இன்றைக்குக் காசியின் தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று காலை வரை மொத்தம் 258 வலைப்பதிவுகள் இருப்பதாகக் காட்டியது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடந்த ஆறுமாதங்களில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவுகள் பெரும்பாலானவை. வலைப்பதிவுகளுக்கான எதிர்காலம் பிரகாசமானது. தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பார்த்தறிந்த அனுபவம் யோசிக்க வைக்கிறது. என்னது அது பார்த்தறிந்த அனுபவம்?
1990களின் பிற்பகுதியில் இணையம் பிரபலம் அடையத் தொடங்கியபோது, தனிமனிதர்கள் இலவச இணைய தளங்கள் அமைத்துக் கொள்கிற வாய்ப்புகள் வந்தபோது தமிழில் மளமளவென்று இணைய தளங்கள் உருவாகின. வெவ்வேறு எழுத்துருக்களைக் கொண்டதாக அவை இருந்தாலும், பல இணைய தளங்கள் வந்தன. www.geocities.com, www.tamil.net, www.tripod.com உள்ளிட்ட இலவச இணையதள சேவைகளைப் பயன்படுத்தி பலர் தங்களுக்கென்று வலைமனை கட்டி சந்தோஷப்பட்டனர். ஆனால் ஆரம்பகால உத்வேகம் உற்சாகம் ஆகியவற்றுக்குப் பின் பல தனிமனிதர்களின் தமிழ் இணையதளங்கள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. புதிய உள்ளடக்கம் சேர்க்கப்படாமல் அவை அப்படியே நின்று போயின.
அப்படிப்பட்ட விபத்து தமிழ் வலைப்பதிவுகளுக்கும் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது. இப்போதே இருக்கிற வலைப்பதிவுகளில் எத்தனை தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை. கடந்த பதினைந்து நாள்கள் அல்லது ஒரு மாதத்தில் புதிய உள்ளடக்கம் ஏற்றப்படாத வலைப்பதிவுகளைத் தமிழ்மணத்தின் மூலம் அறிய நேர்ந்தால் நன்றாக இருக்கும். எனவே, 258 வலைப்பதிவுகள் இருக்கிறது என்று எண்ணிக்கையைப் பார்த்து சந்தோஷப்படுவது என்பது ஒரு வலைக் குழுமத்தில் 500 அல்லது 600 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுவது போலத்தான். 500 அல்லது 600 உறுப்பினர்கள் இருக்கிற வலைக்குழுமங்களில் கூட 30 அல்லது 40 பேர் மட்டுமே குழும நடவடிக்கைகளில் பங்கேற்று வருவதைப் பார்க்கிறோம். வலைக்குழுமங்களுக்கே உரிய பலவீனம் இது. அதே மாதிரி, 258 வலைப்பதிவுகள் இருந்தும் குறைந்த அளவு பதிவுகளே சரியாகப் பராமரிக்கப்படுமானால், அதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது.
எனவே, தொடர்ந்து பராமரிக்கப்படுகிற வலைப்பதிவுகளின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று யோசிக்கலாம். இது அந்தந்த வலைப்பதிவாளர்கள் கையிலேயே உள்ளது. எழுத எதுவும் இல்லையென்றால், வாரம் ஒருமுறையாவது வந்து "அனைவருக்கும் வணக்கம்" என்று ஒரு பதிவு போடுவது இதற்கு உதவும்.
காசி: தமிழ்மணத்தில் தீபாவளி என்கிற சொல் வருகிற பதிவுகளைத் தனியே தொகுத்துக் காட்டுகிறீர்கள். என் Stinking Cigar பதிவில் அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லியிருந்தேன். ஆனால், என் பதிவு தீபாவளி என்ற சொல் வரும் பதிவுகளில் தொகுக்கப்படவில்லை. நோ பிராப்ளம். இதைக் குறையாகச் சொல்லவில்லை. உங்கள் நிரலிக்கு உதவக்கூடும் என்று சொல்கிறேன். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பீகேயெஸ்,
முதலில் நீங்கள் சொல்லியிருகும் விஷயம் உடனடியாக நான் மட்டும் பதில் சொல்லும் விஷயம் இல்லை. எனவே கடைசியில் சொன்னதுக்கு வருகிறேன். இந்த 'தேடும் வசதி' பற்றி ஒரு விளக்கம் அங்கேயே கேள்விக்குறி '?' சின்னத்தில் சொடுக்கினால் கிடைக்கும், இதை அங்கே கொடுத்து பல நாட்கள் ஆகிறது. யாராவது பார்த்தார்களா தெரியவில்லை. பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
-காசி
Post a Comment