Tuesday, October 19, 2004

வீரப்பன் - ஒரு முற்றுப் புள்ளி

இன்று காலை. மழை தூறியபடியிருந்தது. மேகமூட்டம். போக்குவரத்து நெரிசல். ஒன்றரை மணி நேரமாய் இஞ்ச் இஞ்ச்சாய் கார் நகர, வேகத்தடைக்கும் (break) வேக முடுக்கிக்கும் (accelerator) இடையே சில நொடிகளுக்கொரு முறை கால் மாற்றுகிற வாழ்க்கை. NPR வானொலியில் பிபிஸி செய்தி அறிக்கையில் ஆரகன் மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சியை ஆதரிக்கிற மக்களுடன் நேர்காணல். ஓர் அம்மா, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் புஷ் மென்மையாக இருக்கிறார் என்று ஒரு போடு போட்டார். அத்துடன் நிற்கவில்லை. 9/14/2001 அன்றே ஈராக் மீது படையெடுத்திருக்க வேண்டும். பூமிப்பந்தை விட்டு ஈராக்கை வெளியேற்றியிருக்க வேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டார். நாம் அவர்களைத் தாக்கவில்லை, அவர்கள்தான் நம்மைத் தாக்கினார்கள் என்று தீர்ப்பு வழங்கினார். அமெரிக்காவைத் தாக்கியது ஈராக் அல்ல, அல்கொய்தா என்று பேட்டியாளர் சொன்னதும், "எனக்குக் கவலையில்லை. போய் அவர்களைக் (ஈராக்கியரைக்) கொல்லுங்கள்" என்றார். அதைக் கேட்டு, ஏறக்குறைய பாதி அமெரிக்கர்களின் மனநிலை இப்படியிருக்க என்ன காரணம். கல்வி, வாழ்க்கைத் தரம், பொது அறிவு எதுவுமே இந்த மாதிரியான மக்களிடம் அலசலும் அறிவும்பூர்வமான மனநிலையைக் கொண்டு வரவில்லையே என்று நொந்து போயிருந்தேன். (பின்னர் அலுவலகத்தில் நான் சந்தித்த சக அமெரிக்கர் அத்தகைய மனநிலைக்குக் காரணம் xenophobia என்றார். இதைப் பற்றி யோசிக்க வேண்டும் இனிமேல். ஆனால், அப்போது எதுவும் தோன்றவில்லை.) வானொலியை நிறுத்திவிட்டேன். எவ்வளவு நேரம் முன் கண்ணாடியின் மீது விழுகிற மழைத்துளியையும், திடீரென்று வீறு கொண்டெழுந்து அதைத் துடைக்கும் வைப்பரையும் பார்த்துக் கொண்டிருப்பது?

கைத்தொலைபேசி எடுத்து நண்பரை அழைத்தேன். நல்லவேளையாக அலுவலகத்தில் இருந்தார். பரஸ்பர குசல விசாரிப்புகள். கொஞ்சம் இலக்கியம். அப்புறம் அமெரிக்க இந்திய அரசியல். என்ன விசேடம் என்றேன். ஒன்றுமில்லை என்றவர் வீரப்பன் செத்துப்போனது தெரியும்தானே என்றார். வீரப்பன் பிடிபடுகிற சந்தர்ப்பம் நேர்ந்தால் அவர் சிக்காமலிருக்க தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்று எங்கோ படித்தது நினைவில் ஓடியது. எந்த மரணமும் கணநேரம் என்னை நிறுத்தி "ச்சொ" கொட்ட வைக்கிறது. அப்படி நேரும் தருணங்களில், அறிவு செயல்பட ஆரம்பிக்காமல், மரணம் என்கிற துயரச் செய்தி கொண்டுவரும் அனுதாபம் எழும் கணங்களில் என்னுள் மனிதம் இருப்பதாக உணர்கிறேன். வீரப்பனால் கொல்லப்பட்டவர்களை அறிந்த காலங்களிலும் அவர்கள்பால் அனுதாபமும் பரிவும் அக்கொலைகள் நியாயமில்லை என்ற உணர்வும் ஏற்பட்டது. ஏனோ வீரப்பன்பால் அனுதாபத்தை மீறி எதுவும் எழவில்லை. நினைவை நிறுத்தி நண்பரிடம் எப்படி என்றேன். நண்பர் "என்ன இது! பழைய செய்தியாச்சே இது. வலைப்பதிவுதான் ஒழுங்காகச் செய்வதில்லை என்று நினைத்தேன். வலைக்கே வருவதில்லை போலிருக்கிறதே" என்று வாரினார். பின்னர் விவரங்கள் சொன்னார்.

அலுவலகம் வந்ததும் இணைய இதழ்கள், வலைப்பதிவுகள் எல்லாம் மேய்ந்தாகி விட்டது. நேர்ப்பார்வை, எதிர்ப்பார்வை விமர்சனங்கள், யூகங்கள் எல்லாம் படித்து முடித்து விட்டேன். இந்த விஷயம் குறித்து பா.ராகவன் எழுதிய வலைப்பதிவு விஷயத்தை பல வழிகளிலும் அலசுவதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. பா.ராகவனுக்குள் ஒரு பத்திரிகையாளரும் ரிப்போர்ட்டரும் (ரிப்போர்ட்டருக்குத் தமிழில் என்ன? செய்தியாளரா?) இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அவரின் பதிவு வலுப்படுத்தியது.

வீரப்பன் மரணம் பற்றிப் பலவிதமான கேள்விகள், யூகங்கள் ஆகியன எழுப்பப்படுகின்றன. அம்மாவுக்குப் பிடித்த ஒன்பது கூட்டுத் தொகை வருகிற நாளில் இது நடந்திருப்பதை ஒரு நண்பர் எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்று தோன்றியது. ஆனால் ஒன்று சொல்ல முடியும். இந்தியா மாதிரியான ஜனநாயக நாட்டில்தான் இப்படிக் கொலைகாரர்களின் மரணம் பற்றியும்கூட கேள்வி எழுப்பவும், அவர்கள் விஷயத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால் குரல் கொடுக்கவும் முடியும். அது ஜனநாயகத்தின் சிறப்பு. வீரப்பன் ராஜ்ஜியத்திலோ பயங்கரவாதத்திலோ ஏகாதிபத்யத்திலோ இது சாத்தியமில்லை. வீரப்பன் சொல்வது, கமிஷனர் விஜயகுமார் சொல்வது இரண்டில் எதை நம்புவீர்கள் என்று யாரேனும் என்னைக் கேட்டால், அவர்களின் வாழ்க்கை, விழுமியங்கள், அவர்கள் பொதுவாழ்வில் செய்திருக்கிற பங்களிப்புகள் உள்ளிட்ட பலவற்றைக் கணக்கில் கொண்டு கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நம்புகிறேன் என்பேன் நான். (தமிழ்நாட்டுக் காவல்துறை மீது எனக்கு விமர்சனங்களும் உண்டு. உதாரணம், ஜெயலட்சுமி விவகாரம்.) ஆகையால், இந்த நேரத்தில் கமிஷனர் விஜயகுமார் சொவ்வதை நான் நம்புகிறேன். அவர் சொல்வதில் முன்னுக்குப் பின்னான தகவல்கள், மாற்றுக் கருத்துகள் இருக்கிற பட்சத்தில் அவற்றை எதிர்க்கட்சிகளும், மனித உரிமை குறித்து குரல் கொடுக்கிற மனிதர்களும் அமைப்புகளும் நிரூபிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. எல்லாத் தகவல்களையும் வடிகட்டி உண்மை எந்த அளவுக்கு இருக்கும் என்று உற்றுப் பார்த்தால் கூட, வீரப்பனோ அவருக்குக் கொடிபிடிப்பவர்களோ சொல்வதைவிட **இப்போதைக்கு** கமிஷனர் விஜயகுமார் சொல்வதை நான் அதிகம் நம்புகிறேன். நான் மேற்கொண்டு அறிய நேர்கிற தகவல்கள் என் நம்பிக்கைக்கு மாறாக இருக்கும்பட்சத்தில் என் கருத்தை மாற்றிக் கொள்வதில் எனக்குத் தயக்கமும் இல்லை.

இந்திய ஜனநாயகம் வழங்குகிற வழிமுறைகள், நீதிமன்ற வாய்ப்புகள், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றின் மூலம் வீரப்பன் மரணம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள் அலசவும் விடையளிக்கவும் படும் என்றும் நம்புகிறேன். பல கொலைகள் செய்தவர் (தினமலரில் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் பார்த்தேன். மனம் கனத்துப் போனது.) சட்டத்தையோ சட்டத்தை மதிக்கிற மக்களையோ கிஞ்சித்தும் மதிக்காத ஒரு காட்டுமிராண்டி மாதிரியான வாழ்க்கை வாழ்ந்த மனிதர், சரணடைவதற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் அவர் சாவதற்கு முன் கடைசி முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டபோதும் பயன்படுத்திக் கொள்ளாதவர், காவல்துறையுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்படும்போது மட்டும் நாம் மனித உரிமைகள் பேசுவதும் காவல் துறையை மட்டும் குறை சொல்வதும் எப்படிச் சரியாகும் என்ற கேள்வியும் எழுகிறது. சட்டத்தையும் அதன் வழிமுறைகளையும் திரும்பத் திரும்பப் பயன்படுத்திக் கொள்ள மூர்க்கத்துடன் மறுத்துவிட்ட, தன் கொலைகளையும் குற்றங்களையும் தவறாக எண்ணாத ஒரு மனிதரின் மரணத்தில் குறை காண்பது எப்படி சரியாகும் என்றும் தோன்றுகிறது. எல்லாரும் சொல்வதுபோல, கத்தி யெடுத்தவர் கத்தியால் சாகிற வாழ்க்கையின் சாசனம் இது.

ஒரு சிலர் இணையத்தில் எதற்கெடுத்தாலும் திராவிட இயக்கங்களைச் சாடுவது, தமிழ் தீவிரவாதத்துடன் முடிச்சு போடுவது நடக்கிறது என்றும் குறைபட்டுக் கொள்கிறார்கள். வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும், வீரப்பனுக்கும் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் பத்திரிகைகள் எழுதியபோது இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. 1996 தேர்தலில் (நான் அப்போது இந்தியாவில் இருந்தேன். ஆகையால் அறிவேன்) ஜெயலலிதாவை எதிர்க்க வீரப்பன் பேட்டியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்கிற புண்ணிய காரியம் செய்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது சன் டிவி. வீரப்பனை அரசியல் ஆயுதமாக பாட்டாளி மக்கள் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் பல நேரங்களில் பயன்படுத்த முனைந்துள்ளதையும் பத்திரிகைகளின் வாயிலாக அறிவோம். இந்திராகாந்தி பிந்தரன்வாலேயை வளர்த்து விட்டார், இந்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு உதவியது ஆகிய விமர்சனங்கள் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை வீரப்பனை வைத்து திராவிட அரசியல் கட்சிகள் ஆடிய கண்ணாமூச்சி. எனவே, திராவிட இயக்கங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் கொடி பிடிக்கிற இடதுசாரி நண்பர்கள் இவற்றையெல்லாமும் மனதில் வைத்துக் கொள்வது நல்லது. இந்திரா காந்தியைப் பற்றியோ விடுதலைப் புலிகளுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கங்கள் உதவியது பற்றியோ மட்டும் யாரேனும் எழுதும்போது இடதுசாரி நண்பர்கள் அமைதி காத்து விடுகிறார்கள். ஏனென்றால், அது உண்மை. அதே அளவுக்கு உண்மை, பிரிவினை வாதக் கோஷத்துடன் பிறந்த திராவிட இயக்கமும் அவை உடைந்து பலவான பின் அவற்றின் அரசியல் செயல்பாடுகளின் சந்தர்ப்பவாதமும் நேர்மையின்மையும். முழுநேர கட்சி சார்ந்த இடதுசாரிகளான எம்.கல்யாணசுந்தரம், ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, தா.பாண்டியன் உள்ளிட்டப் பலருக்கு திராவிட இயக்கங்கள் மீது பலத்த விமர்சனம் இருந்திருக்கிறது. அதனாலேயே, திராவிட இயக்கங்களுக்கும் அவற்றின் அரசியலுக்கும் நற்சான்றிதழ் அளிக்கிற வேலையை தற்போதைய இடதுசாரிகள் செய்யும்போது வருத்தமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

மேலும், இணையத்தில் திராவிட இயக்கங்கள் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் பேசுகிற பிரிவினைவாதிகளுக்கெதிராக கோஷம் கிளம்புகிறதா? அப்படியெனில், பேஷ் பேஷ் நல்ல காரியம் என்று சொல்லத் தோன்றுகிறது. எண்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தினர் பேசி வருவது கேட்டுப் புளித்துப் போகாத சில இடதுசாரி நண்பர்களுக்குத் திடீரென்று திராவிட இயக்கங்களின் மீதும் பிரிவினைவாதக் கோஷங்களின் மீதும் இணையத்தில் பரவலாக சிலகாலமாக வைக்கப்படுகிற விமர்சனம் புளித்துப் போய்விட்டது ஆச்சர்யம்தான். என்னையும் இடதுசாரி என்று நான் சிலநேரம் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், லேபிள்களில் ஒட்டிக் கொள்ள நேர்கிற நிர்ப்பந்தத்தால் வறட்டுத்தனமான கொள்கைவாதி ஆகிவிடக் கூடாதென்பதில் உஷாராக இருக்கிறேன்.

காவல்துறையோ, நீதி மன்றமோ, அரசாங்கமோ, அதிரடிப் படைகளோ செய்கிற அத்துமீறல்களுக்கும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் வீரப்பன் போன்றவர்களின் செயல்கள் பரிகாரம் அல்ல. அத்தகைய குறைகளைக் களைய அரசாங்கத்திடம் போராடுகிற அதே நேரத்தில் கொள்கைப் பிடிப்புள்ள நான் நேசிக்கிற என் இடதுசாரி நண்பர்கள், வீரப்பன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதைப் பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. சமீபத்தில் நடந்த ரஷ்ய நாட்டு பள்ளிச் சம்பவத்துக்குக் கூட ரஷ்ய அரசின் ஒடுக்குமுறை காரணம் என்று சொல்லப்படுகிறது. அதற்காக இடதுசாரி நண்பர்கள் அப்பள்ளிக் குழந்தைகளின் படுகொலைகளை ஆதரிப்பார்களா என்ன?

எனவே, வீரப்பன் மரணத்துக்காகக் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்கிற காரியத்தை விட்டுவிட்டு, வீரப்பன் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிவர இடதுசாரிகள் செயல்பட வேண்டும். வீரப்பனின் வாழ்க்கைமுறை, அவரால் ஆதாயமடைந்தவர்கள், அவருக்கும் பிற இயக்கங்களுக்கும் எப்படி எந்தவிதத்தில் தொடர்பு இருந்தது/இல்லை, அவர் மரணம் எழுப்புகிற கேள்விகளில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறதா, வீரப்பனால் கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும், அதிரடிப் படையின் அத்துமீறல்களுக்கு ஆளானவர்களுக்கு எத்தகைய நிவாரணம் வழங்கப்பட்டிருக்கிறது இன்னும் எவ்வளவு வழங்கப்பட வேண்டும் போன்றவற்றை ஆராய்வதும் வெளிக்கொணர்வதும் உருப்படியான விஷயமாக இருக்கும். இல்லையென்றால் மனித உரிமைகள் என்ற பெயரில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அரசாங்கத்தையும் காவல்துறையையும் பழி சொல்கிற பத்தாம்பசலிகளாக இடதுசாரி நண்பர்கள் பார்க்கப்படுகிற வாய்ப்பு இருக்கிறது. அது இடதுசாரி நண்பர்களை மக்களிடம் இருந்து இன்னமும் அந்நியப்படுத்தவே செய்யும்.

8 comments:

.:dYNo:. said...

PKS
You continue to amaze me with your thorough analysis. Hats off to your arguments!
-dyno

Arun Vaidyanathan said...

PK Sivakumarai ippadi nachchu endru Valaipathivu eshudha veikka...Thanmaana Thamizan 'Veerapar' saaga vaendi irukkiradhu...Vetkam, Vedhanai!

writerpara said...

வீரப்பனை நடமாடும் மாயாவிக்கடவுளாகவே மதிப்பதாகச் சொல்லப்படும் கிராம மக்களைச் சந்தித்து பேட்டியெடுக்கப்போன பத்திரிகையாள நண்பர் ஒருவருடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன். அத்தனை பேரும் நிம்மதியுடன் ஆனந்தக் கண்ணீர் உகுக்கிறார்களாம். பயத்தினால் மட்டுமே வீரப்பன் அணியினருக்கு உதவிகள் செய்து வந்ததாகவும் இப்போதுதான் சுதந்தரமாக உணர்வதாகவும் அம்மக்கள் நிருபர்களிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை வந்துள்ள தகவல்களின்படி, வீரப்பன் மரணம் எத்தரப்பிலும் அனுதாபம் உண்டாக்கவில்லை. மாறாக நிம்மதி கலந்தச் சந்தோஷத்தையே மக்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். (சத்தியமங்கலம், கோபி, திம்மம், ஆசனூர், தாளவாடி ஆகிய இடங்களில் பல நிருபர்கள் இப்போது சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.)

rajkumar said...

நெத்தியடி

அன்புடன்

ராஜ்குமார்

அன்பு said...

ஹப்பா... இதுபோன்ற வலைப்பதிவுக்கூட்டத்தில் நானும் இருப்பதில் பெருமைகொள்ளத்தக்க மேலும் ஒரு பதிவு. வாழ்த்துக்கள் & நன்றி சிவகுமார்.

Raja said...

மனித தன்மையில்லாமல் கொலை செய்தவனுக்கும் மனித உரிமை மீறல் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.வீரப்பன் விவாகரத்திலும் அரசியல் ஆதாயம் தேடாமல் வீரப்பனை கொன்ற அதிரடிப்படைக்கும், தமிழக அரசுக்கும் சபாஷ் சொல்வதுதான் அனைவருக்கும் அழகு. அரசியல் காரணத்திற்காக கொலை செய்தவனை எல்லாம் தியாகி ஆக்கி விட்டதிர்கள்.

சன்னாசி said...

reporter = நிருபர்

PKS said...

Thanks Montresor. The day after writing that article, while having bath, I thought Nirupar would be the correct tamil word for reporter. Thanks for confirming the same. One issue with blogs is that they are written quickly and so it does not give enough time to think about correct words. Especially for a person like me, who is away from Tamil Nadu. Regards. - PK Sivakumar