Wednesday, November 03, 2004

நவம்பர் 3 காலை 6:45 EST

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கெர்ரி - 252 எலக்ட்டோரல் வாக்குகள், புஷ் - 254 எலக்ட்டோரல் வாக்குகள். ஒஹாயோ, ஐயோவா, நியூ மெக்சிகோ முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், வெல்வதற்கான வாய்ப்புகள் கெர்ரிக்கு மிகவும் குறைவென்றே சொல்கிறார்கள். புஷ் வென்றுவிட்டதாக வெள்ளை மாளிகை சொல்கிறது. இனிமேல் நீதிமன்றங்கள், தொலைகாட்சிகள் எல்லாருக்கும் அவல்.

கெர்ரி நிலைமை ஏன் இப்படி மாறிப்போனது என்பதற்கு பல நூறுவகையான வியாக்கியானங்கள் கிடைக்கப் போகின்றன. மண்டே மார்னிங் குவார்ட்டர்பேக்கிங் என்கிற சொலவடைக்கு ஏற்ப ஆளாளுக்கு இந்தத் தேர்தலை அலசப் போகிறார்கள். நானும்கூட இதைப்பற்றி ஏதேனும் எழுதக்கூடும். ஜனநாயகக் கட்சியினர் செய்ய வேண்டிய சுயபரிசோதனைகள் நிறையவே உள்ளன. தோல்வியும், புஷ்ஷின் தவறுகளை ஒத்துக் கொள்ளாத, மாற்றுக் கருத்துகளை மதிக்காத, கடவுளின் தூதரென்ற அணுகுமுறை ஜனநாயகக் கட்சியினருக்கு மட்டுமேயான தண்டனை என்றால் சரியென்று சொல்லிவிடலாம். ஆனால், அது எல்லாரையும் பாதிப்பது என்பதால் கவலை வருகிறது.

ஆக்ஸிஸ் ஆப் ஈவில் என்று புஷ்ஷால் அழைக்கப்பட்ட நாடுகள் தூக்கத்தைத் தொலைத்திருக்கும். ஈராக்குக்கு சீக்கிரத்தில் விடிவு இல்லை. சிலநாள்களுக்கு முன் மியாமியில் கியூபக் குடியேறிகளிடம் பேசியபோது புஷ், ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் செய்வதைக் (புஷ்ஷின் வார்த்தைகளில் "சுதந்திரம் கொணர்ந்ததை") கியூபாவிலும் செய்ய அவரை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே, ஆக்ஸிஸ் ஆப் ஈவில் இல்லாமல் இன்னும் பல நாடுகளும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல. இன்னும் நான்கு வருடங்களுக்குத் தொலைகாட்சி பக்கம் போவதைக் குறைத்துக் கொள்வது என் மனஉளைச்சலைக் குறைக்கும் என்று பட்சி சொல்கிறது.

அயர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. தேர்தல் என்பது வியூகம், பிரசாரம், மக்களைச் சென்றடைதல் உள்ளிட்ட முதலியவையே, கொள்கை எல்லாம் பத்தாம்பட்சம்தான் என்பதற்கு இது இன்னொரு உதாரணம். நான்கு வருடங்கள் சீக்கிரம் ஓடிவிட வேண்டும் என்ற பிரார்த்தனை பிறக்கிறது. நான்கு வருடங்களுக்குப் பிறகு உலகமும் அமெரிக்காவும் இன்றைக்கு இருப்பது போலவே இருந்தாலும்கூட பரவாயில்லை, இதைவிட மோசமாகி யிருக்கக் கூடாது என்ற பேராசையும் உடன் எழுகிறது.

2 comments:

Boston Bala said...

'Bush's Brain' பார்த்து வீட்டீர்களா?

Mookku Sundar said...

என்னுடைய வருத்தத்தையும் பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை சிவா..!! வெறுத்துப்போய் இரவு 11 மணிக்கே தூங்கி விட்டேன்.

இந்த முறையாவது கடவுள் புஷ்ஷுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதை விட option ஏதும் இல்லை.