Wednesday, November 10, 2004

கேட்க

அமெரிக்காவில் நிறவெறியின் வரலாறு அனைவரும் அறிந்ததே. அடிமைகாய் கொண்டு வரப்பட்ட கறுப்பின மக்கள் தம் உரிமைகளுக்காக இன்றும் போராடி வருகிறார்கள். அமெரிக்க சமூக அடிமனதில் ஆறாத வடுவாய், சிற்சில இடங்களில் புரையோடிய புண்ணாய் இன்னும் நிறவெறி இருக்கிறது என்கிறார்கள். அமெரிக்க வெள்ளை மனதின் எல்லா முடிவுகளும் அடிப்படையில் நிறம் சார்ந்தவையே என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். கடந்த இருபது ஆண்டுகளில் நிறவெறிக் கொடுமைகள் பெருமளவு குறைந்து போயின. ஆனால், 1970களின் பின்பகுதி வரை கிராமப்புற அமெரிக்காவிலும், பெரும்பாலும் தெற்கிலும் நிறவெறி தன் கோரமுகத்தைக் காட்டியே வந்தது. ஜான் க்ரிஷாம் எழுதிய "எ டைம் டு கில்" என்ற புதினம் அக்கால நிறவெறியைச் சொல்கிற நாவல்களில் ஒன்று. இது திரைப்படமாகவும் வந்துள்ளது. வருடம் ஒருமுறை தொலைகாட்சியிலும் வரும். என்னை மிகவும் பாதித்த படம். அப்படத்தைப் பார்க்காதவர்கள் அதை அவசியம் பார்க்க வேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன்.

காலை அலுவலகம் வரும் வழியில் NPR வானொலியில் பின்வரும் செய்தியைக் கேட்டேன். மனம் கனத்துப் போனது. 1970ல் வடக்கு கரோலினா மாநிலத்தில் கொல்லப்பட்ட ஒரு 23 வயது கறுப்பினரைப் பற்றிய செய்தி இது. ஒரு வெள்ளைநிறப் பெண்மணியைக் கிண்டல் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டவர் அவர். வெள்ளைப் பெண்ணுடன் இருந்த இரண்டு கறுப்பினப் பெண்களிடமே அவர் பேசினார் என்று சொல்லப்படுகிறது. கறுப்பர்கள் அடிமைகளாக இருந்தபோது, வெள்ளைக்கார எஜமான்கள் அடிமைப் பெண்களிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்வது சகஜமான அத்துமீறலாக இருந்தது. ஆனால், கறுப்பின ஆண்கள் வெள்ளைநிறப் பெண்களை நினைத்துப் பார்ப்பது என்பதுகூட சகிக்க முடியாத குற்றமாக இருந்தது. அப்படிப்பட்ட நிகழ்வொன்றைச் சொல்லி மனதைக் கசியச் செய்த செய்தி இது.

செய்தியை முழுமையாகக் கேட்க (ஆமாம், படிக்க அல்ல, கேட்க) இங்கே சுட்டுங்கள்.

No comments: