Tuesday, November 16, 2004

நினைவுக்கு வந்த திரைப்படக் காட்சி

Mario Puzoவின் God Father நாவலை நான் புத்தகமாகப் படித்ததில்லை. தொலைகாட்சியில் திரைப்படமாகப் பார்த்திருக்கிறேன். திரைப்படம் சுவாரஸ்யமாகவும், சஸ்பென்சுடனும் இருந்தது. பிடித்திருந்தது என்றே சொல்லலாம். திரைப்படம் பார்த்தபின் புத்தகம் படிக்கிற வாய்ப்பு கிடைத்தும் படிக்கிற ஆர்வம் வரவில்லை. God Father படிக்கிற நேரத்தில் புதிய புத்தகம் ஒன்று படிக்கலாமே என்று தோண, விட்டுவிட்டேன். எனவே, நாவல் வடிவத்துக்கும் திரை வடிவத்துக்கும் உள்ள வித்தியாசங்கள் எனக்குத் தெரியாது. நாவல் மேலா, திரைப்படம் மேலா என்பது போன்ற கேள்விகளுக்கும் எனக்கு பதில் தெரியாது.

கதை அனைவருக்கும் தெரிந்திருக்கும். எனவே, அதனுள் நுழைந்து அறுக்கப் போவதில்லை. GodFather II திரைப்படத்தில் ஒரு காட்சி. மைக்கேல் கார்லியோனுக்கு (காட் பாதராக இருந்த தந்தை இறந்தவுடன் காட் பாதரானவர். ஆல் பேசினோ இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளது நீங்கள் அறிந்ததே) எதிராக அவர் முன்னாள் கூட்டாளி (அந்த மாபியா குடும்பத்தின் முன்னாள் உறுப்பினர்) ஒருவர் சாட்சி சொல்ல வருகிற காட்சி. சாட்சி சொல்லப் போகிற நபர் செத்துவிட்டதாக அனைவரும் (படம் பார்ப்பவர்கள் உட்பட) நினைத்திருக்கும்போது எப்.பி.ஐ அவரை மைக்கேல் கார்லியோனுக்கு எதிராகச் சாட்சி சொல்ல, விசாரணை நடைபெறும் கமிட்டிக்கு அழைத்து வரவிருக்கிற விவரம் ஐந்து நாள்களுக்கு முன் மைக்கேல் கார்லியோனுக்குத் தெரிகிறது.

சாட்சி சொல்கிற நாள் வருகிறது. சாட்சி சொல்லப் போகிறவரும் வருகிறார். ஆனால், சாட்சி பல்டி அடித்து, மைக்கேல் கார்லியோனுக்கு எதிராக எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகிறார். இது ஒரு hostile witness சூழ்நிலை. சாட்சி திடீரென்று பல்டி அடிப்பதற்குக் காரணம் என்ன? அன்றைக்கு நீதிமன்றத்திலே மைக்கேல் கார்லியோனுடன் சாட்சியின் அண்ணன் இருக்கிறார். மைக்கேல் கார்லியோனுக்குப் பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கிறார். இத்தாலியில் இருந்து (அல்லது சிசிலியில் இருந்து?) இதற்காகவே அழைத்து வரப்பட்டிருக்கிறார். அண்ணனைப் பார்த்தவும், மைக்கேல் கார்லியோனுக்கு எதிராக சாட்சி சொன்னால் என்ன ஆகும் என்று சாட்சிக்குப் புரிந்து விடுகிறது. எனவே, பல்டி அடித்து விடுகிறார்.

விசாரணைக் கமிஷன் உறுப்பினர்கள் சாட்சியின் அண்ணனைக் காட்டி அவர் சாட்சியின் அண்ணனா, அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று விசாரிக்க முயல்கிறார்கள். மைக்கேல் கார்லியோனின் half-brotherம் (இதற்குத் தமிழில் என்ன?) வழக்கறிஞருமான ஒருவர் "சாட்சியின் அண்ணன் கறைபடியாத வரலாறுடையவர். மேலும் அவரைச் சம்மன் இல்லாமல் கேள்வி கேட்க இயலாது" என்று சொல்லிவிட, மைக்கேல் கார்லியோன் மீதான விசாரணை பிசுபிசுத்துப் போய்விடுகிறது.

(சுருக்கமாக எழுதுகிற அவசரம், நினைவின் பிழை ஆகியன காரணமாக மேலே சொன்னதில் தவறுகள் இருக்கலாம். ஆனால், முக்கியமான நிகழ்வுகளை மறக்காமலும் மாற்றாமலும் சொல்லியுள்ளேன் என்றே நம்புகிறேன்.)

இந்தக் காட்சியை witness intimidation என்று சொல்ல முடியுமா என்ற அளவுக்கெல்லாம் எனக்கு ஞானமில்லை.

இதை எதற்குச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? திடீரென்று நினைவுக்கு வந்தது சொன்னேன். சினிமாவைப் பற்றி நான் அதிகம் எழுதுவதில்லை என்கிற குறை இதனாலாவது போகட்டுமே. :-)

2 comments:

Arun Vaidyanathan said...

Hee..Hee...Hee..
Thalaivaa, I know why you are telling this :)

Raj Chandra said...

காட்பாதர் படம் புத்தகத்தை அப்படியே பிரதிபலித்திருக்கும். காட்பாதர் 2-ல் இளைய விட்டோ கார்லியோனியின் வாழ்க்கை மற்றும் மைக்கேல் கார்லியோனியின் மணமுறிவு மட்டும் புத்தகத்தில் வரும்( ராபர்ட் டெனைரோ ). மற்றவை, சொந்த சரக்கு.

அருண் : சரியான ஆள் சார் நீங்க...சுட்டிக்காட்டும் வரை, இதன் ஓற்றுமை எனக்குத் தெரியவில்லை. சிவக்குமார் இதை நினைத்து எழுதினாரா, தெரியவில்லை :).