Thursday, October 21, 2004

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - ஒரு மாற்றுப் பார்வை

(எச்சரிக்கை: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து இடதுசாரி பார்வை கொண்ட ஒருவரின் கட்டுரை பற்றியது இது. அவரின் இடதுசாரி பார்வையை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அவர் கட்டுரையில் இருக்கிற உண்மைகள், தகவல்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு பின்வரும் கட்டுரையை மதிப்பிடுவது குடியரசு கட்சியை ஆதரிப்பவர்களுக்கும் உதவும். இந்த எச்சரிக்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள், கருத்துகள் பகுதியில் என்னைத் திட்டலாம். :-) )

கட்டுரையைப் படிக்க இங்கே சுட்டவும்.

ஜான் நிக்கோல்ஸின் மேற்கண்ட கட்டுரையில் எனக்குப் பிடித்த, சிந்திக்கத்தக்க கருத்துகள் பின்வருமாறு:

1. இந்த அளவுக்குக் கடும்போட்டியும் நிச்சயமின்மையும் நிலவுகிற தேர்தல்கள் கடைசியில் ஆட்சியில் இருப்பவர்க்கு எதிரான முடிவைத் தருவதாக அமைகின்றன.

2. தேர்தல் கணிப்புகளைச் சொல்லும் கேலப் (Gallup) நிறுவனம் குடியரசு கட்சிக்கு ஆதரவானது என்று ஒரு கருத்து நிலவுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் (நியூயார்க் டைம்ஸில் என்று நினைக்கிறேன்) கேலப் நிறுவனத்தின் கணிப்புகளை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஒரு பெரிய விளம்பரம் வெளிவந்த நினைவு. 2000 வருட தேர்தலின்போது கேலப் சொல்லியதைச் சுட்டி கட்டுரையாசிரியரும் கேலப் நிறுவனக் கணிப்புகளின் துல்லியத்தைக் கேள்வி கேட்கிறார்.

3. பாரம்பரியமாக ஓரளவு நம்பத்தகுந்த கருத்துக் கணிப்பென்று Wall Street Journal/NBC News கருத்துக் கணிப்பைச் சொல்கிறார். எந்தப் புள்ளிவிவரமும் எடுக்காமல், பழைய கருத்துக் கணிப்புகளின் உண்மையை ஆராயாமல், வாசகப் பார்வையிலும் என் மனமும் அறிவும் சார்ந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் Newyork Times/CBS News கருத்துக் கணிப்பும் தேவலாம் என்பேன்.

4. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகள் அதிகம் பயன்தராது என்கிறார் கட்டுரையாசிரியர். இது முக்கியமான கருத்தாகும். ஏனெனில் பாரம்பரியமாக குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் என்றே வாக்களிக்கிற மாநிலங்கள் உள்ளன. இச்சூழ்நிலையில் Swing States எனப்படுகிற முடிவு தெரியாத மாநிலங்களின் மக்களின் மனநிலையைக் கணிப்பது உபயோகமாக இருக்கும் என்கிற கட்டுரையாளரின் கருத்து மிகவும் நிஜம்.

5. பெண்கள் கெர்ரியை அதிக அளவில் ஆதரிக்கிறார்கள் என்று கட்டுரையாசிரியர் எழுதுகிறார். 9/11க்குப் பிறகு தாய்மார்கள் எல்லாம், "கால்பந்து தாய்மார்களில்" (soccer moms) இருந்து "பாதுகாவல் தாய்மார்களாக" (security moms) மாறிவிட்டார்கள் என்கிற பிரச்சாரம் முக்கிய ஊடகங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, கட்டுரையாசிரியர் கணிப்புகளின் அடிப்படையில் பெண்கள் இன்னமும் ஜனநாயகக் கட்சியையே ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது குறிப்பிடத்தக்கது. க்ளோரியா ஸ்டெய்னம் போன்ற அமெரிக்க பெண்ணியத்தின் முன்னோடிகளும், 2000 தேர்தலில் ரால்ப் நாடருக்குத் துணையாக துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வினோனா லாட்யூக்கும் ஜான் கெர்ரியை ஆதரிக்கிறார்கள் என்கிற விவரம் ஜனநாயகக் கட்சிக்கு வயிற்றில் பால் வார்க்கலாம்.

6. வழக்கமாகக் குடியரசு கட்சியை ஆதரிக்கிற பல பத்திரிகைகள் இந்த முறை புஷ்ஷ¥க்கு ஆதரவு தர முன்வரவில்லை. மொத்தம் 8.7 மில்லியர் பேர் படிக்கிற 45 பத்திரிகைகள் ஜான் கெர்ரியை ஆதரிப்பதாக இதுவரை அறிவித்துள்ள நேரத்தில், மொத்தம் 3.3 மில்லியன் பேர் படிக்கிற 30 பத்திரிகைகளே புஷ்ஷை ஆதரிக்கின்றன. இந்த நாட்டு தொலைகாட்சி ஊடகங்களுடன் ஒப்பிடும்போது அச்சுப் பத்திரிகைகள் மீது எனக்கு இருக்கிற நம்பிக்கையை இது அதிகமூட்டியது. தொலைகாட்சி அளவுக்குப் பத்திரிகைகள் இன்னும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு முழு ஜால்ராவாக மாறிவிடவில்லை. கண்ணை மூடிக் கொள்ளவில்லை.

7. இக்கட்டுரையாசிரியர் ஜான் நிக்கொல்ஸ் Dick: The man who is president என்ற சமீபத்திய நூலின் ஆசிரியர். இடதுசாரி பத்திரிகைகளில் அதிகம் எழுதுபவர். இடதுசாரி கருத்தாக்கம் உடையவர்.

No comments: