(சந்திரமௌலி என்ற புனைபெயரில் பி.ச. குப்புசாமி எழுதிய சிறுகதை இது. அந்தக் காலத்தில் தினமணி கதிரில் பிரசுரமாகியது. பி.ச. குப்புசாமி பற்றிய விவரங்களை இங்கே காணலாம். இக்கதையைப் பத்திரமாக வைத்திருந்து தந்துதவிய வே. சபாநாயகம் அவர்களுக்கு நன்றி.)
அது இரண்டு மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு மிகச் சிறிய கிராமம்.
ஊர் ஜனங்களின் பழக்க வழக்கங்கள், ஆறு மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தின் நாகரிக சம்பந்தம் கொண்டு ஓரளவு மாறியிருப்பினும், அவர்களின் வெகுவான அந்தரங்க மனோபாவனைகள், மாறுபட்ட கோணங்களில் வாழ்க்கையை மதிப்பிட்டுப் பார்க்கத் தெரியாத, ஒருவிதமான அந்தப் பாரம்பரிய நிலையிலிருந்து இன்னும் மாறாமல்தான் இருந்தன.
அந்த ஊரிலே மூன்று வருட காலம் நான் உபாத்தியாயனாக இருந்தேன்.
சின்னஞ் சிறிய கிராமம் ஆதலால், ஏறக்குறைய அந்த ஜனங்கள் எல்லாரையும் அந்தக் காலகட்டத்தில் நான் தனித்தனியே முகம் தெரிந்து கொண்டேன். அவர்களை என்னால் நேசிக்க முடிந்தது. அவ்வாறு இயலாத பட்சத்தில் ஒவ்வொருவரின் நடத்தைக்கும் ஒவ்வொரு விதத்தில் மனசுக்குள் சமாதானம் கண்டு இரங்கி "சரிதான்" என்று அங்கீகரித்துக் கொண்டு போக முடிந்தது - ஒருவனைத் தவிர.
அவன்தான் தங்கவேலு.
தங்கவேலு ரொம்ப நாட்களாக, தான் தான் அந்த ஊரிலேயே அறிவாளி என்றும், பலசாலி என்றும், காதல் கலைகளில் நிபுணன் என்றும் கருதிக் கொண்டிருந்தான்.
தன்னைத் தானே ஒரு அறிவாளி என்று திடமாகத் தீர்மானித்துக் கொண்டுவிட்டு, பிறரும் அவ்வாறு நினைக்க வேண்டும் என்பதற்காக அவன்தான் என்னென்னவெல்லாம் செய்தான்!... பக்குவப்படாத, அரைகுறைப் பகுத்தறிவால், அந்த எளிய கிராம ஜனங்களின் உணர்ச்சிபூர்வமான எத்தனையோ பழக்கவழக்கங்களை மூடநம்பிக்கைகள் என்று முடிவுகட்டி அவற்றைக் கேலி பேசினான். எதையும், எவர் பேச்சையும் ஒடித்துத் திருப்பி, தான் ஏதோ அதில் புதிதாய்க் கிளறுவதைப் போல் காட்டிக் கொண்டான். அல்லது, எதிராளிக்கு அந்தஸ்து கொடுத்துவிட்டு, "உங்க மாதிரி அறிவாளிங்க சொல்றாங்களேன்னுதான் நானும் யோசிச்சேன்!" என்றான்.
வயசு இப்பொழுது அவனுக்கு முப்பத்தைந்துக்கு மேல் ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. சாகிற காலத்தில் இரண்டாயிரம் ரூபாய் கடனுடன் தகப்பனார் விட்டுவிட்டுப் போன மூன்றரை ஏக்கர் நிலத்தை மேலும் வளர்த்து அதில் ஒரு பம்புசெட் போடுவதும், குடியிருப்புக்குப் புதிதாய் ஒரு சிறியமாடி வீடு கட்டுவதுமான லட்சியப் பூர்த்திகளுக்கப்புறமே கல்யாணம் என்பது அவன் மிகவும் பெருமையோடு பிரகடனப் படுத்திக் கொள்ளும் பிறிதொரு அம்சமாகும்.
இவ்வளவு காலமாகியும் கல்யாணமாகாமல் இருப்பது அவனுக்கொன்றும் தொந்தரவாக இல்லை. மாறாக, அது ரொம்பச் சௌகரியமாக இருந்தது. இவன்தானே அந்த ஊரில் எத்தனையோ காதல் கதைகளின் கதாநாயகன்.
பச்சை, ரங்கம், நவநீதம், பார்வதி, சின்னப் பாப்பா - இவர்களெல்லாம் பலதரப்பட்ட பெண்கள். இவர்கள் மட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பேர் ஊர்ப்பெண்கள். உறவுக்காரப் பெண்கள். வெளியூர்ப் பெண்கள்.
இவர்கள் அவனது கைக்காசுக்கு மயங்கியவர்கள் அல்ல. இவனும் அவர்களுக்காகத் தன் கையைக் கரைத்துக் கொள்பவனல்ல. ஓரிருவர் புடவை, ரவிக்கை, பவுடர் என்று ஏதோ கேட்டிருக்கலாம். அவனும் செய்திருக்கலாம். ஆனால் இருக்கிற சொத்தைக் காப்பாற்றி வளர்க்கிற தனது ஆதார நோக்கத்தை இவ்விஷயங்களில் அவன் சிதறடித்துக் கொள்ளவில்லை.
எல்லாரையும், மரத்துக் காயைச் சொல்லிவிட்டுக் கல்லால் அடிப்பது போல் அடித்து வீழ்த்திய அந்தக் கதையை அதற்கு முன் அவன் பழகிய எல்லாரிடமும் சொன்னதைப் போல் என்னிடமும் அவன் நிறையச் சொன்னான்.
அவனோடு பழகிய பிறர் இவ்விஷயத்தில் அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னார்களாம். அவற்றையெல்லாம் என்னிடம் சொன்னான். "என்ன சார் பண்றது! எவ்வளவோ அறிவாளியா இருக்கறேன்... இந்த ஒரு விஷயத்தில் கட்டுப்படுத்த முடியலே!... எங்கே போனாலும், எந்த வேளையிலும் கண்ணு சுர்ருனு மேயுது. அதுக்கேத்த மாதிரி அவுளுகளும் வந்து மாட்டறாளுங்க... ஒலகத்திலே சகஜம் தானே?..." அப்புறம் ஒரு சிரிப்பு. குறையை உணர்ந்து கொண்ட சிரிப்பு அல்ல. குறைந்தபட்சம் அதற்குச் சமாதானம் கூறிக் கொள்கிற சிரிப்புக் கூட அல்ல. தனது பெருமிதத்தில் தானே வியக்கின்ற, அகந்தையின் சிரிப்பு.
அவன் இவற்றையெல்லாம் சொல்லும்போது, நான் அவனுக்குச் செவிமடுக்கும் ஒரே காரணத்தை வைத்துக் கொண்டு அல்லது அவ்வப்பொழுது "அட... அப்படியா... சரிதான்" என்று துணைச் சொற்களை இட்டு நிரப்பி அபிப்பிராயங்களைத் தவிர்க்கும் சாதுரியத்தில் ஏமாந்து போய், நான் அவன்மேல் ஒரு சார்புணர்ச்சி கொண்டிருப்பதுபோல் தங்கவேல் கருதிக் கொண்டான். அவனது சகல நிலைகளையும் நான் அங்கீகரிப்பதாக எண்ணிக் கொண்டான்.
ஆனால், அவனது இயல்பின் இவ்விரிவான அம்சங்களை யெல்லாம் பயின்ற பிறகு, எதனாலோ எனது மனோதர்மமே அவன்பால் ஓர் உட்பகை கொள்ள ஆரம்பித்தது. சகுந்தலாவைப் பற்றி அவன் என்னிடம் பேசிய பேச்சுக்களும், கொண்டிருந்த எண்ணங்களும் அப்பகையைப் பரிபூரணமாக முற்றச் செய்தன.
எத்தகைய கிராமப்புறமாக இருந்த போதிலும் அங்கே ஓர் அழகிய கனவு தோன்றும் போலும்...
சகுந்தலா ஒரு கனவு போன்றவள். அவளை இன்னமும் சிறுமியென்றே சொல்லலாம். பக்கத்துப் பெரிய கிராமத்தில் ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தாள். பதினாலு வயசு இருக்கும். நிமிர்ந்து பார்த்தாளானால், அது ஒரு சோகம் போல மனித உள்ளங்களில் தைக்கும்.
அவளது தந்தை சுற்றி வளைத்துத் தங்கவேலுக்கு மாமாமுறை ஆக வேண்டும். சகுந்தலா சிற்றாடை தரிக்காத சிறுமியாயிருந்தபோதே அவர் காலமாகி விட்டார். ஆனால் அதற்கு முன்பிருந்தே அப்படி ஒரு பேச்சு நிலவியது போலும். தங்கவேலு சகுந்தலாவை மனத்தில் வைத்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான்.
அது யாரும் ஆட்சேபிக்காத ஒரு முடிவு. நான்கு பெண் குழந்தைகளையும், கடைசிக் கைக்குழந்தையாய் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு சகுந்தலாவின் தாயார் தனது கணவனின் மரணத்துக்குப் பிறகு தனித்து நின்றாள். நிலபுலன்கள் இருந்ததால் சாப்பாட்டுக்குக் கவலையில்லைதான். ஆனாலும் நல்லது பொல்லாததற்கெல்லாம் அருகிலிருந்து உதவ ஓர் ஆண் துணை வேண்டுமே? பிற உறவினர்கள் அவ்வளவு பிரயோசனமில்லை. தங்கவேலை மருமகனாக்கிக் கொண்டால் நல்லது என்று நினைத்தாள் சகுந்தலாவின் தாயார். ஊரிலே அவன் கொஞ்சம் பிரபலஸ்தன் அல்லவா?
எனவே, அது, ஏறக்குறைய முடிவான விஷயம்.
சகுந்தலா தங்கவேலுக்காக என்பதை அறிந்தபோது, வாழ்க்கையின் அபத்தங்களில் ஒன்றுபோல் அதை நான் உணர்ந்தேன். பேரழகு என்று சொல்ல முடியாவிட்டாலும், சகுந்தலாவின் அழகு மதிக்கப்பட வேண்டிய கன்னித் தூய்மையோடு கூடிய அழகு. அதை அணுகவோ ஆளவோ தங்கவேல் தகுதியற்றவன்.
அதோடு, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த வயது வித்தியாசம்! தங்கவேல், என்னிடம் சொன்ன கணக்குப்படி பார்த்தால், அங்கொன்றும், இங்கொன்றுமாய் பெண்களிடம் அவன் தொடர்பு ஆரம்பித்த அந்த நாட்களுக்குப் பிறகே, சகுந்தலா பிறந்திருப்பாள் எனலாம்.
என்ன கொடுமை! சகதியில் இவன் விழுந்து புரண்டு கொண்டிருந்த காலத்தில், சகுந்தலாவின் சிறிய பிராயம் அம்புலி பார்த்துக் கொண்டிருந்திருக்கும். 'அம்மா'வென்று கூப்பிட்டு ஏதேதோ ஆனந்தத்தில் வாய் மலர்ந்து சிரித்திருக்கும். அதை இவன் இனிமேல் தொட்டுத் துய்க்கப் போகிறான்.
அந்தக் கிராம ஜனங்கள் எவருக்கும் இது உறைத்ததாய்த் தெரியவில்லை. அவனுக்கென்ன? நல்ல உழைப்பாளி. கெட்டிக்காரன். இன்னும் கொஞ்ச நாளில் மாடி வீடு கட்டப் போகிறான். சரியான ஜோடிதான்.
தங்கவேலு உள்ளூரக் குதூகலித்துக் கொண்டிருந்தான்.
"நம்ம சகுந்தலாவைப் பத்தி என்ன நினைக்கிறீங்க...? ரொம்ப அடக்க ஒடுக்கம் சார்! நீங்கதான் பார்க்கிறீங்களே! பொண்ணு ஏதாவது தப்புத் தண்டாவுக்குப் போறவளா தெரியறாளா பாத்தீங்களா...?"
நான் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருப்பேன்.
"அவ உள் ஆளு சார்! நான் பெருமையா சொல்றேன்னு நெனைக்காதீங்க. அறிவிலும் சிந்திச்சிப் பார்க்கறதிலும் எம்மாதிரி ஆளு இந்தப் பட்டிக்காட்லே யாரு? அளகோ, சொத்தோ, ஒண்ணும் கொறைச்சல் இல்லே. எப்பிடி சார் ஆசைப்படாமல் போவா?"
"அதுகிட்டே நீ பேசறதுண்டா?" என்று ஒரு சமயம் நான் கேட்டேன்.
"ஊஹ¥ம்... நான் தான் காரணமில்லாம அவ அம்மாகிட்டக் கூடப் பேசறதில்லையே!... அதோடு அவளுக்கும் அந்த அச்சம்கிறது கொஞ்சம் இருக்குது. ஒரு நா எதிர்க்க வந்தா. 'இதம்ம சௌந்தலா... கண்ணுக்குட்டி பயிரை மேயுது பார்'னு சொன்னேன்... ஒரு மாதிரியா ஒதுங்கிகினு தலையைத் தொங்கப் போட்டுக்கினு கண்ணுக் குட்டியை வெரட்டப் போயிட்டா! இருக்கட்டும், எங்க சார் போயிடறா? என்னிக்கு இருந்தாலும் நம்ப ஆளுதானே? - விலங்கு சப்புக் கொட்டுவதைப் போல் ஒரு பசித்த ஆசை அவன் முகத்தில் அடக்க முடியாத புன்னகையாய்ப் பிறந்தது.
"ஆமா, அது படிக்கிற மாதிரி இருக்கே?" என்று நான் ஒரு தயக்கக் குரலில் பேசினேன். சகுந்தலா அப்போது ஒன்பதாம் வகுப்போ பத்தாம் வகுப்போ படித்துக் கொண்டிருந்தாள். தங்கவேலுவோ எழுத்துக் கூட்டிப் படிப்பானே தவிர, பள்ளிக்கூடம் போனதில்லை. எனது சந்தேகத்தை அவன் புரிந்து கொண்டான்.
"என்னா படிச்சாலும் நம்ம அறிவை அவ எட்ட முடியாது சார்... ஏதோ நாலு இங்கிலீஷ் எழுத்து அவ எழுதலாம். மத்தபடி ஆராச்சியிலே, ஒரு விஷயத்தைப் பற்றி யோசனை பண்றதிலே அவ மட்டுமில்லே, இந்த ஊர்லதான் யாரு சார் எனக்கு ஈடு? ஆனால், சௌந்தலாவும் சரி அவங்கம்மாவும் சரி அப்படி நெனைக்கலே... கட்டிக்கினாப் போதும்னுதான் இருக்காங்க..."
"வேற எங்கேயும் கட்டிக்கிற மாதிரி பெண்ணில்லையா?" என்று நான் கேட்டேன். கூடுமானால், சகுந்தலாவிடமிருந்து அவன் கவனத்தை அகற்ற முடிகிறதா என்று ஆழம் பார்க்கும் எனது சிறிய முயற்சி அது.
"இருக்காங்க சார். இல்லாம என்ன? ஆனா இங்கே சுத்து வட்டாரத்திலே எந்த வீடும் நமக்கு லாயக்கில்லை. போனா இப்படி கெழக்குச் சீமைக்கா போகணும். அவ்வளவு தூரம் ஏன் போகணும்னு பாக்கறேன். அதோடு இந்தக் குடும்பமும் பாவம். ஆம்பிளையில்லாம நிக்குது. நாமே அந்தப் பொண்ணைக் கட்டிக்கினா ஏதோ கொஞ்சம் ஆதரவாயிருந்துட்டுப் போகும். நம்ம மாதிரி அறிவாளிங்களே செய்யாட்டி, அப்புறம் யாரு செய்வாங்க?"
நான் அடுத்த கேள்வியைப் போட்டேன். அதற்கு அவன் சொன்ன பதிலோடு, சகுந்தலாவைப் பற்றிய அவன் மனேபாவங்களின் முழுத்தன்மையும் புலப்பட்டுவிட்டது.
"ஊர்லே ரொம்ப பொம்பளைங்களோட உனக்கு இவ்வளவு வெவகாரம் இருக்கே. இதெல்லாம் தெரிஞ்சா அந்தப் பொண்ணுக்கு" என்று கேட்டேன்.
அவன் அலட்சியமாகச் சிரித்தான்.
"ஏதோ பள்ளிக்கூடத்திலே போய் வெள்ளைக் காகிதத்திலே நாலு எழுத்து எழுதுது அந்தப் பொண்ணு. அதுக்கு இவ்வளவு வெளக்கம் ஏது சார்? தங்கவேலுன்னா யாரு சும்மாவா? காதல்னா... அதிலே கெட்டிக்காரன். இங்கே வேறு யார் இருக்கான்?... ஒண்ணுமில்லே... கல்யாணத்தை ரெண்டு மூணு வருஷம் தள்ளிப்போட்டேன்னா, இதே சௌந்தலா... பாதி ராவுலே கொல்லையோட கொல்லையா வந்து பம்பு செட் ஓரம் என் கட்லு பக்கத்திலே நிக்க மாட்டாளா?..."
முடிவில் அவன் சிரித்தான்.
பக்கத்து கிராமத்து ஹைஸ்கூலுக்குப் போகும் பிள்ளைகள் எல்லாம் எனக்கு அன்றாடம் ஒரு "குட் மார்னிங்" வைத்துவிட்டு, அப்புறம் சோளக்கொல்லை ஓரமாக அந்த மடுக்கரையில் ஏறி மறைவார்கள். அவர்களிடையே சகுந்தலாவும், சிற்றாடையும் தோளில் தொங்கும் புத்தகப் பையுமாக வருவாள். தானும் ஒரு 'குட் மார்னிங்' வைத்துவிட்டுத் தலை குனிந்தவாறு போய்விடுவாள்.
எப்போதாவது நானிருக்கும் பள்ளிக் கூடத்தினுள்ளும் வருவாள். அவர்கள் கொல்லையில் ரோஜாப்பூ அபரிதமாகப் பூத்திருந்தால், அதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போவாள். என்னிடம் படிக்கும் தனது தங்கையரைப் பற்றி ஏதேனும் சொல்வாள்.
அந்த வயசில், பெண்களுக்கு அவ்வளவு இங்கிதமான குணங்கள் இருந்து நான் பார்த்ததில்லை. ஆழ்ந்த உணர்ச்சிகள் உள்ள பெண் அவள்.
அவள் வாழ்க்கை எவ்வாறு தங்கவேலுடன் பொருந்தக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் பெண்ணின் மனத்தை அறிவதில் நிபுணன் இல்லை. ஒருகால், தங்கவேல் பால் அவளுக்குக் கவர்ச்சிகள் இருக்கலாம். ஏற்கனவே உருவாகிவிட்ட கனவுகள் இருக்கலாம். யார் கண்டது?
இந்த மனப்பாங்கோடு இருந்து வருகையில் ஒருநாள் சகுந்தலாவோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அத்தியந்தமான வட்டத்துள் வர நேர்ந்தது. அவளது தகப்பனாரின் மரணத்தைப் பற்றியும், படித்துவிட்டு அப்புறம் அவள் என்ன செய்வது என்பது பற்றியும் பேசினோம்...
"உங்க அம்மா உன்னை உத்தியோகத்துக்கு அனுப்புவாங்களா சகுந்தலா?" என்றேன் நான்.
புன்முறுவல் செய்து கொண்டே, "தெரியல்லே சார்..." என்றாள்.
"ஒருகால் கல்யாணம் பண்ணிடறாங்களோ என்னவோ..." என்று வேடிக்கையாகத் தொடர்ந்தேன்.
ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்புறம் கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டாலே பெண்களுக்கு எவ்வளவு வெட்கம் வந்துவிடுகிறது! சகுந்தலாவும் அப்படித்தான் வெட்கப்பட்டுப் போனாள்.
"போங்க சார்!" என்று தலைகுனிந்த வண்ணம் மேஜை மீது ஏதோ கீறினாள்.
"கல்யாணம் பண்ணிக் கொடுத்தா யாருக்குக் கொடுப்பாங்க?... தங்கவேலுக்குத்தானே?...." கேட்பது சரிதானா என்று அஞ்சியவாறு மெள்ளக் கேட்டேன்.
அவள் முகம் விழுந்து வெட்கத்தின் அந்த அழகிய பிரகாசம் கூட இல்லாமல் அணைந்து போயிற்று. கம்மென்றிருந்தாள்.
"எல்லாரும் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..." என்றேன்.
அதற்கும் பேசாமலிருந்தாள். தலை நிமிரவில்லை.
கடைசியாகக் கேட்டேன். "அது உனக்கு விருப்பம்தானே?"
அந்தக் கேள்விக்கு மௌனமாக, அழுத்தமான முகபாவனையோடு 'இல்லை'யென்று அவள் தலையாட்டினாள். பிறகு திடீரென்று முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்...
நான் பதறிப் போனேன்.... "சகுந்தலா... சகுந்தலா!" என்று தேற்றினேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் அவள் கண்ணின் ஈரத்தைப் புறங்கை வரை தேய்த்துவிட்டுக் கொண்டு அடங்கினாள்.
பிறகு சொன்னாள்:
"எல்லோரும் சொன்னா? நான் சொல்லணுமில்லே? நான் மாட்டேன்னுதான் சொல்லப் போறேன்..."
- இந்த வார்த்தைகள் எனக்குப் பெருமதிப்பிற்குரியதொரு பிரகடனம் போன்றவை...
குரலில் மீண்டும் அழுகை ததும்ப மேலும் அவள் சொன்னாள்:
"நான் மாட்டேன்னுதான் சார் சொல்லுவேன்... இல்லாட்டி செத்துடுவேன் சார்..."
அவளுக்கு நான் ஏதோ ஆறுதல் சொன்னேன். என் மனம் உள்ளூற அவள்பால் பல்லாயிரம் வாழ்த்துக்களோடு பெருக்கெடுத்தது. அந்த சின்னஞ்சிறு சிறுமி திடுமென ஒரு கணத்தில் ஒரு வைரம் பாய்ந்த பெண் மனத்தின் உறுதியான குணங்களோடு விசுவரூபம் கொண்டாள்.
என்னுள் ஓர் அற்புதமான சாந்தி நிலவிற்று. தங்கவேலுவை, அவனது அறிவுடைமையை, படித்தவர்களெல்லாம் தலையாட்ட ஆட்ட அவன் பேசிய வழவழத்த நீண்ட பேச்சுக்களை, பெண்களின் தொடர்பு காரணமாகக் கொண்டிருந்த பொய்யான நன்மதிப்பை, தன்னுள் அவன் வளர்த்து வைத்திருந்த பொய் நம்பிக்கைகளை யாரோ முகத்திலடித்ததுபோல் உணர்ந்தேன்... எனது மனோதர்மம் கொண்டிருந்த ஓர் உட்பகையின் பசி அடங்கிப் போயிற்று...
இப்பொழுது நான் அந்த ஊரில் இல்லை. ஆனாலும் நான் உறுதியாய் நம்புகிறேன். சமயம் வரும்போது சகுந்தலா சொல்லத்தான் போகிறாள்...
அவள் சொல்லியிருப்பது ஓர் ஆடவனைப் பெண்ணொருத்தி மறுக்கும் சாதாரண சம்பவமாக எனக்குப் படவில்லை. இன்னும் சற்று அதிக அர்த்தமுள்ள ஒரு கிராமியச் சமூகத்தில் முற்றி வளர்ந்துபோன ஏதேதோ குணங்களை மறுக்கின்ற புதிய பெண்மையன்றின் பிரகடனம் போலவே படுகிறது.
சகுந்தலா சொல்லத்தான் போகிறாள். இதோ, சிற்றாடையும் தோளில் புத்தகப் பையுமாக மடுக்கரை மீது அவள் நடக்கிறாள். மௌனமாய்த் தலை குனிந்து கொண்டு போகிறாள். இந்த வயசில் பெண்களுக்கு இவ்வளவு இங்கிதமான குணங்கள் இருந்து நான் பார்த்ததில்லை. ஆழ்ந்த உணர்ச்சிகள் உள்ள பெண் அவள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment