுகிறார்

டைம் பத்திரிகையில் எனக்குப் பிடித்த பகுதிகளில் இந்த "10 கேள்விகள்" பகுதியும் ஒன்று. பத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நச்சென்ற ஆனால் ஆழமான கேள்விகளும், அதற்கேற்ற சுவாரஸ்யமான பதில்களும் பெரும்பாலும் காணக் கிடைக்கும். இந்தக் கேள்வி-பதில் பெரும்பாலும் டைம் பத்திரிகையில் ஒரு முழுபக்கத்தைத் தாண்டாது. ஆனால் பல விஷயங்களை உள்ளடக்கியிருக்கும் என்பதும் இதை உடனடியாகவும் விரைவாகவும் படித்துவிடத் தூண்டுவன. அக்டோபர் 25, 2004 தேதியிட்ட டைம் பத்திரிகையில் தலாய் லாமாவிடம் 10 கேள்விகள் பகுதியில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. அதை இங்கே காணலாம்.

சீனா திபெத்தை பல்லாண்டுகளாக ஆக்ரமித்து இருப்பதும், தலாய் லாமா தலைமையில் சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணயத்துக்காகவும் திபெத்தியர்கள் போராடி வருவதும் பலர் அறிந்த விஷயங்கள். சீனாவின் ஆளுகைக்குட்பட்ட திபெத்தில் சுதந்திரமாக இயங்க இயலாது என்றும், அச்சுறுத்தல்கள் நேருமென்றும் தலாய் லாமா பல்லாண்டுகளாக இந்தியாவில் வசித்து வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.

"சீனாவின் ஆளுகையால் சில பொருளாதார மற்றும் பிற வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தும், திபெத்தியர்களின் கலாசார மரபு, மதரீதியான சுதந்திரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்குக் கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாகவே" தலாய் லாமா இந்த பதில்களில் சொல்கிறார். புரட்சியும், பொதுவுடைமையும் கூட சமத்துவத்தையோ மனித உரிமைகளையோ கொண்டு வராமல், அரசு மேலாண்மைவாதத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு மேலாண்மைவாதத்துக்கு எல்லாரும் உடைந்துபோன சோவியத் யூனியனின் முடிந்துபோன ஸ்டாலின் நாள்களைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், நிஜவாழ்க்கையின் நிகழ்கால உதாரணம் திபெத். இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல என்று இந்தியாவின் மனித உரிமைக் காவலர்களான இடதுசாரிகள் சப்பைக்கட்டு கட்டலாம். நான் கூட இது பொதுவுடைமைக் கொள்கையின் தவறல்ல. அது செயல்படுத்தப்பட்ட விதத்தின் தவறே என்று நம்புகிறேன். எனவே, விஷயம் என்னவென்றால் - ஆட்சிமுறை ஜனநாயகமாக இருந்தாலும், புரட்சி வழி பூக்கிற பொதுவுடைமையாக இருந்தாலும், அமெரிக்கா போதிக்கிற முதலாளித்துவ ஜனநாயகமாக இருந்தாலும் குறைகள் ஆள்பவர்களிடமும், சித்தாந்தங்கள் செயல்படுத்தப்படுகிற விதத்திலும் இருக்குமானால், அதற்காக அந்த அமைப்போ வழியோ முற்றிலும் சரியல்ல என்று சொல்லிவிட முடியாது என்பதுதான். இருக்கிற எல்லாவிதமான ஆட்சிமுறைகளையும் எடுத்துக் கொள்ளும்போது, ஜனநாயகம் என்கிற ஆட்சி முறையிலே இக்குறைகளைக் களைகிற அதிகாரம் நேரடியாக மக்களிடமும், குறைகளைக் களைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவும் இருக்கின்றன. ஜனநாயகத்தின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள் குறித்த பெருங்கதையாடல்கள் இணையத்தில் நிகழ்வதால் (இத்தகைய விவாதங்கள் கண்டிப்பாக நிகழத்தான் வேண்டும்) இதைச் சொல்கிறேன்.

இது மட்டுமல்ல. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தை தலாய் லாமா பேசுகிறார். என்னவென்றால், சீனாவிடமிருந்து திபெத்துக்கும் அதன் கலாசாரத்துக்கும் தீவிரமான அச்சுறுத்தல் இருக்கிறபோதும், தனித்துப் போகாமல், சீனாவுக்குள்ளிருந்தே திபெத் மிகப்பெரிய அனுகூலங்களை அடைய வேண்டுமென்றும் அடையக்கூடுமென்றும் அவர் விரும்புகிறார். திபெத் தனித்து சுதந்திர நாடாக இருக்க வேண்டும் என்கிற கொள்கையைக் கைவிட வேண்டியதன் அனுகூலங்களை விளக்குகிறார். போனால் வந்தால் மொழிவாரியான மக்களுக்கு அவர்களின் சுதந்திரத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்கிற சுவாதீனமும், தனித்து வாழ்கிற உரிமையும் வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கிடையே, 1950லிருந்து சீனாவின் ஆளுகைக்குட்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாகி இருந்தாலும், சீன ஒன்றியத்துள் இணைந்து இருப்பதுவே திபெத்துக்கும் திபெத்தியர்களுக்கும் நல்லது என்று நம்புகிற தலாய் லாமாவின் கருத்துகள் மிகவும் முக்கியத்துவமுடையன. தலாய் லாமாவின் இந்தக் கருத்து ஒரு மாற்றுப் பார்வை என்ற அளவிலேயும், தன் மக்களும் நாடும் தனித்திருக்க வேண்டுமென்று முன்னர் விரும்பியவரின் முக்கிய மனமாற்றம் என்ற அளவிலும் மிகவும் கவனிக்கவும் ஆராயவும் தக்கது. ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறைக்கும் எதேச்சதிகாரத்துக்கும் ஆளான ஒரு நாட்டின் - பெரும்பான்மையான மக்களின் - பிரதிநிதி இத்தகைய மனமாற்றம் அடைய என்ன காரணங்கள் இருக்க வேண்டும் என்று சிந்தனாவாதிகள் கட்டாயம் ஆராய்வர். மற்ற சிலர் தலாய் லாமாக்குத் துரோகி பட்டம் அளித்து மகிழக் கூடும்.

பின்லாந்து(?) தனித்துப் போக விரும்பியபோது அனுமதித்தவர் லெனின் என்று பால்ய பருவத்தில் படித்த நினைவிருக்கிறது. பல நேரங்களின் பல வருடங்களுக்கு முன் படித்ததை நினைவில் வைத்தும், என் ஞாபகங்களின் அடிப்படையிலுமே எழுத வேண்டியிருக்கிறது. எனவே, இவற்றில் தவறிருந்தால், அதைச் சுட்டிக் காட்டுங்கள். ஆனால், வரலாற்றுத் தகவல்களின் பிழைக்காக கட்டுரையின் அடிப்படையைத் தூக்கி எறிந்து அவசரப்பட வேண்டாமென்று வேண்டுகிறேன். ஆனால், பின்னாளில் பொதுவுடைமை அரசாங்கங்களே இனக்குழுக்களின் சுதந்திரத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மதிக்காமல் அவர்களை அடக்கியாள்கிற புரட்சிகள் செய்ய ஆரம்பித்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில்தான் இடதுசாரிகள் மிகவும் உரத்த குரலில் மனித உரிமைகள் பற்றிப் பேச முடிகிறது. மாநில சுயாட்சி குறித்து குரல் கொடுக்க முடிகிறது. மத்தியில் கூட்டணி அரசை நிர்ணயிக்கிற சக்தியாக பரிணமளிக்க முடிகிறது. மதச்சார்புடைய நாடுகளிலோ அரசு மேலாண்மைவாதமோ பயங்கரவாதமோ ஆளுகின்ற நாடுகளிலோ இயக்கங்களிலோ இவற்றைப் பற்றிப் பேசுவது குறித்து கனவும் காண முடியாது.

அதனாலேயே, எந்தக் கதையாடுபவர்களும் அவர்கள் முன்வைக்கிற மாற்று முறைகளின் பெருமைகளைப் பேசுகிற அதே நேரத்தில் அந்த மாற்று முறைகள் ஏற்படுத்தியிருக்கிற வரலாற்று வடுக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குறிப்பிட்ட கொள்கைக்குத் தாலி கட்டிக் கொண்டு அதன் பொருட்டு அரசியல் ஜல்லி அடிப்பவர்களுக்கும் சிந்தனாவாதிகளுக்கும் வித்தியாசம் இல்லையென்றாகிவிடும்.

இதைப் படித்துவிட்டு காகிதப் போராளிகளிடமிருந்து தலாய் லாமாவுக்குக் கிடைக்கப் போகிற வசைகளுக்கு அவர் என்னை மன்னிப்பாராக.

பி.கு.: தலாய் லாமா இத்தகைய கருத்துகளை ஏற்கனவே சொல்லியிருக்கக் கூடும். ஆனால், அவற்றை என் சிற்றறிவு இப்போதுதான் கவனிக்கிறது என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

1 comment:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

FYKI
Not all leftists agree with what China did in case of Tibet, nor all leftists consider china as a socialist or communist country in the real sense.On the other hand Dr.Subramaniam Swamy supports Chinas stand and opposes the demand of Dalai Lama.In case of states often the interests of the states which includes commercial,political and strategic determines their response, not morals or ethics.in USA as china is important for trade, economic factors and trade interests have played a major role in determining the positions taken by successive govts.that is why human rights violations in china are acknowledged but often are relegated or do not become cause of friction in trade relations. i agree with demands of dalai lama and dont agree with those leftists who justify what china did or what it continues to do. since anyone who knows
about this Tibet question knows that there are divergent opinions within the left, broadly speaking it is better not to give a picture as if all leftists are pro china always in all issues.btb i think you should mention what is the stand of writers like jayakanthan
in this issue.